Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஏப்ரல் 2008

தங்கம்: வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: ஏ.எம்.சாலன்

பிரியப்பட்டக் கொச்சுங்குஞ்ஞே நான் ஒரு கதை சொல்லப் போகிறேன். தயாவாய் நீ அதைக் கேட்கணும். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்.

கவிஞர்களெல்லாம் சூழ்ந்து நின்று வாழ்த்தும்படியான உண்டு கொழுத்த உடம்பும், விழியைக் திருப்திப்படுத்தும் அழகும் ஒன்று கலந்த ஒரு கலவையே என்னுடைய தங்கம் என, நீங்கள் கணக்குப் போட்டால் அது ஒரு மாபெரும் தவறாகும். அழகை ஆராதிக்கும் நம் கவிஞர்களில் ஒருவர் கூட என்னுடைய தங்கத்தைக் கண்டிருக்க நியாயம் இல்லை.

என்னுடைய தங்கத்தினுடைய நிறம் சுத்தக் கருப்பு. தண்ணிரில் முக்கியெடுத்த ஒரு தீக்கொள்ளி. அவளுடைய உடம்பைப் பொறுத்த மட்டில் கருப்பு நிறம் இல்லாத ஒரேயொரு பாகம் அவளுடைய கண்ணின் வெள்ளை நிறம் மட்டுமே. பற்களும் நகமும் கூட கருப்புதான் எனில் பார்த்துக் கொள்ளுங்களேன்!

தங்கம் சிரிக்கும் போது அவளுடைய முகத்தைச் சுற்றி ஒரு வகையான பிரகாசம் பிறக்கும். ஆனால் அந்தப் பிரகாசம் இருளைத் திரையிட்டு மறைத்தது போலிருக்கும். கருப்பு நிறச் சிம்னியிலுருந்து சிதறும் வெளிச்சத்தில் காணப்படும் ஒரு வகை கருப்பு. அது மாதிரி. தங்கத்தினுடைய அந்தச் சப்தம் இருக்கிறதே...! அது, அழகானப் பூந்தோட்டத்திலிருந்து பாடும் கருங்குயிலின் இனிய ஒசை ஒன்றுமல்ல! வாஸ்தவத்தின் என்னுடைய தங்கத்தினுடையது கோகிலத்தின் நாதமும் இல்லை.

நிசப்தமான இருளில், நிலவறைக்குள்ளிலிருந்து கொண்டு நல்ல சுக்குப் போல் காய்ந்த கொட்டைகளை முறுமுறு வென்ற சப்தத்தோடு கடிக்கும் கருத்தப் பெருச்சாளியினுடைய சப்தத்தோடு ஏகதேசம் ஒத்துப் போகும் என்னுடைய தங்கத்தின் குரலின் இனிமை.

பவித்திரமான தங்கத்தின் காதலுக்கு ஆளான என்மீது பொறாமையும் அதைவிடக் கொஞ்சம் குறைவான மரியாதையும் என் மீது உங்களுக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியும். இந்தப் பட்டணத்திலுள்ள கண்மணிகளைப் போன்ற பெண்கள் அனைவரும் என்னை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என, நினைத்து ஜன்னலின் அருகே ஆவலோடு காத்து நிற்பதைத் காணலாம். அந்த வேளையில் சர்வ சுகங்களையும் வெறுத்துத் தள்ளிவிட்டு ஒரு சந்நியாசியைப் போல் கண்ணைப் பாதி மூடிக் கொண்டு நேராகப் பார்த்த வண்ணம் நான் நடந்து செல்வேன்.

இப்படியெல்லாம் அபிமானத்தோடு சொல்ல, எனக்கு ரொம்ப ஆசைதான். ஆனால் என்ன செய்ய? பொய் சொல்லக்கூடாது, என்பதெல்லவா கடவுள்களின் உபதேசம். உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டுமானால் எனக்கு ரெண்டு கால்கள் உண்டு. ஆனால், அவைகளில் ஒன்றுக்குக் கொஞ்சம் நீளம் கூடுதல். வேலிக்காக நாட்டப்பட்டுக் காய்ந்து சுருங்கிப் போன கம்பு மாதிரி இருக்கும், அது. கட்டைக்கம்பின் துணையோடு தரதரவென உரசியவாறுதான் போவேன். பார்த்தால், அந்தத் தடம் மணல்தரையின் மீது கயிறு கட்டி இழுத்துத் சென்றிருப்பது போல் தோன்றும். அதன் ஒரு கோடியில் நின்று பார்த்தால், உங்களுக்கு என்னைப் பார்க்க முடியும்.

வெளியே, சாக்கில் கட்டித் தூக்கியிருக்கும் சக்கைப் பொதிபோல் என் முதுகின் மேல் ஒரு கூன் உண்டு. என்னுடைய தலையைப் பார்த்தால் அசல் பூசணிக்காய் மாதிரியே இருக்கும். பிளந்த மோட்டார் டயர் போல் எனக்கு இரண்டு உதடுகள்! அலங்காரமாக! அதனுடைய ஒரு முனையில் எப்போதும் ஒரு பீடித்துண்டு புகைந்து கொண்டிருக்கும். ரெண்டு கண்கள் இருந்தாலும் கூட, அவைகள் வெவ்வேறு கோணத்தில் அமைந்தவை. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், கண்கள் இரண்டுக்கும் ஒற்றுமை கிடையாது. ஒரு கண், நேரே கிழக்காலே நிற்கக்கூடிய கம்பியின் கால் என்றால், அடுத்தது நாக்கை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டு வாலைச் சுருட்டியவாறு வடக்கே இருந்து பாய்ந்து வரும் தெரு நாயைப் போன்று இருக்கும்.

தங்கம் சில வேளைகளில் சொல்வதுண்டு, அதாவது ஒரு கண்ணினால் நான் தங்கத்தைப் பார்க்கும் போது, மறுகண்ணின் உதவியோடு அடுக்களைக்குள்ளிருக்கும் பானைக்குள் தலையை நுழைக்கும் திருட்டுப் பூனையைக் காண முடியும் என. என்னுடைய குரலைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இதுவரையில் எந்தவொரு குறையும் இருப்பதாக எனக்குத் தோன்றியது கிடையாது. திடீரென்று வெளியே தெருவில் கழுதை நின்று கனைத்தால் தங்கம் தட்டியாலானக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்ப்பாள்.

ஒரு முறை நான் இதைப்பற்றி தங்கத்திடம் கேட்ட போது அதற்கு தங்கம் இவ்வாறு பதில் சொன்னான். “அந்தச் சத்தத்தைக் கேட்டதும், நான் நீங்கதான் பாடிக்கிட்டு வாரீங்கன்னுலா நெனச்சுட்டேன் என.’’ ஆக, இப்போது என்னைப்பற்றிய அழியாத ஒரு சித்திரம் உங்களுடைய மனத்திரையில் பதிஞ்சிருக்கும்னு நான் நினைக்கிறேன். இனி, எங்கேயாவது பாதையில் வைத்து என்னைக் கண்டால் கண்டது மாதிரி காட்டிக் கொள்ளாமல் நீங்கள் போகமாட்டீர்கள் என, எனக்குத் தெரியும்.

என்னைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் எனக்கொன்று பிரத்தியேகமாக வேலை ஒன்றும் கிடையாது. தெருத்தெருவாகச் சென்று பிச்சை எடுப்பேன். அவ்வளவுதான்! தங்கத்திற்கு பக்கத்து வீட்டில் முற்றத்தைப் பெருக்கிச் சுத்தப்படுத்தும் வேலை. ஒரு நாள் காலையில் அவள் வேலை செய்யும் வீட்டு முதலாளியின் மகன், படுக்கையை விட்டு எழுந்து கண்ணைக் கசக்கியவாறு வெளியே வந்த போது, தங்கத்தைக் கண்டு பயந்து போனானாம் ! அதன் காரணமாக மறுநாளே அவளை வேலையிலிருந்தே நீக்கி விட்டார்களாம்.

இப்போது தங்கம், ஒரு வாழைத் தோட்டத்தைக் காவல் காத்து வருகிறாள். ஆடு, மாடுகள் தோட்டத்தினுள்ளே நுழைந்து விடாமல் பார்த்துக் கொள்வது தான், அவளுடைய பொறுப்பு. சில வேளைகளில் வாழை இலைகளையும், வாழைத்தாரையும் சேகரித்துக் கட்டி கடைகளில் கொண்டு கொடுத்து விட்டு வருவாள்.

தங்கமும் நானும் முதன் முதலாகச் சந்தித்தது, ஆடிமாத அமாவாசையில் “சளசள’’ வென மழை பெய்து கொண்டிருந்த ஓரிரவு வேளையாக இருந்தது. வழக்கம் போல, நான் அன்னிக்கும் வேலைக்குப் போயிருந்தேன். கிடைத்த ஒன்றிரண்டு செம்புகாசுகளை துணியில் முடிந்து வைத்துக் கொண்டேன். பொழுது இருட்டி விட்டது. ஒரு ஹோட்டலிருந்து கிடைத்தத் சோத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டு பக்கத்திலிருந்த ஒரு பெரிய பங்களாவின் முற்றத்தில் போய் சுருண்டுக் கிடந்தேன்.

பயங்கர மழை. கூடவே, காற்றும் வீசிக் கொண்டிருந்தது. இடைக்கிடையே அந்தப் பங்களாவுக்குள்ளிருந்து இனிய சங்கீதம், கேட்டுக் கொண்டிருந்தது. அதனூடே கலகலவென்று சிரிக்கும் ஓசையும் கேட்டது. வாழ்க்கையினுடைய ஆனந்தமயமானச் சூழல் என் சிந்தனையைத் தூண்டிற்று. உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் என்னைப் போல் வறுமையின் பிடிக்குள் அகப்பட்டு உழலும் போது, சிலர் மட்டும் உலகின் ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள் ! இந்த வேறுபாட்டிற்குரிய காரணம் என்ன? நான் சிந்தனையில் ஆழ்ந்து கிடந்தேன். அப்படியே கொஞ்ச நேரம் படுத்திருக்க, நான் தூங்கிப் போனேன்.

திடீரென்று ஒரு அரவமும், அதைத் தொடர்ந்து கண் கூசும்படியான வெளிச்சமும் வரவே, நான் பதட்டத்தோடு எழுந்து பார்த்தேன். அருகில் ஒரு கார்! காரிலிருந்து இரண்டு பேர் இறங்கினார்கள். பெரிய எஜமானனும், சின்ன எஜமானனும். பெரிய பணக்காரர்கள். அந்தப் பங்களா அவர்களுடையதாக இருந்தது.

“யாரது?’’ சின்ன எஜமான் என்னை பார்த்துக் கர்ஜித்தார். நான் பதிலொன்றும் பேசாமல் இருந்தேன்.

“படுத்துட்டுப் போகட்டும், மகனே. பாவம்! பாவம் !’’ பெரிய எஜமான் கருணையோடு சொன்னார்.

“...ம், பாவம் ! அப்பாவுக்குப் பார்க்கக் கூடியதெல்லாம் பாவமாகத்தான் தெரியும். இவனைப் பார்த்தா பெரிய திருடனா இருப்பான் போலிருக்கு!’’ என்று சொல்லியவாறு, சின்ன எஜமான் தன் கையிலிருந்த டார்ச் லைட்டை என் முகத்துக்கு நேராக அடித்தான். பிறகு, என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு அலறினான். “எறங்குடா, வெளியே. உம், எறங்கிப் போ.’’

“அய்யா, இது உங்க வீடா?’’ நான் தாழ்மையோடு கேட்டேன். அய்யா, நான் நாலு வீட்ல எரந்து பிழைக்கக் கூடியவன். திருடன் ஒன்றுமல்ல. இந்தப் பெருமழையில நான், எங்கே போவேன். என்னால நடக்கவும் முடியாது.

சின்ன எஜமான் சீ, கழுதை எறங்குடா வெளியே. பிச்சைக்கார நாய்களுக்கெல்லாம் வந்து தங்குற எடமா, இது? ஏதாவது ஒரு வேலை செய்து பொழைக்கிறதுக்குள்ள வழியைப் பார்க்காம தெண்டி நடக்குற பொறுக்கிகள் ! உம், எறங்கிப் போ. நான் மெல்ல நகர்ந்து கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தேன். இருட்டில் பேய்த்தனமாக பெய்து கொண்டிருந்த மழையைப் பார்த்தவாறு பயந்து போய் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சின்ன எஜமான் சற்று முன்னால் வந்து தன் கையிலிருந்த தங்கப் பூண் பொருத்திய கம்பு கொண்டு என் மீது ஓங்கி மூணு அடி அடித்தார். வலி பொறுக்க முடியாமல் நான் அழுதேன்.

“ஸ்ஸ்... வேண்டாம் மகனே ! பாவம். அவனை அடிக்காதே’’ பெரிய எஜமான் குறுக்கே வந்து தன் மகனை தடுத்தார்.

“அப்பா, உங்களுக்கு ஓண்ணும் தெரியாது ! நீங்க சும்மா இருங்க.’’ என்று சொல்லியவாறு பூட்ஸ் அணிந்த தன் கால்களினால் என்னை ஓங்கி மிதித்து வெளியே தள்ளினார்.

நான், நனைந்து போயிருந்த என் கால்களை தரையில் போட்டுத் தரதரவென இழுத்தவாறு மெல்ல இழைய ஆரம்பித்தேன். நேரம் ஒரு பாடு ஆகியிருந்தது. மழையும் ஓய்ந்தபாடில்லை. பல இடங்களிலும் ஏறி இறங்கிப் பார்த்தேன். வெறி நாயைத் துரத்துவது போல, என்னை எல்லாரும் துரத்தியடித்தார்கள். கடைசியில் அந்த நகரத்தை விட்டு வெளியே வந்தேன். தட்டுத் தடுமாறி நான் போய்க் கொண்டிருந்த போது ஒரு வெளிச்சத்தைக் கண்டேன். தட்டியாலான கதவினூடே எனக்கு அதை நன்றாகப் பார்க்க முடிந்தது. என்ன வந்தாலும் பரவாயில்லை என, எண்ணியவாறு நான் தட்டிக் கதவின் மீது தட்டி அழைத்தேன்.

யாரது? உள்ளேயிருந்து ஒரு குரல் வந்தது. நான் தான். ஒரு பாவப்பட்டவன். வெளியே நல்ல மழை. நனைஞ்சு போனேன். ஒதுங்க எடமில்ல. ஒலைத் தட்டிக் கதவைத்திறந்து யாரோ வெளியே வந்தார்கள். நான் சற்று முன்னால் நகர, வழியில் கிடந்த ஒரு குடத்தின் மீது என் கால்தட்டியதால் நான் குப்புறப் போய் விழுந்தேன். கண்களைத் திறந்து பார்த்த போது ஒரு கிழிந்து போன பாயில் நான் படுத்திருந்தேன். அருகில் ஒரு கட்டு நார் வைக்கப்பட்டிருந்தது. எதிரே சுவரில் சாய்ந்து நின்றவாறு ஒரு இளம் பெண்.

நான் அவள் முகத்தைப் பார்த்த போது, கண்ணீர் மல்க அவள் ஆவலோடு என்னையே இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் மெல்ல எழுந்து உட்கார்ந்தேன். தங்கத்திடம் நடந்த கதைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னேன். அதைக் கேட்டுத் தங்கம் அழ பின்னர் நானும் அவளும் சேர்ந்து கொஞ்ச நேரமாக அழுதோம்.

அழாதீங்க, தங்கம் பெருமூச்சு விட்டவாறு சொன்னாள். நானும் உங்கமாதிரி தனிக்கட்டை தான். போனமாசம் எங்கம்மா இறந்து போச்சு. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா எங்கூடயே நீங்க தங்கிக்கலாம். இப்படித்தான் நானும் தங்கமும் சேர்ந்து வாழ ஆரம்பித்தோம். மாசம் ஒன்னு கழிந்த போது உசுருக்கு உசுராக என் மீது அன்பு செலுத்திய தங்கம் என்னுடைய வாழ்க்கைத் துணைவியாக சம்மதித்து விட்டார்.

நாங்கள் இருவரும் இப்போது சேர்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொன்கதிர்கள் விரியும் அதிகாலை வேளையில் பூஞ்சிறகுகளை விரித்துக் கொண்டு பாடிப் பறக்கிற இரண்டு பச்கைக்கிளிகளைப் போல நாங்கள் இருவரும், இப்போது! ஆமாம், எனக்கு மட்டும் சொந்தமான தங்கம், தனித்தங்கமேதான். வானவில்லைப் போல் பொன்னிற ஆடை அணிந்த வசந்தகால விடியல் அவள்.

(நன்றி: சௌந்தர சுகன்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com