Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
ஆகஸ்டு 2008
வாடை
வீரா

பழனி பேருந்து நிலையத்தில் வழக்கம் போல நசநசப்புக்குக் குறைவில்லை. காவிகளும், காவடிகளுமாக எங்கு பார்த்தாலும் கூட்டம். ஊருக்குத் திரும்பும் அவசரம். எல்லாப் பேருந்துகளும் பக்தர்களை அள்ளி அடைத்தபடி மெதுவாக நகர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தன. இன்று காலையில் இவன் கல்லூரி தோழனின் திருமணம் திருஆவினன்குடி கோவிலில் நடந்தது. முந்தைய நாள் இரவே வந்துவிட்டான். தீபம் லாட்ஜில் ரூம் போட்டாயிற்று. இவன் தவிர இன்னும் மூன்று நண்பர்கள். ஒருவரை ஒருவர் பார்த்து ஐந்து வருடங்களாகி விட்டபடியால் இரவு வெகுநேரம் வரை அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். காலையில் திருமணம் முடிந்தவுடன் நண்பர்கள் கிளம்பி விடவே, இவன் மட்டும் களைப்பு தீர சிறிது நேரம் தூங்கிவிட்டுச் செல்லலாம் என்று படுத்தவன் விழித்துப் பார்க்கும்போது மணி சாயங்காலம் நாலு ஆகியிருந்தது. அவசர அவசரமாக விடுதி அறையைக் காலி செய்து விட்டு வந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறான்.

சிறிது நேரத்தில் ஈரோடு வண்டி வந்து நின்றது. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறியிருந்த மக்கள் பேருந்தைச் சுற்றி மொய்க்க ஆரம்பித்து விட்டார்கள். படிக்கட்டில் முட்டிமோதி நுழைந்தேறிய கூட்டத்தில் இவனையும் பொருத்திக் கொண்டான். முயற்சிகளற்று உள்ளேற்றப்பட்டான். அதற்கு முன்பாகவே பல புத்திசாலிப் பயணிகள் ஜன்னல் வழியாக கைக்குட்டைகளாலும் வாட்டர் பாட்டில்களாலும் ஒயர் கூடைகளாலும் இருக்கைகளை முன்பதிவு செய்துவிட்டார்கள். ஆனாலும் கூட இவனுக்கு ஒரு இடம் கிடைத்தது அதிர்ஷ்டமே! ஜன்னல் ஓரத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண். அவளுக்குப் பக்கத்தில் அவள் கணவன். கடைசியாக இவன். பின்னால் ஏறியவர்கள் நசுங்கிக் கொண்டு மூச்சுத் திணறி நின்றார்கள். அதைப் பார்த்த இவனுக்கு நிம்மதியாக இருந்தது.

சிறிது நேரத்தில் வண்டி கிளம்பியது. நகர எல்லையை விட்டு ரயில்வே லைன் தாண்டியது. செவண்த் பட்டேலியன் கடந்து தாராபுரம் சாலையில் மெல்ல வேகமெடுத்தது. நடத்துனர் முண்டியடித்துக் கொண்டு டிக்கட் கொடுக்க ஆரம்பித்தார். வண்டிக்குள் எங்கு திரும்பினாலும் சந்தனம் அப்பிய மொட்டைத் தலைகள் குழந்தை குட்டிகளோடு நீக்கமற நிறைந்திருந்தன. பெரிய மொட்டைகள் கொய்யாப்பழம் கடித்துக்கொண்டும் வெள்ளரிப் பிஞ்சுகள் மென்றுகொண்டும், சிறிய மொட்டைகள் பலூன், ரப்பர் பந்து, மயிலிறகு போன்றவற்றை வைத்து விளையாடியபடியும். சிலர் களைத்துப் போய் அரைத் தூக்கத்திலும் சிலர் வாயில் எச்சில் வழிந்தபடி முழுத் தூக்கத்திலும். மொத்தத்தில் பேருந்து முழுவதும் மொட்டைகள் ராஜ்யம். ஆனால் இவனுக்கு அருகில் வாய்த்தவன் மொட்டையல்ல. முடியுடை மன்னன்.

உண்மையிலேயே மன்னன் ஓய்வெடுப்பது போன்ற பாவனையிலேயே அமர்ந்திருந்தான். நெஞ்சை நிமிர்த்தி தலையை மேல் நோக்கி வைத்து வாய்ப் பிளந்து கொணடு கண்களை மூடி ஏகாந்தமாய்ச் சாய்ந்திருந்தான். ஆனால் அவனிடமிருந்து ஒரு கெட்ட வாடை வீசியது. கண்டுபிடித்துவிட்டான். குடிகாரன். பாம்பின் கால் பாம்பறியுமே. இவனும் குடித்துக் கொண்டிருந்தவன்தான். சமீபகாலமாகத்தான் இல்லை.

எட்டாம் வகுப்பு முழுப்பரிட்சை லீவுக்கு அப்பிச்சி ஊருக்குப் போனபோது ஆரம்பித்த பழக்கம்.

‘பய எலச்சி எலும்பா திரியறானே, ஒரு மரத்துக் கள்ளு குடிச்சா ஒடம்பு கிண்ணுன்னு ஏறம்ல’ என்று அப்பிச்சி கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு துண்டுக்காட்டுத் தென்னந்தோப்புக்குக் கூட்டிச் செல்லும். சாராயம் குடிப்பது வேறு கள் குடிப்பது வேறு என்ற சித்தாந்தம் கொண்டவர் அப்பிச்சி. கள் என்பது உடல் நலத்துக்கு உகந்தது என்ற கருத்தாக்கம் கொண்டவர். சின்ன வயதில் தோள் மேல் தூக்கிப் போட்டுக்கொண்டு நடந்த, கிணற்றில் இறங்கி நீச்சல் கற்றுக் கொடுத்த, நுங்கு சீவிக்கொடுத்த, இளநீர் பொத்துக் கொடுத்த அப்பிச்சியை மிகவும் பிடித்துப் போனதால் அவர் சொல்வது எல்லாம் இவனுக்கு வேத வாக்கு.

சுரக்குடுவையில் வெள்ளை வெளேரென நுரைத்துக் கொண்டிருக்கும் கள்ளை முதன் முறையாக முகர்ந்த அந்த நிமிடமே அதன் மணம் இவன் மூளையில் சென்று பதிய வேண்டிய இடத்தில் பதிந்து கொண்டது. நாரத்தங்காய் ஊறுகாயும் ஒரு மரத்துக் கள்ளும் முழுப் பரிட்சை லீவு முடிவதற்குள்ளாகவே இவனுக்கு நெருங்கிய நண்பர்களாகிப் போனார்கள்.

பள்ளிப் பருவத்தில் ஆரம்பித்த பழக்கம் கல்லூரியிலும் தொடர்ந்தது, ஆனால் கள்ளிலிருந்து பீருக்கு மாறியிருந்தான். பிறகு வேலைக்குச் சென்ற பின் பீரின் இடத்தை விஸ்கி பிடித்துக் கொண்டது. மிகவும் சந்தோஷமாய் இருந்தாலும் குடிப்பான். தாங்க முடியாத மனச்சோர்வில் இருந்தாலும் குடிப்பான்.

இவனுடைய குடியுரிமைக்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை கல்யாணம் ஆகும்வரை. ஆனால் வந்து வாய்த்தவளுக்கோ குடியென்றாலே வெறுப்பு. குடித்துக் குடித்தே குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திய அப்பன், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சதா சர்வகாலமும் அம்மாவை அடித்துக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறான். பிறகு ஒருநாள் குண்டாமணி வெடித்து செத்துப் போய்விட்டான். அம்மாவின் அரவணைப்பில் கஷ்டப்பட்டு படித்து வங்கியில் வேலை பெற்று தெரிந்த குடும்ப நண்பர் மூலமாக பூபதியைச் சந்தித்து ஒரு சுபயோக சுபதினத்தில் சுற்றமும் நட்பும் வாழ்த்த தழையத் தழையத் தாலி கட்டிக்கொண்டு முதலிரவன்று அவள் கேட்ட முதல் கேள்வியே ‘நீங்க குடிப்பீங்களா?’ என்றுதான்.

இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சற்றுக் குழம்பிய பின் இல்லையென்று சொல்லிவிட்டு அப்போதைக்கு அடுத்த காரியத்துக்குப் போய்விட்டான். அன்று ஆரம்பித்தது இவனுக்குச் சனி. பேசாமல் உண்மையைச் சொல்லியிருந்தாலாவது அப்போதே ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். இல்லையென்று பொய் சொல்லிவிட்டதால் இவனுக்கும் சௌகரியமாய்ப் போய்விட்டது. அவளுக்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பித்தான். இரவில் குடிக்கும் சூழ்நிலை வந்தால் வீட்டுக்கு வருவதைத் தவிர்த்தான். காலையில் வந்து சில பொருத்தமான பொய்களைக் கூறினான்.

கொழுத்த நண்டு எத்தனை நாள்தான் வலையில் தங்க முடியும். ஒருநாள் வெளியில் வந்தது. குடித்த ஓர் இரவு வீட்டுக்கு வரவேண்டியதாயிற்று. அன்றைக்குப் பார்த்து அவள் இவனை அணைய முற்பட, வாடை காட்டிக் கொடுத்துவிட்டது. அன்றைக்குத்தான் அவளுடைய விஷ்வரூபத்தைக் கண்டான். பத்ரகாளி கோலம் பூண்டு நிலமதிரக் குதித்தாள். கையில் கிடைத்ததையெல்லாம் விட்டெறிந்தாள். கண்டதையெல்லாம் போட்டுடைத்தாள். மண்ணெண்ணையைத் தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குச்சி கொளுத்தினாள்.

‘ஏய் பைத்தியமாடி உனக்கு. வயத்தில மூணுமாசக் குழந்தைய வச்சிட்டு இப்படிக் குதிக்கறே’

‘பைத்தியமா? ஏண்டா சொல்லமாட்டே நாயே. குடிக்கறதுமில்லாம அத எங்கிட்ட இத்தன நாளா மறைச்சு பொய் சொல்லிட்டு இருந்திருக்கறே’

‘இங்கபாரு இத ஒரு பிரச்சனையாக்காத’

‘இது உனக்குவேணா சாதாரணமா இருக்கலா எனக்கு அப்பிடியில்லன்னு ஏற்கனவே உங்கிட்ட சொல்லியிருக்கறன்லடா?’

இனி ஒருபோதும் குடிப்பதில்லையென்று நூறு சத்தியங்கள் செய்தான். மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டான். அன்று அவளைச் சமாதானப்படுத்தியதே இன்றுவரை இவனின் வாழ்நாள் சாதனையாகத் தொடர்கிறது.

வண்டி கிளம்பியபோது எந்தச் சலனமும் இல்லாமல் இருந்த பக்கத்து இருக்கைக்காரன் இப்போது வேலையைக் காட்ட ஆரம்பித்தான். கொள்ளளவுக்கு மேல் குடிப்பவன் போலும். இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்கும் திரும்பினான். இவனுக்குக் கோபம் வந்துவிட்டது. என்ன செய்வது. இவன் கோபத்தைப் பொருட்படுத்தும் நிலையில் குடிமகன் இல்லை. அந்தப் பெண்ணிடம் கோபத்தைக் காட்டலாமா என்று நினைத்தான். அவள் குடிமகனைக் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. எந்தச் சுரத்தும் இல்லாமல் எதையோ வாயில் போட்டுக் கொறித்துக் கொண்டே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். திருமணமாகி குறைந்தது பத்து வருடங்களாவது ஆகியிருக்கலாம். முதிர்வு முகத்திலும் உடலிலும் தெரிந்தது. சந்தோஷமற்ற வெறிப்பு அவள் கண்களில் இருந்தது. மெலிந்த உடலும் வறண்டு போன தோலும் வெளிறி வெடித்திருந்த உதடுகளும் செம்பட்டையேறிய சிகையும் அவள்மேல் ஒரு பரிதாபத்தை உண்டாக்கியது. அவள்மேல் கோபப்பட்டு என்ன பயன் என்ற நினைத்துக் கொண்டான்.

குடிமகன் சற்றுநேரம் இரை விழுங்கிய பாம்பு போல நெளிந்துவிட்டு இவன் மடிமேல் சாய்ந்தான். அதற்குள் இந்தப்பக்கம் திரும்பிய அந்தப் பெண் இவன் மடிமேல் கிடந்த குடிமகளை கையால் இரண்டு தட்டுத்தட்டி ‘ந்தா... எந்திரீ’ என்று சட்டையைப் பிடித்து இழுத்தாள். சட்டென்று சுதாரித்து எழுந்தவன் நல்ல பாம்பைப் போல தலையை வலதும் இடதுமாக திருப்பித் திருப்பிப் பார்த்தான். இவனைப் பார்த்து ஒரு இளிப்புக் காட்டினான். இளித்துக்கொண்டே அந்தப் பெண்ணின் மீது விழுந்தான். அவளுடைய தொடைகளின் மீது முகத்தை வைத்து அசிங்கமாகத் தேய்த்தான். அந்தச் செயலால் எரிச்சலடைந்த அவள் அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தாள். உடனே நிமிர்ந்த அவன் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டே உதட்டைக் குவித்து அவளை முத்தமிடப் போனான். அவள் தன் கைகளால் அவனைத் தடுத்துத் தள்ளிவிட்டாள். மீண்டும் ஒருவாறு பழைய இருப்புக்கு வந்தான்.

சிறிது நேரம் கழித்து உடலைச் சற்று இறுக்கி கால்கள் இரண்டையும் மடக்கி முன் இருக்கையில் வைத்து ஒரு உந்து உந்தினான். முன் இருக்கை முழுவதும் குலுங்கியது. அதிலிருந்த மொட்டையொன்று திரும்பி முறைத்தது. சற்று நேரம் அப்படியே இருந்து விட்டு அந்த இருப்பில் திருப்தியில்லாதவனாக மீண்டும் நெளிந்து எழும்பி முன் இருக்கையில் கைகள் இரண்டையும் குறுக்குவெட்டாக வைத்து தலை கவிழ்ந்து படுத்துக் கொண்டான். அந்தப் பெண் ஏதோ முனகிவிட்டு மீண்டும் வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

இவனுக்கு எழுந்து நின்றுவிடலாம் என்று தோன்றியது. ஆனால் நிற்பவர்களின் நிலை கண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். அது மட்டுமல்லாமல் குடிமகனிடமும் எந்தச் சலனமும் இல்லாதததால் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தான்.

பேருந்து தாராபுரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. குடிமகன் மெல்ல தலையைத் தூக்கி இவனைப் பார்த்தான். முகம் இறுக்கமாக இருந்தது. வயிற்றை இரண்டு முறை எக்கினான். ‘ஓய்..’ என்று பெருங்குரலெழுப்பினான். குடிகாரன் வாந்தியெடுத்தால் எப்படியிருக்கும் என்று எழுத இன்னும் பயிற்சி வேண்டும். கெட்டித் தயிருக்குள் முட்டையை விட்டு கலக்கியது போல் மஞ்சளும் வெள்ளையுமாக பாதி செரித்து பாதி செரிக்காமல் தரிசு தரிசாக கொளகொளவென்று வெளியே வந்து மேலேயே விழுந்தது. சுதாரிப்பதற்குள் மீண்டும் ஒருமுறை எடுத்தான். சதசதவென்று உடல் முழுவதும் வாந்தியால் நனைக்கப்பட்டு நாறிப்போனான். அதிலிருந்து அந்த வாடையால் இவனுக்கு மயக்கமே வருவது போல் ஆகிவிட்டது.

பேருந்து முழுவதும் கெட்ட வாடை பரவியது. எல்லா பயணிகளும் சங்கடத்தில் நெளிந்தனர். புடவையாலும் துண்டுகளாலும் மூக்கைப் பொத்திக் கொண்டனர். கூட்டமும் வாந்தியெடுத்த பகுதியை விட்டு வட்டமாய் விலகி நின்றது. நடத்துனர் கண்டமேனிக்கு கெட்ட வார்த்தை பேசினார். வசவுகளால் அந்தப் பெண்ணைச் சீண்டினர். அவள் எழுந்து நின்று முந்தானையை உதறி இடுப்பில் செருகிக் கொண்டு குடிமகனை வெறித்துப் பார்த்தாளே தவிர வேறு எதுவும் செய்தாள் இல்லை. அவனுடைய வேட்டிக்கட்டு அவிழ்ந்து விலகியது. அப்படியே சரிந்து இருக்கைகளுக்கு நடுவில் விழுந்தான்.

அதற்குள் தாராபுரம் வந்துவிடவே குடிகாரனும் அந்தப் பெண்ணும் வண்டியிலிருந்து இறக்கிவிடப்பட்டனர். இவனும் இறங்க வேண்டியதாயிற்று. இவனுடைய அசூசையான நிலை கண்டு தண்ணீர் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட முக்கால் குளியல் போட்டான். தொப்பலாக நனைந்தபடியே அடுத்த வண்டி பிடித்து படியில் நின்றுகொண்டே ஈரோடு வந்து சேர்ந்தான். உடல் சூடும் வெளிக்காற்றும் ஈரத்தைக் காயவைத்திருந்தன. ஆனால் கெட்ட வாடை மட்டும் அவன்மேல் வீசிக்கொண்டிருந்தது.

வீட்டுக்கதவைத் தட்டும்போது இரவு பத்தாகியிருந்தது. தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த மனைவியிடம் எதுவும் பேசாமல் குளியலறைக்குப் போய் துணிகளைக் கழற்றிப் போட்டுவிட்டு ஒரு குளியல் போட்டான். நேராக வந்து படுக்கையில் விழுந்தான்.

சற்றுநேரம் கழித்து அருகில் வந்த மனைவி ‘பாத்ரூம்ல நீ கழற்றிப் போட்ட டிரஸ்ல இருந்து பிராந்தி வாடை வருது.... குடிச்சிட்டு வந்தியா?’ என்றாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com