Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
ஆகஸ்டு 2008
கிரேக்க நாடகம்
யூரிபிடிஸின் பேக்கி
மொழிபெயர்ப்பு:ஸ்டாலின்

மேற்கில் வெளியாகிவரும் நவீனத்துவக் கலை இலக்கியங்களைப் பற்றி அக்கறைப் பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச்சூழலில், செம்மொழியான கிரேக்கத்திலிருந்து பழைய இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியும் நடைபெறவே செய்கிறது. அதில் மிகுற்த ஆர்வம் காட்டி வருபவர் ஸ்டாலின். இதுவரை கிரேக்க நாடகாசிரியர் களான ஈஸ்கிலஸின் ஏழு நாடகங்களையும், சேபக்ளிஸின் ஏழு நாடகங்களையும் தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார். அண்மையில், யூரிபிடிஸின் ‘பேக்கி’ என்ற நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.

கிரீஸ் என்றாலே நினைவுக்கு வருவது அதனுடைய பழமையான பெருமைதான். கிழக்கிலும் மேற்கிலும் விரிவான பேரரசுகளை நிறுவி உலக வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்தது இந்த கிரீஸ்தான். ஐரோப்பிய நாடுகளின் கலை, கலாச்சாரப் பண்பாட்டிற்கு அடித்தளம் அமைத்த கிரீஸில்தான் மகா கவியங்களான இலியட்டும், ஒடிஸியும் தோன்றின. ஹோமர் போன்ற மகா கவிகளின் பிறந்த மண்ணும் இதுதான். இன்று உலக அளவில் குறைந்த கவனத்திற்கு உள்ளாகியிருப்பதும் இந்த கிரீஸ் தான். மகா காவியங்களுக்கு மட்டுமல்லாமல் பெருமைக்குரிய நாடகக் கலைக்கும் இந்த கிரீஸ்தான் முன்னோடி. அனக்ஸகோரஸ், ஜெனோபான் தொடங்கி சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் போன்ற தத்துவஞானிகளும் இந்த மண்ணில்தான் தோன்றினார்கள்.

இந்தியாவும் அதைப்போலவே பழம்பெருமை வாய்ந்த நாடுதான். இதுவும், கலை, கலாச்சாரம், பண்பாடு, தத்துவம் போன்றவற்றிற்குப் பழங்காலத்திலேயே ஓர் ஊற்றுக் கண்ணாக இருந்திருக்கிறது. மகாபாரதம், இராமாயணம் போன்ற மகா காவியங்களும் இந்திய மண்ணில் தோன்றியிருக்கின்றன. வியாசர், வால்மீகி தொடங்கி ஏராளமான கலை ஞர்களும், அறிவியலாளர்களும், தத்துவ ஞானிகளும் இந்தியாவில் தோன்றியவர்களே.

கிழக்கில் ஆன்மிகமும், மேற்கில் அறிவியலும் வளர்ந்த போக்குகளைக் கூர்ந்து பார்க்கும்போது இருவேறுபட்ட மரபுகளின் தனித்தன்மைகளை இனம் காண முடிகிறது. மாறுபட்ட இரண்டு வகையான கலாச்சாரப் பண்பாட்டு நாகரிக அடிப்படைகளிலிருந்து உலக வரலாற்றின் வளர்ச்சியையும், போக்கையும் ஒரு ஆழமான புரிதலுக்கு உள்ளாக்கிக் கொள்ள முடியும். அதன் வழியாக உலகின் வரலாற்று வளர்ச்சியை மேலும் கூர்மையாகவும், ஆழமாகவும் உணர முடியும்.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு இலக்கியச் சூழலுக்கு கிரேக்க இலக்கியங்கள் குறித்த ஒரு புரிதல் தேவையென்று கருதி கிரேக்க நாடகங்களைத் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் முயற்சியில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டி வருகிறார் ஸ்டாலின். தமிழ்ச் செம்மொழி குறித்து ஆய்வுகள் செய்யும் முனைப்பு தீவிரமடைந்துள்ள இன்றைய நிலைமையில் இந்த மொழிமாற்றம் பழமை வாய்ந்த தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்வதற்கு வசதிப்படும். கிழக்கும் மேற்கும் அவற்றிற்கே உரிய தனித்தன்மை களை நிறுவிக்கொண்டதற்கான அடிப்படைகளையும் அடையாளங்களும் காண முடியும். இன்றைய உலகச் சூழலில் ஆன்மிகமும், அறிவியலும் ஒருங்கிணைந்து இயங்க வேண்டிய தேவைக்கு ஒரு தூண்டுதலாக அமையும்.

பழமைவாய்ந்த செம்மொழிகளில் தோன்றிய கலை, இலக்கியங்கள் பொதுவாக நிலவுடைமைச் சமுதாயங்களின் வெளிப்பாடுகளே. அன்றைய சமுதாயத்தின் நிலைமைகளையும், தேவைகளையும், மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் முதன்மைப் படுத்தக்கூடிய விதங்களிலேயே அவை வடிவம் பெற்றன. ‘நல்ல பண்புகள் நல்ல விளைவுகளையும், தீய குணங்கள் தீய விளைவுகளையும் அளிக்கும்’ என்ற அரிஸ்டாடிலின் கோட்பாட்டை வலியுறுத்துவதாகவே மேற்கத்திய இலக்கியங்கள் தோன்றின. கிழக்கில் சத்தியம் வெல்லும் என்ற கோட்பாடு வலியுறுத்தப்பட்டது.

இந்த இரண்டு வகைளான கோட்பாடுகளின் அடிப்படையில் கிழக்கிலும் மேற்கிலும் தோன்றிய இலக்கியங்களை ஆய்வுக்கு உள்ளாக்கிப் பல புரிதல்களை நிகழ்த்தலாம். அவற்றில் வலியுறுத்தப்படும் ஊழ்வினை கருத்தாக்கம் குறித்த புதிய புரிதல்களுக்கும், முடிவுகளுக்கும் வழி காட்டலாம். வன்முறை தீய விளைவுகளுக்குக் காரணமாக அமையும் என்பதை வலியுறுத்துவது மேற்கின் கண்ணோட்டம். வன்முறைக்குப் பின்னாலும் சத்தியம் நிலைத்திருக்கும் என்பது கிழக்கின் பார்வை. மேலோட்டமாகப் பார்க்கும்போது அவை ஒன்றுபோலத் தோன்றினாலும் கூட அடிப்படையில் முரண் பட்டவை. இதுபோன்ற பார்வைகளையும், மதிப்பீடுகளையும், முடிவுகளையும் பெறுவதற்கு இந்த மொழியாக்கம் வாய்ப்பளிக்கிறது.

நவீன காலத்தில் ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக நாடக் கலையின் முக்கியத்துவம் குறிந்துவிட்டது என்பது ஒரு வெளிப்படையான உண்மை. நவீன நாடகங்களில் உரையாடல், காட்சி, நடிப்பு, ஒலி, ஒளி அமைப்பு போன்றவை மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் பெற்றிருக்கின்றன. திரைப்பட ஊடகம் அதிக அளவில் செல்வாக்குப் பெற்று ஆதிக் கம் செலுத்தும் இன்றைய சூழலில் நிகழ்கலையான நாடகத்தின் கலை நுட்பங்கைள அடையாளம் கண்டு அவற்றை நவீன இலக்கிய வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பேக்கி நாடகம் தொன்மைக் கதையின் வடிவம். மது, மங்கை, கேளிக்கை போன்றவற்றின் கடவுளான டாயனிஸஸ் தன்னைக் கடவுளாக மதிக்கத் தயங்கிய தீப்ஸ் நகர அரசனான பெந்தியஸை அவனுடைய தாயாரைக் கொண்டே கொலை செய்ய வைக்கிறான். உண்மையறிந்த தாய் தன்னுடைய தீய செயலுக்காகக் கழிவிரக்கப்பட்டுப் புலம்புகிறாள். இந்தத் தொன்மைக் கதையின் கூடாகக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அன்றைய வாழ்வியல் பற்றிய புரிதலை நிகழ்த்த முடியும். உரையாடலுக்கும், மெய்ப்பாட்டு வெளியீட்டுக்கும் முதன்மை அளித்த அன்றைய நாடகக் கலையில், உரையாடல்களில் நிறைந்திருக்கும் கவித்துவங்களையும், குறியீடுகளையும், படிமங்களையும், தொனியும் இன்றும் வாசிப்பு அனுபவத்திற்கு உள்ளாக்கிக் கொள்ள நிறையவே வாய்ப்பளிக்கின்றன.

இந்த நாடகத்தை கிரேக்கத்திலிருந்து ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்திருக்கும் எட்டு மொழிபெயர்ப்பாளர்களின் பிரதிகளை ஒப்பிட்டுத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்பது ஸ்டாலின் இது குறித்துக் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com