Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kathaisolli
Kathisolli Logo
மே - ஆகஸ்ட் 2006
மலைக்காட்டு மக்கள் கதை
முதலைக் கேணி
‘குறிஞ்சிச் செல்வர்’ கொ. மா. கோதண்டம்

தூர்க்கிரியா தூர்க்கிரியா திக்கிட்டூர்கூ கிர்க்கீக் கூ.

விடிகாலைக் காட்டுக் குருவிகள் வன உயிர்களை எழுப்பின. பிரசவவலி நின்று செக்கச் சிவந்த சூரியக் குழந்தை எட்டிப் பார்த்தது. இரண்டு மலைகளுக்கிடையிலான அடர்வனத்தில் அந்த வெட்ட வெளியிடத்தில் குச்சில்கள் போட்டுக் கொண்டு வாழ்ந்து வந்தனர் பழங்குடி மக்கள்.

அடர்ந்த பெருமரங்களின் அடியில் வளர்ந்திருந்த குறுமரங்களும் கொடிகளும் எப்படியாவது சூரியனை எட்டிப் பார்த்துவிட வேண்டும் என்று கிடைத்த இடத்தில் கிளைகளை நுழைத்து பார்க்க ஊர்வலத்து மன்னர்களைப் பார்க்க துடித்துக் கொண்டிருக்கும் முத்தொள்ளாயிரத் தலைவிகளைப் போல முயன்று கொண்டிருந்தன.

நாட்டாமை காடன் பாறையில் வந்து உட்கார்ந்தான். வரூரன் அருகில் வந்து நின்றான். காடன் கருத்த உடலை கரும் போர்வையால் போர்த்தியிருந்தான். தலையைச் சொறிந்து கொண்டே, “ஏய் வருரா ... ஆளுகள கூப்டு. உள்காட்டுக்கு அனுப்பலாம்” என்றான். “கொஞ்சம் பொழுதேறட்டுமே குளிரு ஆட்டி வைக்கிறே”.

“மனுச நாதியற்ற அத்துவான வனத்துல குளிருதா? சரிப்பா ஒரு இறகு தேடிக் கொண்டா”

அவன் சென்று விழுந்து கிடந்த புறாச்சிறகொன்றை கொண்டு வந்து கொடுத்தான். காடன் அதில் உச்சி ரோமங்களை விட்டு விட்டு மற்றதை பிய்த்துப் போட்டு காதுக்குள் விட்டு சுற்றிக்குடைந்தான். “என்ன நீங்க கண்டதையெல்லாம் காதுக்குள்ள விட்டுகிட்டு”, “யேய் இந்த இறகோட காது கொடயிறது இருக்கே தனி சுகம்பா. எந்த சுகமும் இதுக்கு ஈடாகாதுப்பா. ரெண்டு விரலால மாத்தி மாத்தி சுத்துனா அப்படியே வானத்துலே பறக்குற மாதிரியிருக்கும்பா”. “பொம்புள சுகத்தவிடவா?”. “எப்பா அது சித்த நாழி தாம்பா. அப்புறம் உடம்பும் சோந்துபோகும். இது அப்படியில்ல குடைய குடைய சுகந்தாப்பா”.

குச்சில்களிலிருந்து ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

“எல்லாரும் வந்தாச்சா”?

“ஆமா ஆளுங்கெல்லாம் வந்தாச்சி”.

“சரிப்பா ... ஆம்புளங்க ரெண்டு பேரு காய்கனிக்கு ரெண்டுபேரு தேனு எடுக்கவும் போங்க பொம்புளப்புள்ளக கெழங்கெடுக்கப் போங்க. வகுரா நீ போயி குச்சிலும் சுத்தி புல்லுக பொதறா மண்டிக்கொடக்கு. ஒழுங்கா செதுக்கி வையி”.

அந்த மக்கள் வயிற்றுப் பாட்டுக்காக பல திசைகளிலும் பிரிந்து சென்றனர். நாட்டாமெ மகள் குள்ளியும் அவள் தோழிகளுமாக கிழங்கு தோண்ட ஆடிப்பாடி பேசிக் கொண்டே புறப்பட்டனர். குள்ளி புது நிறந்தான். குட்டையான உருவம். ஆனாலும் தளதள வென்ற அழகான உடம்பு. அவள் கண்களே பேசும், துறுதுறுவென்று துள்ளிக் குதிக்கும் இயல்பான நடை. பூப்போன்ற முகம்.

தோழிகளும் அழகானவர்களே. செயற்கையாக அழகுபடுத்திக் கொள்ளத் தெரியாத காட்டு தேவதைகள். உடைகள் கிழிசலும் தைத்ததுமானவைதான். தலைமுடிகள் எண்ணை வாரப்படாத சுருண்ட கருமுடிகள். அவர்கள் உணவு ஒரு வேளையோ அல்லது இரண்டு வேளையோ தான். இல்லாமை இயலாமை எது பற்றியும் கவலைப்படாத இயல்புடையவர்கள். சிரிப்பும் கூத்துமாக கவலைப்படாது வாழ்ந்து வருபவர்கள்.

“குள்ளி கெழங்கு கிடைக்கல்லன்னா என்ன செய்யலாம்”?

“ராவு வரைக்கி தேடுவம். கெடக்கல்லேன்னா நிலா வருமில்லயா நிலாவ பிட்டுத் திம்போம்.”

“சர்த்தான் தொட்டுக்க என்ன செய்ய”?

“நட்சத்திரத்தை உடச்சி உப்புக் கல்லாக்கி தொட்டுத் திம்போம்.”

“ஆகா என்ன தாம் புள்ள சொல்லுதே”?

“குள்ளி என்ன சொல்லுதா ... அவ கூட இருந்தா கடசிவரக்கி கவலப்படாமையே சாவலாண்டி.”

அவர்கள் அடர் வன ஒற்றையடிப் பாதை வழியாக நடந்தனர். மரவேர்களும் கற்களுமாக கரடான பாதை அது. பகல் தான் என்றாலும் வெளிச்சத்தை உள்ளே விடாத காடுகள்.

“குள்ளி, ஒரு பாட்டுப் பாடென்”.

“அட போங்கடி ....”

“சும்மா பாடு குள்ளி”. எல்லோரும் வற்புறுத்தினார்கள்.

ஆத்துக்கு தெக்கே ஆலமரம்
அதுக்குத் தெக்கே அல்லிக்குளம்
அல்லிக் குளத்துல தண்டெடுத்து
தேனெக் குடிக்கலாம் வாங்கடியோ !

குள்ளி, அருமையா ரோசன சொன்னா. கிடாப் பாறை கடவுள பொந்துத்தேன் இருக்கு. அதுல தேனெடுத்து அல்லித் தண்டால சாப்பிடலாம்.

‘நீங்க ஒரு பாட்டுப் பாடுங்களேன்’. குள்ளி கேட்டாள்.

பிச்சி, குள்ளி கேக்கால்லே, நீ தான் பாடேன். அவளப் பத்தியே பாடு.

குள்ளி நடந்தால் முல்ல மொட்டெல்லாம்
பல்ல இளிச்சே பூத்திடும் பாரு
அள்ளி எடுத்து ஒடிப் போயிட
அதோ எட்டிப் பாக்கான் சூரியன்

“நெசந்தாண்டி அப்படியே பாடிட்டா, பிலா நீ பாடேன்”

உள் காட்டு வனத்துக்குள்ளே
நூறு மயில் ஆடிவரும்
ஆடிவரும் மயில் கூட்டமெல்லாம்
அழகி குள்ளிய சுத்திவரும்

“அதுதான் அது தான் அப்படிப்பாடு அடுத்துபாடு”

காட்டு நிலா நம்ம குள்ளியத்தான்
கட்டிக்க போறவன் எந்த ராசா
வேட்டக்கி வந்தாலும் விட மாட்டோம்
வேங்கய கொன்னாலும் விட மாட்டோம்

“அப்ப இவள எவந்தான் கட்டுவான், என்னைக்கு கட்டுவான்”

குள்ளிப் பூவாம் எங்க ராணிய கெட்டிக்க
வில்லாள கண்டங்க நூறுபேர் வந்தாலும்
குள்ளி மனசுக்கு ஏத்த ராசா வேணும்
நூறு பேரையும் செயிச்சவனா வேணும்

“சரி சரி கிடாப்பாறை வந்தாச்சி. பொந்துல புகை ஊதி தேனெடுத்து வாங்கடியோ !”

அங்கே கரடு முரடான பாறைகள் குவிந்திருந்தது. ஒரு பாறைக் கடவில் ஒரு பொந்து தெரிந்தது. சின்னஞ்சிறு தேனீக்கள் வெளியே ஆய்ந்து கொண்டிருந்தன. பொந்துக்கு முன்பு செத்தைகள் போட்டு தீ வைத்தார்கள். புகையை ஊதி உள்ளே விட்டார்கள். தேனீக்கள் வெளியே வந்துவிட்டன. பொந்துக்குள் கையை விட்ட ஒருத்தி அடையை பிய்ந்து எடுத்தாள். அடுத்தவள் கொண்டு வந்து இலைத் தொண்ணையில் பிழிந்தாள். ஆளுக்கு ஒரு தொண்ணையில் பிழிந்ததும் குளத்திலிருந்து ஒருத்தி கொண்டுவந்த அல்லித் தண்டை ஒடித்து ஒடித்து ஆளுக்கொன்றாய் கொடுத்தாள். ‘ஸ்ட்ரா’ போல் தொண்ணைத் தேனை பருகினார்கள்.

அப்போது திமு திமுவென்று ஐந்தாறு ஆண்கள் அங்கே வந்தார்கள். பெண்கள் செய்வதறியாது பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

“நீங்க யாரு? எங்க காட்டுக்கு எப்படி வரலாம்?” கட்டான உடல் கொண்ட ஒருவன் கேட்டான்.

“நாங்க ஆத்துல விழுந்து கெடக்குற மரத்து வழியா நடந்துவந்தோம் மலசனங்களுக்கு எல்லாக் காடும் சொந்தந்தா. ஆமா நீங்க யாரு?

நான் இந்தக் காட்டு நாட்டாமை. பேரு ஆலன். காடு மாறி வந்து யாரு எத எடுத்தாலும் பாதியை பகுந்து கொடுக்கனுமுன்னு முன்னேயே பேச்சு இருக்கு. ஒங்க காட்டு நாட்டாமை காடன் இதெல்லாம் சொல்லல்லியா?”

“காடன் மவ தான் இந்த குள்ளி.”

“பேசும் போதே நெனச்சேன் ஆளும் நல்லாத்தான் இருக்கா”

“சரி, பொந்துதேனு எடுத்தோம். தொண்ணை செஞ்சி அதுல ஊத்தி அல்லித்தண்டால உறிஞ்சி குடிச்சோம். இப்ப வேற என்ன செய்ய?”

“பாதியத் தரணுமில்லே”.

“அதுதான் குடிச்சிட்டமில்லே.”

ஏதோ சத்தம் கேட்கவே எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். ஒரு மான் குட்டிய துரத்திக் கொண்டு செந்நாய்க்குட்டி ஒடிக் கொண்டிருந்தது.

“டேய், ரெண்டுபேரு பின்னால ஒடுங்கடா, செந்நாயை அடிச்சி வெரட்டிட்டு மான்குட்டிய புடிச்சி கொண்டாங்கடா.”

இரண்டு பேர் அங்கே ஒடினார்கள்.

“மிருகங்க எடுக்குறதுல கூட எங்களுக்குப் பாதி தான்.”

“அப்ப செந்நாயில கூட பாதிய அறுத்து சாப்புடுங்க. எங்களுக்கு என்ன?”

“ஒங்க அப்பனைப் போலவே கேலி பேசுதே. இதுதான் எனக்கு புடிக்காது.”

“உனக்கு புடிக்கது படிக்காதது பத்தி எங்களுக்கு என்ன”

“ஏங் காட்டு பொந்து தேனு இப்படி வேற எங்கயும் இல்ல ஆத்தாளுக்கு மருந்துக்குன்னு விட்டுவச்சேன். கேட்காமெ செய்யாமெ தேனெடுத்தா விடுவாகளா?”

“தேனு எடுத்தோம் குடிச்சோம். நீ விட்டு வச்சது எங்களுக்கு தெரியாது. இப்ப என்ன செய்யலாங்குறே”

“தெரியாம எடுத்ததுக்கு ஏங்குச்சிலுக்கு வந்து ஒரு மாசம் ஆத்தாள கெவனிச்சுக்கிடனும்”

“மாட்டேமுன்னா?”

“மாட்டேன்னா தூக்கிட்டுப் போயிருவேன்”.

குள்ளியைச் சுற்றி மற்ற பெண்கள் நின்று கொண்டனர்.

“தூக்கிட்டுப் போவ விட்டுருவமா.”

“என்ன எதுத்து நிக்க முடியாது. எதுத்தா எல்லாரையும் தூக்கி முதலக்கேணியில போட்டுருவேன்.”

“என்ன நீ வச்சதுதான் விதியா?”

ஆலன் தீடீரென்று சுற்றிலுமுள்ள பெண்களை தள்ளிவிட்டு குள்ளியை பிடித்து அப்படியே தூக்கி தோளில் போட்டு கொண்டு புறப்பட்டான்.

அவள் “விடுடா விடுடா” என்று இரண்டு கைகளாலும் அவன் முதுகில் அடித்தாள். மற்ற பெண்கள் “குய்யோ முறையோ” என்று அலறிக் கொண்டு பின்னால் ஒடினார்கள். குள்ளி கால்களாலும் கைகளாலும் அவனை அடித்து உதைத்துக் கொண்டே ‘விடுடா விடுடா’ என கத்தினாள்.

“பேசாமெ வாறயா முதலைக் கேணியில் தூக்கிப் போடவா”

“போடுடா பாப்பம்” என்று கோபத்துடன் கத்தினாள். அவன் கேணி அருகில் போனான். பல பெரும் மரங்களுக்கிடையே உள்ள நீளவாக்கிலான கிடங்கு தண்ணீர் நிறைந்து இருந்தது. அதன் கரையில் வந்து நின்றான். மற்ற பெண்கள் அவனைப் பிடித்து ‘விடுடா விடுடா’ என்று உலுக்கினார்கள்.

“என்னடி நெனச்சிக்கிட்டே தூக்கிப் போட்டுடுவேன்” என்றவாறே அவளை அப்படியே கேணியில் தூக்கிப் போட எத்தனித்தான். அவள் அவனது கழுத்தைப் பிடித்துக் கொண்டே துள்ளினாள். இந்த இழுபறியில் இருவரும் சேர்ந்தே முதலைக் கேணியில் விழுந்தனர். இரண்டு குழுவினரும் செய்வதறியாது திகைத்தனர். மேலக்கரையில் இருந்த முதலை ஒன்று கேணியில் உணவு விழுந்ததும், ‘விடு விடு’ என வந்து கேணியில் பாய்ந்தது.

தங்களைப் பார்த்து பாய்ந்து வரும் முதலையை இருவரும் பார்த்தனர். அவன் மனதில் குழப்பம், பயம். சடாரென்று அவளை கரையை நோக்கி தள்ளினான். தோழிகள் கரைக்கு அருகே வந்த அவளின் கைகளைப் பிடித்து இழுத்து கரைக்கு தூக்கினார்கள். எழுந்த அவள் கேணியைப் பார்த்தாள். முதலை ‘ஆ...’ வென்று வாயைத் திறந்தபடி அவனது அருகில் வந்து கொண்டிருந்தது. அவனும் வேகமாக நீந்தினான். அங்கே கிடந்த ஒரு கட்டையை தூக்கி முதலை வாயை நோக்கி வீசினான். கட்டை முதலை வாயில் போய் விழுந்தது. அது கட்டையை வெளியே துப்ப முடியாமல் திணறித் துள்ளியது.

கரைக்கு அருகே வந்து விட்ட ஆலனை அவர்கள் இழுத்து கரையில் போட்டனர். அவன் மெல்ல எழுந்தான். கட்டையை தள்ளிய முதலை தண்ணீருக்குள் போய் விட்டது. ஆலனும் குள்ளியும் முகமலர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com