Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kathaisolli
Kathisolli Logo
பிப்ரவரி - ஏப்ரல் 2007
கொங்கு மண்டல பழக்க வழக்கங்கள்
டாக்டர். திலகம் பழனிச்சாமி, அருள்மிகு பழனியாண்டவர் கலை-பண்பாட்டுக் கல்லூரி, பழநி

பழக்கம் என்ற சொல் பழகுதல் அல்லது பயிற்சியாதல் என்ற பொருளில் தமிழில் பண்டு தொட்டுப் பயின்று வந்துள்ளது. பழகு - பழகிய - பழகுதல் பழக்கம் என்ற சொல்லாட்சிகள் இன்றும் உள்ளன. பழகிப்போன செயல், பழக்கம் ஆகின்றது. பழக்கம் தனிமனிதச் செயற்பாடு. இதனைப் பிறரும் பின்பற்ற வாய்ப்புண்டு.

பழக்கம்

பழக்கம், வழக்கம், பழக்கவழக்கம் என்ற சொல்லாட்சிகள் தமிழரிடையே மிகுதியும் காணப்படுகின்றன.
தொல்காப்பியத்தில் பழக்கம் என்ற சொல்லாட்சி இல்லையாயினும், அப்பொருள் தரக்கூடிய பல சொற்கள் காணப்பெறுகின்றன. ‘பழகிய’ (தொல்.நூ. 682) என்ற சொல்லாட்சி உண்டு.

‘‘பழக்கம் என்பது ஒரு கற்கும் செயலாகும். இது தனிமனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைக் குறிப்பதாகும். பழக்கம் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறாகக் கருதப்படுகிறது.” என்று விளக்குகிறார் க.காந்தி.
‘‘நனவுடன் தொடங்கிய செயல் நாளடைவில் நனவன்றியே அதாவது மூளையின் பிரதானப் பகுதிகளின் சம்பந்தமின்றியே நிகழ்வதாக ஆகிவிடுகின்றது. அப்படி நிகழும் செயலே பழக்கம் எனப்படும்” என்று கலைக்களஞ்சியம் கூறும்.

எந்த ஒரு பழக்கமும் முதலில் தனிமனிதனிடம்தான் தோன்றுகிறது. அது இயல்பாகவோ, தூண்டுதலினாலோ நிகழக்கூடும். பழக்கம் என்பது நல்லதாகவும் இருக்கும், தீயதாகவும் இருக்கும். அதனால்தான் நற்பழக்கம், தீப்பழக்கம் என்ற சொல்லாட்சிகள் ஏற்பட்டன. சமுதாயத்தின் உருவாக்கத்தில் இப்பக்கம்தான் அடிப்படையாக அமைகின்றது. ஒத்த பழக்கமுடையவர்கள் ஒன்றுசேர்ந்து வாழ்தலே சமுதாயத்தின் தோற்றம் ஆகும்.
சமுதாயங்கள் பலவாகப் பெருகியமைக்கு அடிப்படைக் காரணம் பழக்கமே.

இத்தகைய பழக்கங்கள் இளமை முதலே தொடங்கி வருவன. நல்ல பழக்கங்களை இளமையில் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கமே பெற்றோர் ஆசிரியரின் கடமை என்று கல்வி ஆராய்ச்சியாளர்களால் வலியுறுத்தப்பெறுகின்றது. மேலும் நல்ல பழக்கங்களை அமைத்துக்கொள்ள குழந்தைப் பருவமே ஏற்றது என்பது உளவியலாரின் கருத்து.

வழக்கம்

பழக்கம் - வழக்கம் என்றாகி இருத்தல் வேண்டும். பழக்கத்தின் தொடர்ந்த நிலையே வழக்கம் ஆகும்.
‘சமூகத்தில் அதிகமாகப் பின்பற்றப்படும் பழக்கமான நடவடிக்கையே வழக்கம் ஆகும்... வழக்கங்கள் ஒரு குழுவினுடைய விருப்பங்கள், இலட்சியங்கள், வாழ்க்கைக் கண்ணோட்டங்களால் பிரதிபலிப்பதாகவும் அமைகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார் க. காந்தி.

இதனையடுத்து, ‘‘ஒரு இனக்குழுவிலுள்ள பலருடைய மனவெழுச்சி, உணர்ச்சி, விருப்பு, வெறுப்பு ஆகியவற்றுடன் இணைந்து நிற்பது வழக்கம் என்று கருதப்படுகிறது” என்றும் குறிப்பிடுவார்.
வழக்கம் என்ற சொல்லாட்சி தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளமை அதன் பழமையைச் சுட்டுவதாகும்.

‘‘தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை இலவே.” -(தொல்.நூ.500)
‘‘முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை” -(தொல்.நூ.980)
‘‘வல்லெழுத்து மிகினும் மானமில்லை
ஒல்வழி யறிதல் வழக்கத்தான” -(தொல்.நூ.246)
‘‘அக்கென் சாரியை பெறுதலும் உரித்தே
தக்கவழி அறிதல் வழக்கத்தான” -(தொல்.நூ.270)
‘‘சொல்வழி அறிதல் வழக்கத்தான்” -(தொல்.நூ.312)
‘‘சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான” -(தொல்.நூ.637)
‘‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்” -(தொல்.நூ.999)

தொல்காப்பியர் வழக்காறு என்ற சொல்லையும் கையாண்டுள்ளார்.

‘‘வழக்காறல்ல செய்யு ளாறே” -(தொல்.நூ.501)

மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வருவது வழக்கம் ஆகும்.

வழக்கு என்பது அக்காலத்தில் நன்னெறி என்ற பொருளில் வழங்கியது. இதனையே வள்ளுவரும்,

‘‘அன்பொ டியைந்தவழக்கென்ப ஆரயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு”

என்று கூறியுள்ளார்.

‘‘எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.”

பரிமேலழகரும் வழக்கு என்பதை நன்னெறி என்றே கூறியுள்ளார்.

பழக்க வழக்கம்

பழக்க வழக்கம் - இருசொற்கலப்பாகும். பழக்க வழக்கங்களைத் தனிமனிதனும், சமுதாயம் என்ற அமைப்பும் இணைந்து உருவாக்குகின்றன. சமுதாயம் என்ற அமைப்பு. ஒன்றைக் குறிப்பதன்று. ஒத்த கருத்துடைய பழக்கங்களை மேற்கொள்வாரின் கூட்டமைப்பே சமுதாயமாகும். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே பழக்கம் உருவாகின்றது. சமுதாயத்தில் அவை ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலையில் வழக்கங்களாக உருவாகின்றன.

‘‘தனிமனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைப் பழக்கம் எனவும் இனக்குழுவிலுள்ள பலருடைய மனவெழுச்சி உணர்ச்சி ஆகியவற்றுடன் இயைந்து நிற்பது வழக்கம் எனவும் சமூகவியலார் கூறுவர்”. இக்கூற்று ஏற்புடையதாகும்.

‘தனிமனிதன் பழகிப் போன முறையில் திரும்பத் திரும்பச் செய்துவரும் ஒரு குறிப்பிட்ட செயலைப் பல மனிதர் ஒன்றாகச் சேர்ந்து செய்கின்ற பொழுது அது வழக்கம் எனப் போற்றப்படுகின்றது, என்பர் க.த. திருநாவுக்கரசு.
‘பழக்கம் என்பது தனிமனிதனைச் சார்ந்த தொடக்கநிலை எனவும் வழக்கம் என்பது சமுதாயம் சார்ந்த தொடர்நிலை எனவும் கூறலாம்’ என்பர் க. காந்தி.

பழக்க வழக்கம் ஒவ்வொரு இனக்குழுவிற்கும் சமுதாயத்திற்கும் தனிப்பட்ட முறையில் அமைவதைக் காண முடிகிறது. ஒரே ஊரில் வாழ்கின்ற வேளாளக் கவுண்டர்களின் பழக்க வழக்கங்களும், அகமுடையார் பழக்க வழக்கங்களும் ஒன்றாக அமையாமல் வெவ்வேறாக அமைந்துள்ளன.

பழக்க வழக்கம் என்ற சொல் இன்று சமுதாயச் செயற்பாட்டு நிலைகளை விளக்க வல்லதாகவே பயன்பட்டு வருகின்றது.

மரபு

மரபு என்பது பழக்க வழக்கத்தோடு தொடர்புடையது; அதனின்றும் உருவானது என்று கூறப்பெறும். பழக்க வழக்கங்களைப் பற்றி அறியுங்காலை, மரபைப் பற்றிய விளக்கத்தை அறிவதும் இன்றியமையாதது ஆகும்.

தொல்காப்பியர் நூன்மரபு, தொகை மரபு, விளிமரபு என்று சில இயல்களை அமைத்ததோடன்றி, மரபியல் என்றே ஓரியல் வகுத்துள்ளார் எனின் மரபின் சிறப்பும் இன்றியமையாமையும் புலனாகும். மரபு என்பதற்குத் தெளிவான விளக்கத்தைத் தொல்காப்பியர் அளிக்கவில்லை. ஆனால் மரபு என்பதற்குப் பல இடங்களிலும் விளக்கம் தந்துள்ளார். உரையாசிரியர்களும், திறனாய்வாளர்களும் மரபு என்பதற்குப் பல்வேறு விளக்கங்கள் தந்துள்ளனர்.

அரசஞ்சண்முகனார்,

‘‘மரபு என்பது தொன்று தொட்டு வந்த வழக்கு” என்பர்.

‘‘மரபு என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஆன்றோர் வழங்கிய சொற்களை அவர்கள் வழங்கிய முறைப்படியே கூறுதல் ஆகும்” என்று தொல்காப்பியச் செல்வம் சுட்டும்.

ச. வையாபுரிப்பிள்ளை, ‘‘ஓர் இனத்தார் ஒரு பொருள் பற்றி வழக்கமாய் அனுசரித்து வரும் நியதியே மரபு என்பது ஆகும்” என்பர்.

பழக்கத்தின் காரணமாக வழக்கம் ஏற்பட்டு அதிலிருந்து மரபாக நிலைபெறுகின்றது என்று ச.வே. சுப்பிரமணியம் மொழிவர்.

நன்னூலார்,

‘‘எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபு”

என்று விளக்கம் தந்துள்ளார்.

மரபு மாறக்கூடியதன்று. தொன்று தொட்டு வழக்கத்தின் காரணமாக வருவது.

‘‘மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்”

என்று கூறுவர் தொல்காப்பியர்.

பழக்க வழக்கங்கள் ஒரு குழுவினரிடையே பலவாறாக அமைதல் போலவே ஒரு குழுவினரிடையே பல்வேறு மரபுகளும் காணப்பெறும்.

‘‘பழக்கம், வழக்கம், மரபு என்ற சொற்கள் ஒன்றோடொன்று உறவுடையன. ஒன்றின் வளர்ச்சி நிலையே மற்றொன்றின் தொடர்ச்சியாக அமைகின்றது. பழக்க, வழக்க, மரபுகள் எளிதில்மாற்ற முடியாதவை. அவை கால, இட, சூழ்நிலை அமைவுகளுக்குத் தக உருப்பெறுவன. அவ்வாறு உருப்பெறும் மரபுகளே சமுதாய நியதிகளாகக் கருதப்படுகின்றன. எனவே, பழக்கம் என்பது தனிமனிதனைச் சார்ந்தது என்றும், வழக்கம் சமுதாயத்தைச் சார்ந்ததென்றும், மரபு சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடு எனவும் கூறலாம். மேலும் பழக்கம் என்பது தொடக்க நிலையாகவும், வழக்கம் தொடர்நிலையாகவும், மரபு பண்பாட்டின் முதிர்நிலை எனவும் வகைப்படுத்தலாம்.
தனிமனிதப் பழக்கங்களே காலப்போக்கில் சமுதாய வழக்கங்களாக உருப்பெற்றுத் தலைமுறை தலைமுறையாக இடையறாது நிலைத்து வாழ்வு பெறும் நிலையில் மரபுகளாக வாழ்வு பெறுகின்றன” என்று க.காந்தி அளித்துள்ள விளக்கம் சிறப்பாகவும் ஏற்புடையதாகவும் அமைகின்றது.

தொல்காப்பியர், தலைவன் பொருள் தேடக் கடல் கடந்து செல்லுங்கால் தலைவியை உடன் அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை என்று கூறியுள்ளார்.

‘‘முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை.” (தொல்.நூ.980)

தொல்காப்பியர் - வழக்கம் என்றே சுட்டுகின்றார். பின்னாளில் அதுவே சமுதாய நியதியாக, மரபாக மாறிவிட்டது. வழக்கம் மரபாகின்றது என்பதற்கு இஃது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பழக்க வழக்கங்களும் சடங்குகளும்

பழக்க வழக்கங்கள் போலவே சடங்குகளும் சமுதாயத்தோடு தொடர்புடையன.

சடங்கு என்ற சொல்லாட்சி, தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியங்களிலோ இடம் பெறவில்லை.
தொல்காப்பியர், ‘கரணம்’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளார். சடங்கின் முன்னோடிச் சொல்லே கரணம் என்பது. தொல்காப்பியர்,

‘‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
‘‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
என்று சுட்டியுள்ளார்.

இந்நூற்பாக்கள் கற்பியலில் வருவதால் திருமணச் சடங்குகள் சுட்டப்பெற்றன எனக்கொள்வர். முதல் நூற்பாவினைப் பொதுவாகக் கொள்வதில் தவறில்லை. நாட்டில் பொய்யும் வழுவும் தோன்றியதால், சமுதாய வாழ்வு சீர்குலையக் கண்ட சான்றோர்கள் நேர்மையுவு கட்டுப்பாடும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டி சடங்குகளைத் தோற்றுவித்தனர் எனக் கொள்வதே பொருந்தும்.

திருமணத்தில் சடங்குகள் முறைப்படி, கிழவன் கிழத்தியைத் திருமணம் செய்துகொண்டது அடுத்த நூற்பாவால் புலனாகின்றது. திருமணத்தில் கிழத்தியை அவர்தம் பெற்றோர் கொடுப்பது மரபு. இதனைக் கொடைக்குரி மரபினோர் என்ற சொல்லாட்சி உணர்த்தும்.

‘‘பழக்கம் என்பது பயிற்சியின் முதிர்ச்சி... உயர்ந்தோர் பழக்கங்கள் காலப்போக்கில் வழக்கங்கள் என்று பெயர் பெறுகின்றன.”

‘‘ஒரு செயல் நன்மை விளைவிக்கின்றது என்று மக்கள் உணரும் நிலையில் அது பழக்கமாக மாறுகிறது. காலப்போக்கில் வழக்கங்கள் என்று பெயர் பெறுகின்றன.’’

‘‘ஒரு செயல் நன்மை விளைவிக்கின்றது என்று மக்கள் உணரும் நிலையில் அது பழக்கமாக மாறுகிறது.
காலப்போக்கில் அறிவியல், கல்வி ஆகியவை காரணமாகச் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும்போது அது சடங்காக மட்டும் நிற்கிறது.”

‘‘செயல், பழக்கம், சடங்கு மூன்றும் வெவ்வேறு வளர்ச்சிப் படியிலுள்ள ஒரே செய்தியாகும்” என்று வி.சரசுவதி அவர்கள் கூறும் கருத்து முற்றிலும் பொருத்தமானதே ஆகும்.

பழக்க வழக்கங்கள் தொடக்கத்தில் வரன்முறையின்றி அமைய வாய்ப்புண்டு. பின்னர் தேவை ஏற்படும்பொழுது சட்டதிட்டத்துடன் வரன்முறைப்படுத்துங்கால் அவை சடங்காக மாறுகின்றன.

திருமணத்தில் பெண் பார்த்தல் என்பது ஒரு மரபு. பெண் பார்க்கச் செல்லும்போது இத்தனை பேர் செல்ல வேண்டும், இன்ன இன்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று நெறிப்படுத்தும்போது அதுவே சடங்காக ஆகின்றது. இதைப் போன்றே ஒவ்வொரு நிகழ்விலும் தொடர்புடைய சடங்குகள் தோற்றம் பெற்றன.

‘‘இயற்கையின் சீற்றங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நினைத்த அவன் (மனிதன்) இப்படிச் செய்தால் இவ்வாறு நடக்கும் என்று எண்ணிக் கற்பித்துக்கொண்ட செயல்முறைகள் சடங்குகளாகத் தோற்றம் கொண்டன” என்று சடங்குகளின் தோற்றத்திற்குக் கூறும் காரணம் பொருந்துவதாக இல்லை. ஏனெனில் இன்று இயற்கையின் சீற்றம் இன்றியே இயல்பான வாழ்க்கையிலேயே சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘‘மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் செயற்பாடாகும். அவை சடங்குகளின் அடிப்படையில் தோன்றி சமுதாய நம்பிக்கையின் காரணமாகச் செல்வாக்குப் பெற்று வளர்ந்தும் வாழ்ந்தும் மறுமலர்ச்சியடைந்தும் மக்களினங்களிடையே தொன்று தொட்டு நிலவி வருகின்றன. விழாக்கள் எனபன மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் கூட்டுச் சடங்குகளிலிருந்து தோன்றியனவாகவே காட்சி தருகின்றன.
சடங்குகளே விழாக்களுக்கு அடிப்படை. சடங்குகளின் ஒன்றிணைக்கப்பட்ட கூட்டுத் தொகுதியினை விழா எனக் கூறலாம்” என்று கருத்து கூறுகிறார் க. காந்தி. இவரின் கூற்று முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று.

இறைவன் தொடர்பான விழாக்கள் மாதந்தோறும், ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு விழாவிற்கும் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இவற்றை வழிபாட்டு முறைகள் என்று கூறுவார்களே தவிர, சடங்குகள் என்று கூற மாட்டார்கள். இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் பின்பற்றப்படும் நடைமுறைக்குச் சடங்கு என்று பெயர்.

‘‘சடங்குகள் என்பதற்கு நற்செயல்கள் என்று பொருள் சொல்லலாம். இச்சடங்கு முறையானது, சங்க காலத்திலேயே இருந்தது. அந்தக் காலத்தில் இச்சடங்குகளைக் கருத்துணர்வோடு, பொருட்செறிவோடு நற்பயன் கருதித்தான் அமைத்தனர். நம் முன்னோர்கள் அறிவுப்பூர்வமாகத்தான் எதையும் மேற்கொண்டு இருந்தனர். இதன் உண்மை நிலையை அறியாமல் தான் நம்மில் சிலர் மூடப்பழக்கம் எனக் கைவிட்டனர்” என்று கருத்துரைப்பர் தே.ப.சின்னச்சாமி.

சடங்குகள் சமுதாயத்திற்குச் சமுதாயம் வேறுபட்டுக் காணப்பெறும். சடங்கு ஒன்றாக இருக்கலாம். செய்யும் முறை வேறாக இருத்தல் கூடும். பழக்க வழக்கங்களைப் போலவே சடங்குகளும் பலவகையானவை; இனத்திற்கு இனம் மாறுபட்டு இருப்பவையும்கூட.

நம்பிக்கைகள்

ஒரு சமுதாயத்தில் மக்களிடையே காணப்பெறும் நம்பிக்கைகள் கருதத்தக்கன. சமூகத்தின் பண்பாட்டு மரபினை அறிவிக்க வல்லன. அச்சமுதாயத்தின் நம்பிக்கைகள் தோற்றம் பெற்றன. திருமணம் பேசச் செல்லும் முன்னர், கோவிலில் பூப்போட்டுப் பார்த்தல் இன்றும் மக்களிடையே ஒரு வழக்கமாக இருந்து வருகின்றது. இன்ன பூ விழுந்தால் காரியம் கைகூடும்; இன்ன பூ விழுந்தால் காரியம் கைகூடாது என்று மக்கள் நம்புகின்றனர். நிமித்தம் பார்த்தலும் நம்பிக்கைகள் தோன்றுவதற்குக் காரணமாகின்றன.

பூப்போட்டுப் பார்த்தல் என்பது நாமாகவே கோவிலுக்குச் சென்று இறைவனிடம் வேண்டிக் கேட்பதாகும். மற்றும் பல்லிகள், பறவைகள், விலங்குகள் இவற்றின் ஒலிகளும் நிமித்தங்களாகக் கருதப்படுகின்றன.

‘‘கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு
உறுவது கூறுஞ் சிறுசெந் நாவின்
மணியோர்த் தன்ன தெண்குரற்
கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே”

பல்லியின் ஒலிப்பு இங்கு நன்னிமித்தமாகக் கருதப்பெற்றது. நல்லது நிகழும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.
பழக்க வழக்கங்கள், மரபுகள், சடங்குகள், நிமித்தங்கள், நம்பிக்கைகள் முதலியன சமுதாயத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வாயில்களாக அமைந்தன. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இவை தனித்தன்மை உடையனவாக விளங்குகின்றன.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com