 |
தலையங்கம்
கியூப புரட்சியின் பொன்விழா
1959ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு உலகிற்கு அற்புதமான கொடையை வழங்கியது.
ஆசிரியர் குழு
எஸ்.கண்ணன்
ஆர்.வேல்முருகன்
ஆர்.வேலுசாமி
வி.ஜானகிராமன்
எம்.கவிதா
ஆசிரியர்
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
முகவரி:
ஏ.பாக்கியம்
118/10, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 600 003
[email protected]
ஆண்டு சந்தா: ரூ.50
ஆயுள் சந்தா: ரூ.500
|
கியூபா என்ற நாட்டை ஏகாதிபத்திய கைக்கூலி பாடிஸ்டா என்ற கொடுங்கோலனின் நுகத்தடியிலிருந்து பிடல்காஸ்ட்ரோ, சேகுவேரா, ரால்காஸ்ட்ரோ போன்ற மாவீரர்களைக் கொண்ட புரட்சியாளர்கள் படை மீட்டது. அளப்பரிய தியாகத்தாலும், போராட்டத்தாலும் விடுதலையைப் புரட்சியின் மூலம் அடைந்த பொன்விழா ஆண்டு இது. சமூக மாற்றம், சோஷலிசம் போன்ற வார்த்தைகளை அடியோடு வெறுக்கும் ஏகாதிபத்திய சக்திகள் விடுதலை பெற்ற அந்த நாட்டை அழிக்கத் துடித்தன. அதிலும் குறிப்பாக அமெரிக்கா தனது ஈனத்தனமான கொள்கையால் அந்த நாட்டை சூறையாட அலைந்தது, இன்னும் அலைந்துக்கொண்டே இருக்கிறது. அந்த நாட்டின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவை படுகொலை செய்ய நூற்றுக்கணக்கான முறை முயன்று தோற்றுள்ளது.
எத்துனை சோதனைக்கு மத்தியிலும் அந்த நாடு பீடுநடை போடுகிறது. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ என்ற வார்த்தை எத்துனை சத்தியமானது என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த சின்னசிறிய தேசம்.ஏகாதிபத்தியத்தை லத்தின் அமெரிக்க நாடுகளை எதிர்த்திட சோசலிச அரசுகள் மலர வல்லமையை வழங்கியது கியூபாவின் வீரம் என்றால் அது மிகையில்லை.
ஒரு கோடியே பத்து லட்சம் மக்களுடன் அமெரிக்காவின் பிடரியில் அமர்ந்து ஐம்பது ஆண்டிகளாய் சோசலிசத்தை பாதுகாத்து வருவது எத்துனை மகத்தானது. கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அந்த நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வது சோசலிச கொள்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி! மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 7 சதம் நிதியை ஒதுக்கியதும், 98 சதம் பேர் ஆரம்பக்கல்வியை முடித்துள்ள கல்விதுறையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.3 சதம் ஒதுக்கி 180 பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதம் உலக சாதனை நிகழ்த்திய (தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் !?) சுகாதார துறையிலும், “இன்றைக்கு, புரட்சி, சோசலிசம், மற்றும் நாட்டின் சுதந்திரம் ஆகியவை அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியையே அடிப்படையாக கொண்டுள்ளது என 1991இல் பிடலின் அறைகூவல், அறிவியல் தொழில் நுட்பத்தில் ஏற்படுத்திய மாற்றத்திலும், தொழிலாளர் நலத்தில், மின் உற்பத்தியை எட்டு மடங்கும், நீர்தேக்கத்தை 310 மடங்கும் அதிகரித்து மொத்த உள்நாட்டு வருமானத்தில் 35 சதம் என வளர்ந்துள்ள தொழில் வளர்ச்சியில், ஆண்டிற்கு 24 லட்சம்சுற்றுலா பயணிகளை ஈத்திடும் துறையாக வளர்ந்துள்ள சுற்றுலா துறையில், பெண்கள் முன்னேற்றத்தில் உலக நாடுகள் குறிப்பாக வளரும் மூன்றாம் உலக நாடுகள் கற்றுக்கொள்ள ஏராளமான சாதனைகள் இருக்கிறது.
இந்த சாதனைகள் லத்தின் அமெரிக்க நாடுகளில் வறுமையில் உழலும் மக்களை சோசலிச மாற்றை நோக்கி திருப்புகிறது. அதனால் இத்தகைய சாதனைகளை கண்டு பொறுக்காத அமெரிக்கா கியூபாவை பழிவாங்க துடிக்கிறது. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி, இந்தியாவை அது கொஞ்சம் பாதிக்கத்தான் செய்யும் எனவே வறுமையை, வேலையின்மையை, வேலையிழப்பை, பட்டினிசாவுகளை கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள் என்று நமது மதியிழந்த பொருளாதார விற்பனர்கள் ஆருடம் கூறுவதுபோல் நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி வருகின்றனர். உலகமயத்தை தலையில் சுமந்து, முதலாளிகளுக்கு அடிபணிந்து நடக்கும் ஆள்பவர்களின் பொருளாதார கொள்கையால் எப்போதும் இந்த நாட்டின் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களுக்கு விடிவு வரப்போவதில்லை. இந்த கொள்கையை மாற்றாமல் அனைவருக்கும் வாழ்வை மலரச்செய்யும் சோசலிச கொள்கை மட்டுமே மாற்று என்பதை கியூபா பறைசாற்றுகிறது. எனவேதான் அந்த புரட்சியின் பொன்விழாவை நாம் வாழ்த்துகிறோம்.
கியூப புரட்சியின் பொன்விழா ஆண்டில் அந்த நாட்டு மக்களுக்கு நாம் உரத்துச் சொல்லுவோம் முன்னேறுங்கள் தோழர்களே! நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். பல லட்சம் டன்கள் உணவு தானியங்களை உங்களுக்கு அள்ளிக்கொடுத்த இந்திய மக்கள் உங்களுடன் இருக்கிறார்கள். மனிதர்களுக்குள் அன்பை விதைக்கும் சோசலிச சமூகமே நமது இறுதி லட்சியம். சோசலிசத்திற்கே எதிர்காலம்! எதிர்காலம் நமதே!
- ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|