Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2009

பயங்கரவாத வலைப்பின்னல் இப்போது மங்களூரில்
கணேஷ்

தட, தடவென்று ஓடிவந்து பேருந்தைச் சூழ்ந்து கொள்கிறார்கள். உள்ளே உள்ளவர்களுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. வந்த கும்பலில் மொத்தம் 15 பேர். அவர்கள் கைகளிலோ கத்திகள் மற்றும் இரும்புக்கம்பிகள். பேருந்திற்குள் இருந்தவர்கள் அப்பாவி மாணவர்கள். மங்களூர் பி.யு. கல்லூரியைச் சேர்ந்த இவர்கள் மைசூருக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். என்ன என்று கேட்பதற்குள் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பலருக்கு காயங்கள் ஏற்பட்டன. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் மாணவர்கள் ஒரே பேருந்தில் எப்படிப் போகலாம் என்பதுதான் அந்த மத வெறியர்களின் வாதம்.

இது நடந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே அடுத்த தாக்குதல். மங்களூரில் உள்ள மது விடுதிக்குள் இருந்த பெண்களை அடித்து, துரத்தியுள்ளார்கள். பெண்கள் அரை நிர்வாணமாக இருந்தார்கள், அவர்கள் எப்படி மது அருந்தலாம் என்றெல்லாம் அவர்கள் சொன்னதாக செய்திகள் உலாவினாலும், இங்கும் மற்ற மதத்தினருடன் உட்கார்ந்து எப்படி மது அருந்தலாம் என்பதே பிரதானமாக இருந்திருக்கிறது. முதலில் நடந்த சம்பவத்தில் தாக்கியவர்களை வழக்கம்போல் காவல்துறை இன்னும் தேடி வருகிறது. இரண்டாவது சம்பவத்தில் ராமர் சேனை என்ற அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

எடியூரப்பா மட்டும் முதலமைச்சராக இல்லாமலிருந்தால் அவர் செய்திருக்கக்கூடிய முதல் வேலையே சிறைக்குச் சென்று முத்தலிக்கை சந்திப்பதாகத்தான் இருக்கும். இந்த முத்தலிக் ஒன்றும் திடீர் தலைவர் இல்லை. 13 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினரானார். பின்னணி வீரராகவே செயல்பட்டுக்கொண்டிருந்த இவர் 2000க்குப்பிறகு முன்னுக்கு வர முயற்சித்தார். இதற்காக கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக கண்டபடியெல்லாம் பேசினார். வழக்குகள் பதியப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பதவிகள் தேடி வர ஆரம்பித்தன.

2004 ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ்.சின் அடியாள் பிரிவான பஜ்ரங்தளத்தின் தென் இந்திய அமைப்பாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அச்சமயத்தில்தான் சிறுபான்மையினருக்கு எதிராக விஷத்தைக் கக்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அடித்துப் புரண்டு ஓடினார் எடியூரப்பா அவரைப் பார்ப்பதற்கு. யாமிருக்க பயமேன் என்று தயக்கத்தோடு முத்தலிக்கின் காதில் ஓதிய அவர், தற்போது முத்தலிக்கின் கருத்துதான் என்னுடைய கருத்தும் என்று கூச்சநாச்சமின்றி கதைத்துக் கொண்டிருக்கிறார். சிறைக்குள் இருந்தாலும் இதைக்கேட்கும் முத்தலிக்கின் மனம் துள்ளோ, துள்ளு என்று துள்ளிக் கொண்டிருக்கிறது.

பதவி மோகம்

பஜ்ரங் தளத்தில் மேலும் முன்னேற வாய்ப்பு குறைவாக இருப்பது போன்று அவருக்குத் தோன்றியது. மேலும் முன்னேற நினைத்த இவர் தனது ஆதரவாளர்கள் 5 ஆயிரம் பேருடன் கிளம்பிப்போய் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார். ஆனால் பெல்காம் பிரச்சனை கிளம்பியதால் சிவசேனையில் இருப்பது தனக்கு உதவாது என்று முடிவெடுத்த முத்தலிக், தனது ஆதரவாளர்களைக் கலந்தாலோசித்தார். ராமர் சேனா என்ற தனி அமைப்பு உருவானது.

காவிரிப்பிரச்சனை வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்த நேரம். தமிழர்களுக்கு எதிராக வெறியேற்றிக் கொண்டிருந்தார்கள் சில அமைப்பினர். வன்முறையை நிகழ்த்துவது என்றால் அடிக்கரும்பு சாப்பிடுவது போல இந்த ராமர் சேனைக்கு. அவர்களும் களத்தில் இறங்கினார்கள். அயோத்தி ராமருக்கு கன்னட ராமர் வேடம் போட்டு கைகளில் குண்டாந்தடிகளைத் திணித்து விட்டார்கள். அடித்தால் சும்மா நச்சுனு இருக்க வேண்டாமா... தமிழக முதல்வர் கருணாநிதியின் புதல்வி செல்வியின் வீட்டை இந்த ரவுடிக்கும்பல் தாக்கியது. இதிலெல்லாம் கிடைக்காத விளம்பரம் இவர்களுக்கு மதுவிடுதித் தாக்குதல் பெற்றுத்தந்துள்ளது.

பாஜகவுடன் தொடர்பு

வைகைப்புயல் வடிவேலு "சும்மா.." என்று சொல்வாரே, அது மாதிரியானதுதான் எங்களுக்குள் தொடர்பில்லை என்று ராமசேனையும், பாஜகவும் சொல்லிக்கொள்வதாகும். கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பாஜக, பஜ்ரங்தளத்தினர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த 51 வழக்குகளை ஆகஸ்ட் 23, 2007 அன்று விலக்கிக் கொண்டது. ஜன.3, 2009 அன்று கூட இந்த மதவெறிக்கும்பலைச் சார்ந்தவர்கள் மீதான 11 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இவற்றில் ஏராளமான வழக்குகளில் ராமசேனைத் தலைவர் பிரமோத் முத்தலிக் மற்றும் அவரது குண்டர் படைகளும் சம்பந்தப்பட்டிருந்தன. முத்தலிக் மட்டும் 51 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தார். இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகள் இந்தக் கணக்கில் வராது.

திட்டமிட்டே இந்த இந்துத்துவ தலிபான் மயம் அமலுக்கு வந்துள்ளது. வழக்குகள் திரும்பப் பெறப்படுவது மதவெறிக்கும்பலுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. பெரும்பான்மை பலம் பாஜகவுக்கு கிடைத்தவுடன் சகட்டுமேனிக்கு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். முத்தலிக் மீது ஏற்கெனவே பதியப்பட்டுள்ள 45 வழக்குகளோடு 46வது வழக்கு இது என்ற அந்தஸ்தைத் தவிர இந்த வழக்கு அதற்கு மேல் எதையும் சாதிக்கப்போவதில்லை. பாஜகவின் ஆட்சிக்காலத்திலேயே விரைவில் சதம் அடித்து சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தங்கள் எதிரிகள் யார் என்பதையும் இந்த மதவெறியர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியே வருகிறார்கள். சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள் ஆகியோரையே குறிவைத்து தாக்குகிறார்கள். இது ஒன்றும் ஏதோ குறுகிய கால நலனுக்காக நடத்தப்படும் தாக்குதல்களாக வெளிப்படவில்லை. தங்கள் மனதில் ஆழமான வெறுப்புணர்வை ஏற்றிக் கொண்டுள்ளவர்கள்தான் இத்தகைய தாக்குதல்களில் இறங்குகின்றனர். குஜராத்தில் நடந்த இனப்படுகொலையின்போது நடுத்தர மக்களும் வெறியூட்டப்பட்டு தெருக்களில் இறங்கி நரவேட்டை நடத்தினர் என்பது வரலாறு.

ஆபத்தான வலைப்பின்னல்

இதோடு, இந்துத்துவ பயங்கரவாத முகத்தை வெளிக்கொணர்ந்த மாலேகாவ் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ள ராணுவ அதிகாரி புரோகித்துக்கும், ராமர் சேனைக்கும் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலி சாமியார் தயானந்த் பாண்டேயிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் உள்ள உரையாடல்களில் ராமர் சேனைக்கு புரோகித் புகழாரம் சூட்டியுள்ளார். புரோகித் முத்தலிக் சந்திப்பு மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்துள்ளது. கோட்சேதான் முத்தலிக்கிற்கு மானசீகக்குரு. கோட்சேயின் நினைவுதினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் முத்தலிக் புனே செல்வது வழக்கம்.

இந்த பயங்கரவாத வலைப்பின்னல் பெரும் ஆபத்தான ஒன்றாக உருவெடுத்து வருகிறது. புரோகித் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்திருக்கிறார். தாக்குதலுக்கு பயிற்சியும், தாக்கியவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள இடமும் தர வேண்டும் என்றெல்லாம் அவர்களிடம் புரோகித் பேசியுள்ளார். ஒரு நாட்டை சீர்குலைப்பவர்கள் என்றால் உடனே அடைக்கலம் கொடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இதெல்லாம் திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போன்றதுதான்.

விரிந்து பரந்து காணப்படுவதாகத் தோன்றும் இந்த வலையை அறுக்கும் வேலையைச் செய்ய வேண்டிய மத்திய அரசு தேர்தல் வரப்போகிறதே என்று கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து கொண்டுள்ளது. நோய்க்கு அமெரிக்க மருந்துதான் சரியானது என்று மேற்குப்பக்கம் தலைவைத்துப் படுத்திருக்கிறார்கள். கையில் போட அமெரிக்கா ஊசியை எடுத்தால்கூட, விவேக் ஸ்டைலில் "பேன்டையும் இறக்கி விட்டுக்கட்டுமா.." என்று கேட்டு அதிர வைக்கிறார்கள். காலங்கடத்தி விடலாம், அடுத்து வருபவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று இருப்பது பயங்கரவாதத்தை விட மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com