Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kathaisolli
Kathisolli Logo
மே - ஆகஸ்ட் 2006
நாட்டுப்புறக்கதை
மருளாடி
எஸ். இலட்சுமணப்பெருமாள்

வெளியூர் பிரயாணத்துக்கான கட்டுச் சோத்து பொட்டலத்தை குச்சியில கோர்த்து தோள்ல சாத்தி, விறுவிறுன்னு வாசல் வரை நடந்து வந்த புருசன்காரன் மறுக்கா ஒரு தடவை ‘இந்தா பாரு ஏமாய் சொன்னது ஞாபகம்’ன்னு சொல்லி திரும்பி பழைய படிக்கும் பெஞ்சாதிக்கி கூறு சொல்ல ஆரம்பிச்சான். அவனை பொடதியைப் பிடிச்சி தள்ளாத குறையா பின்னாடியே வந்தவ ‘சரிசரி போயிட்டு வாரும் நான் பாத்துக்கிடுதேன்னு’ சலிப்பும் விரசலுமாய்ச் சொன்னாள்.

Couple “இந்தா பாரு பொழுதனைக்கும் சொன்னதையே சொல்லுதேமுன்னு நெனைக்காதே. ஊரு அப்படி ஊரு பாத்துக்கோ. ஒண்ணுன்னா ஒம்பதும்பான். நான் இப்பொ கிளம்பிப் போறவன் திரும்பி வாரதுக்கு ரெண்டு வருசம் ஆகுதோ மூணு வருசம் ஆகுதோ, போற இடத்துல பாடு சோலி எப்படியோ எவடமோ. இங்க ஒரு மழை தண்ணி பெஞ்சி காடுநாடு செழிக்கிற வரைக்கும் அங்குட்டாகப் பட்டு அலஞ்சி பெறக்கி ரெண்டு துட்டுத்துக்காணி பாத்துதான் திரும்பணும். அப்படி இப்படி முன்னப்பின்ன ஆகிப்போகும். நமக்கும் பிள்ளை கொள்ளின்னு ஒண்ணும் கிடையாது. நா வேற ஊர்ல இல்லையா. பயபுள்ளெக வெள்ளைத் துணியில அழுக்கை ஒட்ட வெச்சமாதிரி லேசா ஒட்ட வச்சிருவாங்க. நாலுபேரு கூடி எக்கண்டாம் பேசிச் சிரிக்கிற மாதிரி பேச்சு வாங்கீறப்படாது. இதம்பதமா பதவிசா நடந்துக்கோ சொல்லிப்பட்டேன் அம்புட்டுத்தான்.” கால்ல செருப்பை மாட்டி கிளம்புனவனைப் பாத்து பின்னாலிருந்து ‘ஙா .... சரி சரி, அப்படீன்னு உதட்டைப் பிதுக்கி வக்கலங் காட்டுனா.

அவன் அந்தா அப்படித்தான் போயிருப்பான். வைப்பாளனை இங்குட்டுக் கூடி வர சொல்லீட்டா. அவன் எப்படியாப்பட்டவன் தெரியுமில்லே. இந்த ஊருக்கே சண்டியரு. எப்பப் பார்த்தாலும் அருவாளும் கையுமாத்தான் திரியுவான். வேல வெட்டி ஒண்ணுங் கிடையாது. இவதான் அப்பைக்கப்பொ வீட்டுக்காரனுக்கு தெரியாம ஏமம் சாமம்னு பாக்காம சோறு தண்ணி கொண்டு போய் கொடுத்து பீடிச் செலவுக்கும் ரெண்டு ஒண்ணு கொடுத்திட்டு வருவா.

இவளை அவ புருசங்கூட ஒரு சொட்டச் சொல் சொன்னது கிடையாது. இவன் என்னடான்னா என்னமோ இவன்தான் கிழக்காம நிறுத்தி தாலி கட்டுன மாதிரி அடியே புடியே தேவடியா பலவற்றைன்னுதான் பிடிச்சி விரட்டுவான். நிதாசரியும் அடியும் செமத்தியா வாங்குவா. என்ன அடிச்சாலும் வஞ்சாலும் செய்ம் முறையில அவன மாதிரி செய்ய முடியாது. அவன் எத்தன பேசுனாலும் அந்த ஒண்ணுக்குத்தான் மகுடிக்கு மயங்குன பாம்பா அடங்கிக் கிடக்கா. அவ உடம்புல அவன் விழுந்து நிர்வாகம் பண்ண ஆரம்பிச்சாட்டான்னா விடியுந்தட்டியம் கிறங்க கிறங்க ரொங்க வச்சிப்புடுவான் ரொங்க. நாளும் கிழமையும் கழிஞ்சி மாதக்கணக்கும் காதவழிபோயி கொஞ்ச வருசம் சென்ற பிறகு ஒரு நாத்தேவையில புருசங்காரன் கொஞ்சம் சம்பாத்யத்தோட ஊரு வந்து சேந்தான்.

இவளுக்கு கையும் ஓடல காலும் ஓடல. ரொம்பத் தடபுடல்லா ஓடியாடித் திரிஞ்சா. குளிச்சா மஞ்சப்பூசுனா கொண்டையில பூ வச்சா. சாவலடிச்சி சாமச் சோறு பொங்கி ஒரே அரப்பும் பரப்புமா திரிஞ்சா. புருசனை உக்காரவச்சி தலவாழ இலைய போட்டு சுடுசோத்த கோதி பலுமாறி குழம்புச் சட்டியில கரண்டிய விட்டு குழம்ப அள்ளி சோத்துல ஊத்தப்போகும் போது அந்த வங்கணகாரன் ஞாபகத்துக்கு வந்துட்டான். நேரமோ அவன் வீட்டுக்கு வர்ற நேரம். இந்த மனுசன் வந்தது தெரியாம அவம்பாட்டுல நெருநெருன்னு வீட்டுக்குள்ள நொழஞ்சிட்டான்னா. கத கந்தலாயிருமே.

கரண்டியில எடுத்த குழம்பை குழம்புச்சட்டியிலியே ஊத்தி வச்சுப்புட்டு ஒரே ஓட்டமா ஊடுகாட்டுப் பாதையில் ஓடுனா. அவன் அப்பதான் கையில தீட்டுன அருவாளோட கம்மாக்கரை தாண்டி விரசலா வந்துக்கிட்டிருந்தான். ஓடிப் போய் அவனை மறிச்சி, ‘இந்தா பாரு மனுசா இன்னயிலிருந்து வீட்டுப்பக்கம் வந்துராதே. என் வீட்டுக்காரரு வந்துட்டாரு’ அப்படீன்னா.

பசியின்னா பசி அவனுக்கு அகோரப்பசி, வந்த ஆத்திரத்துல அவனுக்கு கோபம் அண்டகாரம் முட்டிப்போயி, ‘சிரிக்குபிள்ளே ஒஞ்செளரியத்துக்கு நாவேணும்னா வரணும். வராதேன்னா திரும்பி போயிறணுமோ. என்னையென்ன பொண்டுக சட்டிப்பயன்னு நெனச்சியாடி, அப்படீன்னு அவ தல மயிரை இழுத்துப் பிடிச்சி கொண்டைய அறுத்து விட்டுட்டான்.

ஆள விட்டாப் போதுஞ்சாமின்னு தலப்பங்கரையோட வீட்டுக்கு ஓடியாந்தா. புருசங்காரன் போனவளைக் காணோமேன்னு வாசலை வாசலை பாத்துக் கிட்டிருந்தான். ‘இந்தா வந்துட்டேன் இந்தா வந்துட்டேன்’னு ஓடியாந்த காலோட குழம்பை எடுத்து ஊத்தப் போனாள்.

அவளை மேலயும் கீழேயும் ஏற இறங்கப்பாத்த புருசக்காரன். ‘ஏ. இவள! கொஞ்சம் பொறு. ஆமா இதென்ன கோலம்? சோத்தைப் போட்டு குழம்பை கரண்டியில எடுத்து ஊத்தப் போனவ அப்படியே போட்டுட்டு மேகால்பிடிச்ச மாதிரி ஓடுன சரி. அதாம் போகட்டும். போகும்போது கொண்டைய நிறைய அள்ளி முடிஞ்சி பூவச்சி பொட்டுவச்சி மஞ்சப்பூசி கொப்பும் குலையுமா போனியே, இப்போ மூளியலங்காரி கோலத்துல அதுவும் வேர்த்து விறுவிறுத்துப் போயிவந்திருக்கியே என்ன விவரம் சொல்லூன்னான்.

‘அதுவா அதுபாரும்யா, அதுவந்து நீரு வெளியூரு போனீரா அப்படிப் போகையில நல்லா முறையாப் போயி நல்ல முறையில் திலும்பி வந்தா, அப்படி வந்தன்னக்கி நா தலைக்கு குளிச்சி மேனியில மஞ்சப்பூசி கொண்ட தழும்ப பூவச்சி பொட்டு வச்சி புருசனுக்கு சாவலடிச்சி சாமச்சோறு பொங்கி தலவாழ எலைபோட்டு சோத்தை பலுமாறி குழம்பை கரண்டியில எடுத்து சோத்துல ஊத்துறதுக்கு முன்னாடி ஒஞ்சன்னிதிக்கு வந்து பூவோட எங்கொண்டைய அறுத்து ஒம் பொற்பாதங்கள்ல சமர்ப்பணஞ் செய்றேன்னு, நம்ம ஊரு காளியாத்தாளுக்கு நேந்துக்கிட்டிருந்தேன். அதான் ஒரு ஓட்டத்துல போயி நேமுகத்தை செலுத்திட்டு திரும்பி வந்தேன், அப்படீன்னா.

புருசன்காரனுக்கு சந்தோசம் பிடிபடலை. இப்பேர்பட்ட பதிவிரதை எந்தச் சீமையில தேடுனாலுங் கெடைப்பாளா அப்படீன்னு பூரிச்சுப் போனான். இது இப்படி இருக்க, இவ இப்படிச் சொன்னது கோயில்ல இருந்த காளியாத்தா காதில விழுந்திருச்சி. காளியாத்தா அந்த மட்டுல பதறி விலுவிலுத்துப் போயி அடப் பாதகத்தி கெடுத்தாளே இப்படி வாய் கூசாம புளுகுறாளே. இப்பேர்பட்ட பொம்பளையும் உலகத்துல உண்டுமான்னு கையிலிருந்த திரிசூலத்தையும் மண்டை ஓட்டு கப்பறையையும் தூர எறிஞ்சிட்டு மூக்குமேல விரலை வச்செ மட்டுல தம் மதியில்லாம உக்காந்துட்டா.

மறாநா காலையில பூசாரி வந்து கோயில் கதவை தெறந்து பார்க்கும்போது திரிசூலமும் மண்டை ஒட்டுக் கப்பறையும் திசைக்கு ஒண்ணாக்கிடக்க ஆத்தா மூக்கு மேல விரலை வச்செமட்டுல உக்காந்திருந்த கோலத்தைப் பார்த்து பயந்து போயி இதென்ன கிரகசாரமோ ஊரப்பிடிச்ச வெனை. எதோ தெய்வ குத்தமாகிப் போச்சி. அது ஊரைப்பிடிச்சி அலைக்கழிக்கப் போகுதுன்னு ஊரு நாட்டாமை கிட்டெ சொல்ல, அவரு இருபத்தொரு கிராமத்து சனங்களையும் கூட்டி ஊர்க்கூட்டம் போட்டாரு. விடிய விடிய சனங்க தூங்காம மூலா மூலைக்கு ஆளனுப்பி எப்படியும் ஆத்தா மூக்குலயிருந்து விரலை எடுக்க வெச்சிரணும்னு ஏகப்பட்ட பரிகாரதாரிகளை கொண்டு வந்து பரிகாரம் பண்ணுனாங்க.

ஆத்தா அசையலை. இருபத்தோரு நா பொங்கல் வச்சி நாள் ஒண்ணுக்கு ஊருக்கு ஒரு கிடா வெட்டி விடிய விடிய வில்லுப்பாட்டு ஆட்டபாட்டம் போட்டு பார்த்தும் ஒண்ணும் நடக்கலை. கடைசியா எப்படியும் ஆத்தா கோபத்துலயிருந்து ஊரைக் காப்பத்தணுமேன்னு எவரொருத்தரு ஆத்தா மூக்குலயிருந்து விரலை எடுக்க வக்கிறாகளோ அவங்களுக்கு பத்து ஏக்கர் நஞ்சையும் ஊருக்கு நடுவுல அரண்மனை மாதிரி வீடும் கட்டித் தர்றதா பஞ்சாயத்தார் முடிவு செஞ்சாங்க.

சேதி சமுத்திரம் முட்ட பரவிருச்சி. ஆனானப்பட்ட தொள்ளாளிகளெல்லாம் மந்திரப் பிரம்புகளோட வந்து துடி தேவதைகளை ஏவிப்பார்த்தாங்க. ஆத்தா அசையலை.

ஒரு நாப்போல ஆத்தாளை அந்தக்கதிக்கு ஆளாக்குன அந்தப் பொம்பளை ஒரு கட்டை விளக்குமாத்தை எடுத்து இடுப்புல சொருகிக்கிட்டு காளியாத்தா கோயிலுக்கு வந்தா. சனங்களை விலக்கிக்கிட்டு உள்ளபோயி பூசாரிகிட்டெ ‘யோவ் பூசாரி அந்தத் திரையை கொஞ்சம் இழுத்து மூடுங்க நாம்போயி ஆத்தாகிட்டெ செத்த பேசிட்டு வர்றேன்னா. இதுலெ தீந்துராதா அதுலெ தீந்துராதான்னு விசனப்பட்டுப் போய்க் கிடந்த பூசாரி இவ குறையெதுக்குன்னு திரையை இழுத்து விட்டு அவளைத் தவிர எல்லாத்தையும் வெளியே நிக்கெச் சொல்லிட்டாரு. இவ ஆத்தாளை நெருங்கிப் போயி, ‘ஏ. இவளே .... இப்போ மூக்குலயிருந்து விரலை எடுக்கப் போறீயா இல்லையா... ஊருக்குள்ளே எவம் பெண்டாட்டி எவங்கூடப் போனா உனக்கென்ன? உனக்கு பொங்கல் வச்சாகளா, கிடாவெட்டுனாகளா, ஊரு சுத்திக் கொண்டு வந்து நெல சேத்தாகளான்னு கண்ணை மூடிக்கிட்டு அருவம்படாம உட்காந்திருப்பியா.... என்ன தலப்புரட்டுத்தனம்.... ம்..... ராங்கித்தனம் என்ன வேண்டிக்கிடக்கு ... படவா இப்பொ மூக்குலயிருந்து வெரலை எடுக்கலே.... அப்படீன்னு இடுப்புல வச்சிருந்த கட்டவிளக்குமாத்தை உருவுனா.

ஆத்தா அந்தமட்டுல நெலகுலை பதறிப்போயி மூக்குலயிருந்து விரலை எடுத்ததும் ஜங்குன்னு குதிச்சி ஓடிப்போயி பழைய படி திரிசூலத்தையும் மண்டை ஓட்டு கப்பறையுைம் பாய்ஞ்சி எடுத்து கையில வச்சிக்கிட்டு எஞ்சிவனேன்னு உட்காந்துகிட்டா.

இவ திரையை விலக்குனதும் பூசாரியையும் மத்தவங்களையும் கூப்பிட்டு ஆத்தாளை காட்டுனா. சனங்கள்லாம் புல்லரிச்சுப் போய் ‘பொல பொல’ன்னு குலவை போட்டு, அந்த ஆத்தாளே நீதான் அவ ஒங்கிட்டெதான் குடி கொண்டிருக்கா, அப்படீன்னு கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குனாங்க. பத்து ஏக்கர் நஞ்சையோட அரண்மனை மாதிரி வீட்டுல உட்கார்ந்து காணிக்கை வாங்கிக்கிட்டு வர்றவங்களுக்கு அருள்வாக்கு சொல்லிக்கிட்டிருக்கா.

குறிப்பு: இந்த நாட்டுப் புறக்கதையை வாசகர்கள் இரண்டு தனித்தனிக் கதைகளாக ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். இரண்டுவிதத் தளத்தில் இயங்குகின்ற கதைகளை இணைத்து ஒரே கதையாக முடிச்சுப் போடும் மரபும் நாட்டுப்புறக் கதைக் களத்தில் உண்டு. அத்தகையை கதையாக இக்கதை திகழ்கிறது.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com