 |
வெண்பதாகையின் கீழ்
பெரணமல்லூர் சேகரன்
ஆண்டுதோறும்
குண்டுதுளைக்காத
கூண்டுக்குள் வீரவசனம்
புள்ளி விவரங்களில்
அள்ளித் தெளிக்கப்படும்
சாதனை முத்துக்கள்
கைத்தட்டுகளும் சாக்லெட்டுமாய்
சுதந்திர தினமும் குடியரசு தினமும்
பயணித்துக்கொண்டு...
கடைச்சரக்கான கல்வி
உடையவர்க்கு மட்டுமாய்...
உலகமயக் கற்கள்
வேலைவாய்ப்பு ஊற்றுக்கண் அடைத்து
பெட்டிக்கடை வைத்தேனும் பிழைக்க
கொட்டிக் கிடக்கும் கனவுகள்
நெட்டித் தள்ள...
வால்மார்ட் வரவுகளோ
விரக்தியின் விளிம்புக்கு
வாலிபனை அழைக்க...
வெந்ததைத் தின்று
விதிவரின் சாக
சதிசெய்யும் ஊடகங்கள்
சிந்தனைச் சிறகை
நிந்தனை செய்தே வெட்டுவதுமாய்...
நீளும் பயணம் காரிருளில்
ஆயினும் வேரில்பழுத்த பலாவென
வர்க்க ஒற்றுமைப் பாடம்
தர்க்கம் புரிந்திட...
இடர்களை இடறி எறிந்து
சுடர்களைக் கரங்களில் ஏந்தி
நாளை விடியலுக்காய்
இன்றைய நெடும்பயணம்
இன்றைய இளைஞனே
திருப்பு முகம் திறவிழி
வெண்பதாகையின்கீழ்
விண்ணதிர முழங்கி வருக!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|