Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
அக்டோபர் 2008 - மார்ச் 2009


அம்பேத்கரின் சமூகச் சிந்தனைகள்: அரசியல் பொருளாதாரம்
முனைவர் அரச. முருகுபாண்டியன்

அண்ணல் அம்பேத்கர் என்று மக்கள் வணங்கிப் போற்றும் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் நவீன இந்தியாவை வடிவமைத்த தலைசிறந்த சிற்பி. சிறந்த கல்வியாளர். பொருளியல், அரசியல், வரலாறு, சமூகவியல், தத்துவம் மற்றும் சட்டம் ஆகிய பல்வேறு துறைகளுக்கும் மிகப்பரந்த அளவில் வளமான பங்களிப்பைச் செய்தவர். பொருளாதாரப் பேராசிரி யராகவும், வழக்கறிஞராகவும், இதழாளராகவும் சிறந்து விளங்கியவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த தலைமைப் பேராளர். மக்கள் கல்விச் சங்கத்தையும், சித்தார்த்தா கல்லூரியையும் நிறுவியவர். தொழிலாளர் நல அமைச்சராகவும், சட்ட அமைச்சராகவும் பணியாற்றி யவர். அனைத்திற்கும் மேலாக மனிதம் பறிக்கப்பட்டு பல நூற்றாண்டு களாகத் தீண்டாமைக் கொடுமைக்கும் சாதிய வன்கொடுமைக்கும் ஆட்பட்டு, ஒடுக்குண்டு, சுரண்டலுக்கும் வறுமைக்கும் உள்ளாக்கப்பட்டு, சேரி என்னும் விளிம்புகளில் தள்ளப்பட்ட பல கோடி மக்களின் விடுதலைக்காகத் தன் வாழ்நாளின் இறுதி மூச்சுவரை போராடிய விடுதலை வீரர் அம்பேத்கர்.

பல ஆயிரக் கணக்கான பக்கங்களை எழுதியும் பேசியும் அதற்கொப்பப் போராடியும் வாழ்ந்தவர் அம்பேத்கர். அவருடைய எழுத்தும் பேச்சும் மராட்டியத்தில் எழுபது தொகுதிகளாக வந்துள்ளன. தமிழில் இதுவரை நாற்பது தொகுதிகள் வந்துள்ளன. தொடர்ந்து மொழிபெயர்ப்புப் பணிகளும் வெளியீட்டுப் பணிகளும் நடந்த வண்ண மிருக்கின்றன. இன்னும் அவரது எழுத்துகளும் உரைகளும் பல்வேறு இடங்களிலிருந்து கிடைத்த வண்ணம் இருக்கின்றன. அவை அனைத்தும் தொகுக்கும் பணிகள் மராட்டியத்தில் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு நூறு தொகுதிகளாவது அதில் தேறும் என்பது அறிஞர்களின் நம்பிக்கை. அவரது சமூகச் சிந்தனைகள், அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த சில குறிப்புகளை முன் வைக்கிறது இக்கட்டுரை. 30.03.2007ல் அம்பேத்கரியல் மையம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தேசீயக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது.

அம்பேத்கரது வாழ்க்கைக் குறிப்புகள்:

14.04.1891இல் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் பீமாபாய்க்கும் ராம்ஜி மாலோஜி சக்பால்க்கும் 14ஆவது மகனாகப் பிறந்தார். சத்தாராவில் தொடக்கக்கல்வியும், பம்பாய் மராத்தாவில் உயர்நிலைக் கல்வியும், எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷனும் பயின்று தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் இராமாபாயுடன் திருமணம் நடந்தது (ஏப்ரல் 1906). பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியல் பயின்று பி.ஏ., தேர்ச்சி பெற்றார். பரோடா மன்னர் உதவியுடன் அமெரிக்கா கொலம்பியா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பயின்று பட்டம் பெற்றார் (1915). "பண்டைய இந்தியாவின் வாணிபம்” என்பது எம்.ஏ. பயின்றபோது எழுதிய ஆய்வறிக்கை. 1916 மே மாதம் டாக்டர் கோல்டன் வெய்சர் நடத்திய மனித இன வரலாறு பற்றிய கருத்தரங்கில் ''இந்தியாவில் சாதிகள்” என்ற ஆய்வுக் கட்டுரையைப் படித்தார். இதில் சாதிகளின் தோற்றம், வளர்ச்சி குறித்து எழுதினார். சாதிகளுக்குள்ளேயே திருமணம் என்பதுதான் சாதிகளின் சாரம் என்று குறிப்பிட்டார். பின்னர் ''பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதியின் பரிணாம வரலாறு” என்ற ஆய்வுக் கட்டுரையை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அளித்து தனது முதல் பிஎச்.டி. பட்டத்தைப் பெற்றார் (ஜூன் 1916). அமெரிக்காவில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு மேலும் பயில இலண்டன் சென்றார். பொருளாதாரத்தில் டி.எஸ்ஸி. பட்டம் பெற அனுமதி பெற்றார். பரோடா மன்னரின் நிதிஉதவி நிறுத்தப்பட்டதால் இந்தியா திரும்பினார். பரோடா மன்னரிடம் சில காலம் பணியாற்றினார்.

சாதி இந்துக்களின் இழிவுபடுத்த லிலிருந்து வெளியேறி பம்பாய் வந்து சேர்ந்தார். சைடன்ஹாம் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராகச் சேர்ந்து சில காலம் பணியாற்றினார் (1918-1920). (ஊமைகளின் தலைவன்) மூக்நாயக் என்ற பெயரிலான இதழைத் (1920 ஜனவரி) தொடங் கினார். 1920 மார்ச் 21இல் கோல்ஹர்பூர் அரசில் மான்கோன் என்ற இடத்தில் நடைபெற்ற தீண்டப்படாதவர் மாநாட்டிற்கு அம்பேத்கர் தலைமை தாங்கினார். சாகு மகாராஜா அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோரின் மீட்பர் என்று பாராட்டினார். மீண்டும் கல்வியில் கவனம் குவிய, சட்டம் பயிலவும் பொருளாதாரப் படிப்பைத் தொடரவும் இலண்டன் பயணமானார் (1920 ஜூலை). அங்கு சட்டம் பயின்று கொண்டே பொருளியல் துறையில் ஆய்வுகளை நிகழ்த்தினார். ''பிரிட்டிஷ் இந்தியாவில் பேரரசின் நிதியை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளித்தல்” என்ற கட்டுரைக்கு எம்.எஸ். (ஙஹள்ற்ங்ழ் ர்ச் நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங்) என்ற பட்டத்தை இலண்டன் பல்கலைக்கழகம் வழங்கியது (1922). ''ரூபாயின் சிக்கல்” என்ற ஆய்வுக் கட்டுரைக்காக டி.எஸ்., (ஈர்ஸ்ரீற்ர்ழ் ர்ச் நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங்) என்ற பட்டத்தையும் பெற்றார் (1923). பின்னர் பாரிஸ்டர் (1923) பட்டமும் பெற்று இந்தியா திரும்பினார். தீண்டப்படாத மக்களின் அரசியல் தலைவராக உயர்ந்தார்.

தீண்டப்படாதவர்களின் உயர்வினுக்குப் போராடுவதற்காக பகிஷ்கிரித் கித்தகாரணி சபா என்ற அமைப்பை ஏற்படுத்தினார் (1924). மகத் நகரில் சவுதார் குளத்தில் தீண்டப்படாத மக்கள் நீர் எடுக்கும் உரிமையை நிலைநாட்ட நீர் அள்ளிப் பருகினார். மனுஸ்மிருதி கொளுத்தப்பட்டது (1927 மார்ச் 20). தீண்டப் படாத வகுப்பு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் தொடர்பான பிரச்சனைகள் குறித்த அறிக்கையை அம்பேத்கர் சைமன் குழுவிற்கு அனுப்பினார் (1928). நாகபுரியில் அனைத்திந்திய தீண்டப்படாதார் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிப் பேசினார். இந்திய மத்திய மாநில சட்டசபையில் தீண்டப்படாதாரின் பிரதிநிதித்துவம், வேலை வாய்பில் இடஒதுக்கீடு, அரசியல் சட்டச் சிக்கலைத் தீர்க்க வட்டமேசை மாநாடு ஆகியவை குறித்து உரையாற்றினார் (08.08.1930). வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் கலந்துக்கொண்டனர். பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் இதனைத் தொடங்கி வைத்தார் (12.11.30). இரண்டாவது வட்டமேசை மாநாடு 01.12.31இல் தொடங்கியது. பிரிட்டிஷ் பிரதமர் வகுப்புவாரித் தீர்ப்பை அறிவித்தார். தீண்டப்படாத மக்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி வழங்கப்பட்டது (04.08.1932).

காந்தி இதற்கெதிராக உண்ணாவிரதமிருந்து, தனி வாக்காளர் தொகுதி முறையை ரத்து செய்யும் பூனா ஒப்பந்தம் உருவானது (24.09.1932). ஜாட்பட் தோடக் மண்டல் மாநாட்டிற்காக எழுதிய தலைமை உரை ''சாதி ஒழிப்பு” என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. சுதந்திரத் தொழிலாளர் கட்சியை நிறுவினார் (1935). பௌத்தம் குறித்து பேசவும், எழுதவும் செய்தார். இந்துத்துவ எதிர்ப்புக் கருத்துகளும் பௌத்த மதத்தை ஏற்பது குறித்தும் எழுதினர் (1940). வைசிராய் கவுன்சிலில் தொழிலாளர் நல அமைச்ச ரானார். ''காந்தியும் காங்கிரசும் தீண்டப்படா தவர்களுக்குச் செய்தது என்ன?” என்ற நூலை எழுதி வெளியிட்டார் (1945). தொடர்ந்து ''சூத்திரர்கள் யார்” நூல் வெளியானது (1946). மாகாணங்களும் சிறுபான்மையினரும் (1947), ரூபாயின் சிக்கல் (1947) போன்ற நூல்கள் வெளியாயின. இந்திய விடுதலை(15.08.1947)க்குப்பின் சுதந்திர இந்தியாவின் மத்திய அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகப் பொறுப் பேற்றார். அம்பேத்கரை தலைவராகக் கொண்ட அரசியல் சட்ட வரைவுக்குழு அமைக்கப்பட்டது (26.11.1949). பெண்களுக்கு உரிமைகள் வழங்கும் இந்துச் சட்டத்திருத்த மசோதாவை அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் முன்மொழிந் தார் (05.02.1951). இந்துச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறாததால் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார் (11.10.51). புத்தரும் அவருடைய தம்மமும், பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும், புத்தரும் காரல்மார்க்சும் போன்ற நூல்களை எழுதி னார் (1955). இலட்சக்கணக்கான மக்களுடன் பௌத்தத்தை ஏற்றார் (14.10.1956). இந்தியக் குடியரசுக் கட்சியை உருவாக்கினார் (1956). அதே ஆண்டு இறுதியில் காலமானார் (06.12.1956).

சமூகச் சிந்தனைகள்:

எச்.எம்.ஜான்சனின் கருத்துப்படி சமூகவியல் என்னும் அறிவியல் சமூகக் குழுக்கள் பற்றிய ஆய்வாகும். அதன் உள்ளடக்கம், நிறுவன அமைப்பு, அது செயல்படும் முறை, அமைப்பைத் தக்க வைக்கவோ அல்லது மாற்றவோ உள்ள நடைமுறை, பல குழுக்களுக்கிடையிலான உறவுமுறைகள் ஆகியன பற்றிய அறிவே சமூகவியல். அண்ணல் அம்பேத்கரின் சமூகச் சிந்தனைகள் இந்திய சமூக அமைப்பின் சாதிகளின் ஆதிக்கம் பற்றி விரிவாக ஆய்வு செய்கிறது. சாதிகளின் தோற்றம், இருப்பு, ஒழிப்பு பற்றிய கருத்துகளை முன் வைக்கிறது. சாதிய ஏற்றத் தாழ்வற்ற சமூகம் பற்றிய விடுதலையை முன்வைக்கிறது. இந்தியாவில் சாதிகள், சாதி ஒழிப்பு, தீண்டத்தகாதவர்கள் யார், அவர்கள் ஏன் தீண்டத்தகாதவ்களாக்கப்பட்டார்கள், இந்துத்துவத்தின் புதிர், பார்ப்பனியத்தின் வெற்றி போன்ற ஆய்வுகளின் மூலம் சாதியம் குறித்து பல விவாதங்களை எழுப்பினார்.

தீண்டாமையின் வேர் சாதிமுறை, சாதிமுறையின் வேர் வருணாசிரமம், வரணாசிரமத்தின் வேர் பார்ப்பனியம் (இந்து மதம்), பார்ப்பனியத்தின் வேர் அரசியலதிகாரம் என்று சாதி ஒழிப்பு நூலில் வலியுறுத்திய அண்ணல் அம்பேத்கர், சாதி ஒழிய இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும் என்றும் இந்துத்துவ சக்திகளின் அரசியலதிகாரத்தை ஒழித்து ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாதவர்கள் அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பார்ப்பனியமும், முதலாளியமும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் என்று அண்ணல் சுட்டிக் காட்டினார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவற்றின் மறுப்பே பார்ப்பனியம், அது பார்ப்பனர்களிடம் மட்டுமன்றி சகல சாதிகளிடமும் ஊடுருவிக் கிடக்கிறது என்றார். வருணாசிரம ஏற்றத்தாழ்வை, அல்லது பிறப்பினால் உண்டாகும் ஏற்றத் தாழ்வை, அல்லது இந்து மத உளவியலான நம்பிக்கைகள் சார்ந்த படிநிலை அமைப்பை நியாயப்படுத்தும் கருத் தியலையே அவர் பார்ப்பனியம் என்றார். வேதங்களையும், இதிகாசங் களையும், பகவத்கீதையையும் மறுவாசிப்பு செய்து அவைகள் ஆபாசமானவை என்பதை அம்பலப்படுத்தினார். பாட்டாளிகள் இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஏதுமற்றவர்கள் என்ற மார்க்சின் அறைகூவல் இந்தியப் பாட்டாளி வர்க்கத் திற்குப் பொருந்துமா என்கிற கேள்விகளுடன் ஒவ்வொரு சாதிக்காரனுக்கும் இங்கே இழப்பதற்கு சாதி உரிமைகள் உள்ளனவே என்றும், சாதி ஒழிந்தால்தான் பாட்டாளி வர்க்கமாகத் திரள முடியும், அதுவே புரட்சிக்கு அடித்தளம் அமைக்கும் என்றார்.

இனவேற்றுமையை விடவும், அடிமைத்தனத்தை விடவும் சாதிய ஒடுக்குமுறை மிகக் கொடூரமானது என ஒப்பீடு செய்தார். கறுப்பின அடிமைகளுக்குக் கிடைக்கும் தேர்வு செய்யும் முறை இந்தியத் தீண்டத்தகாதவர்களுக்கு இல்லை. எனவே சாதி என்பது அடைபட்ட வர்க்கம் என்றார்.

சாதி ஒழிய வேண்டுமானால் சாதி மறுப்புத் திருமணங்கள் பரவலாக்கப்பட வேண்டும். இந்து சமயத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகிற வாய்ப்பை வழங்க வேண்டும், அது நிகழாத போது, வேதங்களையும், சாஸ்திரங்களையும் வெடி வைத்துத் தகர்க்க வேண்டும். பகுத்தறிவு செயல்பட இடம் கொடுக்காத ஒழுக்கமில்லாத வேதங்களையும், ஸ்மிருதிகளையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்க வேண்டும் என்று இலட்சக்கணக்கான மக்களோடு பௌத்தத்தை தழுவினார்.

அரசியல் நிலைப்பாடு:

இரட்டை வாக்குரிமை மற்றும் இடஒதுக்கீடு:

அண்ணல் அம்பேத்கர் அவர் வாழ்ந்த காலத்தின் மிகச்சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தார். "கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்” என்பது அவருடைய புகழ்பெற்ற வாசகம். கல்வியால் யாரையும் எதிர்கொள்ளும் துணிச்சல் அவருக்கிருந்தது. தனது சமூக விடியலைக் கல்வி மூலமே பெற முடியும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே, கல்விப் பரவலுக்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். சித்தார்த்தா கல்லூரியை அவர் தொடங்கினார். கல்வி நிலையங்களில் மற்றும் அரசுப் பணிகளில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளில் அட்டவணை சாதியின ருக்கான இட ஒதுக்கீட்டிற்கு அண்ணல் வழி வகுத்தார். தீண்டாமை மற்றும் சாதி ஒழியும் வரை இந்த இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவே அரசியலமைப்புச் சட்டத்தை எழுத ஒப்புக் கொண்டதாகக் கூறினார். அறிவு வளர்ச்சியே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற உதவும் என்று நம்பினார். "நாம் ஒரு ஆளும் வர்க்கமாக மாறாதவரை நம் மீதான அடிமைத் தனம் ஒழியாது” என்றார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியைத் தாழ்த்தப்பட்டவர்களே தேர்ந்தெடுத்தால்தான் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கென உழைக்க முடியும்; இல்லையேல் ஆதிக்க சாதியினரையே சார்ந்து செயல்படும்படியாகும் என்று அண்ணல் அம்பேத்கர் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற முறையை இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் வாதாடிப் பெற்றார். இத்தகைய சிறப்பு ஏற்பாட்டை ஆங்கிலேய அரசு தாழ்த்தப்பட்டோருக்கும் இதர சிறுபான்மையினருக்கும் வழங்கியது. இதன்படி தாழ்த்தப்பட்டவர்கள் இரண்டு வாக்குரிமைகளைப் பெறுவர். பிற சாதியினருடன் இணைந்து ஒரு பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிற்கும் தனித்தொகுதி ஒன்றிற்கான வாக்குரிமை மற்றதுமாகும். இந்தச் சிறப்பு ஏற்பாட்டின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சுயமாக நின்று தேர்தலில் வெற்றி பெற இயலும் என்றறிந்த காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இந்தச் சிறப்பு ஏற்பாட்டைக் காலிசெய்து, காந்தியின் விருப்பப்படி பூனா ஒப்பந்தம் என்கிற கபட நாடகம் அரங் கேறியது. இது குறித்து அம்பேத்கர் எழுதும்போது "தாழ்த்தப் பட்டவர்களின் உரிமையா? இந்திய மக்களால் கடவுளாகக் கருதப்படும் காந்தியின் உயிரா? மனிதாபிமான அடிப்படையில் இரண்டாவதைத் தேர்வு செய்தேன்” என்று தன் நிலையை விளக்கினார். (இது குறித்து மேலும் அறிய காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? என்கிற நூலை வாசிக்கவும்).

அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள்:

பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத் தன் அமைச்சர் பதவியைத் துறந்த முதல் மனிதர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து மற்றும் மறுமணம் போன்ற முற்போக்கான அம்சங்களடங்கிய இந்துச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பெரிதும் முயன்றார். பார்ப்பனர்களும் இந்து வெறியர்களும் இம்மசோதா நிறைவேறா வண்ணம் தடுத்து நின்றனர். நேருவும் பார்ப்பனர்களுக்கு அஞ்சி இம்மசோதாவை நிறைவேற்ற அளித்த உறுதிமொழியிலிருந்து நழுவினார். இதனைக் கண்டு மனவேதனை அடைந்த அம்பேத்கர் தன் அமைச்சர் பதவியை உதறியெறிந்துவிட்டு காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.

பெண்களின் பிரச்சனையும் தீண்டத்தகாதவர்கள் பிரச்சனையும் ஒன்றுதான் என்றும் இருவர் மீதும் தீட்டு என்கிற கருத்து திணிக்கப்பட்டிருக்கிறது என்றும் இரு பிறப்பாளருக்கான தகுதி இருவருக்கும் மறுக்கப்பட்டிருக்கிறது என்றும், பெண் மீது ஆண் திணித்திருக்கிற எல்லா கோட்பாடுகளையும் மீறாத வரை பெண்ணுக்கு விடுதலையே இல்லை என்றும் எழுதினார். இலட்சியப் பெண்கள் புராண இதிகாசங்களில் எவ்வாறு ஒடுக்கப்பட்டிருந்தார்கள் என்றும், பெண்களை மனு எவ்வாறு இழிவுப்படுத்தினார் என்றும் அம்பலப் படுத்தினார். இந்துச் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதங் களில் பெண்கள் விடுதலைக்கென எவ்வாறு சளைக்காமல் வாதாடினார் என்பதை தொகுதி 31இல் விரிவாக அறியலாம்.

அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்:

முனைவர் அம்பேத்கரின் பன்முக வெளிப்பாடுகளில் மிகவும் முக்கியமானவை அவரது பொருளியல் சிந்தனைகளாகும். அவரது முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம், அறிவியல் முனைவர் பட்டம் அனைத்தும் பொருளாதார ஆய்வுகளுக் காக வழங்கப்பட்ட பட்டங்களே ஆகும். அவரது பொருளாதார ஆய்வுகள் முழுக்கமுழுக்கத் தீண்டத்தகாதவரின் கண்ணோட்டத்தில் அமைந்தவையே. சாதியமைப்பின் பல்வேறு பொருளியற் பண்புகளை ஆராய்ந்த அவர் ஆதிக்க சாதியினரின் கையில் உற்பத்திக் கருவிகள் அனைத்தும் இருப்பதாகவும், சூத்திர மற்றும் தீண்டத்தகா தோரிடம் உழைப்பு மட்டும் இருப்பதாகவும் கூறினார்.

அம்பேத்கர் பெரிதும் முன்நிறுத்துவது அரசு சோசலிசமாகும். அதையும் அவர் இந்திய அரசியல் சட்டத்தின் வாயிலாக நிறுவப்பட வேண்டுமென விரும்பினார். அதன்படி,

1. முதன்மைத் தொழில்கள் அரசுக்குச் சொந்தமாய் இருக்கும்.
2. அரசால் அது நிர்வகிக்கப்பட வேண்டும்.
3. வேளாண்மை அரசுத் தொழிலாக இருக்க வேண்டும்.
4. வயது வந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு காப்புநிதியளிக்க வேண்டும்.
5. நிலங்கள் கூட்டுப்பண்ணைகளாக்கப்படவும், அப்பண்ணை கள் கிராம மக்களிடம் சாகுபடிக்கு விடப்படவும் வேண்டும்.
6. நிலங்கள் சமஅளவில் உழைப்பைக் கோருவதால் சாதி சமய வேறுபாடுகளோ, நிலவுடமையாளர்- குத்தகைதாரர் வேறுபாடுகளோ இராது.
7. பாசனநீர், உழவுக்கருவிகள், உரம் முதலியன வழங்குவது அரசின் கடமையாகும் என்று கூறினார்.

நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்திற்கென அதிக அளவு ஒதுக்கப்படுவதைத் தவிர்த்து மக்கள் நலப்பணிகளுக்கு நிறைய நிதியை ஒதுக்க வேண்டும் என்றார். காஷ்மீர் பிரச்சனை இன்றைக்கு கூடுதலான கவனத்தை பெற்றிருக்கும் சூழலில் காஷ்மீரைத் தனியே பிரித்துக் கொடுத்து விடுவதே நல்லது என்றார். மதுவிலக்கு தேவையற்றது. பசியில் வாடுபவனா, குடிகாரனா? யாருடைய நலன் என்கிற கேள்வி வந்தால் நாம் பசியில் வாடுபவனின் பக்கமே நிற்க வேண்டுமென்றார்.

சமூக மாற்றம் குறித்து:

"இந்தியாவில் ஏன் சமூகப் புரட்சி நடக்கவில்லை என்ற கேள்வி ஓயாது என்னைத் துன்புறுத்தி வருகிறது. இதற்கு ஒரே பதில்தான் என்னால் தர முடியும். துயரமான நால்வர்ண முறையானது கீழ்மட்ட வர்ண இந்துக்களை நேரடி நடவடிக்கையில் இறங்காவண்ணம் முழுக்கவே தகுதியற்றவர் களாக்கி விட்டது. அவர்கள் ஆயுதம் ஏந்த முடியாது. ஆயுதம் ஏந்தாமல் கலகம் செய்ய முடியாது. இவர்கள் எல்லாம் உழவர்களாக இருக்கிறார்கள் அல்லது உழவர்களாக இருக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே தங்கள் விளைச்சலை ஆயுதம் தாங்கியவர்களோடு பரிமாறிக் கொள்ள அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. ஆகவே மற்றவர்கள் அவர்களை ஆண்டு வருகிறார்கள். நால்வர்ண முறையின் காரணமாக அவர்களால் கல்வி கற்க முடியாது. தங்கள் மீட்சி குறித்து அல்லது அதற்கான வழிமுறை குறித்து அவர்களால் சிந்திக்க முடியாது. அவர்கள் கீழான நிலைக்குத் தள்ளப் பட்டிருக் கிறார்கள். இதிலிருந்து தப்புவதற்கான வழிமுறைகளை அறிந்திருக்கவில்லை. தப்புவதற்கான வழிமுறைகளையும் பெற்றிருக்கவில்லை. நிரந்தர மான அடிமைத்தனத்தோடு பிணைக்கப்பட்டது தங்களுடைய தப்பிக்க முடியாத தலைவிதி என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆயுதம் தாங்கிய புரட்சி குறித்து அம்பேத்கர் எழுதியது வெறும் வெற்றுச் சொல்லாடல்கள் அல்ல. அதன் உள்ளீடாகத் தெரிவது வர்க்கப் புரட்சிதான். ஆனால் வர்க்கம் உருவாக இங்கே சாதி தடையாக உள்ளது. எனவே வர்க்கப் போராட்டத்தின் முன் நிபந்தனை சாதி ஒழிப்பாகும். சாதி ஒழிப்புதான் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டும். எனவே சாதி ஒழிப்புதான் இந்திய சமூகத்தின் முதல் புரட்சியாகும். சாதி அமைப்பை நிலவுடைமையின் மேல்கட்டுமானம் என்கிற மார்க்சீயர்களின் அணுகுமுறையிலிருந்து அம்பேத்கர் விலகும் புள்ளி இதுதான். வர்க்கப்புரட்சி என்ற ஒன்று நடந்தாலும் அப்போதும் சாதி இந்தியச் சமூகத்திற்குச் சவாலாகவே இருக்கும். எனவே, சாதி ஒழிப்பே இந்தியச் சமூகத்தின் மிக அவசியத் தேவையாகும்.

பயன்பட்ட நூல்கள்:

அண்ணல் அம்பேத்கர் நூல்தொகுப்புகள், என்.சி.பி.எச். சென்னை-98.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, ஆங்கில மூலம்: தனஞ்செய் கீர், தமிழாக்கம்: க.முகிலன், மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, சென்னை-5.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com