Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
பிப்ரவரி 2008
நினைவுக் கிடங்கும், ஆறாத ரணங்களும்
தோப்பில் முகமது மீரானின் சமீப சிறுகதைகள்

- சுப்ரபாரதிமணியன்

பிறந்த தினம் பலருக்கு முன்பெல்லாம் ஏதேச்சையாகப் பதிவு செய்யப்படுகிறவைதான். பிறப்பு, இறப்பு கட்டாயப் பதிவு என்றாகி விட்ட போதுதான் அவை முறைப்படுத்தப்பட்டன. அதற்கு முன் பதிவு செய்யப்படுகிறவைகளில் பல சிறு பிழைகளைத் தாங்கி இருந்திருக்கலாம். பிறந்த நேரம் தீர்க்கமானதாக இல்லாமல் ஏகதேசமாகக் குறிக்கப்படும். இவை ஜாதக ரீதியாக நம்புகிறவர்களுக்கு பல சங்கடங்களையும் பின்னால் கொண்டு வரக்கூடும். பிறந்த தினம் தெரியாமல் குத்து மதிப்பாக பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளாக பழைய தலைமுறையினரைப் பார்க்கலாம். பிறந்த தினம் பற்றின தேடுதலில் ஈடுபடுபவன் தன் பிறப்பு பற்றினத் தேடுதலைச் செய்கிறனாக பல சமயங்களில் மாறிப் போகிறான். இதில் ஏற்படும் ரணங்களும் சாதாரணமாகிப் போகின்றன. இந்த ரணங்கள் தோப்பில் முகமது மீரானின் மனிதர்களுக்கு சாதாரணமானவை. உயர்ந்த பிறப்பினனாக இருந்தாலும், பஞ்சப்பராரியாக இருந்தாலும் பிறப்பு பற்றின ஆர்வமும், சிந்தனைகளும் மனிதர்களை அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன.

பிறப்பு உயர்ந்ததாக இருந்தாலும் குப்புறத் தள்ளிவிட்ட வாழ்க்கையிலிருந்து மீள முடியாதவர் களின் மீட்சிக்கான அக்கறை தோப்பில் மீரானின் படைப்புகளில் உண்டு. இந்த அக்கறையை மைய மாகக் கொண்டு தன் வாழ்க்கையை பின் நோக்கிப் பார்க்கிற நினைவின் ஓடையில் சதா நீந்துகிறவராக மீரான் இருக்கிறார்.

குட்டன் பிள்ளை சாருக்கோ, காலண்டர் பாபாவுக்கோ அனுபவங்கள் இருக்கின்றன. அப்படி நினைத்துப்பார்த்துக் கொள்வதைத் தவிர வேறு ஆறுதலும் இல்லை. அது ஆரம்பத்தில் சுகானுபவமாக இருக்கிறது. பின்னர் ரணங்களின் வலியின் காரணமாக அழுகைக்கான விடயமாகி விடுகிறது. இந்த நினைவுக்கிடங்கிலிருந்து அள்ளி அள்ளி எடுத்து வைக்க பல அனுபவங்கள் மீரானுக்கு இருக்கிறது. தீராத சுனையாக ஊறிக் கொண்டே இருக்கிறது. அது பெரும்பாலும் உறவினர்களாக இருக்கிறார்கள். தன்னுடன் படித்தவர்களாக இருக்கிறார்கள்.

தான் வைத்தியம் பார்க்கப்போன மருத்துவர் முதல் தனது மனதிற்குப் பிடித்த பால்யகால பெண் வரைக்கும் இருக்கிறார்கள். இந்த மனிதர்களிடமிருந்து மீரானைத் தவிர்த்துப்பார்ப்பது இயலாத காரியம். காரணம், அவர் எழுத்திற்காக தன் வாழ்க்கையை ஒட்டின அனுபவங்களையே தேர்வு செய்து கொள்கிறார். அதுதான் இலக்கியம் என்றும் நம்புகிறார். எனவே அவர் கதைகளில் நவீனத்துவம் சார்ந்த வடிவங்களையோ, முத்திரைகளையோ எதிர் பார்க்கத்தேவையில்லாதபடி செய்துவிடுகிறார். ஆனால் நவீனத்துவம் மாறிவரும் வாழ்க்கையின் அதிரடி நிலைகளும், உலகளாவிய பல்வேறு சமூகப் பொருளாதார மாற்றங்கள் வாழ்க்கையை பாதிப்பதுதான் என்பதை படைப்பில் உணர்த்துபவராக இருக்கிறார்.

சாதாரண மாற்றங்கள் முதிய வயதை ஒத்தவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியவைதான். அதை வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். காலம் தங்களை அனாதைகளாக விட்டு தூர ஓடிவிடக்கூடாது என்ற அக்கறை அவர்களுக்கு இருக்கிறது. அதை மறுதலித்துவிட்டு ஒதுங்கி நின்று வெறும் கல் தூண்களாக அவர்கள் இருக்க விரும்புவதில்லை. காலண்டர் பாவா தன் இயலாமையை முழுமையாக்கி ஒதுங்கி நின்றிருந்தால் அவர் கல்தூணாக நினைவுச்சின்னமாகி இருப்பார். அதற்கான வாய்ப்பை அவர் தருவதில்லை.

பிரித்தரியும் முதிர்ச்சி தந்த காலத்தால் சிதைபவர்களாக இருந்தாலும் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறவர்கள் அவர்கள். சமூகமும் அரசியம் தத்துவங்களும், மதரீதியான நம்பிக்கைகளும் ஒன்றை ஒன்று விழுங்கக் காத்திருப்பவையாக இருந்தாலும் அவை தரும் படிப்பினைகள் அவர்களுக்கு மாற்றங்களை எதிர் நோக்கச் செய்கின்றன. இந்த மாற்றங்களை வாசகர்களும் உள் வாங்க வேண்டிய அவசியத்தை சுலபமாக உணர்வார்கள். அதற்கான நியாயங்களை தன் எழுத்தில் நிறுவுபவர் மீரான்.

குழந்தைகளின் விளையாட்டாகட்டும். முழுமையின் ஆசுவாசமாகட்டும். இவையெல்லாம் ரசிக்கக் கூடியதாகவே மீரான் தனது கதைகளில் காட்டுகிறார். அதன் மூலம் அவற்றை அனுபவிக்காமல் தவிர்க்க விடுவதை உறுத்தலாக்கி விடுகிறார். கையறு நிலையிலிருக்கிற அப்பாக்களோ, குடும்ப நிலையைப் புரிந்து கொள்ளாத குழந்தைகளோ கதாபாத்திரங்களாகக் காணக்கிடைக்கிற போது அவர்கள் தங்கள் நிலையை உணர்ந்து கொள்ளும் வாய்ப்புகளை கதைகளின் முடிவுக்குள்ளேயே நிகழ்ந்துவிட வேண்டும் என வாசகனும் விரும்பும் வண்ணம் மனதிற்கு வெகு அருகாமையில் கொண்டு வந்து விடுகிறார். இது மனிதர்களுடன் கதாசிரியர் நெருங்கி நிற்கும் இயல்பைக் காட்டுகிறது. குழந்தைகளுடனான நெருக்கம் போலவே காதலியுடனான நெருக்கமும் பிரிவின் தேவையை உணர்த்துவதும் யதார்த்தமானவை. குடும்பம் மற்றும் சமூக நிலைகளில் தேர்ந்து கொள்ளப்பட வேண்டுபவை என்பதை நெருக்கமாகப் பெண்கள் உணரவைக்கிறார்கள். மலை முகட்டில் சூரியன் மறைவதை ரசிக்கக் கூட அவனுக்கு விருப்பமான பெண்ணுடன் அபூர்வமாகத்தான் அனுபவிக்க நேர்கிறது.

முஸ்லிம் பிரதேசங்களின் நுணுக்கமான விவரிப்புகளும் முஸ்லிம்களின் பேச்சு வழக்கும் இக்கதைகளின் தனித்தன்மையை நிலைநாட்டுகின்றன. இது சில சமயங்களில் பிற சமூகம் சார்ந்த வாசகர்களை அந்நியமாக்கும். ஆனால் பிற மதத்தினரை பற்றின கதாபாத்திரச் சித்தரிப்பும் வாழ்வும் எவ்வித துவேசமும் துளியும் தென்படாமல் சித்திகரிக்கப்பட்டிருப்பது சாதாரண விடயமல்ல.

தனிமனித பிரச்னைகளும் உள் நோக்கியப் பயணங்களும் அல்லாமல் உலகமயமாக்கல் நிகழ்த்தி வரும் பேரபாயங்களை தனித் தலைப்பிட்டோ வகைப்படுத்தியோ கதையாக்காமல் வெகு நுணுக்கமாக காதல் மற்றும் பிரிவின் ஊடாகவும் எடுத்தாள்வது தீவிரபடைப்பின் தன்மையை உணர்த்திவிடுகிறது. தண்ணீர் பிரச்சனை மற்றும் அது பாட்டிலுக்குள் அடைபட்டுப்போகிற உலக அவலத்தை காதல் கதையூடே உணர்த்துவது உதாரணம். இதனூடே வாழ்க்கையின் புதிர் தன்மையை உணர்த்துவதிலும் சில கதைகள் முயற்சித்து வேறு பரிமாணங்களுக்கும் படைப்பைக் கொண்டு செல்கின்றன. பாடம் சொல்லாத பிள்ளைகளை அடிக்க வைத்திருந்த புளியம்மாறு குளியலறை கதவு இடுக்கு வழியாக வேகமாக வெளியேறி ஆகாய வீதியில் பறந்து போவது போன்றக் குறீயிடுகளும், தனி மனித அனுபவங்களும், மனிதர்கள் கடந்து போகிற வெளிகளை குறியீடாக்கும் மீரானின் கதைகளின் படைப்புத்தீவிரத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன.

(மித்ர வெளியீடு, சென்னை. ரூ. 50)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com