Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
பிப்ரவரி 2008
கற்றதனாலாய பயனென்கொல்...
"கற்றது தமிழ்" திரைப்படம் குறித்த ஒரு பார்வை

ரா. பாலகிருஷ்ணன்

கடந்த காலங்களில் அதீதச் செயல்களிலும் மிகை ஆக்கங்களும் நிறைந்த தமிழ் சினிமாவில் அரிதாகவே நிகழ்வைத் தொட்டுச் செல்லும் திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்விதத்தில் 'கற்றது தமிழ்' யதார்த்தத்திற்கு நெருக்கமாக உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். திரைப்பட இயக்குநர் 'ராமி'ன் முதல் உருவாக்கம். பிரபாகர் தமிழ் முதுகலைப்பட்டம் படித்த ஒரு இளைஞன். யாரும் போற்றும் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். இளமையிலேயே தாயை இழக்கிறான். தந்தையிடமிருந்து அன்னியப்படுகிறான். தமிழாசிரியர் ஒருவரால் வளர்க்கப்படுகிறான். அந்தக் காலத்திலேயே பக்கத்து வீட்டுத் தோழி ஒருத்தியைப் பெற்றிருக்கிறான். அவளையும் சில வருடங்கள் இழந்து பின் கல்லூரிப் பருவத்தில் திரும்பக் கண்டடைகிறான்.

கல்லூரி முடிந்து ஆசிரியப் பணிபுரியும் காலத்தில் அவளை மீண்டும் இழக்கின்றான். இந்நிலையில் பணியிலிருந்து வாழ்வின் மிக ஆதாரமான பல சுகங்களையும், அடிப்படைகளையும் இழக்கின்றான். பின் அவனது தோழியை ஒரு விபசார விடுதியில் கண்டுபிடிக்கின்றான். இதற்கிடையில் பிரபாகர் இருபத்திரண்டு கொலைகள் செய்வதாகச் சொல்லப்படுகிறது. அது உண்மையா, பொய்யா என்ற நிரூபணம் திரைப்படத்தில் சொல்லாமல் விடப்பட்டிருக்கிறது. அவன் ஒரு மனநோயாளிதான். அவனால் உறுதியாகச் செய்யப்பட்ட மூன்று கொலைகள் கூட மெய்யாக நடந்தவை அல்ல என்ற ஒரு விவாதத்திற்கும் இங்கே வாய்ப்பளிக்கப்படுகிறது.

ஏன் பிரபாகர் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்கள்? நம்மில் யாருக்காவது இவ்வளவு சோகங்கள் நேர்ந்துள்ளனவா? நேர்ந்திருக்கலாம், நேர்ந்துள்ளது என்று கூடச் சொல்லலாம். நாமும் தாய், தந்தையரை இளவயதில் இழந்துள்ளோம். காதலிகளை இழந்துள்ளோம். ஆனால் அவர்களை எந்த விபசார விடுதியிலும் கண்டதில்லை. மாறாக அவர்கள் பிள்ளை குட்டிகளுடன் பழைய வாழ்வின் சுவடுகள் அனைத்தும் தொலைந்து போன நடைமுறை வாழ்வில் இருந்தவர்களாகத்தான் கண்டு வந்திருக்கிறோம். யாராவது நம்முடைய ஆசிரியர்கள் நம்மை இளமையில் கட்டியணைத்து நமது சோகத்தைப் பகிர்ந்து கொண்டதுண்டா? பிரம்படிகள் பெற்றதைத் தவிர அவர்களிடமிருந்து யாம் பெற்றதுதான் என்ன? நமது பேராசிரியர்கள் நம்மை என்றாவது வழிநடத்தியதுண்டா? வெறுமையால் நமக்குக் கேடு மிகு செயற்களைச் செய்து புலந்தெரியமல் அலைக்கழித்தது தவிர ஏதும் செய்ததில்லை.

எருமைமாடுகளை விட எந்தச் சுரணையுமில்லாமல் நம் வாழ்வு இத்தனை அவமானங்களுக்கிடையேயும் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் நாம் யாரும் ஒரு கொலையைக்கூடச் செய்ததில்லை. ஒரு புண்ணை மருத்துவர் அறுத்தெறிந்தால்கூட தோன்றும் காட்சியைக் கண்டு யாம் மயங்கி விழுந்துள்ளோம். துப்பாக்கியை மேலை நாட்டுப் படங்களில் கண்டதோடு சரி. நேரில் பார்த்ததேயில்லை. ஆனால் பிரபாகருக்கு எத்தனை அன்பு கிட்டியபோதும் அவன் கலகம் செய்வதைத் தடுப்பதற்குக் கடவுளால் கூட இயலாமற்போகிறது. தமிழ் கற்றுத் தந்த ஆசிரியருக்காக ரெட்ராஸ்ஸக்டிவ்வாக இக்கொலைகளை அவன் செய்வதாக இயக்குநர் நமக்குச் செய்தி சொல்கிறார்.

தமிழை கற்றுத்தந்த ஆசிரியர்கள் ஏன் அவனுக்குப் பிழைக்கும் தந்திரத்தையும் கற்றுத் தரவில்லை என்று அவன் என்றாவது ஒரு ஆசிரியரைக் கோபப்பட்டதுண்டா? தமிழ்ப் பேராசிரியர் தமிழ் படிப்பது அறிவீனர்களின் செயல் என்கிறார். இந்தப் பேராசிரியர் என்னவாக மாறியிருப்பார். பல்லாண்டுகாலம் கல்லூரியில் தமிழ் கற்றுத் தந்ததாக ஒரு பேரேட்டுக் கணக்கெடுப்பில் இனிதும் உயர்ந்த அதிகாரப் பதவிகளுக்குச் சென்றிருந்திருப்பார். அப்போது இன்னும் நிறையப் பிரபாகர்களை அவர் கீழ்மைப் படுத்தியிருப்பார். இவரே இப்படி என்றால் மற்ற அறிவு ஜீவிகள் எப்படி இருந்திருப்பார்கள்? இந்த விவாதங்களில் நாம் சற்றும் ராமுடன் முரண்படுகிறவர்களல்லர்.

ராம் சில அதிகாரம், ஆணவம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறார். அவரே பேட்டிகளில் கூறுவது போல் அவர் மிகவும் அஞ்ஞானி, பதில் சொல்ல வேண்டிய கடமை எல்லா அறிவுசார் மானிடர்களுக்கும் உண்டு. இந்திய விடுதலை நிகழ்ந்து ஐம்பதாண்டுகளுக்கும் மேலான நாம் காணும் யதார்த்தமானது அதிகார அமைப்புகள் பல்கிப் பெருகியிருப்பதும், கிடைத்த சுதந்திரத்தைப் பொறுப்பின்றி வீணடித்துவிடுவதும், உடன் சற்று வளர்ச்சியும் கூட. அறிவுசார் துறைகள், அக்கல்வி பயில்பவர்கள், அத்துறை நிபுணர்கள் என்பது ஒரு அதிகார அமைப்பாக இங்கு காணப்படுகின்றது. ஏன் இங்கு இலக்கியவாதிகள் என்கிற ஒரு அதிகார அமைப்புகூட உண்டு. மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள் என்ற அறிவு சார் அதிகார அமைப்பு ஒன்று இங்கு வளர்ந்துள்ளதை நாம் காண இயலும். இவ்வமைப்பு ஏன் அதிகாரமயமாக மாறியது என்றால் அதற்கு அமெரிக்கா காரணம் என்று கூடக் கூறுபவர்கள் உண்டு. ஆனால் அதிகார அமைப்புகளைப் பொறுத்தவரை அவை எந்தத் தொடர்புமின்றித் தாமாக உருவாகக் கூடியவை என்பது நிதர்சனம்.

சக மனிதனுக்கான பொறுப்புகளை நாம் உதறிவிட்டு நமது சுயமுன்னேற்றத்தின் அடிப்படையில் செய்யும் எந்தச் செயலும் அதிகாரத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். அறிவு ஜீவிகள் அதிகார வர்க்கமாக மாறியது இப்படித்தான். ஆனால் ராம் இந்த 'ஜெனிசிஸ்' பற்றிக் கவலைப்பட்டவரல்ல. அவருக்குத் தாராளமயமாக்கல் திடீரென்ற ஒரு மழைச்சாரல் போல முகத்திலடித்த பிறகு அனைத்துமே தாராள மயமாக்கலின் விளைவுகள்தான் என்று முடிவு செய்துவிட்டார். என்ன செய்யலாம்? பிரபாகர் இரண்டாயிரம் சம்பளம் வாங்குவதற்குப் பதிலாக இருபதாயிரம் பெற்றிருந்தால் இப்பிரச்சினை இல்லாமற் போயிருக்குமா?

ஆனால் பிரபாகர் ஒரு முன் உருவாக (archetype) உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். அது முன்வைக்கும் கேள்வி இதுதான். 'சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட இயல் அல்லது அறிவு ஏன் அதற்குரித்தான மரியாதை இன்றி புறக்கணிக்கப்படுகிறது?' இன்னொரு திறன் அல்லது துறை என் அளவுக்கதிகமாக அங்கீகரிக்கப்படுகிறது. இது சரிதானா? ஒரு பகுதி மக்கள் வளர்ச்சி பெற்றதாகக் கூறப்படும்போது மற்றொரு பகுதி மக்கள் பொருளாதாரத் தீண்டாமைக்கு அகப்படுவது எதனால்? இவைகளை மிகவும் சரியான இக்காலத்தில் அவசியமான கேள்விகள்.

இக்கேள்விகளைக் கேட்டுக்கொள்ளும் பிரபாகர் மனச்சோர்வடைகிறான். எனக்கு டிஸ்டர்ப் செய்யுதே என்று Touch me if your dare' என்று எழுதப்பட்ட பனியன் அணிந்த யுவதியின் மார்பைப் பிடித்திழுக்கிறான். அதனால் அவ்விடத்திலேயே அவமானப்படுகிறான். உண்மையில் பிரபாகர் அவ்விதம் நடந்து கொள்ளக் கூடியவனல்ல. ஆனால் கதாசிரியர் நமக்கு ஒரு அதிர்ச்சியைத் தர முயற்சி செய்கிறார். அதன் விளைவே அக்காட்சி. இவ்விதத்தில் அது ஒரு முன் உருக் கதாபாத்திரமாக உள்ளது. தமிழ்ப்படிச்சா நானாவது ரெண்டு திருக்குறள் சொல்லிப் பொழச்சுக்குவேன். சோசியாலஜி படிச்சவன், சைக்காலஜி படிச்சவன், எக்னாமிக்ஸ் படிச்சவனெல்லாம் என்ன செய்வான்? செத்தான் என்று பிரபாகர் கேட்கிறான். அவன் கேள்வி நியாயமானது. ஆனால் இந்த லிஸ்டிலிருந்து இங்கிலீஷ் லிட்ரேச்சரை ஏன் தவிர்த்தான் என்று புரியவில்லை.

இத்தனைக்கும் பிறகு நமக்கு அவன்மேல் பரிதாபம் வரவேண்டும் என்று இயக்குநர் எதிர்பார்க்கிறார். கிட்டத்தட்ட 'டர்' படத்திலோ, 'பாஸின்' படத்திலோ எதிர்நாயகன் 'ஷாருக்' மேல் ஏற்படும் பார்வையாளர்களுக்கான பிரீதி இவன் மீதும் ஏற்படவேண்டும் என்ற நினைத்தாரோ என்னவோ. ஆனால் மக்கள் இதனை எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஒருவேளை திரைப்படம் வணிகமயமாக்கல் தந்திரங்களைக் கையாளவில்லை என்பதனால் இருக்கலாம். ஆனால் பிரபாகர் தான் கொலை செய்ததாகச் சொல்லும் கடற்கரையில் காதலர்களைப் போன்றவர்களை நம்மால் ஒப்புக்கொள்ள இயலாது. அவனுக்குத் தன் எதிரிகள் பற்றிய அடையாளங்களில் தெளிவு கிடையாது. முன்கூறியபடி அதிகார அமைப்புகளைப் பற்றிய தெளிவு, அவனுக்கோ அவனது படைப்பாளிக்கோ சரியாக இல்லை. படம் அம்மாதிரித் தருணங்களில் மிகைப்படுத்தப்பட்டதாகவே உள்ளது.

கால் சென்டரில் பணிபுரிபவர் இரண்டு லட்சம் சம்பளம் வாங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் தவறான ஒரு செய்தி. கால்சென்டர் ஊழியர்கள் அவுட்சோர்சிங் துறையின் மிகவும் கடைநிலை ஊழியர்கள். நெட்வொர்க்கிங் போன்ற சிக்கலான துறைகளில் பணிபுரியும் பொறியாளர்களே பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் போது அவ்வளவு சம்பளம் பெறுவதில்லை. இவர்களை ஏன் பிரபாகர் எதிரியாகப் பாவிக்க வேண்டும் என்ற தெரியவில்லை. அவன் கோபப்பட்டிருந்தால் தன்னைச் சரியாக வழிநடத்தாதவர்கள் மேல் கோபப்பட்டிருக்கலாம். ஆனால் இங்கே அவன் ஒரு மாதிரி கதாபாத்திரம் என்பதால் இச் செயல்கள் திரைப்படத்தில் அவசியமாக ஆகிவிட்டன.

ஒவ்வொரு முறை ஒரு நவீனத்துவ நிகழ்வு ஏற்படும் போதும் நமக்குள் ஒரு சமூகப் பீதி (social phobia) ஒன்று உருவாவது தவிர்க்கவியலாததாக ஆகிவிடுகின்றன. ஆனால் இவற்றை வெற்றிகரமாகக் கையாண்டு, கடந்து செல்பவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான். ஆனால் நிச்சயமாக உணர்ச்சி என்ற அடிப்படையில் மனிதர்கள் பிரிக்கப்படுவது ஒப்புக்கொள்ள இயலாததுதான். பிரபாகர் விரும்பினால் அவனுக்கு மூன்று எதிரிகளை நாம் அடையாளப்படுத்த இயலும். மாற்றத்திற்கான எதனையும் நம்மீது திணிப்பவர்கள், மாற்றத்தை உணர்ந்து அதற்கேற்ப சுமைகளைத் தாம் தாங்கி நமக்குச் சரியான புலங்களைக் காட்டாதவர்கள், மாற்றம் என்பதெல்லாம் அழிவில் நம்மைச் செலுத்தும் என்பவர்கள். இன்றைக்குத் தாராளமயமாக்கலை இங்குள்ள அறிவு ஜீவிகள், அதிகார அமைப்புகள் கூட எதிர்க்கின்றன. இதற்குக் காரணம் இவர்களுக்கு மக்கள் மீதுள்ள அன்பு என்பது அல்ல. மாறாகத் தம்முடைய அதிகாரம் பறிபோகிறதே என்பதுதான். பிறகு திரைப்படத்தில் திறனற்ற இளைஞர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் பணிக்கு அழைப்பதாகக் காட்டியிருப்பது அபத்தம். இரண்டாயிரமாண்டுத் தமிழும், இருபதைத்தாண்டு கம்யூட்டர் என்ற வசனமும் அபத்தம்.

திரைப்படத்தின் கதையாடல் உத்தி நான் லீனியராகச் செல்கிறது. விருமாண்டிக்குப் பிறகு இவ்வளவு நன்றாகக் கதை சொன்ன படம் இதுதான். காட்சிகளின் தொடர்ச்சி ஜாய்சின் நனவோடை அமைப்புகளில் வெளிப்படுகின்றன. இவ்விடங்களில் காட்சி ஒரு பொருளில் முடிந்து அதே பொருள் வேறு ஒரு காட்சியில் துவங்குவது கப்பாலாவின் (Coppla) படங்களிலுள்ள அம்சம். ஐஸன்ஸ்டைனின் மொண்டாஜ் (Montage) யுக்தி படத்தில் திறமையாகக் கையாளப்பட்டுள்ளது. உதாரணமாகச் சிறுவன் சிறுநீறு கழிக்கும்போது விபத்தின் காரணமாக ஏற்படும் பேரதிர்ச்சி. டிரெயின் காட்சிகளில் திரைப்படம் நம்மை முற்றிலுமாக உள்வாங்கிக் கொள்கிறது. போலீஸ்காரருடன் பிரபாகரின் மோதல் நடக்கும் (டிரெயின்) காட்சியில் நாமே பயணத்தில் ஈடுபடுகிறோம். படத்தின் தொடர் காட்சிகள் சற்று நீண்டு அயர்வூட்டுகின்றன. பாடல்களும் சுத்தபோர். ஒரு பாட்டுகூட நன்றாக இல்லை. ராம் சற்று கவனமாக இயங்கினால் எதிர்காலம் ஒரு நல்ல இயக்குநரைப் பெற வாய்ப்பு உண்டு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com