Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruInformationHistory
பெரியாருக்காக கப்பலையே நிறுத்திய காமராஜர்!

1956ம் ஆண்டு காமராசர் முதலமைச்சராக இருந்த காலகட்டம். தந்தை பெரியாருக்கு மலேசியா-சிங்கப்பூர் நாடுகளில் இருந்து அழைப்பு வந்தது. சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளிதழின் ஆசிரியர் கோ.சாரங்கபாணி அவர்கள் ஐயாவை அழைக்க ஏற்பாடு செய்து இருந்தார்கள். முதலில் பர்மாவுக்கு போய் பின்னர் அங்கிருந்து மலேசியாவின் பினாங்கு பிறகு சிங்கப்பூர் என பயணம் செய்வதாக திட்டம்.

ஐயாவுடன் அவரின் உறவினர்கள் ஆனைமலை நரசிம்மன், அவரது சகோதரி ராமகிருஷ்ணம்மாள், தவமணியம்மை, நான் ஆகிய ஐந்து பேரும் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இடையில் சில நாட்களே எஞ்சி இருந்தது. வேலைகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றாக வேண்டும். நானே அங்குமிங்கும் ஓடி காரியங்களை கவனித்தேன். ஐந்து பேருக்கும் பாஸ்போர்ட் எடுத்துவிட்டோம். பர்மா தூதரக அலுவலகத்தில் விசா எடுப்பதற்கு போலீஸ் கமிஷனர் திரு.குப்புசாமி பெரிதும் உதவினார். பர்மியத் தூதரக அதிகாரிகளை படாதபாடு படுத்தி ஒரு வழியாக விசாவை வாங்கினோம். இதற்கிடையில் ஆறேழுநாட்கள் ஓடிவிட்டன. ஒரே ஒருநாள் மட்டுமே எஞ்சி இருந்தது.

விசாவைப் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனிக்குப் போய் ஐந்து பேருக்கும் டிக்கெட் எடுத்தோம். எஸ்.எஸ்.ரஜூலா என்கிற அந்த புகழ்பெற்ற கப்பல் கம்பெனிக்காரர்கள் டிக்கெட் கொடுக்கிற போதுதான் 'நீங்கள் ஐந்து பேரும் பயணம் செய்ய வேண்டுமானால் மாநில அரசாங்கம் கொடுக்கும் 'நோ அப்செக்சன் சர்டிபிகேட் எடுக்க வேண்டும்!' என்று சொன்னார்கள். 'இது என்னடா புதுக்கரடி?' என்று நான் ஆடிப்போனேன். டிக்கெட் கைக்கு கிடைக்கும்போதே மாலை 6மணி ஆகிவிட்டது. மறுநாள் காலை 7 மணிக்கு கப்பலில் புறப்பட வேண்டும். இரவு ஒரே ஒரு பொழுதுக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் சான்றிதழில் சீல் பெற்றாக வேண்டும்.கோட்டையில் எல்லோரும் வீட்டுக்குப் போயிருப்பார்கள். நாளை காலையில் கப்பலில் புறப்பட்ட மாதிரிதான் என்று கவலையோடு நான் பெரியாரின் வீட்டுக்கு வந்தேன். மணியம்மையும் கிருஷ்ணம்மாளும் பயணம் புறப்படுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தனர். பெட்டி படுக்கைகள் கட்டி தயாராக வைக்கப்பட்டிருந்தன. இந்த பரபரப்பைப் பற்றியெல்லாம் எந்த கவலையும் படாமல் தந்தை பெரியார் எப்போதும்போல படித்துக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்!

நான் மிகவும் சோர்ந்துபோய் வருவதைக் கண்ட மணியம்மை விபரம் கேட்டார். நிலைமையை எடுத்துச் சொன்னேன். சற்று யோசித்த மணியம்மை, 'நீ உடனே முதலமைச்சர் காமராஜரை போய்ப் பார். அவரால் உடனே ஏற்பாடு செய்ய முடியும். ஐயாகிட்டே இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதே. அவர் சத்தம் போடுவார். முதலைமைச்சருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாதென்பார்' என்று சொன்னார்.

நான் இரவு 8மணி அளவில் காமராஜரின் திருமலைப்பிள்ளை சாலை வீட்டுக்கு போனேன். காமராஜரிடம் நடந்ததை சொன்னேன். காமராஜரோ, "இதற்கு நீ ஏன் இவ்வளவு அலைஞ்சே? என்கிட்டே சொல்லி இருந்தால் பாஸ்போர்ட்லேருந்து மற்ற எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்து இருப்பேனே.. சரி நீ நாளைக்கு காலைல பத்து மணிக்கு வா. நான் சீல் போட்டு கொடுக்க சொல்றேன்" என்றார். நான் தயங்கியபடி மெல்ல, "கப்பல் காலை 7 மணிக்கு. ராத்திரிக்குள் சீல் போட்டு வாங்கினாத்தான்" என்றேன்.

காமராஜர் உடனே, "அட என்னப்பா நீ..? போகப்போறது பெரியார்! வேற யாரும் சாதாரண ஆளில்லை. கப்பலை நிக்கச்சொல்லி மத்தியானமா எடுக்கச் சொல்வோம்! போ போ.. காலைல வா!" என்றார். இதெல்லாம் நடக்கிற காரியமா என எனக்கு மலைப்பாகத் தோன்றியது. நான் தயக்கத்தோடுதான் அவர் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த நிமிடமே முதலமைச்சர் காமராஜர் அங்கிருந்த உதவியாளர்களிடம் "ரஜூலா கப்பல் சதக் தம்பி மரைக்காயருக்கு போனைப் போடு" என்றார்.

தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் கொடுத்தனர். "இந்தாப்பா நாளைக்கு பெரியார் பர்மாவுக்கு போறாரு. அவருக்கு அரசாங்க அனுமதி 12 மணிக்குத்தான் கெடைக்கும். அவர் கப்பலுக்கு வந்து சேர 1 மணி ஆயிடும். நீங்க என்ன பன்றீங்க.. நாளைக்கு மட்டும் கப்பல் மதியம் ரெண்டு மணிக்கு எடுங்க. பயணிகளிடம் முன்கூட்டியே அறிவிச்சிடுங்க. மற்ற பயணிகளுக்கும் தொல்லை இருக்காதில்லையா.. ஞாபகம் இருக்கட்டும்.. போறது நம்ம பெரியார்.. புரியுதான்னேன்" என்று உரிமையோடும் அதிகாரத்தோடும் பேசிவிட்டு வைத்தார். பின்னர் என்னைப்பார்த்து, "என்னய்யா இப்போதாவது தைரியம் வந்துச்சா.. நீ பொறப்படுப்பா.. கவலையே படாதே.. கப்பலையே நிறுத்திப் புடுவோம்!" என்றார்.

மறுநாள் காலையில் சொன்னதுபோலவே எல்லா இடத்திலும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார். எனக்கு ராஜ மரியாதையோடு வேலைகள் நடந்தன. பகல் 12 மணிக்கெல்லாம் நான் வெற்றியோடு வீடு திரும்பினேன். காமராஜர், "இதை எல்லாம் பெரியார்கிட்ட போய்ச் சொல்லிகிட்டு இருக்காதே. அவருக்கு இதெல்லாம் கொஞ்சம்கூட பிடிக்காது.. என்ன புரியுதான்னேன்" என்றார்.

அதிகாரமோ பதவியோ ஏதுமில்லாத ஒரு சாதாரண மனிதனுக்காக கடலில் கப்பல் காத்துக் கிடந்தது. நாங்கள், தலைவர் காமராஜரின் பெருந்தன்மையை நினைத்து பூரித்தபடி பயணம் கிளம்பினோம்.

சொன்னவர் முன்னாள் அமைச்சர் க.இராசாராம்.
அனுப்பி உதவியவர்: விடாது கருப்பு ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com