Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruHistoryTamilnadu
அணிகலன்கள் ஆபரணங்கள்
வெ.பெருமாள்சாமி

அணிகலன்களையும் ஆடை ஆபரணங்களையும் அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மனிதன் அளவற்ற ஆசை கொண்டவன். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. ஆடைகளால் தன்னை அழகுபடுத்திஅலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவது இருபாலர்க்கும் பொதுவான இயல்பே ஆகும்.

jewels மகளிரைப் போல ஆடவரும் பொன் அணிகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டதனைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

‘வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவு மணி யொளிர் வரும் அரவுறாழார மொடு
புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம்
உரைசெல அருளினோன்” – புறநானூறு : 398

(மலை போன்ற மார்பில் அணிந்த, உலகமெல்லாம் விலைமதிக்க தக்க பலமணிகள் கோர்க்கப்பட்டு, ஒளிவிளங்கும் பாம்பு போல வளைந்து கிடக்கும் ஆரமும் பூ வேலை செய்யப்பட்ட ஆடையும் தன்புகழ் எங்கும் பரவ நல்கினான்) என்றும், ‘கோடியர் முழவுமருள் திருமணி மிடைந்த தோள் அரவுறழாரம்” (கூத்தரது முழவு போன்றதும் அழகிய மணியாற் செய்யப்பட்ட வாகுவலயம் அணிந்ததுமான தோளிற் கிடக்கும் பாம்பு போலும் ஆரம்) என்றும் புறநானூறுற்றுச் செய்யுளடிகள் ஆடவர் அணிந்த அணிகளைப் பற்றிக் கூறுகின்றன.

விலங்கு நிலையில் இருந்து காட்டு மிராண்டியாக மாற்றமடைந்து, பின் வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் மாறி வளர்ந்து முன்னேறிய மனிதன் மானத்தை மறைத்துக் கொள்ள முற்பட்டு முனைந்த போது இயற்கையில் கிடைத்த பொருள்களான இலை தழை களால் மாலை கண்ணி முதலிய வற்றைத் தொடுத்துக் கழுத்திலும் மார்பிலும் தலையிலும் அணிந்து கொண்டான். தோலை ஆடையாக அணிந்த மனிதன், இலை தழை மலர் முதலிய வற்றைத் தொடுத்து மாலையாகவும், கண்ணியாகவும் அணிந்தான்.

‘கோட்டவும் கொடியவும் விரைஇக்காட்ட
பல்பூமிடைந்த படலைக் கண்ணி
ஒன்றமருடுக்கைக் கூழாரிடையன்” என்று பெரும்பாணாற்றுப்படை (173 -75)

இது குறித்துக் கூறுகிறது.

‘பாசிலை தொடுத்த உவலைக் கண்ணி
மாசூணுடுக்கை மடி வாயிடையன்”
- புறநானூறு : 54

(பசிய இலையால் தொடுக்கப்பட்ட தழைக் கண்ணியையும் மாசு பொருந்திய உடையையும் உடைய இடையன்) என்றும்,” உவலைக் கண்ணி வன் சொலிளைஞர்” (தழை விரவின கண்ணியையும் கடிய சொல்லையும் உடைய இளைஞர்) என்று (மதுரைக் காஞ்சி) இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வாறு, கணசமூகமாக வேட்டையாடியும் நிரை மேய்த்தும் வாழ்ந்த கால கட்டத்தில் மனிதன் தன்னை இலைதழைகளால் அலங்கரித்துக் கொண்ட செய்தியைச் சங்க நூல்கள் கூறுகின்றன.

அந்தக் கால கட்டத்தில் வெள்ளி பொன் முதலிய உலோகங்களால் ஆபரணங்களும் அணிகலன்களும் ஆக்கி அணிந்து அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை மனிதனுக்கு ஏற்பட்டிருக்கவில்லை, அவற்றை ஆக்கிக் கொள்ளும் நிலையினையோ அணிந்து அழகுபடுத்திக் கொள்ளும் நிலையினையோ மனிதன் எய்தியிருக்கவில்லை. அதற்கு அவனுக்கு ஓய்வு கிடைக்க வில்லை. அவன் வாழ்ந்த சமூக அமைப்பே அதற்குக் காரணம் ஆகும். (மனிதன் அநாகரிக நிலையில் வாழ்ந்த காலகட்டத்தில் நேர்த்தியற்ற ஆபரணங்களைச் செய்து அணிந்து கொண்டான் எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ளார்கள்)

அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த செல்வர்களான தனிமனிதர்கள் பொன் வெள்ளி முதலியவற்றால் ஆன ஆபரணங்களை அணிந்து தம்மை அலங்கரித்துக் கொண்டனர். அவற்றை அணிவதைப் பெருமைக்குரியதாகவும் மதிப்புக்குரியதாகவும் கருதிக் கொண்டனர். உழைக்கும் மக்களை விடத்தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்ளவே அவர்கள் அவற்றை அணிந்தனர்.

தாம் அனுபவிக்கும் செல்வமும் சுக போகமும் கடவுள் தங்களுக்குக் கொடுத்த வரம் என்றும் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றும் ஆண்டைகள் கூறிக் கொண்டனர். இம்மை மறுமை மோட்சம் நரகம் என்ற கருத்துக்கள் மக்களிடையே பரப்பபட்டன. தங்களது சுரண்டல் நடவடிக்கைகளை மக்கள் உணர்ந்து கொள்ளாதபடி, அவர்களது கவனத்தை திசை திருப்பவே அவர்கள் அவ்வாறு கூறிக் கொண்டனர். அரசர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்றும் மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது.

பொதுவுடைமை வகைப்பட்ட கணசமூகமாக மக்கள் வேட்டையாடியும் நிரைமேய்த்தும் வாழ்ந்த கால கட்டத்தில் மனிதன் அணிகலன் அணியும் பழக்கம் நிலவவில்லை. இதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. குறிஞ்சி முல்லை நிலங்களில் வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் வாழ்ந்த மக்களைப் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களில், அந்நிலத்துப் பெண்கள் அணிகள் அணிந்தது பற்றிய குறிப்புகள் எவையும் காணப்படவில்லை பொதுவாக தமிழ் இலக்கியங்கள் பெண்களைப் பற்றி பேச நேரும் பொழுது அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களோடு தொடர்பு படுத்தியே அவர்களைப் பற்றிக் கூறும். ‘மாணிழை மகளிர்” ‘வாலிழை மகளிர்” என அணிகலன் பற்றிய அடை மொழிகளோடேயே மகளிர் குறிக்கப்பட்டனர். மகளிரைப் பற்றிய அடைமொழிகள், அவர்கள் அணிந்த அணிகல்களின் சிறப்பைக் குறிப்பன வாகவே இருக்கும் வள்ளுவரும் கூட “கனங்குழை மாதர்” என்று கூறுகிறார்.

ஆனால் கணசமூகத்து மகளிரைப் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களில் அத்தகைய அடைமொழிகள் காணப்படவில்லை. அரிவை எயிற்றி, தாய், பிணா, பெண்டு, மகடூஉ, மகளிர், மனைவி மனையோள், முதியோள் என்பன போன்ற, அணிகள் பற்றிய அடைமொழிகள் எவையும் பெய்யப்படாத சொற்களாலேயே மகளிர் குறிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கணசமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் அணிகலன் எவையும் செய்யப்படாத நிலையினையும் மகளிர் அவற்றை அணிந்திராத நிலையினையுமே இச்சொற்கள் உணர்த்துகின்றன. அணிகலன்கள் செய்து அணிந்து கொள்ளும் சமூகச்சூழல் அந்தக் கால கட்டத்தில் தோன்றியிருக்கவில்லை என்பதையும் இச்சொற்கள் உணர்த்துகின்றன.

ஆனால் சமூக மாற்றம் நிகழ்ந்து வேட்டைச் சமூகமும் மேய்ச்சல் சமூகமும் அடிமைச் சமூகமாக மாற்றம் கண்ட கால கட்டத்தில் அடிமை எஜமானர்களான ஆண்டைகளும் செல்வர்களும் அவர்தம் பெண்களும் அணிந்து கொண்ட அணிகலன்களின் சிறப்பைக் குறித்துச் சங்க இலக்கியங்கள் சுவைபடப் பேசுகின்றன. பெண்களைக் குறிக்கும் சொற்களாகிய மங்கை மடந்தை அரிவை முதலான சொற்கள் அவர்கள் அணிந்த அணிகலன்களைப் பற்றிய அடைமொழிகளுடனேயே குறிக்கப்பட்டுள்ளன. அவ்வடைமொழிகள் அம்மகளிர் அணிந்திருந்த அணிகலன்களின் சிறப்புப் பற்றியும் அவர்தம் செல்வச் செருக்குப் பற்றியும் தெளிவாக உணர்த்துகின்றன. கோவலன் ‘மாசறு பொன்னே வலம்புரிமுத்தே” என்று கண்ணகியைப் பொன்னாகவும் முத்தாகவும் வருணித்துப் புகழ்ந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார். ‘ செறியரிச் சிலம்பின் குறுந்தொடிமகளிர்” (புறம் 36) ஒண்டொடி மகளிர் (புறம் 24) வாலிழை மங்கையர் (புறம் 11) என்று சுரண்டும் வர்க்கத்துப் பெண்கள் குறிக்கப்படுகின்றனர். இத்தொடர்கள் அம்மங்கையர் அணிந்திருந்த அணிகள் பற்றிய அடைமொழிகளோடு கூறப்பட்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.

அழகி ஒருத்தி அணிகலன் பல அணிந்து மணலில் உலவிய செய்தியைப் புறநானூறு கூறுகிறது.

‘ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்செய் பல் காசணிந்த வல்குல்
ஈகைக் கண்ணி இலங்கத் தை இத்
தரு மணலியல் வோள் - புறநானூறு : 253

(குற்றமில்லாத பொற்கொல்லன் பழுதறச் செய்த பொன்னாலாகிய பல மணியணிந்த மேகலையும் பொன்னாற் செய்த கண்ணியும் விளக்க முற ஒப்பனை செய்து கொண்டு,புதிதாகப் பரப்பிய மணலில் நடந்து உலாவுகின்றவள்) என்று காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் அழகி அணிந்த ஆபரணச் சிறப்புக் குறித்துக் கூறுகிறார்.

பொன்னாற் செய்த வளைந்த ஆபரணங்கள் அணிந்த மகளிர் வானுற உயர்ந்த மாடங்களில் வாழ்ந்ததையும் அம்மகளிர் பல்வகை மணிகள் கோத்த வடங்களை அணிந்திருந்ததையும் கால்களில் பொன்னாற் செய்த பூண்களுடன் பொற்சிலம்பும் கைகளில் பொன் வளையல்களும் அணிந்திருந்ததையும் பந்தாடிய அப்பெண்கள் பொன்னாற் செய்த கழங்கு கொண்டு ஆடியதையும் பெரும் பாணாற்றுப்படை (327-335) கூறுகிறது.

..............................................கொடும்பூண் மகளிர்
கொன்றை மென் சினை பனிதவழ் பவை போற்
பைங்காழ் அல்குல் நுண்டுகில் நுடங்கி
மால் வரைச் சிலம்பின் மகிழ்சிறந்தாலும்
பீலி மஞ்ஞையி னியலிக் கால
தமனியப் பொற்சிலம் பொலிப்பவுயர் நிலை
வான் றோய் மாடத்து வரிப்பந்தைசைஇக்
கைபுனை குறுந்தொடிதத்தப்பைப்பய
முத்தவார் மணற் பொற்கழங்காடும்”

(உயர்ந்த நிலையினை யுடைய தேவருலகத்தைத் தீண்டும் மாடத்து உறையும் வளர்ந்த பேரணிகலன்களையுடைய மகளிர் கொன்றையிடத்து அரும்புகளையுடைய மெல்லிய கொம்புகளையுடைய அல்குலில் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய பெருமையுடைய பக்க மலையிலே மனவெழுச்சி மிக்கு ஆரவாரிக்கும் தோகையுடைய மயில் போலே உலாவி, பொற்பூண்களையுடைய கால்களிடத்தனவாகிய பொன்னாற்செய்த சிலம்புகள் ஆரவரிப்ப நூலால் வரிதலையுடைய பந்தினையடித்து இளைத்து, முத்தையொத்த வார்ந்த மணலிலே மெத்தெனப் பொன்னாற் செய்த கழங்கினைக் கொண்டு விளையாடும்) என்பது கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூற்று.

புகார் நகரத்தில் செல்வர்தம் மனைகளின் முற்றத்தில் உலருகின்ற நெல்லைத் தின்னவந்த கோழிகளை மனைத்தலைவி தன்செவிகளில் அணிந்திருந்த மகரக் குழையால் எறிந்து விரட்டினாளாம். அக்குழைகள், அவர்களின் பிள்ளைகள் உருட்டித் திரிந்த மூன்று உருளைகளையுடைய சிறு தேரினது வழியைத் தடுத்து விலக்கியதாம். இதனை,

‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின்
நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும்
கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”

என்னும் பட்டினப் பாலையடிகள் (20-25) கூறுகின்றன.

மேற்குறித்த பாடலடிகள் செல்வர்மனைகளில் மகளிர் அணிந்திருந்தஅணிகளின் சிறப்பை மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகள் பற்றியும் அம்மகளிரின் செல்வச் செருக்கு குறித்தும் கூறுகின்றன.

அடிமை எஜமானர்களான செல்வர் மனைகளில் அவர்தம் பெண்டிர் பொன்னாலும் நவரத்தினங்களாலும் புனையப்பட்ட அழகுமிக்க அணிகளை அணிந்து தம்மை அலங்கரித்துக் கொண்டு ஆடம்பரமாகவும் உல்லாசமாகவும் வாழ்;ந்தனர். ஆனால் உழைக்கும் வர்க்கத்தவர் ஆன களமரும் தொழுவரும் கடையரும் தம் உழைப்பின்பயனைச் சுரண்டும் வர்க்கத்ததாரிடம் பறி கொடுத்து விட்ட நிலையில், பொன் அணிகள் அணிந்திட வகையற்றவராய் வெறுங்கையராக வெற்றுக் கழுத்தினராக மூக்கும் காதும் மூளியாக இருந்தனர். செல்வர் மனைகளில் அடிமை எஜமானிகள் தம் கைகளில் பல்வகை வேலைப்பாடுகள் அமைந்த நவரத்தினங்களால் செய்யப்பட்ட வளையல் அணிந்து அழகு பார்த்தனர். அதனைக் கண்ட கடைசியர் தாமும் அவர்களைப் போல் தம் கைகளில் வளையல் அணிந்து கொள்ள ஆசைப்பட்டனர். ஆனால் அவர்களின் அடிமை நிலை அவர்களுக்கு அந்த வாய்ப்பை மறுத்துவிட்ட நிலையில் வயலில் களைபறித்த அப்பெண்கள், அங்கு களையாகப் பறித்துப் போட்டிருந்த குவளை ஆம்பல் முதலியவற்றின் தண்டுகளைக் கொண்டு வளையல் செய்து தம் கைகளில் அணிந்து அழகு பார்த்துக் கொண்டார்கள். இந்த அவலக் காட்சியை’கழனி ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்’ என்று புறநானூறு (352) கூறுகிறது.

வயலில் களைபறித்த பெண்கள் வயலுக்கு உரியவளான தலைவியைப் பார்க்கிறார்கள். அவர்கள் தம் கைகளில் பவளத்தால் ஆன வளையல்களை அணிந்து அழகு படுத்திக் கொண்டதைப் பார்க்கிறார்கள். அடிமைகளான கடைசியர் பவள வளையலுக்கு எங்கே போவார்கள்? எனவே, வயலில் களையாக முளைத்து வளர்ந்திருந்த ஆம்பல் குவளை ஆகியவற்றின் தண்டுகளை வளையல்களாகச் செய்து தம்கைகளில் அணிந்து அழகு பார்த்துக்கொண்டார்கள். இக்காட்சியினை,

‘பவள வளைசெறிந்தாட்கண்டு அணிந்தாள்பச்சைக்
குவளைப் பசுந்தண்டு கொண்டு’ என்று பரிபாடல் ஆசிரியர் பரிவுடன் காட்டுகிறார்.

இவ்வாறு உழைக்கும் வர்க்கத்தவர் ஆன அடிமைப் பெண்கள் தம் அணிகல ஆசையைத் தணித்துக் கொண்டஅவலத்தைச் சங்க நூல்கள் நமக்குக் காட்டுகின்றன. இன்றும் கிராமப்புறங்களில் இத்தகைய காட்சிகளைக் காண முடிகிறது.

‘உவலைக் கண்ணி வன்சொல் இளைஞன்” என்றும் ‘பாசிலை தொடுத்த உவலைக் கண்ணியன் ‘ என்றும் ‘கோட்டவும் கொடியவும் விரைஇக்காட்டபல்பூமிடைந்த படலைக் கண்ணியன்’என்றும் கண சமூகமாக குறிஞ்சி முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள் இலைதழைகளால் மாலையும் கண்ணியும் தொடுத்து அணிந்து கொண்ட காட்சியைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டிருந்த அடிமைச் சமூகத்திலும் உழைக்கும் மக்கள் இலைதழைகளையே அணிகளாகவும் உடைகளாகவும் (தழையுடை) அணிந்து கொண்டகாட்சியையும் காட்டுகின்றன. கணசமூகத்தில் ‘உவலைக்கண்ணி வன்சொல் இளைஞனாக இருந்தவன், அடிமைச்சமூகத்தில் ‘உவலைக்கண்ணித் துடியனா”கவே இருந்தான் என்பதையும் தெளிவாகவே கூறுகின்றன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com