Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruInformationGeneral
உடைக்க முடியாத பெரியார் ‘கோடு’

நன்றியை எதிர்பாராது காலமெல்லாம் தங்களுக்காக வாழ்ந்து, தன் இறுதி மூச்சடங்கும் வரை தங்களுக்காக உழைத்து, மறைந்து 35 ஆண்டுகள் ஆனாலும் கூட ஆரியத்திற்கு அடங்காத எதிர்ப்பலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் தந்தை பெரியார் என்னும் மகத்தான மாமனிதருக்கு தமிழர்கள் தங்கள் நன்றிகளைக் காட்டாத நாளில்லை; நினைக்காத நொடியில்லை.

கடுமையான கொள்கைகளை பிரச்சாரம் செய்து வந்தாலும், தங்கள் தலை நிமிர்வுக்குக் காரணம் இவரே என உணர்ந்த மக்களால் தந்தை பெரியாரைப் போல கொண்டாடப்பட்ட தலைவர் வேறு எவரும் இருக்க முடியாது. பெரியாரின் பெயர் சுமக்காத ஊர்கள், நகரங்கள், சிற்றூர்கள் எதுவும் இல்லை தமிழ்நாட்டில். தங்கள் வீட்டுக்கு, வீதிக்கு, நகருக்கு, குழந்தைக்கு, நிறுவனத்துக்கு பெரியார் என்ற தங்கள் அடையாளத்தைச் சூட்டி அழகு பார்த்தனர் தமிழர்! காவியுடுத்திய குன்றக்குடி அடிகளாரும் பெரியார் முந்திரி தொழிற்சாலை அமைத்து பெரியாரை நினைவு கூர்ந்தார்.

அறிவியல் சிந்தனைகளைப் பரப்பிய பெரியாரின் பெயரையே தங்கள் கண்டுபிடிப்புக்குச் சூட்டி பெருமைப்பட்டதும் தமிழர்களே! சென்னைப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஜி.சுந்தரராசுலு ஆட்ரியாடிக் கடல் பகுதியில் கணுக்கால்களின் மூதாதை என்று கருதப்படும் புதிய உயிரியைக் கண்டுபிடித்தார். தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் விதமாக அதற்கு “LOBO Padus Periyar” என்று பெயரிட்டார்.

அந்த வரிசையில் இன்னொரு தமிழச்சி! இவர் அய்.அய்.டி.யைக் கிடுகிடுக்க வைக்கும் சமூகநீதிப் புயல்! அசந்தால் ஆளை விழுங்கும் அய்.அய்.டி. பாம்புகளை அசராமல் அடிக்கும் பெரியாரின் கைத்தடி. இவரது சமூகநீதிப் போராட்டங்களுக்காகவே தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது வென்ற வீராங்கனை. தகுதி திறமை பேசி இடஒதுக்கீட்டை மறுக்கத் துடிக்கும் அய்.அய்.டி., வளாகத்துக்குள் இவருக்குள்ள தகுதி எந்தப் பார்ப்பானுக்கும் கிடையாது.

633 ஆராய்ச்சிக் கட்டுரைகள், 33 புத்தகங்கள், 11 முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள், 57 முதுகலை ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கும் வழிகாட்டி என இவருக்கிருக்கும் தகுதிப் பட்டியலுக்கு தனிப்புத்தகம் போடலாம். கணக்குக்காக இவர் எழுதும் எண்கள் மட்டுமல்ல. இவரது ஆய்வுகளின் எண்ணிக்கையே நம்மை பிரம்மிக்க வைக்கிறது.

தந்தை பெரியார் எனும் வரலாற்றுப் புரட்சியாளரை கணக்கு முறையில் ஆய்வு செய்ய முடியுமா? என புருவம் உயர்த்தியோரை, தனது “Fuzzy and Neutrosophic analysis of Periyar’s views on untouchability” நூலின் மூலம் மேலும் வியக்க வைத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தந்தை பெரியார் பாடுபடவில்லை என்று புரட்டுவாதிகள் பொய் விமர்சனங்களை எழுதிக் கொண்டிருந்தபோது, அதற்கு பதில் தரும் விதமாக வந்தது இந்நூல். நூல் வெளிவந்த இரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு படிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஜனவரி மாதத்தில் மட்டும் 4,304 பேர் இந்நூலைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் எனில் இதன் சிறப்பு விளங்கும்.

அதன்பிறகு வேத கணிதம் என்று இந்துத்துவாவினர் பரப்பும் பொய்யுரையை சந்தியில் நிறுத்தி வேதமா? கணிதமா? எனக் கேள்விகேட்டு, ஆய்வாளர்கள் மத்தியில் வேத கணிதம் (?) என்பதன் தன்மையை விளக்கிய “Vedic Mathematics: Vedic or Mathematics: A Fuzy and Neurosophic Analysis” நூல் ஆரியம் பூச நினைத்த அறிவியல் சாயத்தை வெளுக்கச் செய்தது.

அதனைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ள நூல் “New Classes of codes for Cryptologists and Computer Scientists”. இந்நூலில் கணினி வல்லுநர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும், பயன்படக் கூடிய புதிய ரகசியக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். கணிதவியலாளர்களுக்கு மட்டுமன்றி ரகசியக் குறியீடுகளை உருவாக்குவோருக்கு இந்நூல் பெரும் பயன்தரும். தகவல் பரிமாற்றத்திலும், பாதுகாப்பு காரணங்களுக்கும் பயன்படப்போகும் இந்தப் புதிய குறியீட்டினை, அவ்வளவு எளிதில் யாராலும் உடைத்துவிட முடியாது. குறியீட்டை உடைக்கும் திறன்பெற்றவர்களுக்கு சவால் விடும் இந்தப் புதிய குறியீட்டு முறைக்கு தந்தை பெரியாரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் லீனியர் கோட் (Periyar Linear Code) என்று பெயரிட்டுள்ளார்.

சமூகத்தில் மனித நேயக் கருத்துகளைப் பரப்பி பெரியார் ஆற்றிய தொண்டை நினைவு கூறும் வகையில் இந்தக் கண்டுபிடிப்புக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர் வசந்தா கந்தசாமி. தந்தை பெரியார் 125ஆம் பிறந்த நாள் நினைவாக பெயரிடப்பட்ட இப்புதிய குறியீட்டு முறையை எகிப்து, அமெரிக்கா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் முறையே பேரா.முனைவர் அடெல் ஹெல்டு பிலிப்ஸ், பேரா.பால்பி. வாங், பேரா.டீகோ லூசியோ ரேபோபோர்ட் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வுகளுக்கு உட்படுத்தி இது சரியானதுதான் என ஒப்புக் கொண்டுள்ளது.

அதனால் இந்நூல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2008இன் தொடக்கத்தில் வெளிவந்துள்ளது. உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெரியார் லீனியர் கோட் பற்றிய தனிப் புத்தகம் ஒன்றும் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தயாராகி வருகிறது. விரைவில் அதன் வெளியீடும் இருக்கிறது. இந்நூல் வேதத்திலும், புராணத்திலும் அறிவியல் இருக்கிறது; அணுகுண்டு பார்முலா இருக்கிறது என்று கழிவுகளில் அரிசி தேடும் ஆரியக் கூத்துகளின் மத்தியில் தனிப் பெரும் ஆய்வாளராக புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதற்குத் தன் நன்றி அடையாளமாக பெரியார் பெயரைச் சூட்டியுள்ள திருமதி வசந்தா கந்தசாமி அறிவியல் வரலாற்றில் மட்டுமல்ல; சமூகநீதி வரலாற்றிலும் தனி இடம் பெறக்கூடியவர்.

(நன்றி: உண்மை மாதமிரு இதழ்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com