Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruInformationGeneral
ஒரு மாநகரில் வசந்த கால ஆசுவாசங்கள்

Samanea Saman

சாலையில் விரிந்து கிடக்கிறது
ரத்தினக் கம்பளம்
வசந்த காலம்

என்றொரு மொழிபெயர்ப்பு ஹைகூ கவிதை எப்பொழுதோ படித்ததாக ஞாபகம்.

உலகம் மாறிவிட்டது. எல்லாம் தலைகீழாகிவிட்டது. எதுவும் முறையாக இல்லை. கலிகாலம் என்ற குரல் கேட்கிறதா. உலகில் சில விஷயங்கள் மட்டும் மாறாமல் இருக்கின்றன. உலகமே தலைகீழாகிவி்ட்டாலும், இந்த விஷயங்கள் மாறுவதில்லை. அவை மாறினால் உலகம் உயிர்த்திருப்பதும் சாத்தியம் இல்லை. அவை, மரங்கள், குறிப்பாக மரங்கள் மலரும் காலம் மாற்றம் காண்பதில்லை. மலர்ந்து கொழிக்கும் மரம், செழுமையை சுட்டுகிறது. வளத்தின் வெளிப்பாடு வசந்த காலமாகத் தானே இருக்க வேண்டும்.

ஆறு பருவ காலங்கள் கொண்டவர்கள் நாம். மேற்கு நாடுகளில் நான்கு காலங்கள். இருந்தபோதும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது வசந்த காலமே. அதற்குக் காரணம், வசந்த காலத்தில்தான் வளமையின் தொடக்கம் நிகழ்கிறது. மலர்களின் மலர்ச்சியும் இனிமையான சுகந்த மணமும் தேனும் தேனீக்கள் தொடங்கி அனைவரையும் மகிழ்விக்கிறது. அடு்த்த வித்தின் தொடக்கப் புள்ளி இந்த மலர்களே.

சென்னை மாநகரத்தில் வாழும் கோடிக்கணக்கானோரில் நானும் ஒருவன். அன்றொரு நாள் காலை சாலையில் நடந்து சென்றபோது தார்ச்சாலையில் மலர்ப்படுக்கை விரிக்கப்பட்டுக் கிடந்தது. யாரும் தயார் செய்துவிட முடியாத வடிவமைப்பில், காற்றின் வீச்சுக்கு ஏற்ப, உதிர்ந்த மலர்கள் புதிய அலங்காரத்தை உருவாக்கி இருந்தன. எத்தனையோ பேரைப் போல் நானும் அவற்றை மிதித்து கடந்து சென்றேன், இயந்திரத்தனமாய்.

சாலையில் நிறைந்து கிடந்த அந்த பிரகாசமான மஞ்சள் நிற மலர்கள், மனதில் சட்டென்று ஒரு புத்துணர்வை தந்தன. சென்னை போன்ற மாநகரில் (மா நரகத்தில்) வாழும்போதுகூட சில சந்தோஷ ஆச்சரியங்கள் நம்மை எதிர்கொள்ளத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சந்தோஷ ஆச்சரியம்தான் இந்த வசந்த காலம். ஒவ்வொரு வசந்த காலத்திலும் என்னை ஆசுவாசப்படுத்தி உற்சாகப்படுத்துபவை தங்கள் கிளைக் கைகளை அகல விரித்து பரவசமாக மலர்ந்திருக்கும் மரங்களே. சாலைகளில் சிதறி, தங்கள் வண்ணங்களால் வசீகரிக்கும் இந்த மலர்கள் போன்ற சின்னச்சின்ன விஷயங்கள் இல்லை என்றால், நகரத்தில் வாழ்வது இன்னும் கொடுமையாகிவிடும். இந்தியாவில் வசந்த காலத் தொடக்கம் ஹோலி, வசந்த பஞ்சமி உள்ளிட்ட விழாக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே பல மரங்கள் பூக்க ஆரம்பித்து விடுகின்றன.

இயற்கை தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் புதைத்து வைத்துள்ளது. இயற்கையின் படைப்புக்கு ஆயிரம் அறிவியல் விளக்கங்கள் கொடுத்தாலும்கூட, அவற்றை எல்லாம் தாண்டி அதன் படைப்பாக்கத் திறன், நுண்மைகள், நுட்பங்கள் பல நேரம் வியக்கத்தக்கதாகவே உள்ளன. இப்படிப்பட்ட ஒரு வியப்புதான் வசந்த காலத்தில் என்னிடம் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வசந்த காலத்தையும், அதையொட்டி மரங்களின் பூக்கும் காலத்தையும் கவனித்து வருகிறேன். இயல்வாகை அல்லது பெருங்கொன்றை என்ற பெயர் கொண்டது மஞ்சள் நிற மலர்கள் கொண்ட மரம். கோபுரம் போன்ற கொத்துக்கொத்தாகப் பூக்கும் இந்த மலர்கள், மார்ச் 2வது வாரம் முதல் மலர்ந்து பெருகுகின்றன. ஆங்கிலத்தில் Copper pod/Rusty Shield Bearer என்றும் Peltophorum pterocarpum என்ற அறிவியல் பெயரும் கொண்ட மரம் இது. இலங்கையையும் தாயகமாகக் கொண்ட இந்த மரம், தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக வளரக் கூடியது. இந்த மரத்துக்கு சாதாரண மக்கள் "சீரியல் லைட் மரம்" என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு பகலில் சீரியல் லைட் போட்டது போலத்தான் இருக்கும். அடர் செம்பழுப்பு நிறத்தில் செம்பு போன்று நிறத்தில் இருக்கும் இதன் காய்களை காரணமாகவே, ஆங்கிலத்தில் காப்பர் பாட் என்றழைக்கப்படுகிறது.

Albizia lebbeck இந்த மரத்துக்கு இரண்டு-மூன்று வாரங்கள் முன்னதாக பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் பூக்கிறது வாகை மரம். நமது பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இந்த வலுவான மரம் இன்றும் நகரங்களில் ஆங்காங்கு வளர்க்கப்படுகிறது. இவற்றின் பிரஷ் போன்ற மலர்கள் இளம்பச்சை நிறத்தில் கிரீடம் போன்ற வடிவமைப்பில் தூவிகளைக் கொண்டிருக்கும். இதேபோன்ற பூ வடிவமைப்பைக் கொண்ட மற்றொரு மரம் தூங்குமூஞ்சி மரம். (அதற்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் ரெய்ன் டிரீ. அது ரொம்பவே உண்மை.) வசந்த காலத்தில் வாகை மரத்தை கடந்து சென்றீர்கள் என்றால், மரத்தின் அடிப்பகுதி முழுவதும் தூவிகளும், காய்ந்த தூவிகள் சடை போலவும் திரண்டு கிடக்கும். முதலில் கொஞ்ச நாளைக்கு பூக்களாகவும், பிறகு அவை காய்ந்து சடைசடையாகவும் கிடக்கும்.

இதற்கான ஆங்கிலப் பெயர் அவமதிக்கும் தன்மை உடையது. ஆங்கிலத்தில் Mother-in-law's Tongue /Siris என்றும், Albizia lebbeck என்ற அறிவியல் பெயரும் கொண்டது. இது போன்று ஒவ்வொரு மொழியிலும் கிண்டலாகவும், அவமதிக்கும் வகையிலும் சில பெயர்கள் உள்ளன. அவை சாதாரணமாக உருவாகியிருந்தாலும்கூட, அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது "அரசியல் ரீதியில் தவறு" (பொலிடிகலி இன்கரெக்ட்) தான். இதன் காய்கள் காற்றில் ஆடும்போது சடசடவென்று சப்தம் எழுப்புவதால், மாமியாரின் நாக்கு என்று பொருள்படும் வகையில் பெயர் வந்துள்ளது.

நமது பாரம்பரிய மரங்களுள் ஒன்றான வாகை, ஆசிய வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. பண்டை காலத்தில் போரில் வெற்றி பெறும் அரசர்கள் வாகை மலர் சூடி வருவது மரபாக இருந்திருக்கிறது. அதனால் "போரில் வெற்றி வாகை சூடினான்" என்ற சொற்றொடரும் உருவாகியுள்ளது. அந்த வகையில் பாரம்பரியமாக இன்று வரை நம் ஊர்களில் இந்த மரம் வளர்க்கப்படுவது மகிழ்ச்சிதான்.

இந்த இரண்டு மரங்களைத் தவிர வசந்தகாலத்தில் பூக்களை மகிர்ந்து கொட்டும் மற்றொரு மரம் டிரம்பெட் பூ மரம் என்றழைக்கப்படும் மரம். இதில் டிரம்பெட் கருவி போன்ற ரோஸ் நிற மலர்கள் கொத்துக்கொத்தாகப் பூக்கும். இந்த மரம் அமெரிக்க வெப்ப மண்டலப் பகுதியைச் சேர்ந்தது. அதனால் இதற்கு தமிழ்ப் பெயர் ஏற்படவில்லை என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் Mauve Tabebuia என்றும், Tabebuia rosea என்ற அறிவியல் பெயரும் கொண்ட மரம் இது. மார்ச் இறுதி வாரத்தில் மலர்கிறது. கடந்த சில வசந்த காலங்களாகவே இந்த மரங்களை நான் கவனித்து வருகிறேன். இதே வரிசையில்தான் இந்த மரங்கள் மலர்ந்து வருகின்றன.

அய்யய்யோ, ஒன்றை மறந்துவிட்டேன். இந்த வசந்தகால மலர்கள் வரிசையில் தூங்குமூஞ்சி மரத்தையும் சேர்க்கவில்லையே என்று யாராவது குறைபட்டுக் கொள்ளலாம். மார்ச் கடைசி வாரத்தில் இருந்து அதுவும் பூக்க ஆரம்பித்துவிட்டது. (இந்த மரத்துக்கு காட்டு வாகை என்ற பெயரும் உண்டு. ஆனால் இது அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட மரம். அறிவியல் பெயர் Samanea saman)

- ஆதி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com