Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruHistoryIndia
கை கொடுத்துக் காலை வாரிய காந்தி

Gandhi வரி கொடா இயக்கம் என்பது காந்தியின் வார்த்தைகளில் அரசுக்கு வரி கொடுக்காமல் இருப்பதாகும். ஆனால் விவசாயிகளோ தங்களைச் சுரண்டிக் கொழுக்கும் பண்ணையார்களுக்கும் வரி கொடுக்க மறுத்தனர். இதைக் கேட்டவுடன் காந்தி துடிதுடித்து "எல்லா வரிகளும் ஜனவரி 22க்குள் கட்டப்பட்டுவிட்டன என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைவேன்'' என்று ஆந்திரப் பிரதேசக் காங்கிரசுக் கமிட்டித் தலைவருக்கு எழுதினார்.

உக்கிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள்பால் மக்கள் ஈர்க்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே காந்தியும் காங்கிரசும் திட்டமிட்டு அகிம்சை வழி ஒத்துழையாமை என நடத்திய கண்துடைப்புப் போராட்டங்களேகூட ஏகாதிபத்திய எஜமானர்களைப் பாதிக்கும் அளவு நடைபெற்றன. பிப்ரவரி 1922இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றி வைசிராய் பின்வருமாறு லண்டனுக்குச் செய்தி அனுப்பினான்:

"நகர்ப்புறங்களில் கீழ்த்தட்டு வர்க்கங்கள் ஒத்துழையாமை இயக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சில பகுதிகளில் குறிப்பாக, அஸ்ஸாம், ஐக்கிய மாகாணம், வங்காளம், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாபைப் பொறுத்தவரை அகாலிகள் போராட்டம் கிராமப்புற சீக்கியர்களைத் தழுவியுள்ளது. நாடு முழுவதும் முகமதிய ஜனத்தொகையில் பெரும் பகுதியினர் வெறுப்பும் சலிப்பும் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் நடந்ததைவிட மிகப் பயங்கரத் தன்மை வாய்ந்த ஒரு குழப்ப நிலைக்கு இந்திய அரசு ஆயத்தமாகியுள்ளது.''

இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில் காந்தி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கை கொடுத்தார். ஒத்துழையாமை தனது கையை விட்டு நழுவுவதைக் கண்ட காந்தி அதை வாபஸ் வாங்க சரியான தருணத்தையும் காரணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1922 பிப்ரவரியில் வங்கத்தில் சௌரிசௌரா விவசாயிகள், தங்களது அமைதியான ஊர்வலத்தின்மீது தாக்குதல் தொடுத்துக் கண்­மூடித்தனமாகத் துப்பாக்கிக் குண்டுகளைப் பொழிந்த போலீசாரைத் திருப்பித் தாக்கினர்; போலீசு நிலையத்திற்குத் தீ வைத்தனர். 22 போலீசாரைக் கொன்றொழித்தனர். உடனே காந்தியார், மக்கள் வன்முறையில் இறங்கிவிட்டதாகக் காரணம் காட்டி ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கினார்; போராட்டத்தின் காலை வாரினார்.

1922 பிப்ரவரி 12ம் நாள் அவசரமாகக் கூடிய காங்கிரசு காரியக் கமிட்டி சௌரிசௌரா விவசாயிகள் "மனிதத் தன்மையற்ற முறையில்'' நடந்து கொண்டதாகச் சாடியது. "வன்முறை நிகழ்ச்சிகள் நடப்பதாலும், நாடு போதுமான அளவு அகிம்சை வழியில் இல்லை என்பதாலும் போராட்டம் நிறுத்தப்படுவதாக'' அறிவித்தது. அது மட்டுமா? "அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளைச் செலுத்துமாறு'' ஆணையிட்டது. மக்கள் போராட்டங்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

1922 நெருக்கடி பற்றி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கருத்தும், காந்தி இயக்கத்தை வாபஸ் பெற்றுத் தங்களைக் காப்பாற்றினார் என்ற கண்ணோட்டமும் அப்போதைய பம்பாய் கவர்னரான லாயிட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுகிறது:

"அவர் (காந்தி) எங்களுக்குப் பெரும் திகில் உண்டாக்கி விட்டார். அவருடைய வேலைத் திட்டம் எங்கள் சிறைகளை நிரப்பிவிட்டது. மக்களை எப்போதும் கைது செய்து கொண்டே இருக்க முடியுமா என்ன? அதுவும் 3,19,000 பேர்களை! அவர் அடுத்த படியேறி வரி கொடுக்க மறுத்திருந்தால் எங்கள் கதி என்ன ஆகியிருக்கும்? அது ஆண்டவனுக்கே தெரியும்.''

"உலக வரலாற்றிலேயே காந்தியின் சோதனை மிகப் பிரம்மாண்டமானது. அது வெற்றிக்கு ஓரங்குல தூரத்தில் வந்துவிட்டது. அவர்கள் வன்முறையில் இறங்கினார்கள். காந்தி வேலைத் திட்டத்தை வாபஸ் வாங்கினார். நாங்கள் அவரைச் சிறையிலிட்டோம்.'' (ட்ரூ பியர்சனுக்கு அளித்த பேட்டி, ஆர்.பி. தத் எழுதிய "இன்றைய இந்தியா' எனும் நூலில் பக். 435)

அகிம்சையும், ஒத்துழையாமையும் காலனிய அடிப்படையைத் தகர்க்கும் போராட்டங்கள் எனக் கொள்ள முடியுமா? முடியாது. ஆயின் இதன் உண்மை நோக்கம் என்ன? போராட்ட உணர்வுகள் பொங்கி எழுந்து காலனிய ஆட்சியின் அடிப்படையை ஆட்டங்காணச் செய்யும் போதெல்லாம் அதைத் திசை திருப்ப ஆடிய நாடகங்களே இவை. பிரிட்டிசாரின் ஒத்துழைப்போடு காந்தி தயாரித்தளிக்கும் நாடகங்கள் கவர்ச்சிகரமான முறையிலே வானொலியிலும், பத்திரிகையிலும் விளம்பரப்படுத்தப்பட்டு மக்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது என்பது உண்மையே.

பிரிட்டிஷாரோடு ஒத்துழைக்க மறுப்பதை ஏகாதிபத்திய எதிர்ப்பு என மக்கள் புரிந்து கொண்ட அளவில் அது எப்போதுமே வன்முறையை எட்டிவிடும். மக்களைத் தழுவிய இந்த இயக்கங்கள் காந்தியின் கட்டுத் திட்டங்களை மீறிக் கைநழுவும் போது போராட்டம் கடுமையாக ஒடுக்கப்படும்; நாடகத்தின் அடுத்த காட்சியாகக் காந்தி கைது செய்யப்படுவார்; உடனே காந்தியின் பால் மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டு அவருடைய செல்வாக்கு மீண்டும் பெருகும்; சிறையிலிருக்கும் காந்தியார் போராட்டங்களை வாபஸ் வாங்கிக் கொள்வார்; போராட்டம் "எல்லை மீறியதை'க் கண்டிப்பார்; மக்களின் உணர்வுகள் மந்தமாகிப் போராட்டங்கள் பிசுபிசுக்கும்; பிரிட்டிஷார் குதூகலிப்பர். மீண்டும் மக்கள் உணர்வு பெற்று போராட்டங்களில் சீறியெழும்போது, பிரிட்டிஷாரின் ஆசியோடு காந்தி சிறையிலிருந்து விடுதலையாவார். திசை திருப்பும் திருப்பணியைத் தொடங்கி வைப்பார். இப்படித்தான் மக்களை ஏய்க்கும் நாடகத்தை பிரிட்டிஷாரும் காந்தியும் காங்கிரசும் நடத்தி வந்துள்ளனர்.

(புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி வெளியிட்ட ‘காந்தியும் காங்கிரசும் - ஒரு துரோக வரலாறு’ நூலிலிருந்து)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com