Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2009

பிப்ரவரி 18 - வரலாற்றுத் தடத்தில் மைல் கல்லாகட்டும்
எஸ்.கண்ணன்

அன்புமிக்கத் தோழனே,

வணக்கம்,

நலம், நாடுவதும் அதுவே. புத்தாண்டு பிறந்த பின் இது முதல் கடிதம். புத்தாண்டு, பொங்கல் விழாக் கொண்டாட்டங்களை வித்தியாசமாகக் கொண்டாடிவரும் டி.ஒய்.எப்.ஐ.,2008ஆம் ஆண்டை சைக்கிள் மிதித்து, தமிழகத்தின் மூன்றாயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து, கருத்துப் பிரச்சாரத்தை மேற்கொண்டதன் மூலம் வழி அனுப்பி வைத்திருக்கிறோம். 2009ஐ மறியல் போராட்ட அறைகூவலுடன் வரவேற்று இருக்கிறோம்.

1959, ஜன. 1 அன்று வெற்றி பெற்ற கியூபப் புரட்சியின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 2009, ஜன.1 50ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டு வழக்கத்தைவிட எழுச்சியும், உற்சாகமும் கியூபாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதுமான உழைக்கும் மக்களை எழுச்சி கொள்ளச் செய்திருக்கிறது.

“அநீதி கண்டு அதிர்வாயானால் நீயும் நானும் தோழன்’’ என்ற வரிகளை உலகிற்கு அறிமுகம் செய்த கியூப புரட்சியாளன் சேகுவேராவின் படங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் சேவின் படத்தை வியாபாரத்திற்குப் பயன்படுத்துவதைப் போல், தமிழகத்தில் சிலர் தங்களை புரட்சிக்காரர்கள் என்று முத்திரை குத்திக் கொள்ள பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவின் நிதி நெருக்கடி உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியாக வளர்ச்சி பெற்றுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட தொழில்களில் இந்தியாவின் தொழில்துறையும் அடங்கும். தமிழகத்தின் திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

நடு ஆற்றில் தவிக்க விடப்பட்டுள்ள இந்த இளைஞர்களுக்கான நிவாரணத்தை அறிவிக்கவோ அல்லது வேறு பணி பாதுகாப்பு சூழலை ஏற்படுத்தவோ அரசு முயற்சிக்கவில்லை. மாறாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முதலாளி சுருட்டிய 7,800 கோடி ரூபாய் காரணமாக, ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள, 2,100 கோடி ரூபாய் சிறப்புச் சலுகையை சத்யம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. பணக்காரன் கொள்ளையடித்து, ஏற்படுத்திய நஷ்டத்திற்கு ஏழை மக்களின் வரிப்பணத்தை தானம் வழங்க நமது மத்திய அரசு தயார் என்பதன் வெளிப்பாடு இது.

“திருப்பூர் பின்னலாடை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயத்த ஆடை, மோட்டார் தொழில், மோட்டார் வாகன உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் நலிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது’’, என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் இருந்து இந்திய பொருளாதாரம் மீள வேண்டும் என்றால், நலத்திட்ட உதவிகளை அதிகரிக்க வேண்டும். உழைக்கும் மக்கள் கையில் பணம் புழக்கங்களைத் திட்டமிட்டு வளர்க்க வேண்டும், என்று பேரா.பிரபாத்பட்நாயக் போன்றவர்கள் சொல்லி வருகின்றனர்.

இன்னொரு புறத்தில் பணம் வேறு வகையில் புழங்குகிறது. அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமாவின் பதவி ஏற்பு விழாவிற்கு லட்சக்கணக்கிலான கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதுபோல் மதுரையில் உள்ள தி.மு.க. தலைவர், முதல்வரின் மகன் தனது பிறந்த நாளுக்கு பல நூறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். பெரியார் சொன்ன சுயமரியாதையை காலில் போட்டு மிதிக்கிற கலாச்சாரத்தை வளர்க்கிறார்கள். அமைச்சர்களும், காவல்துறை அதிகாரிகளும் அரசு பொறுப்பில் இருப்பதை மறந்துவிட்டு, கட்சித் தொண்டர்களை விடவும், தங்களைத் தாழ்த்திக் கொண்டு, கைகட்டி நின்றதை டி.வி. நிகழ்ச்சிகள் ஒளி, ஒலி பரப்பியதை நேரடியாகப் பார்க்க முடிந்தது. ஜனநாயகத்தை கேலிக் கூத்து ஆக்குவதையும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதையும் பார்க்க முடிந்தது. எனவே, தமிழக இளைஞர்களை, சுயமரியாதை கொண்டவர்களாக மாற்றிட, சமூகப் பாதுகாப்புடனான வேலை என்ற முழக்கம், வீடுகள் தோறும் பழக்கப்பட்டாக வேண்டும். அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை உயர்த்திப் பிடிக்கக் கற்றுத்தர வேண்டும். அதற்கு டி.ஒய்.எப்.ஐ. இளைஞன் தன்னை ‘கற்றுணர்ந்த போராளி’யாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

கியூபப் புரட்சியின் வெற்றி அதைத்தான் படிப்பினையாக, சொல்லிக் கொடுக்கிறது. கியூபாவில் வெள்ளையர்கள், கறுப்பர்கள் வாழ்கிறார்கள். ஆனால், இந்த இரண்டு வண்ணங்களையும் விட அதிகமாக ‘பழுப்பு’ நிறத்தவர் வாழ்கின்றனர். வெள்ளையும், கறுப்பும் கலந்த கலவையாக பழுப்பு (ஙிக்ஷீஷீஷ்ஸீ) நிறத்தவர்கள் அதிகரித்து வருகின்றனர்.கியூப அரசு பின்பற்றுகிற பொருளாதாரக் கொள்கை, எல்லோருக்கும் கல்வி, வேலை, சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்திருக்கிறது.எனவே, அங்கே இனப்பிரிவினையோ வேறு பிரிவினையோ இல்லை.

இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடி முதலாளிகளைத் தாக்கியதனால், அமெரிக்க அரசு 70; ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதியையும், இந்திய அரசு ரூ. 2100 கோடி சத்யம் நிறுவனத்திற்குப் பாதுகாப்பு நிதியாகவும் தாரை வார்க்கிறார்கள். ஆனால், காலங்காலமாக பின்தங்கிய மக்களுக்கு வாழ்க்கை அளிப்பதற்குப் பதிலாக, அவர்களை இனம், மொழி, சாதி, மதம் என்கிற ஏதாவது ஒரு அடையாளம் கொண்டு துண்டாடுகிறார்கள். அடையாள அரசியலைத் திட்டமிட்டு வளர்க்கிறார்கள். அதில் மனிதன் கொழுந்துவிட்டு எரிந்து போனால், அந்த வெப்பத்தில் தங்கள் ஆட்சியை ‘கதகதப்பாக’, ‘இதமானதாக’ அமைத்துக் கொண்டு சுகமாக வாழ்கிறார்கள். ஆட்சியாளர்களின் கதகதப்பிற்கு, இளைஞர் கூட்டம் தன்னை ‘மகர ஜோதியாக’ கொழுத்திக் கொள்வது சரியா?

தமிழகத்தில், 1960களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கையாளத் தெரியாத காங்கிரஸ் ஆட்சியாளர்கள், இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. விவாதக் களத்தை தனக்கு மேலும் சாதகமாக்கிட, உணர்ச்சியின் உச்சத்தில் நின்று இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தினார்கள். விளைவு, தாளமுத்து, நடராஜன் ஆகிய இளைஞர்கள் தீக்குளித்து மாண்டு போனார்கள். இன்று வரை, அந்த இருவரின் குடும்பத்தில் இந்தி மொழியைக் கற்காமல் இருக்கலாம். ஆனால், தீக்குளித்த இளைஞர்களின் சாம்பலின் காரணமாக அரியனை ஏறிய அனைவரின் குடும்பத்தினரும் இந்தி பயின்று, பேசியும் வருகிறார்கள்.

வைகோ திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட போதும், அப்பாவி இளைஞர்கள் தீக்குளித்து மாண்டார்கள். பெருங் கூட்டம் கூடியது. கொந்தளித்தது. ஆனால், மாற்றமும் நிகழவிலை. தமிழக மக்களும் மாறவில்லை. 90களில் வி.பி.சிங் ஆட்சி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற போது, பி.ஜே.பி., ஏ.பி.வி.பி. போன்ற இந்துத்துவா அமைப்புகள் தீவிரமாக எதிர்த்தன. அப்போது கோஸ்வாமி என்ற மாணவர், எரிந்து செத்தான். ஈழ விடுதலைப் போரில் எல்.டி.டி.இ.க்கு இருக்கும் படைப்பிரிவுகளில் ஒன்று, ‘தற்கொலைப்படை’ பல இடங்களில் தாக்குதல் நடத்தி தன்மைத் தானே சாகடித்துக் கொள்கிற, சிந்திக்கும் திறனற்ற இளைஞர் கூட்டத்தை, ஒரு படைப் பிரிவாக எல்.டி.டி.இ. நடத்தி வருகிறது. அந்த படைப் பிரிவினர் சாகும் போது, எதிரிகளும் சேர்ந்தே சாவார்கள். ஆனால், முத்துக்குமாரின் சாவு, அவன் தாய், தந்தையரின் கனவையும், முத்துக்குமாரின் லட்சியத்தையும் சேர்த்து கொலை செய்திருக்கிறது.

“இலங்கையில் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதற்காக, நாம் சாக வேண்டும்’’ என்ற முழக்கம், பகுத்தறிவற்றது. இலங்கைத் தமிழர்களின் வாழ்வு சிறக்க, 1. போர் நிறுத்தம், 2. பேச்சு வார்த்தை (எல்லா பிரிவுகளுடனும்). 3. தமிழர் பகுதிக்கு கூடுதல் அதிகாரங்களுடன் சுயாட்சி ஆகியவை தான் தீர்வு. இதில் சமரசமற்ற நிர்ப்பந்தத்தை ஜனநாயக முறையில் நாம் வெளிப்படுத்த வேண்டும்.

தனி நாடு தீர்வு என்றால், நரேந்திர மோடி ஆட்சியில் கொல்லப்பட்ட மக்கள் தனி நாடு கேட்கலாமா? ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில் கிறித்தவர்கள் அதிகம், எனவே, தனி நாடு என்று யோசிக்கலாமா? உத்தபுரத்தில் சுவரை இடிக்க மறுத்தால், தலித் பகுதிக்குத் தனி நாடு என கோரலாமா? எல்லா இடத்திலும் மேலாதிக்கம் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற முறையில் இருக்கிறது. ‘ஜனாநயகம்’ என்ற முழக்கமே ‘அதிகாரப் பரவல்’ என்கிற நடைமுறையே பிரச்சனையைத் தீர்க்கும். அந்த வகையில் இலங்கைத் தமிழரின் வாழ்வுக்காக ஜனநாயக முறையில் குரல் கொடுப்போம்.

நாம் முதலிலேயே குறிப்பிட்டதைப் போல் 2009ஐ மறியல் போராட்டம் மூலம் வரவேற்கத் தயாராவோம். தமிழகம் முழுவதும் நாம் நடத்திய மிதிவண்டிப் பிரச்சாரம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அதே கோரிக்கைகளுக்காக மாநிலம் முழுவதும் மறியல் போருக்கு தயாராகி வருகிறோம். அரசு நினைத்தால், காலிப் பணியிடங்களை நிரப்ப முடியும், சமூகப் பாதுகாப்புடனான வேலை வழங்க முடியும், சேது கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற முடியும், தேசிய கிராமப்புற வேலை உத்தரவாத சட்டத்தின் அமலாக்கத்தில் லஞ்சத்தை ஒழிக்க முடியும், சமச்சீர் கல்வியை வருகிற கல்வி ஆண்டில் அமலாக்க முடியும், தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க முடியும், சுகாதார வசதிகளை மேம்படுத்த முடியும், அணுசக்தி ஒப்பந்தத்தை திரும்பப் பெற முடியும். ஆனால், அரசு நினைப்பதில்லை. ஏன் என்றால் மேற்படி கோரிக்கைகள் அனைத்தும் இந்த நாட்டின் உழைப்பாளிகளின் கோரிக்கை. பணக்காரர்கள் விரல் விட்டு எண்ணி விடும் அளவில் இருக்கிறார்கள். அவர்களிடம் சாமி ஆடுபவர்களாக ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். உழைப்பாளிகள் எண்ணிலடங்காத தொகையில் இருக்கிறார்கள், ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைக்கு ஏமாறுபவர்களாக இருக்கிறார்கள்.

ஆக, டி.ஒய்.எப்.ஐ. முன் வைத்து நடத்துகிற மறியல் போர், வரலாற்றை மாற்றுவதற்கானது. உழைப்பவர், ஏழை என்ற சாமான்ய மக்களுக்கானது. இவர்களிடம் தெருமுனைப் பிரச்சாரம் செய்தால் மட்டும் போதாது. இதயத்தைத் தொட்டு, நேரடியாகப் பேச வேண்டும். மூளைக்கு தேடலைத் தருகிற வகையில் பேச வேண்டும். ஒரு மாவட்டக் குழு உறுப்பினர் 50 பேரைத் திரட்ட வேண்டுமானால், 150 பேரிடம் பேச வேண்டும். 100 பேருக்குக் கடிதம் எழுத வேண்டும். ஒரு இடைக்குழு உறுப்பினர் 25 பேரைத் திரட்ட வேண்டுமானால் 100 பேரிடம் திரும்ப, திரும்ப பேச வேண்டும். இது வரலாற்றை, அதிகாரத்தை, கேள்வி கேட்கிற போராட்டம். எனவே, திரும்ப, திரும்ப பேசுவதும், எழுதிடுவதும் தவிர்க்க இயலாது. நேற்று மிக குறைவாக இருந்தோம். இன்று ஆயிரக்கணக்கில் இருக்கிறோம். முயற்சித்தால் லட்சக்கணக்கில் திரட்ட முடியும். செயலுக்கு முன் பணமும், தடைகளும் நொறுங்கி இருப்பதை போராட்டங்களின் வரலாறு சொல்கிறது. பிப்ரவரி 18 இனி வரலாற்றில் கப்பற்படை எழுச்சி தினத்தை மட்டும் சொல்லிச் செல்வதற்கல்ல. டி.ஒய்.எப்.ஐ.யின் மறியல் போரையும் சொல்ல வேண்டும். அடுத்த தலைமுறையும், நாமும் இந்த வரலாற்றுப் பதிவின் மூலம், நமது லட்சியத்தை வென்றெடுக்க முன்னேற வேண்டும். வா தோழா மறியல் களம் அழைக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com