Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2009

இஸ்ரேலின் வெறியாட்டம்
எஸ்.வி.சசிகுமார்

2008இன் இறுதி வாரத்தில் உலகெங்கும் சமாதானத் தூதர் ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேலையில் போர் வெறி கொண்ட இஸ்ரேலின் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் குண்டு மழை பொழிந்து நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தது. இஸ்ரேலில் விமானப்படையும், தரைப்படையினரும் இருபத்தி இரண்டு நாட்கள் ஆடிய வெறியாட்டத்தில் 1300 பேர் உயிரிழந்தனர், ஏறத்தாழ 5500 பேர் படுகாயமுற்றனர், இறந்தவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. ஒரு காசா தலைவரின் 10 பேர் கொண்ட குடும்பத்தில் 9 பேரும் பலியாகி இருக்கின்றனர் என்பது இதயத்தைப் பிழியும் இன்னொரு செய்தி கடுமையான உயிர்ச் சேதங்கள் தவிர நூற்றுக் கணக்கான வீடுகளும், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகக் கட்டிடங்களும் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்துயரில் ஆழ்ந்து அவலப்படுகின்றனர்.

இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இஸ்ரேல் சொல்லிக் கொண்ட காரணம் காசா பகுதியில் ஆட்சியிலிருக்கும் ஹமஸ் இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராகத் தொடுத்த ராக்கெட் தாக்குதல்தான் என்று சொல்லிக்கொண்டாலும், உண்மையில் போரைத் தொடங்கியது இஸ்ரேல் தான் என்பது இப்பொழுது உறுதியாகத் தெரியவந்திருக்கிறது.

காசாவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹமஸ் இயக்கத்தினர் ஆட்சியைக் கைப்பற்றிய 2007 லிருந்து ஒன்னரை ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு அளவே இல்லை. ஹமஸ்கள் அத்துமீறினர் எனக்கூறி முதலில் காசாப் பகுதியில் இராணுவத்தை அனுப்பி கொலைவெறித் தாண்டவமாடிய இஸ்ரேல் காசா மக்களுக்கு எதிராகப்பொருளாதாரத் தடைகளையும் ஏற்படுத்தி பாலஸ்தீன மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அவசியப் பொருட்கள் எதுவும் கிடைக்காமல் அம்மக்கள் துயருற்றது மட்டுமின்றி வாழ்வாதாரங்களையும் இழந்து, பட்டினி கிடந்து தவிக்கும் நிலையையும் உருவாக்கியது இஸ்ரேல். நோயுற்றோர் மருத்துவ வசதிகள் இல்லாமல் மருந்துகள் கிடைக்காமல் அவதிப்படும் நிலையையும் காசாவில் இஸ்ரேல் ஏற்படுத்தியது. இஸ்ரேலின் இத்தகு கொடிய நடவடிக்கைகளின் காரணமாகக் கடும் துயரத்தில் உழலும் காசா மக்களின் எண்ணிக்கை 15 லட்சத்திற்கும் மேலாகும்.

உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாக உலகெங்கும் ஏற்பட்டுவரும் பொருளாதாரப் பின்னடைவுகளுக்கும், நெருக்கடிக்கும் மத்தியில், இராக், ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பல சம்பவங்களுக்கும் மத்தியில், இஸ்ரேல் ஏற்கனவே கஷ்டத்திலிருக்கும் காசா மக்களுக்கு உணவு, மருந்துகள், குடிநீர் போன்ற அவசியத் தேவைகளைக் கூட கிடைக்க விடாமல் செய்தது ஒரு மனித உரிமை மீறல் என்று பலராலும் கண்டிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமைக் குழுக்களும் இதனை எதிர்த்துக் குரல் எழுப்பின. எனினும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ஒதுங்கி இருந்து இஸ்ரேலின் இனப்படுகொலை முயற்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வேதனைக்குரியது.

ஐக்கிய நாடுகள்சபை மனிதாபிமானத்துடன் காசாவிற்கு உணவுப் பொருட்களையும், மருந்துகளையும், பிற அவசியப் பொருட்களையும் கொண்டு செல்லத் தயாராக இருந்தும் இஸ்ரேல் எல்லா முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தி அந்த முயற்சியைக் கணிசமாகத் தடுத்து விட்டது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். காசா மக்கள் தொகையில் சுமார் 60 சதவிகிதத்தினர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழந்தைகளில் சரிபாதியினர் ரத்த சோகையினாலும், 18 சதவிகிதத்தினருக்கும் மேற்பட்டவர்கள் சீரற்ற வளர்ச்சியினாலும் பாதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கக் கூடிய விஷயம். இதைவிடவும் கொடுமை இஸ்ரேலின் விமானப்படையைச் சேர்ந்த ஜெட் விமானங்கள் எழுப்பும் அதீதமான ஒலியினால் காசா மக்களில் பெரும்பான்மையினர் குறிப்பாகக் குழந்தைகள் தங்கள் கேட்கும் சக்தியை இழக்க நேரிட்டதாகும். காசாவிற்கு அனுப்ப உணவுப் பொருட்களையும், தொண்டர்களையும் ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் பான்_கி_ முன் விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் பிரதமர் எகூத் ஆல்மெர்ட் முற்றிலுமாக நிராகரித்து விட்டார்.

அது மட்டுமல்ல, காசா மக்களின் நிலையை நேரில் கண்டுவந்து சொல்ல இஸ்ரேலியப் பத்திரிகையாளர்களையும், பிற ஊடகத் துறையினரையும் அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் கூட இஸ்ரேல் கண்டு கொள்ளவே இல்லை. “ஊடகத்தினர் வேண்டுமென்றே தேவையில்லாமல் பிரச்சனையை ஊதி ஊதிக் கெடுத்து விடுவார்கள்’’ என்று பாதுகாப்புத்துறை அதிகாரி இதற்கு விளக்கம் வேறு கூறினார். டிசம்பர் மத்தியில் உலகறிந்த மனித உரிமைப் போராளியும் ஆர்வலருமான ரிச்சர்ட்பாக் என்ற அமெரிக்கப் பேராசிரியரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் அரசு கட்டளையிட்டது. உண்மை நிலையை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்க ஐ.நா. சபையினால் காசாவிற்கு அனுப்பப்பட்டவர் பாக். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகச்சட்டப் பேராசியரான அவர் கண்டறிந்து கூறிய உண்மை என்ன தெரியுமா? “காசாவிலுள்ள நிலைமையை இரண்டாவது உலகமகா யுத்தத்தின் போது நாஜிக்கள் செய்த கொடுமைக்குச் சமமானது’’ என்பது தான் அவரது தைரியமான கணிப்பு அதுமட்டுமல்ல அவர் மேலும் கூறினார். “பாலஸ்தீனியருக்கு எதிரான இஸ்ரேல் கொள்கை மனித சமுதாயத்திற்கு எதிரான குற்றமாகும்’’ பாலஸ்தீனிய ராக்கெட் தாக்குதல்கள் நடத்துவது சர்வதேசச் சட்டங்களுக்கு விரோதமானதுதான் என்றாலும் அதற்காக பாலஸ்தீன மக்களை ஒட்டுமொத்தமாகத் தண்டிக்கும் உரிமை இஸ்ரேலுக்குக் கிடையாது. என்றும் கூறி காசாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை பாக் உறுதிபடக் கூறினார். இது போதாதா? அவரை உடனடியாக வெளியேறச் சொல்லி கட்டளையிட்டது இஸ்ரேல்.

பாக்கை வெளியேற்றியதன் மூலம் ஐ. நா. வையே அவமதித்ததாகும் என்று ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் மிக்கேல் டி எஸ் கோட்டோ கடுமையாக இஸ்ரேலைக் கண்டித்தார். இது ஒரு அபாயகரமான முடிவு என்றார் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் கொள்கை கருப்பரின மக்களுக்கு எதிரான அந்நாளைய தென் ஆப்பிரிக்க அரசின் நிறவெறிக் கொள்கைக்கு நிகரானது என்றும் ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் கடுமையாக விமர்சித்தார் எகிப்து, ஜோர்டான் போன்ற அரபு நாடுகள் கூட இஸ்ரேல் காசாவிற்கு எதிராக எடுத்த பொருளாதாரக் தடை நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரபு மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது. அந்நாடுகள் இஸ்ரேலுக்குத் துணை போவதாகக் கண்டனக்குரல்கள் எழுந்தது எனவேதான், எகிப்தும், ஜோர்டானும் கூட இஸ்ரேலின் டிசம்பர் தாக்குதலை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டது.

கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்த்து நின்ற காசா பகுதி மக்களின் மன உறுதியை எதிர்பார்க்காத இஸ்ரேல் மேலும் மூர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியாகத்தான் விமானப்படை தாக்குதலையும் அதைத் தொடர்ந்து தரைவழித் தாக்குதலையும் தொடுத்து அம்மக்களை நிலைகுலையச் செய்தது. அமெரிக்கா போன்ற சில நாடுகள் இஸ்ரேலுக்குத் துணை போனாலும் ஐ.நா. பாதுகாப்புக்குழுவின் முன்முயற்சியினால் எடுக்கப்பட்ட போர் நிறுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் உதவியோடு வெற்றிபெற்றது. ஐ.நா. தீர்மானத்தை ஏற்று இஸ்ரேல் தனது போர் நடவடிக்கைகளை முடிவிற்குக் கொண்டுவந்தது. உலக அபிப்பிராயத்தை எதிர்த்து அமெரிக்காவின் உதவியை மட்டுமே கொண்டு பிற நாடுகளுக்குத் தொல்லை கொடுக்கும் முயற்சியை இஸ்ரேல் இதன் விளைவாக ஒரேயடியாக நிறுத்திவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

நடந்து முடிந்த 22 நாள் போரிலேயே அத்தனை கீழ்த்தரமான, நாகரிகமற்ற செயல்பாடுகளைச் செய்திருக்கிறது என்பது பற்றிய செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. போரில் சட்ட விரோதமான ஆயுதங்களை அந்நாட்டு ராணுவம் உபயோகித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது இப்பொழுது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. யுரேனியம் மற்றும் வெள்ளை பாஸ்பரஸ் தொகுப்புக் குண்டுகளை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடாது என்ற தடையை மீறி இந்தச் சட்ட விரோதமான ஆயுதங்களைக் காசாப் பகுதியில் பயன்படுத்தி உலகநாடுகளின் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது இஸ்ரேல். இவற்றைப் பயள்படுத்தியதன் காரணமாக காசா மக்கள் புற்றுநோய், மரபணுகுறைபாடு போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை எழுப்பியிருக்கிறது. பாலஸ்தீனிய இனத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதற்கான பேரழிவுப்பாதையில் இஸ்ரேல் தொடர்ந்து செல்ல முற்பட்டால் அதனை எதிர்த்து உலக நாடுகள் முன்முயற்சி எடுத்து பாலஸ்தீன மக்களின் இடர்தீர்த்து அம்மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வது உலகநாடுகள் முன் இன்றுள்ள பெரும் சவாலாகும். எத்தனையோ நல்லெண்ணம் கொண்டமக்களிடமிருந்து காசா பகுதி மக்களுக்கு உதவிகள் கிடைக்க வாய்ப்பு இருந்தாலும் தொடரும் இஸ்ரேலியப் பொருளாதாரத் தடைகள் அந்த உதவிகளால் நேரடியாகப் பலன் கிடைக்காமல் செய்துவிடும் என்று அம்மக்கள் அஞ்சுகின்றனர். கட்டுமானப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக போரில் உடைந்து நொறுங்கிய வீடுகளுக்குப் பதிலாகப் புது வீடுகள் கட்டுவதும், சாலைகள் அமைப்பதும் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அம்மக்கள் மீண்டும் நல்வாழ்வு பெறுவது என் பது பொருளாதாரத் தடைகள் முற்றிலும் நீக்கப் பட்டால்தான் சாத்தியமாகும். அதற்கான முயற்சிகள் உலக நாடுகள் பலவற்றாலும் எடுக்கப்படலாம். ஆனால் அந்நாடுகளுக்குள் ஒன்றாக இந்தியாவும் இருக் கும் என்று எண்ணுவதற்கான ஆதாரம் எதுவும் இன்றுள்ள சூழ்நிலையில் இல்லை என்றே தோன்று கிறது. ஆயுதத் தேவைகள் பெரும் பாலானவற்றிற்கு இஸ்ரேலையே நம்பியிருக்கும் இந்தியா அந்நாட் டிற்கு எதிரான நடவடிக்கை எதற்கும் ஆதரவு கொடுக் கும் நிலையிலில்லை என்பது தெளிவு. இஸ்ரேலின் இனவெறியாட்டத்தை வெகுகாலம் உறுதியாக எதிர்த்து நின்ற இந்தியா இன்றைக்குத் தனது புதிய கூட்டாளியான அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் தோழமை நாடான இஸ்ரே லின் மக்கள் விரோதப்போக்கை எதிர்க்கும் திராணி யில்லாததாக ஆகிவிட்டதுதான் பெரும் சோகம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com