Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
பிப்ரவரி 2008
உள் குளத்தில் விழுந்த கல்
"அறையின் தனிமை" பற்றின சில குறிப்புகள்

- பாரதி நிவேதன்

அவள் மிக அழகான பெயர்ப்
பலகைகளைச் செய்யக்
கூடியவளாய் இருந்தாள்.

உணர்வுகளை எழுத்துகளாக்கும் வாதையினை விடவும் ஒளியாக்கும் ஆக்கம் நல பரிசளிப்பின் திரையைச் சார்ந்த அங்கமாகிறது. திரையின் பெரும்பான்மை, வடிகாலின் மீப் பெரும் பகுதியாகும்போது உள் அலையின் வீச்சை புலப்பிக்கக் கூடிய குறும்படங்களின் வினை மீச்சிறு பகுதியாகவே கவனப்படுத்தலின் அவசியத்திற்கு இடமாகிறது. "அறையின் தனிமை" 18 நிமிடங்களின் மனித வாதையின் வீச்சு.

மனிதவாதை இக்காலம் வரையிலும் பல அவதிகளின் பாற் பிரிந்துணரப்பட வேண்டியது. இங்கு "அறையின் தனிமை" எனும் பெயரடைவிற்குள்ளாகவே ஒரு குளத்தில் விழப்போகும் கல்லினை அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இங்கு, விருந்தினன் அறையின் தனிமைக்குள் அகப்பட்டுப் போகிறான். (நமது அறையின் தனிமைகள் எவ்வாறு நிகழ்ந்திருக்கின்றன?)

விருந்தாளியைப் போன்றே நம்முள் யாரோ ஒருவர் வீட்டின் கடவுளாக மாறுவதென்பது நகர வாழ்க்கையின் பரிசு. குருவிகள் திரும்பும் வரை கூடு விருந்தாளிக்குச் சொந்தமானது. விருந்தாளி மனிதன் எனும் பட்சத்தில் நடக்கிற கதையே வேறு. அவர் இவ்வீட்டிற்குள் அடைக்கலமாகவோ, ஏதும் வழியற்றவராகவோ நுழைந்திருக்கலாம். அறையின் தனிமை வெளிச்சம் வீசும் சில நொடிகளுக்கு முன் இதைப் போன்ற அவதானிப்புகள் இருக்கலாம். இதனை வெகு சாமர்த்தியமாக நகர்த்தி வைத்து விட்டு விருந்தாளி ஒருவன் நம் வீட்டிற்குள் என்னென்ன செய்கிறான் பார்ப்போம் எனும் அற்பத்தையும் துடைத்துவிட்டு தொடர்கிறது நாம் சொல்ல கூச்சப்படும் கோணம். இடைச்செருகல்:: நாம் விருந்தினராய் சென்ற வீட்டில் அவர்கள் இல்லாத போது என்னென்ன செய்வோம்?

நகரச் சூழல் வீடு. விருந்தினன் மட்டும் வீட்டில். இரும்புக் கேட்டின் முன் நின்று எவரோ வருகையின் தேவையினை அவசியத்தினை உணர்த்தும் விதமாக பின்னர் கேட்டினை தாழிட்டு, பின் திரும்பி பார்த்து (பாதங்களின் அலைவு மட்டும்) பின்னர் கதவினைச் சாத்தி உள்ளே விழுந்துவிடும் விருந்தினன் உண்மையில் மனதின் அறையைத் திறந்து விழுந்தவனாகிறான்.

வீட்டிற்குள் அனாதையாக அடைபட்டுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தின் முன் பார்வையாளரை மிக அருகே தனக்குள் கடத்திக் கொள்கிறது. இப்போது திரைப்படத்திற்குள் நாம் ஏதோ செய்து கொண்டிருக்கிறோம். நம்மை யாரும் கவனிக்கவில்லை என்பது தாழிடங்கள் மூலமாக நாம் பெற்றது.

அதையும் துருவிப் பார்க்காத, எல்லாவற்றையும் ரகசியம் என்று அர்த்தப்படுத்தி எச்சில் கூட்டி விழுங்கி ஒவ்வொன்றையும் உடைத்துப் பார்த்து, ஆடைகளை, ஆடைகளின் நெடிகளை, பத்திரப்படுத்தப்பட புகைப்படங்களை, வீசியெறியப்பட்ட காகித எழுத்துக்களை, கையெழுத்து வரிகளின் அர்த்தங்களை, புதிதான வாசமிக்க பொருட்களை இப்படி இன்னும், இன்னும் ஏராளமான உளவியலின் அபரிமித தித்திப்போடு இல்லாமல் தனிமையினை செரிக்க முடியாமல் தொலைக்காட்சிப் பார்ப்பது மின் விசிறியைப் பார்ப்பது, காலாட்டிப் படுப்பது, சிறிது அயர்வது, எழுவது, இணையத்தை முடுக்குவது, சிறுநீர் கழித்து விடுவது, ஜன்னல்களில் பார்வையை ஓட விடுவது, ஒவ்வொரு அறையாக காலத்தைச் சபித்து நடப்பது, மின்விசிறியின் கீழ் படுப்பது மின் விசிறி சுழல்வது கண்ணாடி பார்ப்பது முகத்தை முறுக்கி வாயை உப்பி கண்களை முழித்து சேஷ்டைகளை செய்து பின்னர் சட்டையை கழற்றி பனியனை கழற்றி பின்னர் கைலியை கழற்றி...

இவற்றுக்குள் ஓடவிட்ட எல்லா நொடிகளுக்குள் சிலந்தியும் எறும்பும் இருக்கலாம். நகர இரைச்சலை வடித்தெடுத்த வீட்டிற்குள் இசை கூட மனித தனிமையை கலைத்துப் போடவில்லை. வீடுகூட புறமாகிவிட்டது. ஆனால் இவை மட்டுமா, மீண்டும் ஓடவிடலாம். அப்போது,

இங்கு, பேசப்படாத படத்தைப் பொறுத்தவரை காண்பிக்கப்படாத பகுதிகளும் காண்பிக்கப்பட்ட பகுதியாவதன் தோற்றம் திரைக்கதையின் வலுவினால் ஆனது.

'நவ'த்தில் 'நான்' எனும் தனிமையை உணர்வதற்கு அத்தியாவசியமில்லாத இயந்திர பெருவெளியானாலும் அதனுள் 'நான்' எனும் அங்கத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியது முகப்புகளுக்கு பின்னால் எனும் நிகழ்வு அரிதான சந்தர்ப்பத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும் போல.

அந்நிகழ்வு, பல வேளைகளில் அறிந்துணர வேண்டிய பக்கங்களை கடிகாரத்து முட்களுக்கிடையே இழித்தூற்றிய பின்பு, அறிந்தும் அறியாமலான அங்கலாய்ப்பும் அமைதியுமாக கடிகாரத்துடனேயே ஒன்றாக வேண்டிய கட்டளைக்குள் வந்தாக வேண்டியிருக்கும்.

கட்டளையை யாருக்கும் தெரியாமல் அனுப்பி நமக்கான சிறகைப் பொருத்தி தந்து விடுவதும் ஒரு பக்கம் நிகழ்ந்தேறுதல் உண்டு. அறையின் தனிமை நம் வாழ்நாளில் ஒரு புள்ளியாய் நடந்துவிட்டிருக்கக் கூடியதானாலும், நடக்கப் போவதான புள்ளியை ரசிக்க விரும்பும் படியாய் அமைவதில்லை.

அறிவு வேலை செய்ய ஆரம்பித்த கணத்தை அதன் மனசாட்சியின் மீது கை வைத்துக் கேட்டால் பலமா பலவீனமா என்பது ஒருபக்கம். கற்பித்த அறிவுக்கும் இயல்பான மனதின் இயங்கு தளத்திற்கும் நிரம்ப வித்தியாசப் புள்ளிகள் இருக்கும். இரண்டுக்குமான போர்களத்தின் வாதனைப்பாடுகளாக கடைத்தனங்கள் எனப்படும் கிறுக்குத்தனங்களை சொல்லப்படுகிற முன் வைப்புகளையும் சொல்லிக் கொள்ளலாம். இதன் வெளிப்பாடாக வாசிப்பும் எழுத்தும் எனவும் விருந்தினனின் வினை அமைகிறது.

இது உளவியல் சார்ந்த ஒன்றாக குறுகிப் போகும் அபாயத்தின் முன் ஒன்றை சொல்லிக்கொள்ளலாம். மனித இயல்பினன் அதிர்வுகள், குடி கொண்டிருக்கிற மனதின் இயங்கியலில் தவிப்புகள் சார்ந்த ஆளுமைகள் வேரறுத்து வீழ்வது நலம். இது குறும்படத்திற்கான துருப்புச் சீட்டாகவும் பயன்படலாம்.

இலையின் பச்சைய செழுமைகளை இன்று ரசாயனத்தில் பெற்றுக்கொள்கிற சூழ்நிலையில் (அதாவது கலைப்படைப்பு உள்பட) இயல்பான வித்துவின் செழுமையைக் கண்டடைய "அறையின் தனிமை"யும் உதவக்கூடும்.

(படத்தொகுப்பு : இளம்பரிதி - ஒளிப்பதிவு : ஹவி - இயக்கம் : மாரி மகேந்திரன்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com