Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
மே 2009
எழுத்துப் பெருவெளியில்...
சுப்ரபாரதிமணியன்

ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த 50 புத்தகங்களாவது திரைப்பட வடிவம் பெற்றுவிடுகின்றன. வெவ்வேறு நாடுகளின் பிராந்திய மொழிப் படங்கள் இந்தக் கணக்கில் வராது. படைப்புகள் திரைப்படமாவது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எழுத்தாளனின் கூர்மையான விவரிப்பும் அவதானமும் இன்னொரு வடிவத்தில் முற்றிலும் பிம்பங்களாக வெளிப்படுகின்றன. எழுத்தாளன் எத்தனை சதம் அதில் சொந்தம் கொண்டாடலாம் என்றிருந்தாலும் மூலமாக அவன் இருக்கிறான். இலக்கியப் படைப்புகளை வெகுஜனத்திரளில் கொண்டு போகவும், திரைப்படமாக ஆனது என்ற காரணத்திற்காகவே இலக்கியப் படைப்பு கவனிக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. 13வது கேரளத் திரைப்படவிழா 2008ல் தென்பட்ட சில இலக்கியப் பிரதிகள் கவனத்திற்கு வந்தன.

ஷோஸ் சரமாகோ என்ற போர்ச்சுகல் நாவலாசிரியரின் 1995ல் வெளிவந்த நாவல் ஙிறீவீஸீபீஸீமீss என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. மூலமான நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1999ல் வெளிவந்தபின் பலர் அதைத் திரைப்படமாக்க முயன்றிருக்கின்றனர். சரமாகோ தன் நாவலில் பெயரில்லாத தேசமும், பெயரில்லாத மனிதர்களும் கொண்ட உலகத்தை திரைப்படத்தில் சுலபமாகச் சித்தரித்துவிட முடியாது என்று பல இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் நிராகரித்திருக்கிறார். சமீபத்திலேயே அவரது ஒத்துழைப்பால் திரைப்படமாகியிருக்கிறது.

மருத்துவர் ஒருவருக்கு காலையில் எழுந்ததும் கண்பார்வை குறைந்து விட்டது தெரிகிறது. முந்தின இரவு திடீரென கண்பார்வை இழந்த ஒருவருக்கு சிகிச்சையளித்திருக்கிறார். மருத்துவ மனையில் அவரைப்போலவே பலர் குவிகிறார்கள். இது பரவும் என்று தனியாக அடைக்கப்படு கிறார்கள். மருத்துவரின் மனைவியும் தனக்கும் கண் பார்வை போய்விட்டது என்று சொல்லி கூடவே தங்குகிறார். அவர்களுக்கு வார்டு 3 ஒதுக்கப்படுகிறது. திடீரென கண்பார்வை இழந்து போன உலகத்தை அவர்களால் நிராகரிக்க முடியவில்லை. ஓய்வென்று ஒதுக்கவும் முடியவில்லை. சிறுசிறு தடுமாற்றங்கள் குழப்பங்களாகின்றன. தொடுகையும், வார்த்தைகளும் ஆறுதலானவை. உணவு பெரும் பிரச்னையாகிறது. தரப்படும் உணவு பங்கிடுவதில் சிக்கல்கள். மருத்துவரின் மனைவி ஒத்துழைக்கிறாள். அவர்களுக்குள் எழும் அதிகாரக்குரலால் ஒருவன் தலைவனாகிறான். அவன் எல்லோரையும் மிரட்டுகிறான். அவர்கள் அணிந்திருக்கும் விலையுயர்ந்த பொருட்களை அபகரித்துக் கொள்கிறார்கள். தாதாவை மருத்துவர் மனைவி கொலை செய்கிறாள். பாலியல் ரீதி யான ஆக்கிரமிப்புகள் முறைதவறி நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. எல்லாம் கட்டுப்பாடில்லா மல் போகிறது. விபத்தும் ஏற்படுகிறது. நாலைந்து பேரை மீட்டு அவள் வெளியே வருகிறாள். உலகமே குருடர்களின் துயர நாடகமாகிவிட்டது. அந்த நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. உணவுப் பொருட்களுக்கான போராட்டம். அவள் வீட்டைக் கண்டுபிடித்து விடுகிறாள். இயல்பாகிறார்கள். அவர்களின் ஒருவனுக்கு கண் பார்வை தெரிய ஆரம்பிக்கிற நம்பிக்கையுடன் படம் முடிகிறது.

துயர உலகிற்குள் தள்ளப்படும் வேதனை படம் பார்ப்பவர்களையும் அழுத்திக்கொண்டே இருக்கிறது.பெர்னான்டோ டெய்ரிலீஸ் இயக்கி இருக்கிறார். கண் பார்வை இழந்தவர்கள் மற்றவர் கள் முன்னால் பார்க்கப்படும் அனுதாபப் பார்வையும், பார்வை இழந்து போனவர்களின் உலகமும் என்று இந்தப் படம் அமைந்திருக்கிறது. மருத்துவரின் மனைவி உலகம், அவளது கணவனுடனான உலகம், தட்டுப்படுபவர்களெல்லாம் அவளின் பராமரிப்புக்கு உள்ளாக வேண்டிய உலகம் என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. பாரமாய் அழுத்தும் சமூக அவலங்களால் நிலையற்றுப் போகும் மனிதர்களின் குறியீடாய் பார்வை இழப்பு மூலம் படம் அமைகிறது.

Farewell Gulsary படம் சோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐஸ்வாவ்வின் நாவலாகும். 1966இல் ரஷ்ய மொழியிலு:ம 1979ல் ஆங்கிலத்திலும் இந்த நாவல் வெளிவந்திருக்கிறது. 1968லேயே சோவியத் நாட்டில் இது முதலில் படமாக்கப்பட்டிருக்கிறது. ககாகிஸ்தான் சோவியத்தின் ஒரு பகுதி யாக இருந்த காலத்தை இப்படம் சித்தரிக்கிறது. போர் வீரனானவனுக்கு கூட்டுப் பண் ணையில் கால்நடைகளைப் பராமரிக்கிற வேலை தரப்படுகிறது. குல்சாரி என்ற குதிரை அவனின் பிரிய மானது. அதனுடனான அவனின் பரிமாற்றங்கள் ஆத்மார்த்தமானவை. புதிய கட்சி தலைவர் அப் பிரிவிற்கு வரும்போது குல்சாரியை தந்துவிடக் கேட்கிறார். குல்சாரி முரண்டு பிடித்து போவதும்

அவனிடமே திரும்பி வருவதும் நிகழ்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கையன்று அவனை சீர்குலைக்கிறது. ஆடுகளை நிர்வகிக்கும் இன்னொரு கூட்டுப்பண்ணைக்கு மாற்றப்படுகிறான். மழைக்குத் தாங்காத அப்பண்ணைக் கட்டிடம் இடிந்து விழுந்து சிரமத்திற்குள்ளாகிறது. மனைவியும் முடமாகிறாள். சோசலிசத்தை அமைப்பதிலும், ஸ்டாலினிய நடவடிக்கைகளிலு:ம இருக்கும் சிக்கல்கள் அவனைத் துவளச் செய்கின்றன. பிரியமானத் தோழர்களின் மரணங்களும் அவனை சோர்வாக்குகின்றன. குல்சாரி மரணம் அடைவதோடு படம் நிறைவடைகிறது. கட்சி பற்றியும், ஸ்டாலினிய நடவடிக்கை பற்றியும் பல விமர்சனங்களை படம் உள்ளடக்கியிருக்கிறது. சிங்கிஸின் ஜமிலா நாவல் புகழ் பெற்றது. அதிலிருந்து சில பகுதிகள் பொன்வண்ணன் இயக்கிய படமொன்றில் இடம் பெற்றிருக்கிறது. ஒரு குதிரையை முன் வைத்து வாழ்க்கை மீதான தேசமும், கூட்டுப்பண்ணை அமைப்பு பற்றியும், சோசலிச கட்டுமானம் பற்றியுமான சித்திரத்தை இப்படம் கட்டமைக்கிறது.

ஆகாச கோபுரம் என்ற மலையாளத் திரைப்படம் ஹென்றி இப்சனின் படைப்பை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆல்பர்ட் சாம்சன் என்ற மத்திய வயது கட்டிடப் பொறியாளனின் கலை மீதான ஆர்வமும், பாலியல் வாழ்க்கையும் என்றமைக்கப்பட்டிருக்கிறது. திரைப்பட விழாவின் போட்டிப்பிரிவில் உலக இலக்கியப் படைப்பாளிகளிலிருந்து திரைப்படமாகும் வகையில் ஆண்டு தோறும் மலையாளத்திலிருந்து ஒரு படைப்பாவது காணக் கிடைப்பது ஆரோக்கியமானமதாகும். சென்றாண்டில் போட்டிப் பிரிவில் தென்பட்ட ஒரே கடல் சுனில் கங்கோபாத்யாயின் நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாகும். மம்முட்டி, ரம்யா கிருஷ்ணன், மீரா ஜாஸ்மீன் நடிப்பில் ஷியாம் பிரசாத் இயக்கியிருந்தார். பிரிதிவ்ராஜ் நடித்த தலப்பாவு என்ற படம் வர்கிஸ் என்ற புரட்சிக்காரன் என்கௌன்டரில் கொல்லப்படுவதை ராமச்சந்திரன் பிள்ளை விவரிப்பதாய் அமைந்திருப்பதாகும். இதன் மலையாள வடிவ நூல் தமிழிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமச்சந்த் பாக்கிஸ்தானி என்ற பாக்கிஸ்தான் படம் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வெளிவந்த சில சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதன் தயாரிப் பாளர் பாக்கிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரின் மகள் ஜாவத் ஜப்பர் இதை இயக்கியிருக்கிறார். இந்திய வெகுஜன திரைப்படத்தின் வன்முறையும், பாலியல் விஷயங்களும் ததும்பி வழியும் பாக்கிஸ்தான் திரைப்படங்களின் மத்தியில் வெகு அபூர்வமாகவே நல்ல படங்கள் தென்படுகின்றன. 2003ல் வெளிவந்த காமோஷ் பாணி என்ற படத்திற்குப் பிறகு பாக்கிஸ்தான் படங்கள் எதுவும் கவனிப்புப் பெறவில்லை.

"Little Terrorrist" என்ற குறும்படமொன்று பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இந்தியப் பகுதிக்குள் வந்துவிடுகிற ஒரு சிறுவனை இந்து குடும்பமொன்று காப்பாற்றி பராமரித்து வருவது பற்றியதாகும். ராம்சந்த் பாக்கிஸ்தானியில் 2002ல் எல்லையில் பதட்டம் இருந்த காலத்தில் தலித் சிறுவன் ஒருவன் பாக்கிஸ்தான் எல்லையில் இருந்து அம்மாவுடன் சண்டை போட்டுக்கொண்டு இந்திய எல்லைக் குள் நுழைந்துவிடுகிறான். அவனைத் தேடிக் கொண்டுவரும் அவன் அப்பாவும் எல்லையைத் தாண்டுவதால் இந்திய ராணுவத்தால் பிடிக்கப்பட்டு உளவாளிகளென சிறையில் அடைக்கப் படுகிறார்கள். சிறைமுகாம் அனுபவங்க்ள் சித்ரவதையாகவே அமைந்திருக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார்கள்.

சிறை முகாமில் பல்வேறு தேசத்தைச் சார்ந்த வர்கள் இருக்கிறார்கள். அழுதும் சிரித்தும் காலம் கழிப்பவர்கள். அதனுள்ளேயே தாதாவாகி மிளிர் கிறவர்கள் பலர். ஓரின பாலியலுக்குத் துண்டுபவர்கள். சிறுவனுக்கு கல்வி தரவரும் இளம் காவல் துறை பெண். விடுதலை என்று ஆனபின்பு டில்லி வரை சென்று திரும்புகிறவர்கள். சிறுவனின் தாய் நந்திதா தாஸ் இருவரையும் எதிர்பார்த்து ஏமாறுகிறாள். தலித் என்பதால் புறக்கணிக்கப்பட்டு கூலியாக வாழ்க்கையைத் தொடர்கிறாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவன் விடுதலையாகி நந்திதாவைக் காண்கிறான். அவள் விவசாயக் கொத்தடிமையாக வாழ்க்கையை நடத்தி வந்தவள். இந்திய சிறை முகாமின் சித்ரவதை வெகு ஜாக்கிரதையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பாக்கிஸ்தான் சிறை முகாம்களில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் பல்வேறு தேசத்தினரைப் பற்றிய விவரணப் படங்களும் வந்திருக்கின்றன. மத ரீதியான அடிப்படை வாதங்களைப் பற்றி பிரதானப்படுத்தாமல், எல்லையைக் கடந்துவிடும் அப்பாவிகளின் துயரத்தையும் அவர்களின் குடும்ப வாழ்க்கையையும் இது சித்தரிக்கிறது. மனித உரிமை மீறல்கள் பற்றின விடயங்களை முன்வைக்கிற அம்சங்களைப் பிரதானமாகக் கொண்டிருக்கிறது.

லத்தீன் அமெரிக்க திரைப்பட உலகின் தந்தை என்று கணிக்கப்படுகிற பெர்ணான்டோ பிர்ரி A Very Old Man with Enormous Wings என்ற படத்தில் கிழவனாக பிரதானப் பாத்திரத்தில் நடித் திருக்கிறார். இது கார்சியா மார்கவஸின் குறுநாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். மார்க்வெஸ் இப்படத்தின் திரைப்பட ஆக்கத்தில் இணைந்து பணிபுரிந்திருக்கிறார். பிடரல் காஸ்ட் ரோவின் நெருங்கிய நண்பரான பெர்ரியின் படங்களின் ரெட்ரோஸ்பெக்டிவ் கேரள திரைப்பட விழாவில் இடம் பெற்றது. இவர் 1960ல் எடுத்த Toss&Dime என்ற ஆவணப்படம் முதல் லத்தின் அமெரிக்க ஆவணப்படமாகும். சமூக விமர்சனமாகவும், அர்ஜன்டைனா மக்களின் வாழ்க்கையை முன்வைத்த ஆவணப்படமாகும் இது. பெர்ணான்டோ பிர்ரி எனது மகன் சேகுவேரா என்றொரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். சே பற்றிய அவரின் தந்தையின் நினைவலைகளாய் இது அமைந் திருக்கிறது.

சேவின் அர்ஜன்டைனா பிறப்பு, லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுற்றியது, பிடரல் காஸ்ட்ரோ சந்திப்பு என்று விரிகிறது. A Very Old Man with Enormous Wings 1998ல் திரைப்படமாகி யுள்ளது. இது தமிழில் கூத்துப் பட்டறையினரால் நாடக வடிவமாகவும் நடிக்கப்பட்டுள்ளது. சிறகுகளைக் கொண்ட கிழவன் ஒருவன் புயல் நாளன்றில் கரீபியன் கடற்கரையில் ஓதுங்குகிறார். ஏழைக் குடும்பமொன்று கோழி அடைக்கும் இடத்தில் அடைக்கலம் தருகிறது. பலரின் பார்வைக்கு அவர் இலக்காகிறார். மரண தேவதை என்று அடையாயப்படுத்தப்படுகிறார். கூட்டம் சேர்கிறது, உள்ளூர் பாதிரியாருக்கு கூட்டம் பிடிப்பதில்லை. ரோமிற்கு எழுதின கடிதங்களைக் கொண்டுவந்து படித்து ஆவியை துரத்த முயல்கிறார். டாக்குவிசாட் போன்று பலரின் சிரிப்பிற்கும் உள்ளாகிறார். அவ்விடம் திருவிழா கோலமாகிறது. பணம் சம்பாதிக்கிறார்கள். சிதைந்துபோன சிறகுகளைப் புதுப் பித்துக் கொள்கிறார் கிழவர். இறகுகளைப் பிரித்தெடுத்துவிட்டு ஆசுவாசம் கொள்கிறார். தேவதை என்ற ரகசியம் மீண்டும் மீண்டும் கிளப்பப்படுகிறது. சிலந்திப் பெண் ஒருத்தி குழுவினருடன் வந்து அவருக்கு இணையாக பெரும் கூட்டத்தைச் சேர்க்கிறாள். கடல் கடவுளின் குறியீடாக கிழவரைப் பார்த்து ஆசுவாசம் கொள்ளும் கூட்டம் அவர் திரும்பவும் இறகுகளைப் படபடக்கவைத்து கிளம் பிப் போவதை வேடிக்கை பார்க்கிறது. அச்சூழலை மாற்றவந்த குறியீட்டு அம்சமாக வந்து மறைந்து போவதில் மாயயதார்த்தம் வெளிப்படுகிறது. ஸ்பானிய மொழிப்படம் இது காப்ரியஸ் மாக்க்கூசின் ஆறு படைப்புகள் இதுபோல் திரைப்படங்களாகியுள்ளன.

அடுத்து வரும் ஆண்டில் திரைப்படமாக உள்ள உலகின் தலைசிறந்த நூல்களின் பட்டியல் சற்றே ஆச்சரியப்படுத்துகிறது. வாசக வெளியை திரைப்பட பிம்பங்களாய் வெளிப்படுத்தும் முயற்சி யில் உலகமெங்கும் உள்ள திரைப்படத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 2009ன் ஆரம்பத்தில் டான் பிரௌனின் நாவல் தேவதைகளும் சாத்தான்களும் திரைப்பட வடிவத்தில் வெளிவர உள் ளது. டான் பிரௌனின் டாவின்சி கோடு மூன்றாண்டுகளுக்கு முன் திரைப்படமாக வெளிவந்தது. தேவதைகளும் சாத்தான்களும் நாவலில் இறந்து போகும் மருத்துவர் ஒருவரின் நெஞ்சில் இருக்கும் அடையாளம் ஒன்று அவரது மூதாதையர்கள் யார் என்ற கேள்விக்கும் தீவிரமான தேடுதலுக்கும் இட்டுச் செல்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com