Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
ஆகஸ்டு 2008
கவிதைக்கென்ன வேலி
இந்திய பிறமொழிக் கவிதைகள்
புவியரசு

வெளியுலகின் தோற்றங்களையும், மாறிக்கொண்டே இருக்கும் அவற்றின் இடைவிடாத இயங்குதலையும் தவிர்த்து, உள்முகமாக இருண்ட வெளியில் ஒளியைத் தேடி தீவிரமாகப் பயணம் செய்து ஒரு புள்ளியில் குவிந்தபின் அதைப் பிளந்து அதன் பதிவுகளுடன் ஒரே வீச்சில் மேலெழுந்து வெளியுலகுக்கு மீண்டு எங்கும் அளவளாவிப் பார்வையை விரித்த உள்ளும் புறமும் ஒருங்கிணைந்த வீரியத்துடன் வாழ்வின் சோதனை மிகுந்த நெடும்பயணத்தில் புதிய அர்த்தம் தேடிவரும் கவிஞர் புவியரசு இந்தியாவிலுள்ள பிறமொழிக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ‘கவிதைக்கென்ன வேலி’ என்ற தொகுப்பாக இப்போது தமிழ்ச்சூழலுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

மலையாளம் முதலாக தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, அஸ்ஸாம், சமஸ்கிருதம், வங்கம் என்று பல மொழிகளில் வெளியாகியுள்ள கவிதைகளைத் தனது நோக்கில் தேர்வு செய்து தமிழக்கு மொழிமாற்றம் செய்திருக்கிறார். அந்தந்த மொழிகளில் தனித்தன்மையுடன் கவிதைக்லைக்குத் தனது பங்களிப்பைச் செய்து படைப்பிலக்கியத்தை வளர்த்த, வளர்க்கும் கவிஞர்களின் படைப்புகளை இனம் கண்டு அவற்றைத் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்.

கவிதையின் மொழி மிகமிக நுட்பமானது. மீண்டும், மீண்டும் மனதில் புதுப்புது உணர்வுகளைத் தூண்டிவிடக்கூடிய தன்மை வாய்ந்தது. விரிந்த வாழ்க்கைப் புலத்தை குறைந்த சொற்களால் அதற்கே உரிய இயல்பான தொனியை உள்ளடக்கியிருப்பது. வாசிக்கும் மனங்களை ஒரு தளத்திற்குக் கொண்டுவந்து இருத்தி ஒருங்கிணைத்து விழிப்பு நிலைக்கு உள்ளாக்கி புதிய புரிதல்களுக்குப் பொருத்தமான ஓர் உந்து சக்தியாக அது இருக்கிறது. தன்னிலிருந்து வாழ்வைப் பார்த்து அதை மதிப்பீடு செய்யும் மனிதனை வாழ்விலிருந்து தன்னைப் பார்த்து மதிப்பீடு செய்துகொள்ளும் நிலைமைக்கு அவனை உள்ளாக்குவது கவிதை.

வீரியம் மிகுந்த கவிதைக்கலையை நேர்த்தியாகவும், செறிவாகவும், அழுத்தமாகவும் வடிவப்படுத்தியுள்ள கவிஞர்களின் படைப்புகளை மொழிபெயர்த்திருக்கும் திறன் அவை தமிழில் எழுதப்பட்டவை என்ற மயக்கத்தை தரக்கூடியதாக உள்ளது. மொழிபெயர்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கவிதைகளை வாசிக்கும் போது இந்தியக் கவிதைகள் என்பவை பலவிதமான தனித்தன்மைகளைக் கொண்டவை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கவிதைகளை விருப்பு வெறுப்பில்லாத கண்ணோட்டத்துடனே கவிஞர் தேர்வு செய்து அவற்றின் பன்முகத்தன்மைக¬ளில் அடங்கியிருக்கும் ஒருமுகத்தன்மையைப் புலப்படுத்துகிறார்.

கலைப்படைப்பின் சிறப்பு அதைப்படைத்தவனுக்கும், அதற்கும் உள்ள உறவை ஆழமாக வெளிப்படுத்துவதிலேயே அமைந்திருக்கிறது. வார்த்தைகளையும் அவற்றுள் அடங்கியிருக்கும் பொருளையும் பிரிக்க முடியாத, சிதைக்க முடியாத வரையிலும் மட்டுமே ஒரு கவிதையின் அழகு உயிர்ப்புடன் நிலைத்திருக்கும். அந்த வகையாக கவிதைகளையே தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பில் வார்த்தைகளை விரயமாக்காமல் பொருளைச் சிதைக்காமல் அல்லது மாற்றாமல் நேர்த்தியாகவும், செறிவாகவும் மொழிமாற்றம் செய்திருப்பது கவிஞரின் மொழித்திறனையும், ஆளுமையையும் புலப்படுத்துகிறது. கவிஞரின் படைப்பனுபவம் நெடிய ஒரு வரலாற்றைக் கொண்டிருப்பதால் வார்த்தைகளை மிகுந்த நேர்த்தியுடனும், நுட்பத்துடனும் பயன்படுத்துவதற்குரிய ஆற்றலை அவருக்குக் கொடுத்திருக்கிறது. ‘கவிதைக்கென்ன வேலி’ என்ற வரியிலேயே கவிதைக் கலையின் நுட்பத்தைப் புலப்படுத்துகிறார்.

‘ஒற்றைப் பறவையின் தரிசனம் சூனியத்தில்’ என்ற புரிதல் கண்ணோட்டத்தோடு இலக்கியத்தை அணுகும் கவிஞர் தனது தேர்வில் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தீவிர நம்பிக்கை கொண்ட கவிஞர்களின் படைப்புகளையே தன்னுடைய ஆக்கத்திற்குத் தேர்ந்தெடுத்துள்ளார். சமுதாயப் பிரக்ஞைளை வாசகனுக்குள் உருவாக்கும் நோக்கம் அதன் பின்னணியில் ஆழமாக அமிழ்ந்திருக்கிறது. அதைக் கவிஞர் புவியரசு இந்தத் தொகுப்பின் முன்னுரையிலேயே தெளிவாகக் குறிப்பிட்டு விடுகிறார். ‘வடிவம் எதுவாக இருப்பினும், சமுதாய உள்ளடக்கமும், உலகளாவிய பார்வையும், எல்லையற்ற மனித நேயமும், இயற்கையின் மீதான நேசமும், மிக அரு¬மான கவிதை வீச்சோடு படைக்கவல்ல ஆளுமை மிக்க கவிஞர்கள் மற்ற இந்திய மொழிகளில் இருக்கிறார்கள் என்பதைத் தமிழர்க்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது!’

கவிதைத் தொகுப்பில் மலையாளக் கவிதைகளை அதிகமாகச் சேர்த்திருக்கிறார் கவிஞர். மகாகவி குமாரன் ஆசான் தொடங்கி புதிய தலைமுறைக் கவிஞர்களில் ஒருவரான பி.கே.கோபி வரை நிறையவே கவிதைகளை மொழிபெயர்த்துச் சேர்த்திருக்கிறார். தெலுங்குக் கவிதைகளில் திகம்பரக் கவிகளின் கவிதைகள் அதிகமாக முதலிடம் பெறுகின்றன. பெண்ணுரிமையைக் கோரிக் குரல் கொடுக்கும் விமலாவின் ‘சமையலறை’ கவிதையும் இந்தப்பிரிவில் அடங்கியிருக்கிறது. இதைப்போலவே, பழைய, புதிய தலைமுறைகளைச் சேர்ந்த கவிஞர்களின் கவிதைகளை ஒவ்வொரு பிரிவிலும் சேர்த்திருக்கிறார்.

பழைய கண்ணோட்டத்தில் வாழ்க்கையை மதிப்பீடு செய்து இறுகிப்போய் வாழும் இந்தியச் சமுதாயங்களின் இருளைக்கிழித்து ஒளியைப் பரவச்செய்யும் வீரியம் மிகுந்த ஒளிக்கீற்றுகளாக இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதனின் உள்மன ஆற்றலை அதன் அடியாழத்திலிருந்து கிளர்ந்தெழச் செய்து மனித குலத்தின் நீதிக்காக ஆவேசக்குரலை ஒலிக்கச் செய்யக்கூடிய கவிதைகள் பரவலாக காணப்படுகின்றன. சத்திய ஆவேசம் மிகுந்த, வாழ்க்கைத் தாகம் நிறைந்த, நெஞ்சுரம் கூடிய வெளிப்பாடுகளை உள்ளடக்கியிருக்கிறது இந்தத் தொகுப்பு.

வாசகனின் மனதில் புத்துணர்வை ஏற்படுத்தக்கூடிய கவிதைகள் நிறைந்த இந்தத் தொகுப்பில் இந்திய வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களைப் புலப்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. சமுதாயப் பிரச்னைகளுக்கு முதன்மையான இடமளிக்கும் உள்ளடக்கங்களைக் கொண்ட கவிதைகளில் எளிய படிமங்களும், குறியீடுகளும், வர்ணனைகளும் பரவலாகக் காணக்கிடைக்கின்றன. இந்திய வாழ்வில் பொதுவாகக் காணப்படும் அவலங்களும், துயரங்களும், அநீதிகளும், எரிச்சலுடனும், கோபத்துடனும், ஆவேசத்துடனும் வெளிப்படுத்தப்படுகின்றன. அழகியலின் ஓர் அம்சமான கோபாவேசம் தொனி பிசகாமல் ஒலிக்கின்றன. வாசகனின் அனுபவத்திற்கு எளிதில் உள்ளாகக் கூடிய இந்தக் கவிதைகள் தமிழ்ச்சூழலில் மாறுபட்ட ஒரு போக்கை நிகழ்த்தும்.

நீலவண்ணன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com