உத்தரப்புரத்தில் காவல்துறை அட்டூழியம்
அருணா
2008 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டதும், செய்தி ஊடகங்கள் அனைத்திலும் வெளிவந்த முதன்மைச் செய்திகளில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்திலுள்ள ”உத்தப்புரம்- தீண்டாமைச் சுவரும்” ஒன்றாகும்.

கடந்த 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் பள்ளர் சமூகத்தில் அய்ந்து பேரும், பிள்ளைமார் சமூகத்தில் ஒருவருமாக மொத்தம் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இக்கலவரத்திற்குப் பின் பிள்ளைமார் சமூகத்தினர் நிதி திரட்டி 21.84மீட்டர் நீளத்திற்கு, இரு பிரிவினரின் குடியிருப்புகளைப் பிரிக்கும் விதமாக தொடர் பாதுகாப்புச் சுவரைக் கட்டினர். இச்சுவர் குடியிருப்புகளைப் பிரித்ததோடு மட்டுமல்லாமல் காலங்காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்திய மூன்று பாதைகளையும் அடைத்துவிட்டது. இச்சுவர் பாதுகாப்புச் சுவர் என்று சொல்லப்பட்டாலும் தீண்டாமையைக் கடைபிடிக்கும் முறையாகத் தான் வெளிப்படுகிறது. ஆதலால் இது பாதுகாப்புச் சுவர் அல்ல, “தீண்டாமைச் சுவர்” என்று பெயரிடப்பட்டது இதற்கு மிகப் பொருத்தமாகவே உள்ளது.
கடந்த மே மாதத்தில் இச்சுவர் மீது ஏறிய தாழ்த்தப்பட்ட மக்களின் பல கோழிகளும் இச்சுவரை உரசிய பசு ஒன்றும் இறந்தன. அப்போது தான் அச்சுவரின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக இந்தத் தீண்டாமைச் சுவரை இடிக்க உத்தப்புரம் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டனர்.
எனவே, கடந்த 07.05.2008 அன்று தமிழக முதல்வரின் அறிவுரைப்படி மதுரை மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் அந்த 21.84 மீட்டர் நீளமுள்ள சுவரில் 4 மீட்டர் நீளம் மட்டுமே இடிக்கப்பட்டு ஒரு பாதை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பாதையைப் பயன்படுத்திய போதெல்லாம் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாயினர். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களின் இரு சக்கர வாகனங்களோ, விவசாயத்திற்குப் பயன்படும் டிராக்டர்களோ இப்பாதையில் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டது.
கடந்த 01.10.2008 அன்று பிற்படுத்தப்பட்ட மக்களின் நிர்வாகத்திலுள்ள முத்தாலம்மன் கோயிலுக்குச் சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருந்தனர். அக்கோயிலுக்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்பொழுது அவர்கள் மீது படுமாறு சுண்ணாம்புத் தண்ணீரை ஊற்ற, அது வாய்த் தகராறில் தொடங்கி இருதரப்பிலும் கல்வீச்சு, நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு என கலவரம் மூண்டது. இக்கலவரத்தைத் தொடர்ந்து கடந்த 08.10.2008 அன்று உத்தப்புரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அக்கலவரத்தை அடக்குவதாகக் கூறி களமிறக்கப்பட்ட காவல் துறையினர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டனர். கடந்த 07.05.2008 அன்று சுவர் இடிக்கப்பட்டு திறந்துவிடப்பட்டப் பாதை வழியாகவே தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புக்குள் புகுந்த காவல்துறையினர் அவர்களின் உடைமைகள் அனைத்தையும் அடித்து நொறுக்கியதோடு, அப்பாவி மக்கள் மீது நடத்திய தடியடிகளும் பூட்சு கால் உதைகளும் சொல்லில் அடங்காதவை. இக்கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்க அங்குமிங்கும் ஓடிய பெண்களில் இராசாத்தி - க/பெ பாலமுருகன், இராஜேஸ்வரி - க/பெ ஈஸ்வரன், பாண்டியம்மாள் - க/பெ தங்கம் ஆகியோருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று இராக்கு - க/ பெ குமார் அவர்களுக்கு காவல்துறை நடத்திய தடியடியால் தற்பொழுது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு தனது வெறியாட்டத்தை நிறுத்திக் கொள்ளாமல், தாழ்த்தப்பட்ட பெண்களைக் கைது செய்தபோது நடுத்தர வயது மற்றும் இளம் பெண்களை பின்புறத்திலிருந்து மார்பகங்களை அழுத்திப்பிடித்து காவல்துறை வாகனத்தில் ஏற்றியும், பெண்களின் பிறப்புறுப்புகளில் தடியால் குத்தியும் காவல் துறையினர் தங்களின் வக்கிரப் புத்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 320 ஆண்களின் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், ஆண்கள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறினர். அதனால் தாழ்த்தப்பட்டப் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் மன உளைச்சலுக்கு ஆளானதோடு பசியாலும் - பட்டினியாலும் வாடினர். காவல் துறையினரின் தாக்குதலைத் தொடர்ந்து 08..10.2008 அன்று சித்ரா என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் இறந்துவிட்டார். இம்மரணம் கூட இயற்கை மரணம் தான் என்று அந்தக் குடும்பத்தினரைக் கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கிராமத்தில் ஆண்களே இல்லாத சூழலில் சித்ராவின் உடலை "பெண்கள் இணைப்புக்குழு" வைச் சேர்ந்த பெண்களே சுமந்துச் சென்று புதைகுழி வெட்டி இறுதிச் சடங்கை நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடும்பங்கள் சிதைந்து, பெண்களும்- குழந்தைகளும் - முதியவர்களும் உடல் மெலிந்து, மனம் சோர்ந்து, பசியாலும் - பட்டினியாலும் துன்புற்ற உத்தப்புரம் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசு அமைக்கும் அமைதிக் குழுவில் பங்கேற்கத் தயாராகவே உள்ளனர்.
தமிழக அரசுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரு சில கோரிக்கைகள் :
1. தற்போது பிள்ளைமார் சமூகத்தினரின் நிர்வாகத்திலும், அரசுக்குச் சொந்தமான இடத்திலும் உள்ள முத்தாலம்மன் கோயில் கடந்த காலத்தில் இருந்தது போன்று அனைவருக்கும் பொதுவான கோயிலாக மாற்றப்பட வேண்டும்.அக்கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும்.
2. அக்கோயிலுக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அனைவருக்கும் பொதுவான ஒரு நிழற்குடை அமைக்க வேண்டும்.
3. பிற்ப்படுத்த்தப்ப்பட்ட்ட சமூகத்த்தினர் வாழும் பகுதியிலிருந்து வரும் கழிவு நீரால் ஏற்படும் கசிவுகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் கிணறு பாழாவதைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
4. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
5. காவல் துறையினரின் கொடூரத் தாக்குதலுக்குள்ளான குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.
6.காலங்காலமாக பயன்படுத்தப் ;பட்டு வந்த மூன்று பாதைகளைத் தடுக்கும் தீண்டாமைச் சுவரை இடித்து, அதில் தாழ்த்த்தப்ப்பட்ட்ட மக்க்கள் எவ்விதத் தடையுமின்றி, பயன்படுத்திட வழி காண வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த ஞாயாமான கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டு, அங்கு நிலவும் தீண்டாமையை ஒழித்து சமத்துவம் காண வழிவகை செய்ய வேண்டும்.
மகளிர் ஆயம் உதவி
உத்தப்புரம் - தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மகளிர் ஆயம், மதுரைக் கிளையின் சார்பாக நிதி திரட்டப்பட்டது. கடந்த 18.10.2008 அன்று மகளிர் ஆயத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, த.தே.பொ.க. உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் ஆகியோர் உத்தப்புரம் சென்றனர். மகளிர் ஆயத்தின் உறுப்பினர் மற்றும் உத்தப்புரம் பகுதி களப் பணியாளர் தோழர் காமேஸ்வரி தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 200 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|