ஐந்து ஹீரோக்கள்
எஸ். கண்ணன்
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்திற்கு பக்க பலமாக, உலகம் முழுவதிலுமிருந்து அதரவைப் பெற்று வரும் கியூபா, தற்போது அமெரிக்காவின் மியாமி மாநில சிறையில் அடைபட்டு, 11 ஆண்டுகளாக, சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வரும் 5 கியூப ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் அந்தோனியா கெரொரோ (51), ஃபெர்னான்டோ கோன்ஸலாஸ் (44), கெரார்டோ ஹெர்னான்டஸ் (42), ராமன் லெபானினோ (44), ரெனே கோன்ஸலாஸ் (51) ஆகியோரை மீட்கும் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. 1996ல் சிறைப்பட்ட இவர்களை மீட்கும் போராட்டத்திற்காக கியூபாவிற்கு வந்து போன வெளிநாட்டவரின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் ஆகும். இந்த 5 நாயகர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற போராட்டதில் 126 நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. 126 நாடுகளிலும் கியூப ஆதரவு இளைஞர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் இதில் ஒன்று. சமீப காலமாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் கியூப ஆதரவு இயக்கங்கள், மேலே குறிப்பிட்ட வீரர்களை அமெரிக்காவே விடுதலை செய், என்பதற்காகத்தான் இருக்கிறது.

செய்த குற்றம்:
மியாமியில் இவர்கள் ஏன் சிறைப்பிடிக்-கப்பட்டார்கள் என்பது உலக அதிசயம். தனது தாய் நாடான கியூபாவிற்கு எதிரான சதியை முறியடித்ததுதான் இந்த ஐவரும் நிகழ்த்திய மாபெரும் குற்றம் எனச் சொல்கிறது அமெரிக்கா. கியூபாவிற்கு மிக அருகில் இருக்கும் அமெரிக்கப் பகுதி மியாமி ஆகும். அங்கே கியூபாவில் இருந்து ஓடிப்போன முதலாளிகள் தஞ்சமடைந்துள்ளனர். கியூபன்-அமெரிக்கன் நேசனல் ஃபௌண்டேஷன் (CABF), கியூபன் சுதந்திர கவுன்சில் (CFC), மீட்புக்கான சகோதரர்கள், ஜனநாயக இயக்கம், ஆல்ஃபா 66 ஆகிய அமைப்புகளுடன் இன்னும் பல உள்ளன. இவர்கள் நீண்ட காலமாக கியூபாவிற்கு எதிரான சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய இயக்கங்களின் தீவிரவாதச் செயல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான கியூபர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த ரத்தக் காட்டேரிகளுக்கு புகலிடமும், பணமும் ஆயுதமும் தந்து அமெரிக்கா தனது ஆதிக்க வெறியை வெளிப்படுத்த வருகிறது. இதற்கு உதராணமாக அமெரிக்க அரசின் உளவுப்பிரிவான எப்பிஐ சொன்ன வரிகளைக் குறிப்பிடலாம். ‘‘கியூபன்-அமெரிக்கன் நேசனல் பௌவுண்டேஷன், கியூப விடுதலைக் கவுன்சில் ஆகிய தீவிரவாத இயக்கங்கள் மரியாதைக் குறியவை, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவை. எனவே, கியூப அரசுக்கு எதிரான மேற்படி அமைப்புகளுக்கு வருகிற நிதி குறித்தும், அவர்களின் செயல் குறித்தும் விசாரணை நடத்த வேண்டியதில்லை,’’ என்று குறிப்பிட்டுள்ளது.
மேற்படி ஐவரும் பிப்-24, 1996 அன்று கியூபா மீதான விமானத் தாக்குதலை முறியடித்தது தான் மிகப்பெரிய குற்றம். அதை அமெரிக்காவில் இருந்து கொண்டு செய்தது ஆகப் பெருங் குற்றம் என அமெரிக்கா குதிக்கிறது. அமெரிக்காவின் சிஐஏ உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் உள் விவகாரங்களுக்குள் தலையிட்டு, உயிர், உடமை இழப்புகளை ஏற்படுத்தி வருவது, ஊர் அறிந்த உண்மை. அதற்காக எந்த ஒரு சிஐஏ ஏஜென்டும் அல்லது ஊழியனும் தண்டிக்கப்படவில்லை. தண்டிக்கப்படவும் முடியாது. ஆனால் தனது நாட்டை பாதுகாக்கும் செயலில் ஈடுபட்ட கியூப நாட்டவருக்கு, அமெரிக்க நீதி மன்றம் மிகக் கடுமையான தண்டனைகளை வழங்கியுள்ளது.
கெரெண்டா ஹெர்னான்டஸ் இரட்டை ஆயுள் தண்டனையும், 15 ஆண்டுகால கடும் காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளார். ராமன் லெபனினோ ஆயுள் தண்டனையும் 18 ஆண்டுகால கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளார். அந்தோனியா கெரைண்ரோ ஆயுள் தண்ட னையும், 10 ஆண்டுகால கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளார். ஃபெர்னான்-டோ கோகன்ஸ்லாஸ் 19 ஆண்டு கால கடும் சிறை தண்டனையும், ரெனே கோன்ஸலாஸ் 15 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளார். தாய் நாட்டைப் பாதுகாக்க முயற்சித்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்பதுதான் கியூப ஆதரவு இயக்கங்கள் எழுப்பும் கேள்வியாகும்.
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவு-14, ‘‘ ஒவ்வொரு மனிதனுக்கும், சட்ட ரீதியான தண்டனைகளை எதிர்த்தும், பாரபட்சமான, சுதந்திர தன்மைக்கு மாறுபட்ட தண்டனைகளை எதிர்த்தும், பொது விசாரணை நடத்த உரிமை இருக்கிறது’’ என்று குறிப்பிடுகிறது. இதபோல் ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த அத்துணை விதிகளையும், மனித உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும் பெரும் குற்றத்தை தினந்தோறும் அரங்கேற்றும் நாடுதான் அமெரிக்கா. அதேபோல், பிரிவு 7, ‘‘எந்த ஒரு மனிதனும், துன்புறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும், மனித தன்மையற்ற செயல்களுக்கும், கீழ்தரமான நடத்தைகளுக்கும் ஆளாகக் கூடாது’’ என்று குறிப்பிடுகிறது.
ஆனால் அமெரிக்க அரசின் சிறைத்துறை, ஐநாவின் வரையறைகளையும், வழிகாட்டுதல்களையும் மிதிக்கிறதேயொழிய, மதிப்பதில்லை. மேற்படி ஐந்து நபர்களுடைய மனைவிகள், குழந்தைகள் ஆகியோரை சிறையில் வைத்து பார்ப்பதற்கு கூட அனுமதிப்பதில்லை. மிகக் கொடிய சித்ரவதைகளை, இந்த ஐந்து பேர் மீதும் நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்க அரசு ஈராக்கில் கைது செய்தவர்கள் மீது அபுகிரைப் சிறையில் நிகழ்த்திக் காட்டிய சித்தரவதைகளை நாம் ஊடகங்களில் பார்த்திருக்கிறோம். அமெரிக்க அரசு கொடியது என்பதை இதற்கு மேல் விளக்க வேண்டியதில்லை.
ஹீரோக்களின் தியாகத்தை விட:
‘‘சோசலிசத்திற்காக உயிரையும் கொடுப்பேன்’’ என்றார் சே. காட்டுமிராண்டித்தனமா? சோசலிசமா? என்றார் ஃபிடல். இவையிரண்டையும் கியூப மக்கள் உன்னதமான வரிகளாகப் போற்றுவதை பார்க்க முடிகிறது. அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனத்தை ஒவ்வொரு குடும்பமும் உணர்ந்திருக்கிறது. ஹீரோக்களின் தியாகத்தை விடவும், அவர்களின் குடும்பத்தினர் தியாகம் அளப்பறியது. எங்களைப் போன்ற பிரிகேடுகளிடம் பல நாடுகளில் இருந்து வந்திருப்பவர்களிடம் உரையாடுகின்றனர். சோசலிச கியூபாவை பாதுகாக்கும் போரில், எங்கள் வீட்டு இளைஞர்கள், அமெரிக்க சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர். அவர்கள் ஐந்து பேர் எங்களுடன் வசிக்காமல் இருக்கலாம். ஆனால் சோசலிச கியூபாவின் ஒவ்வொரு வீட்டிலும், எல்லா வீதியிலும், 126 நாடுகளிலும் எங்கள் வீட்டவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் எங்கள் வீட்டார் என்பதை விட, உண்மையான ஹீரோக்கள். எங்கள் குழந்தைகளுக்கு வீரத்தையும் நேர்மையையும் இந்த தேசம் கற்றுக் கொடுக்கிறது. எனவே, அமெரிக்கா இதற்கு பதில் சொல்லத் தகுதியற்ற நேர்மையற்ற அரசு, என்று வீரமாக பெண்கள் பேசுகின்றனர்.
ஏலியன் என்ற குட்டிப்பையன், மியாமிக்கு கடத்தப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு மறுத்த போதும், கியூபா ஒரே குடும்பமாக எழுந்து நின்று போராடி அமெரிக்காவை பணியச் செய்தது. இப்போது கியூபா ஐந்து ஹீரோக்களுக்காக உலகத்தையே ஒரு குடும்பமாக இணைக்க முயற்சிக்கிறது. அதில் கியூபாவின் வெற்றியும், அமெரிக்காவின் தோல்வியும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|