Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
மே 2009
மீண்டெழுதல் - இலா. வின்சென்ட் சிறுகதைகள்
பொன்.குமார்

படைப்பாளராக அறியப்பட்டாலும் சிலரே சிறுகதை முயற்சியில் ஈடுபடுகின்றனர். சிறுகதையே படைப்பாளியை அறியச் செய்யும், அடையாளப்படுத்தும். பாய் பரமானந்தன் முதல் காந்தியத் தமிழ்ப்புதினம் என்னும் ஆய்வு நூலையும் காந்தாரியின் தராசு என்னும் நாடக நூலையும் அமைதிக்காக என்னும் கட்டுரைத் தொகுப்பையும் தந்திருக்கும் இலா. வின்சென்ட்டின் சிறுகதை முயற்சியில் வந்திருக்கும் தொகுப்பு மீண்டெழுதல். தொகுப்புக்குத் தொகுப்பு களம் மாற்றி தன் ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறார்.

ரவிக்கை அணியக்கூடாது என்னும் ஒரு சமூகத்திலிருந்து ஓர் இளம்பெண் துணிந்து ரவிக்கை அணிவதைக் கூறும் கதையே ரவுக்கை தொகுப்பின் முதலாம் கதை. இது ஒரு பெண்ணின் குரலல்ல. அந்த இனத்துக்குள்ளிருக்கும் அனைத்துப் பெண்களின் பிரதிநிதித் துவம். பெண்களை ரவிக்கை அணியச் செய்யவேண்டும் என்னும் நெடுங்காலமான சிக் கலை ஒரு பிரச்சாரமாகச் செய்யாமல் சாதுர்ய தளத்தால் சிறுகதையாக்கி விடியலுக்கு வழியமைத்துள்ளார். ஒரு நெசவாளியின் குடும்பச்சூழ்நிலையை அவர் சார்ந்த சமூகப் பின்னணியுடன் கூறப்பட்ட கதை. கஞ்சித்தொட்டி என்னும் சொல் தமிழக அரசியலில் அரசியலாக்கப்பட்டது. ஆனால் அரசியல் வாடையே இல்லாமல் எழுதப்பட்டுள்ளது. கூலி உயர்வு கேட்டு கஞ்சித்தொட்டி போராட்டத்தில் கலந்து கொள்வதாகக் கதை முடிகிறது. ஒரு முதலாளிக்கு எதிராக ஒரு தொழிலாளி போராடும் கதை மீண்டெழுதல். முதலாளியிடம் கடன் வாங்கிவிட்டு மீள முடியாமல் தவிக்கிறான். தவிப்பதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளியின் மனைவியை அனுபவிக்கிறான். இக் கொடுமையை அவள் உடம்பில் வட்டிக் கணக்கை எழுதி முடித்தான் சதாசிவம் என குறிப்பிட்டிருப்பது நயம். சிறுநீரகத் திருட்டு சமீபங்களில் நடைபெற்று வருகிறது. ஏன் நடக்கிறது என இக்கதை விவரிக்கிறது. இவ்விரண்டு கதைகளிலும் ஓர் ஒற்றுமை உள்ளது. முன்னது கைத்தறி. பின்னது விசைத்தறி.

ஜல்லிக்கட்டு என்பது ஒரு தமிழ் மரபான வீரவிளையாட்டு எனினும் உயிரிழப்பதை யும் உறுப்பு காயப்படுவதையும் உதிரம் சிந்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீதிமன்றம் வரை சென்றுவிட்ட பிரச்னை. மாடுகளை அடிக்கிறதும் மனுசங்களைச் சாகடிக்கிறதும் வீரம் இல்லடா. எந்த உசிரையும் கஷ்டப்படுத்தாம இருக்க றதும் ஆபத்தில் சிக்கின உசிருங்களைக் காப்பாத்தறதும் தாண்டா வீரம் என்று தாய் பேசுவதான பேச்சே வீரம் என்பது கதையின் சாராம்சம். இதுவே ஆசிரியரின் விருப்பம்.

தமிழ்மொழி வடதமிழகத்தில் ஒரு மாதிரியும் தென் தமிழகத்தில் ஒரு மாதிரியும் மேற்கில் கிழக்கில் ஒவ்வொரு மாதிரியும் உச்சரிக்கப்படுகிறது. பேசப்படுகிறது. சேலத்துக்கு என்று ஒரு வழக்கு உண்டு. இம்மொழியில் சிறுகதைகள் அதிகம் எழுதப் பட்டதில்லை. எழுத்தாளர் இலா. வின்சென்ட் சேலத்துக்குரிய மொழியை சிறப்பாகக் கையாண்டுள்ளார். சேலம் மக்கள் ழகரத்தை ளகரமாக உச்சரிப்பார்கள் என்கிறார். கன்னடம், தெலுங்கு, உருது என அந்தந்தப் பாத்திரங்களுக்கு ஏற்ப அவர்கள் மொழியை யும் இடையிடையே எழுதியிருப்பது அவரின் ஆர்வத்தின் வெளிப்பாடு. ரவிக்கை, ஜல்லிக்கட்டு, கள் இறக்குதல், சிறுநீரகத் திருட்டு, கோவில் நுழைவு என எடுத்துக் கொண்ட பொருள்காள் யாவும் சேலம் மாவட்டத்தைச் சுற்றி நிகழ்ந்தவை. நிகழ்பவை யாகும். பொதுவான சிலவற்றையும் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு இனத்தின் சார்பாகப் பேசப்பட்டுள்ளது. குரல் எழுதப்பட்டுள்ளது. ரவுக்கை, மனவளம், ஆத்தா... ஆத்தா.. ஆகிய கதைகளில் தீர்ப்பை கூறியவர் மற்றவற்றில் வாசகரிடத்தில் ஒப்படைத்து விடுகிறார். மக்களை சிந்திக்கச் செய்கிறார். இந்து, முஸ்லிம், கிருத்துவம் என மும்மதங்களிலிருந்தும் கதையைத் தந்துள்ளார். எவர் மனத்தையும் புண்படுத்தவில்லை. மாறாக மனித நேயமே முன்னிற்கிறது. உண்மையாக நிகழ்ந்தவைகளையட்டியே கதைகள் எழுதப்பட்டுள்ளன. வாசிக்கும்போது சம்பவம் நினைவுக்கு வருகிறது. கதையும் காட்சியாக விரியும் தன்மை பெற்றுள்ளது. எழுத்தில் எளிமையும் எண்ணத்தில் யதார்த்தமும் ஆசிரியரின் சிறப்பம்சமாகும். ஒரே தொகுப்பில் அனைத்தும் சிறப்பாக இருப்பது அரிது. மீண்டெழுதல் விலக்கு. மீண்டெழுதல் தொகுப்பில் பலரை மீண்டெழ முயற்சித் துள்ளார். ஒவ்வொரு கதையிலும் அவரின் உண்மையான ஈடுபாடும் கடுமையான உழைப் பும் உள்ளதை உணர முடிகிறது. சிறுகதையுலகில் சேலத்தை அடையாளப்படுத்திய இலா. வின்சென்டை மீண்டெழுதல் அவரை அடையாளப்படுத்தும்.

(வெளியீடு : அம்ருதா பதிப்பகம், சென்னை. ரூ. 80)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com