Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மே 2008

கண்ணகி கோட்டம்: பறிக்கும் மலையாளிகளும் தவிக்கும் தமிழர்களும்
கோ.மாரிமுத்து

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என அறத்தை வலியுறுத்தி கண்ணகியின் வாழ்க்கையை சிலப்பதிகாரம் என்ற பெயரில் இளங்கோவடிகள் எழுதினார். தமிழ்த்தேசியர்கள் தமிழ்த்தேசியத்தின் பண்பாட்டு வடிவமாக கண்ணகியை அடையாளங் காண்கின்றனர். காப்பிய நாயகியாக போற்றப்பட்ட கண்ணகியைக் காணவும், வழிபடவும் இப்போது மலையாளிகளின் அனுமதி தேவை என்ற அவலம் ஏற்பட்டுவிட்டது. உண்மையில் கண்ணகிக் கோட்டம் கேரள எல்லையில் தான் உள்ளதா என்ற கேள்விக்கு முன் கண்ணகிக்கோட்டம் கட்டப்பட்ட கதையைப் பார்ப்போம்.

தன் கணவன் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனால் கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்படுகிறான். இதையறிந்த கண்ணகி கோபக் கனலோடு பாண்டியனிடம் நீதி கேட்கிறாள். உண்மையையறிந்த பாண்டியன் “நானே கள்வன்” எனத் தன்னுயிரைத் துறக்கிறான். சினம் தனியாத கண்ணகி மதுரையை எரித்துவிட்டு வைகை ஆற்றுத் தென்கரை வழியாக 14 நாட்கள் நடந்து விண்ணேந்திப் பாறைக்கு (தற்போது வண்ணாத்திப் பாறையாகிவிட்டது) வந்தடைகிறான். அங்கு தேவர்களுடன் பூப்பல்லக்கில் வந்த கோவலன் கண்ணகியை விண்ணுலகிற்கு அழைத்துச் செல்வதாக கதை முடிகிறது.

இச்செய்தியறிந்த சேரன் செங்குட்டுவன் சேரநாட்டு எல்லையில் கண்ணகிக்கு கோயில் கட்ட முடிவு செய்து இமயத்திலிருந்து கல் கொண்டு வந்து கட்டப்பட்ட கோயில்தான் கண்ணகிக் கோட்டம் என்றழைக்கப்படுகிறது. இது தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூருக்கு தெற்கே பளியன் குடியிலிருந்து 5000 அடி உயரத்தில் விண்ணேந்திப் பாறையில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டு பின்னாளில் இது சேதமடைந்தது. பின்பு சோழப் பேரரசன் முதலாம் இராச இராசனால் மீட்டமைக்கப்பட்டது. (இக்கோயில் உள் அமைப்பு சோழர் பாணியில் நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது) கி.பி.11ஆம் நூற்றாண்டு வரை ‘பளியர்’ என அழைக்கப்படும் மன்னர்களால் தொடர்ந்து தினசரி பூசை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இக்கோவில் வளாகத்திலேயே உள்ளது. அதன்பின் கவனிப்பாரற்றுப் போனதால் இடிந்தும் சிதிலமடைந்தும் கிடக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை’ அமைப்பு தொடங்கப்பட்டு கோயிலைச் சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் மனுக் கொடுத்தனர். கோயில் சிதிலமடைந்து கிடந்தாலும் 1975 வரை எந்த சிக்கலும் இல்லாமல் தமிழர்கள் வழிபட்டு வந்தனர். கண்ணகி கோயில் தமிழகத்திற்குச் சொந்தமா என்ற சர்ச்சை ஏற்பட்டபோது 1975இல் தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரி ஆனந்த பத்மநாபன் அறநிலையத்துறை ஆணையர் ஆர்.சி.பண்டா ஆகியோர் நில அளவை அதிகாரிகளுடன் கோயிலுக்குச் சென்று அளந்து தமிழக எல்லையில்தான் கோயில் உள்ளது என உறுதிப்படுத்தினர்.

சி.பி.எம். முதல்வராயிருந்த ஈ.கே.நாயனார் குமுளியில் இருந்து தேக்கடி வழியாக கண்ணகி கோயிலுக்குச் சாலை அமைத்தார். அந்தச் சாலை கேரளாவிற்குள் போனதால் கேரள அரசின் அனுமதி பெற வேண்டியதாகிவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே தமிழக பக்தர்கள் கூடலூரிலிருந்து பளியன்குடி வழியாக கோயிலுக்கு எப்போதும் சென்று கண்ணகியை வழிபட அன்றைய ஆங்கிலேய வனத்துறை அனுமதித்துள்ளது. எனவே நமது வனப்பாதையை நாம் பயன்படுத்துவதற்கு இன்றைய இந்திய வனத்துறையிடம் கூட அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை. தமிழக அரசு பளியன்குடி வனப்பாதையை உடனே போடுவதற்கு எந்தத் தடையும் இல்லை.

1976இல் கேரள தமிழக அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய அளவையிலும் கோயில் தமிழக எல்லையில் தான் உள்ளது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் சித்திரை முழுநிலா விழா ஒரு வாரகாலம் கண்ணகிக் கோட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது. பின் கேரள வனத்துறையின் கெடுபிடியால் 1951வரை மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது. இதுவும் பொறுக்காமல் 1982இல் கோவிலுக்கு வந்த 200 பக்தர்களை கேரள வனப்பகுதியில் மரம் வெட்டினார்கள் என்று பொய் கூறி திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இதில் தலையிட்ட இந்திய அரசு 1984இல் திருவிழாவிற்கு முன்பு தமிழக கேரள அதிகாரிகள் கூட்டாகச் சேர்ந்து திட்டமிட்டு, தீர்மானம் செய்து அதன்படி விழா நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதுதான் கண்ணகி கோயில் மீது கேரளாவிற்கு ஒரு ‘பிடியை’க் கொடுத்தது.

1984 இந்திய அரசின் உத்தரவிற்கு முன்பு கண்ணகி கோயில் மீது உரிமை கோருவதற்கு எந்தவித அடிப்படையும் கேரளாவிற்கு இல்லை. எப்போதும் தமிழர்களுக்கு எதிரõகவே சாட்டையைச் சுழற்றும் இந்திய அரசு இதிலும் இரண்டகம் செய்தது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கோபால் 1976இல் தமிழக எல்லை வழியாக கண்ணகி கோயிலுக்கு பாதை போட வலியுறுத்திப் பேசினார். அதன்படி முதல்வர் கருணாநிதி 20 இலட்சம் நிதி ஒதுக்கி பாதை போட உத்தரவிட்டார். அந்த சமயம் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. போடவேண்டிய பாதையும் நின்று போனது.

1984லிலிருந்து இன்றுவரை கண்ணகிகோட்டம் செல்லும் தமிழர்கள் பல்வேறு வகையான துன்பங்களை மலையாளிகளால் எதிர்கொள்கின்றனர். மோதல் நடந்துவிடுமோ என்ற பதட்டத்துடன் தமிழர்கள் செல்ல வேண்டியுள்ளது. மலையாளிகளின் அச்சுறுத்தல் எவ்வளவு இருந்தாலும், பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய தமிழகக் காவல் அதிகாரிகள் தயங்கினாலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பக்தர்களாகவும் தமிழுணர்வாளர்களாகவும் செல்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த வரவு என்பது கண்ணகிக்கோட்டம் தமிழர்கள் சொத்து. எனவே கண்ணகி கோட்டத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் மலையாளிகளிடமிருந்து மீட்க வேண்டும் என்ற இன உணர்வின் வெளிப்பாடாக ஆகிவிட்டது.

தமிழர்கள் தங்கள் இன உணர்வோடு பக்தர்களாக வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட மலையாளிகள் இராசஇராசனால் கட்டப்பட்ட கட்டிடத்திற்குள் திடீöரன்று ‘துர்காதேவி’ என்றொரு சிலையை வைத்து விட்டார்கள். வருடந்தோறும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அழைத்துவந்து “பாரத மாதாகி ஜே” என்று முழங்குகிறார்கள். கண்ணகி கோட்டம் முக்கியத்துவம் பெறுவதைத் துல்லியமாக, நுட்பமாக முறியடிக்க மலையாளிகள் செய்கிற சூழ்ச்சி இது. துர்கா தேவியை வழிபடும் பக்தர்களுக்கு பந்தல் போடப்படுகிறது.

மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள் கட்டப்படுகிறது. வாழை மர வளைவு செய்யப்பட்டிருக்கிறது. கண்ணகியை வழிபட வரும் பக்தர்களுக்கு பந்தல் இல்லை. வளர்ந்து வெயிலில் காய்ந்துபோன கோரைப்புற்களால் காலில் காயம் ஏற்படுகிறது. அலங்காரம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் விட கண்ணகி சிலையே இல்லை. மங்கலதேவி அறக்கட்டளையினர் முயற்சியில் சித்திரை முழுநிலவு நாளில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு பூசை செய்யப்படுகிறது.

இவ்வளவிற்குப் பிறகும் இந்தாண்டு பெரும் எண்ணிக்கையில் தமிழின உணர்வோடு இளைஞர்கள் ஏராளமானோர் கண்ணகிக் கோட்டம் சென்றனர். கோயிலுக்கு வந்த 40 பெண் பக்தர்கள் உள்ளிட்ட 500 பேரை மாலை 5 மணிக்கு மலையில் விட்டு விட்டு அனைத்து வாகனங்களையும் கீழே கொண்டு போய் விட்டனர் மலையாள அதிகாரிகள். கும்பகோணத்திலிருந்து ஒரு பேருந்தில் குடந்தை தமிழ்க் கழகத்தலைவர் தோழர் பேகன் தலைமையில் வந்தவர்கள் குளிரில் மலையில் தவித்தனர். கொந்தளிப்பு ஏற்பட்டது. பின்பு தமிழக அதிகாரிகள் மலையாள அதிகாரிகளிடம் பேச்சு நடத்தி வாகனங்கள் அனுப்பி அனைவரையும் மீட்டனர்.

ஏதோ இந்த ஆண்டு மட்டும் இந்த சம்பவம் நடந்தது என்பதல்ல. 1984க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகையான துன்பத்தை மலையாளிகளால் சந்திக்க வேண்டியிருக்கிறது. இது மட்டுமின்றி வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் சுவரில் உள்ள கற்கள் காணாமல் போய்க் கொண்டே இருக்கின்றன. கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தூண்கள் ஒன்றுகூட இல்லை. இப்படியே போனால் கண்ணகி கோயில் முற்றிலுமாக அழிந்து துர்காதேவி வழிபாடு மட்டுமே நடக்கும். மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் ஆண்டு தோறும் தமிழக எல்லை வழியாக பாதை கேட்டு அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். சென்ற ஆண்டு தேனி மாவட்ட ஆட்சியர் ஹர்சகாய் மீனா உடனடியாக பாதை அமைக்க நிதி ஒதுக்கவேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். ‘தமிழாய்ந்த தலைமகன்’ முதல்வர் கருணாநிதி இக்கோரிக்கையை காதில் போட்டுக் கொள்ளவில்லை.

காலந்தாழ்த்தாமல் தமிழக அரசு பாதை போட நிதி ஒதுக்கி உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் கேரளா வழியாகச் செல்ல வேண்டிய நிலையைப் பயன்படுத்தி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நோய்க்கிருமி போன்று தமிழர்களின் மீது இனப்பகையைக் கக்கிவரும் மலையாளிகளின் கொட்டமும் சூழ்ச்சிகளும் மோதலைத்தான் உருவாக்கும். எப்போதும் தமிழர்கள் குனிந்து கொண்டே இருக்க மாட்டார்கள். கண்ணகி கோட்டத்தைத் தமிழக அரசு சீரமைக்க வேண்டும். பாதை அமைக்க வேண்டும் இல்லாது போனால் இப்பணியைத் தமிழர்கள் தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் நிலை ஏற்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com