Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
செப்டம்பர் 2008
அத்தியாயம் 5

மதவாதமயமாகும் நடுத்தர வர்க்கம்


சமூக பொதுப் புத்தி எனும் பெரும் கட்டமைப்பின் மீது தான் மதவாத அரசியல் கம்பீரமாய் அமர்ந்துள்ளது. வரையறுக்கப்பட்ட இலக்குகள் நோக்கிய இந்த பொதுப் புத்தியில் கருத்துக்கள் தயாரிக்கப்பட்டு ஏவப்படுகின்றன. சிறுபான்மையினர் மீது தொடர்ந்து ஏவப்படும் வன்முறை, அவர்கள் மனித மாண்பற்ற முறையில் நடத்தப்படுதல் என இவை அனைத்தையும் கண்டும் காணாமல் குடிமைச் சமூகத்தில் நிலவும் மிகப் பெரும் அமைதி கூட, இத்தகைய அநீதிகளுக்கு வழங்கப்படும் ஒரு வித அங்கீகாரமே. நாம் மறுக்க முடியாத அளவுக்கு, இத்தகைய தன்மை பொதுப்புத்தியில் பரவியுள்ளது. இது தொடர்பான சில எடுத்துக்காட்டுகள்:

கோயில்கள் தகர்ப்பு

முதலில் கோயில் தகர்ப்புகள் குறித்து மக்களிடையே நிலவும் செய்திகளை நாம் புரிந்து கொள்ளலாம். இந்து மதத்தினரை ஆத்திரமூட்ட இந்து கோயில்கள் தகர்க்கப்பட்டனவா? முதலில் முகம்மது கஜினி, சோம்நாத் கோயிலை தகர்த்ததை எடுத்துக் கொள்வோம். ஆப்கானிஸ்தானில் உள்ள ஊரின் பெயர் கஜ்னா. அந்தப் பகுதியை சேர்ந்த முகமது கஜினி ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தார். அவர் கஜ்னாவிலிருந்து சோம்நாத்துக்கு பெரும் பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். வரும் வழி நெடுகிலும் ஏராளமான இந்து கோயில்கள் இருந்திருக்க வேண்டும். வரும் வழியில் இருந்த எந்த இந்து கோயிலையும் அவர் ஏன் இடிக்கவில்லை என்பதுதான் நம் கேள்வி. கட்டாயம் அவர் ஆப்கானில் உள்ள பாமியன் புத்த கோயிலை அறிந்திருப்பார். அவர் அதனை ஏன் தகர்க்கவில்லை? அவர் ஏன் சோம்நாத் ஆலயத்தை மட்டும் தேர்வு செய்தார்?

கஜினி சோம்நாத்தை நோக்கிப் பயணித்த நேரத்தில், அவர் முல்தான் நகரத்தை கடந்து வந்தார். அப்போது முல்தானில் நவாப் அப்துல் பத் தவுத்திடம் சோம்நாத் செல்வதற்கு, அவரது நகரத்தை கடந்து செல்ல அனுமதி கேட்டார். அப்துல் பத் தவுத் அனுமதியளிக்க மறுத்தார். உடனே நிகழ்ந்த சண்டையின் போது, முல்தான் நகரத்திலிருந்த ஜாமா மசூதி தகர்க்கப்பட்டது. கஜினியை இஸ்லாத்தின் பாதுகாவலராகக் கருதுபவர்கள் இதனை சற்று உற்றுப் பார்க்க வேண்டும். சோம்நாத் செல்லும் வழியில் கஜினி ஜாமா மசூதியை எப்படி தயக்கமின்றி தகர்த்தார்? முல்தானை அடுத்து அவர் தானேஸ்வர் நகரத்துக்கு வந்து அதன் மன்னர் ஆனந்தபாலிடம் ஊரை கடக்க அனுமதி கேட்டார். அவர் உடனே சம்மதித்தார்.

கஜினி சோம்நாத் கோயிலை இடிப்பதற்கு முன்பாக அங்கிருந்த செல்வங்கள் அனைத்தையும் கையகப்படுத்திக் கொண்டார் என்ற உண்மை பலரும் அறியாத தகவலாகவே உள்ளது. பழங்காலத்தில் கோயில்களில் தான் ஏராளமான செல்வங்கள் குவிக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சோம்நாத் கோயிலில் இருந்த வைரங்கள், தங்கம், வெள்ளி என எல்லாம் 200 கோடி ரூபாய் மதிப்புடையது. அதனை கஜினி
கொள்ளையடித்துச் சென்றார். இஸ்லாம் உருவ வழிபாட்டை ஏற்பதில்லை என்பதால், அவர் சோம்நாத் கோயிலை இடித்தார். கஜினி இஸ்லாம் மதத்தின் காவலர் எனில், ஏன் அவர் வரும் வழியில் இருந்த மற்ற இந்து கோயில்களை எல்லாம் இடிக்கவில்லை?

அவர் ஏன் முல்தான் ஜாமா மசூதியை இடித்தார்? முகம்மது கஜினியின் படையில் மூன்றில் ஒரு பங்கு வீரர்கள் இந்துக்களாக இருந்தனர். அவரது படையின் தளபதிகள் 12 பேரில் 5 பேர் இந்துக்கள். திலக், சோந்தி, ஹர்ஜன், ரன், ஹிந்த் ஆகியவை அந்த தளபதியின் பெயர்கள். சோம்நாத்தை வென்ற பிறகு அவர் அந்தப் பகுதியை ஓர் இந்து அரசரின் கட்டுப்பாட்டில் வைத்தார். சமஸ்கிருத எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புதிய நாணயத்தையும் கஜினி அங்கு அறிமுகம் செய்தார்.

வரலாற்று நிகழ்வுகளின் முழு பரிணாமத்தையும் நாம் அறியாமல், எதை எதையோ பேசிக் கொண்டிருகிறோம். அவை அனைத்தும் தெளிவான, விவாதிக்கப்பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட தரவுகள் தானா என்பதைக் கூட நாம் அறிய முற்படுவதில்லை. அந்த காலத்தில் மன்னர்கள் தங்கள் ராஜ்ஜியத்தின் தேவைகளுக்கு ஏற்ப செல்வங்களைப் பெருக்குவதற்கு, மதத்தையே முக்கிய கருவியாகப் பயன்படுத்தினர். முற்காலத்தில் அரசவைக் கவிஞர்கள் மன்னரின் அனைத்து செயல்களையும் புகழ்ந்து பாடல்களை இயற்றினார்கள். அதனால் தான் மன்னர்கள் உயர்ந்த மதப் பற்றாளர்களாக, ‘புனித ஆத்மா'க்களாக சித்தரிக்கப்பட்டனர்.

இப்பொழுது நாம் பதினோறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காஷ்மீரின் ராஜா ஹர்ஷ் தேவ் குறித்த செய்திகளைப் பார்க்கலாம். அவரது அரசவைக் கவிஞர் கல்ஹான் ‘ராஜதரங்கினி' என்ற நூலை எழுதினார். அதில் அவர் -ராஜா ஹர்ஷ்தேவ் தன் அரசவையில் ‘தேவோத் பனாயக்' என்கிற புதிய பதவியை ஏற்படுத்தியது குறித்து எழுதியுள்ளார். கோயில்களுக்குச் சென்று அங்கிருக்கும் கடவுள் சிற்பங்களை எடுத்து வருவது தான் அவரது வேலை. அது ஏதோ கற்சிலைகள் மீது அந்த மன்னர் விருப்பம் கொண்டது குறித்த தகவல்கள் அல்ல. அவர் வைரங்கள், வைடூரியங்கள் பதித்த தங்கச் சிலைகளை அப்புறப்படுத்தி எடுத்து வருவதற்காகத்தான் அரசவையில் பொறுப்பாளரை நியமித்திருந்தார்.

அதே போல் திப்பு சுல்தான் மீது மராத்தியர்கள் படை எடுத்தார்கள். அந்தப் போரில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆனால் மராத்தா படை சிறீரங்கப்பட்டிணத்தில் இருந்த இந்து கோயிலை தரைமட்டம் ஆக்கியது. திப்பு சுல்தான் உடனே அந்த கோயிலை சீரமைத்தார். மராத்தா படை ஓர் இந்து படை தானே? ஏன் அவர்கள் இந்து கோயிலை தகர்த்தார்கள்? அவர்கள் தங்களால் ராஜ்ஜியத்திற்குள் நுழைந்து ஒரு கோயிலைத் தகர்க்க இயலும் என்பதை நிரூபிப்பதற்கே இதை செய்தார்கள். திப்பு ஏன் அந்த கோயிலை சீரமைத்தார்? திப்பு இதன் மூலம், தான் அனைத்து மதங்களையும் மதிக்கக் கூடியவர் என்பதை உலகுக்கு உணர்த்தினார். எந்த மன்னரும் தன் குடிகளின் நன்மதிப்பைப் பெறாமல் தொடர்ந்து ஆட்சி செய்ய இயலாது.

நீங்கள் யாரிடமாவது இந்தியாவை ஆண்ட கொடூரமான மன்னன் யார் என்று கேட்டால், உடனே பதில் அவுரங்கசீப் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் பாகிஸ்தானில் மதவாத வரலாற்றாசிரியர்கள், அவுரங்கசீப்பை இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் அரசராகக் குறிப்பிடுகிறார்கள். அப்படியெனில், இந்தக் கூற்றுகளில் எது உண்மை? அவுரங்கசீப் இந்த நாட்டை நீண்ட காலம் ஆண்டார். அவரது காலத்தில் பல மசூதிகளும், கோயில்களும் இடிக்கப்பட்டன. பல புதிய கோயில்களையும், மசூதிகளையும் அவர் கட்டினார். பல கோயில்களின் பராமரிப்புக்கு ஜாகிர்களும் வழங்கினார்.

கோல்கொண்டா நவாப், சில காலம் அவுரங்கசீப்புக்கு கப்பம் கட்ட மறுத்தார். சில காலத்துக்குப் பிறகு தனது ஒற்றர்களை அங்கு அனுப்பினார் அவுரங்கசீப். அங்குள்ள மசூதிக்கு அடியில் ஏராளமான செல்வங்களை அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மசூதியை தகர்த்து செல்வங்கள் அனைத்தையும் தில்லி கொண்டு வர உத்தரவிட்டார். இதே அவுரங்கசீப் காசி -விருந்தாவன் கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை வழங்கினார். முக்கிய வரலாற்று அறிஞர் முனைவர் விஸ்வாம்பர் நாத் பாண்டே இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். அவுரங்கசீப்பின் ஆட்சிப் பகுதியில் இருந்த ஒரு கிருஷ்ணன் கோயிலுக்கு, ஏராளமான தங்க நகைகளை அவர் வழங்கினார். அந்த நகைகள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

டாக்டர் பட்டாபி சீதாராமையர் தனது ‘இறகுகளும் ஒரு கல்லும்' என்கிற நூலில் வேதனையான கதை ஒன்றை குறிப்பிடுகிறார். தில்லியிலிருந்து கல்கத்தாவுக்கு அவுரங்கசீப் தனது படை பரிவாரங்களுடன் பயணித்தார். அவருடன் பல இந்து அரசர்களும், அரசிகளும் பயணித்தனர். அவர் பரிவாரங்களுடன் காசியை வந்தடைந்த போது, அரசிகள் அன்று இரவு காசியில் தங்கிவிட விருப்பம் தெரிவித்தனர். காசியில் நீராடி காலை
விஸ்வநாதனை வணங்கிவிட்டு பயணத்தைத் தொடரலாம் என்றதும் அவுரங்கசீப் அதற்கு சம்மதித்தார். அடுத்த நாள் காலை அரசிகள் அனைவரும் நீராடிவிட்டு விஸ்வநாதனை தரிசிக்கச் சென்றனர்.

அவர்கள் திரும்பும் வழியில் தான் அவர்களுடன் இருந்த ‘கட்ச்' மகாராணியை காணவில்லை என்பதை கவனித்தனர். நீண்ட தேடலுக்குப் பிறகுதான் கட்ச் ராணியை அவர்கள் கண்டுபிடித்தனர். விஸ்வநாதன் கோயில் கருவறையில் உள்ள விக்ரகத்தின் அருகிலேயே கட்ச் ராணியை அந்த கோயில் தலைமை பூசாரி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது தெரியவந்தது. மொத்த பரிவாரமும் அனலாய் தகித்தது. அந்த தலைமை பூசாரிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. கோயில் தீட்டுப்பட்டு விட்டதால் உடனே கோயில் விக்கிரகத்தை அப்புறப்படுத்தி, புதிய கோயிலில் வைக்கும்படி அவுரங்கசீப் உத்தரவிட்டார். அதற்கான மொத்த செலவையும் அவுரங்கசீப் வழங்கினார். பாட்னா அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பி.எல். குப்தாவும் இதனை உறுதிப்படுத்துகிறார்.

முகலாய மன்னர்கள் இங்கிருந்த சமூகக் கட்டமைப்புகளில் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்து விடவில்லை என்பதையும் இது நமக்கு உணர்த்துகிறது. முகலாய நிர்வாகத்திலும் ஏராளமான இந்துக்கள் இருந்தனர். அக்பரின் நிர்வாகத்தில் இருந்த ஒன்பது நபர்களில் இருவர் இந்துக்கள்-பீர்பால், தோடர்மால். ஷாஜகானின் நிர்வாகத்தில் 24 சதவிகிதம் இந்து மன்னர்கள்தான் இருந்தனர். அது பின்னர் அவுரங்கசீப் காலத்தில் 34 சதவிகிதமாக உயர்ந்தது. சுபத்வர்மன் என்கிற மன்னன் ஏராளமான சமண தளங்களை இடித்தது பற்றிய செய்திகளையும் நாம் காண்கிறோம்.

சாசன்க மன்னன் போதி மரத்தை வெட்டியது குறித்த தரவுகளும் நமக்கு கிடைத்துள்ளன. தமிழகத்திலும் ஏராளமான பவுத்த, சமண தளங்கள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. இன்றும் சமண, பவுத்த தலங்கள் பல கல்குவாரிகள் என்றபெயரில் தகர்க்கப்பட்டு வருகின்றன. மன்னர்கள் அனைவரும் மதத்தைத் தான் பெரும் அளவுகோலாகக் கருதியுள்ளனர். இந்து மன்னர்களில் பலர் இந்து கோயில்களை இடித்தார்கள். முஸ்லிம் மன்னர்கள் பல மசூதிகள் மற்றும் கோயில்களையும் இடித்தார்கள்.

இந்து -முஸ்லிம் மன்னர்களிடையிலான போர்கள்

இந்துக்களும் முஸ்லிம்களும் தொடர்ந்து போரிட்டார்கள் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் கூறப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை காண்போம். ராணா பிரதாப் துணிவுடைய, பெரும் இந்து மன்னனாக சித்தரிக்கப்படுகிறார். அவர் தொடர்ந்து முஸ்லிம் மன்னர்களுடன் போரிட்டார். அவர் ஏன் அக்பருடன் போரிட்டார்? அந்தப் போர் எவ்வாறு தொடங்கியது? அந்தப் போரில் அக்பர் சார்பாக ராஜா மான் சிங் தான் போரிட்டார். அவருக்கு ஷாசாத் சலீம் உறுதுணையாக இருந்தார். ராணா பிரதாப்பின் படைகளில் ராஜ்புத் சிப்பாய்கள் இருந்தனர். சலீமின் படைகளில் முஸ்லிம் சிப்பாய்கள் இருந்தனர். ராணா பிரதாப்புக்கு பக்கபலமாக இருந்தவர் ஹக்கீம் கான் சுர். ஹக்கீமின் படையில் முஸ்லிம் சிப்பாய்கள் இருந்தனர். ஆக, போர்க்களத்தில் இரு பக்கங்களிலுமே இந்து -முஸ்லிம் சிப்பாய்கள் மற்றும் தளபதிகள் இருந்தது இதிலிருந்து உறுதியாகிறது.

இந்தப் போர் மத அடிப்படையில் நிகழவில்லை. மாறாக, பதவிக்காக நிகழ்ந்தது. அக்பர் தனது ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தும்போது அரசர்களுக்குப் பல பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் ராணா பிரதாப்புக்கு ‘பஞ்ச் ஹஜாரி' பட்டத்தை வழங்கினார் (5000 படை வீரர்களை வைத்துக் கொள்ளும் அனுமதி). ஆனால் ராணா பிரதாப் ‘தஸ் ஹஜாரி' பட்டத்தை கோரினார் (10,000 படை வீரர்கள்). இதற்காகத்தான் அந்தப் போர் நடந்தது. ஆனால் பின்னாட்களில் ஜகாங்கீர் ராணா பிரதாப்பின் மகன் அமர்சிங்குக்கு ‘தஸ் ஹஜாரி'
பட்டத்தை வழங்கினார். அமர் சிங் ஜகாங்கீரின் நெருங்கிய சகாவாகத் திகழ்ந்தார். ஆனால் இந்த வரலாற்றை மதவாதிகள் காமாலை கண்களுடன் தான் பார்க்கின்றனர். திரிக்கப்பட்ட வரலாற்றுப் பார்வையே அவர்களை ஆக்கிரமித்துள்ளது.

இதே போல் சிவாஜியையும் முஸ்லிம் எதிர்ப்பாளர் போலவே சித்தரித்துள்ளனர். இதுவும் உண்மை அல்ல. சிவாஜியின் படையில் ஏராளமான முஸ்லிம்கள் இருந்தனர். அதுவும் குறிப்பாக கப்பல் படையில் சிவாஜிக்கு மிக நெருக்கமான தளபதி சித்திசாம்பல்; அவரது தனி செயலர் மவுலானா அய்தர் அலி. சிவாஜி ஆக்ரா சிறைவாசத்திலிருந்து தப்பிக்கக் காரணமாக இருந்தவர் முஸ்லிம் இளவரசர் மதாரி மெஹ்தர். அபி சாமியார் ஹஜ்ரக் பாபா பாத்துர்வாலா மற்றும் சூரத்தை சேர்ந்த பாதிரியார் ஆம்ப்ரோஸ் மீது மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார் சிவாஜி. அவரது ராய்கட் கோட்டையில் அவர் ஜத்தீஸ்வர் கோயில் கட்டினார். அதன் அருகில் மசூதி ஒன்றையும் கட்டினார். போர்கள் மற்றும் கொள்ளைகளின் போது கூட மத நூல்கள் இருந்தால், அதை உடனே ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சிவாஜி தன் படையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஒரு முறை கல்யாண் பகுதியை கொள்ளையடிக்கச் சென்ற படைகள் அங்கிருந்த கல்யாண் சுபேதாரின் மருமகளான ஓர் அழகிய பெண்ணைக் கடத்தி வந்து சிவாஜிக்கு பரிசளித்தனர். மற்ற மன்னர்களைப் போல் சிவாஜி நடந்து கொள்ளவில்லை அவருக்கு இது பெரும் ஆத்திரத்தை மூட்டியது. அவர் இந்தப் பெண்ணை தன் தாயுடன் ஒப்பிட்டுப் பேசினார். உடனே அந்தப் பெண்ணை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். இப்படியொரு நபராக திகழ்ந்த சிவாஜியை, நாம் முஸ்லிம் எதிர்ப்பாளராக சித்தரிப்பது தகுமா?

மத மாற்றங்கள்

இஸ்லாம் தன்னை வாளின் துணையுடன் தான் பரவலாக்கிக் கொண்டதாக நம்பப்படுகிறது. ஆனால் நாம் சற்று சிந்திக்க வேண்டும். மதம் என்பது மனிதனின் தனிப்பட்ட நம்பிக்கை / விருப்பம் சார்ந்தது. மத மாற்றத்தை வலிந்து செய்ய இயலுமா? மதத்தை எப்படி விரிவாக்க இயலும்? பலத்தின் மூலமாகவா? அன்பின் மூலமாகவா? வரலாற்று நெடுகிலும் பல மன்னர்கள் தங்கள் ஆட்சிப் பரப்பை மதத்தின் பெயரால், புனிதப்போரால், தர்மயுத்தத்தால், ஜிகாத்தின் பெயரிலா விரிவாக்கினார்கள். ஆனால் இந்த மன்னர்களுக்கு மதமாற்றம் என்பது நோக்கம் அல்ல. வரலாற்றில் ஒரு மன்னர் மட்டுமே தனது நிர்வாகத்தை, மதத்தை விரிவாக்கும்படி உத்தரவிட்டார். அவர் சாம்ராட் அசோகர். அவர் கலிங்கப் போருக்குப் பின் பவுத்தத்தை தழுவினார். பின்னர் பவுத்தத்தை பரப்ப கட்டளையிட்டார்.

இஸ்லாம் இந்தியாவில் மூன்று வழிகளில் பரவியது. தங்களை ஆட்சி செய்பவர் முஸ்லிம் மன்னராக இருக்கும் பட்சத்தில் பயத்தில் மதம் மாறுவது. அப்படி மாறினால் தான் தனக்கு பதவி உயர்வுகள் கிட்டும். இஸ்லாத்தின் படிப்பினைகளை கேட்டு சிலர் தாங்களõகவே மாறினார்கள். இந்த காரணங்களால் மதம் மாறியவர்கள் மிகச் சிலரே. பெரும்பான்மையினர் (90 சதவிகிதம்) சுபிக்களின் மனிதாபிமான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு மாறினார்கள். இந்து மதம் மனிதர்களிலும் கீழாக மதித்த தலித்துகளில் பலர், சமூக அந்தஸ்து கருதி மதம் மாறினார்கள். முகலாய ஆட்சி எட்டிக் கூட பார்க்காத வங்கம், கேரளா ஆகிய பகுதிகளில் தான் அதிகப்படியானவர்கள் இஸ்லாத்தை தழுவினர்.

பார்ப்பனர்கள், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் பிடியிலிருந்து தப்பவே சூத்திரர்கள் அவசர கதியில் மதம் மாறினார்கள். 1956இல் அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மதம் மாறியது தான் இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப் பெரும் மதமாற்றச் செயல்பாடு. பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பின் கட்டுமானத்தின் பிடியிலிருந்து தங்களை விடுவிக்கவே அது நிகழ்த்தப்பட்டது.

இதுபோலவே இன்று கிறித்துவர்களின் மத மாற்றம் குறித்த கதையாடல்களை நாம் கட்டுடைக்க வேண்டும். அரசாங்கத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்புகள், நமக்கு பல உண்மைகளைத் தெரிவிக்கின்றன. 1971 கணக்கின்படி, கிறித்துவர்களின் மக்கள் தொகை 2.60 சதவிகிதம்; 1981இல் அது 2.44 சதவிகிதமாக குறைந்தது; 1991இல் 2.32 சதவிகிதமாக இன்னும் குறைந்தது. 2001இல் அது 2.18 சதவிகிதமாக ஆனது. கட்டாய மதமாற்றத்தில் கிறித்துவர்கள் ஈடுபடுவதாக நாம் நம்பினால், பின்னர் எப்படி அவர்களின் மக்கள் தொகை இப்படி குறைந்து கொண்டே செல்லும்?

கி.பி 52 இல் கிறித்துவம் புனித தோமையரின் வருகையுடன் இந்தியாவுக்கு வந்தது. அப்படியெனில் இந்தியாவில் அதன் வயது 1950. கிறித்துவப் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த வாதா கமிஷன் தெளிவாகக் கூறியது. ஒரிசாவில் கிடைத்த புள்ளி விவரங்களின் படி, அங்கு கிறித்துவ மக்கள் தொகையில் எந்த பெரும் ஏற்றங்களும் இல்லை. அந்த பாதிரியார் மற்றும் அவரது சகாக்கள் வெறும் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடவில்லை. சில தனி நபர்கள் சிறு சிறு நடவடிக்கைகளில் எங்கோ ஈடுபடுவதை நாம் பொதுமைப் படுத்த இயலாது.
முஸ்லிம் மன்னர்கள், இந்து கோயில்களை மசூதிகளாக மாற்றினார்கள் என்பதும் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டு.

தாஜ்மகால் மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தாஜ்மகால் ஒரு சிவன் கோயில் என்று கூறப்படுகிறது. அதனை ஷாஜகான் கல்லறையாக மாற்றினாராம். வரலாற்று ஆவணங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் ‘பாதுஷாமா'வே இதை நிரூபிக்கிறது. அதே போல் அய்ரோப்பிய பயணி பீட்டர் முண்டியும் இதை விரிவாகப் பதிவு செய்துள்ளார். தன் மனைவி இறந்த துயரத்தில் தான் ஷாஜகான் இந்த அற்புதமான நினைவுச் சின்னத்தை எழுப்பியதாக அவர் தெரிவிக்கிறார். அச்சமயத்தில் இங்கு வருகை புரிந்த பிரான்ஸ் நகை வியாபாரி தாவர்நியர் கூட இதனை உறுதி செய்கிறார்.

ஷாஜகானின் தினசரி வரவு செலவு கணக்குகள், தாஜ்மகாலுக்கு செலவிடப்பட்ட கணக்குகள் குறித்த புள்ளி விவரங்களை தெரிவிக்கிறது. கூலி, சலவைக்கல் என பல்வேறு செலவுகளும் அதில் இடம் பெறுகின்றன. தாஜ்மகால் கட்டப்பட்ட நிலம் ராஜா ஜெய்சிங் இடமிருந்து இழப்பீடாகப் பெறப்பட்டது. இதுவே இந்த அவதூறான கதையாடல் தொடங்கியதன் முதல் புள்ளி. ராஜா ஜெய்சிங் கை சிவன் கோயிலுடன் இந்த கதையாடல் தொடர்பு படுத்துகிறது. ஆனால் ஒரு வைஷ்ணவ குலத்தைச் சேர்ந்த மன்னன் எப்படி சிவன் கோயிலை கட்டி இருப்பான் என்பது தான் நம் கேள்வி.

பாபர் மசூதி தொடர்புடைய சர்ச்சையும் இத்தகைய அரைவேக்காட்டுப் புனைவுகளை அடிப்படையாகக் கொண்டதுதான். அந்த இடத்தில் ஓர் இந்து கோயில் இருந்ததாகவும் அதனை பாபரின் தளபதி மிர் பக்வி இடித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த இடத்தில் பாபர் பெயரில் அவர் மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இது கூட ‘அயோத்தியா கெஜட்’ என்கிற ஆவணத்தில் போகிற போக்கில் குறிப்பிட்டுள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டது தான். இதனை எழுதியவர் பிரிட்டிஷ் கெஜட் எழுத்தாளர் ஏ.எப். பீவரிட்ஜ் அம்மையார்.

ஆங்கிலேயர்கள் இங்கு வந்ததும் இந்தியர்களின் மனதை கவர்ந்து அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரம் ஆவது தான் முதல் திட்டமாக இருந்தது. இந்தியாவை முஸ்லிம்களின் பிடியிலிருந்து காப்பாற்ற அவர்கள் வந்ததாக கதையாடல்களை கட்டவிழ்த்தார்கள். அதனால் பல இந்துக் கோயில்களை முகலாய மன்னர்கள் இடித்தார்கள் என்கிற கட்டுக்கதைகளை, அவர்கள் தான் முதன் முதலில் இந்திய மனங்களில் விதைத்தார்கள். அயோத்தியில் மட்டும் ராமன் பிறந்த இடம் இது தான் என 50க்கும் மேற்பட்ட ராமன் கோயில்கள் உரிமை கோரி வருகின்றன.

கோயில்கள் இடிக்கப்படுவதற்கு பாபர் எதிரானவர் என்பதை, அவர் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயிலைப் பார்த்தாலே தெரியும். அவர் எழுதுகிறார்: “மகனே, இந்த இந்துஸ்தான் தேசத்தில் பல வேறுபட்ட மதங்கள் உள்ளன. நம் மனதில் உள்ள வேற்றுமைகளை எல்லாம் களைந்து விட்டு அனைத்து சமூகத்தின் தேவைகளையும் அவர்களது வழக்கப்படி நிறைவு செய்ய வேண்டும். இந்த நிலம் சார்ந்தவர்களின் நன்மதிப்பைப் பெற பசுவதையை தடைசெய். நிர்வாகத்தில் இங்குள்ளவர்களை இணைத்துக் கொள். நம் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட எந்த வழிபாட்டுத் தளத்தையும் சேதப்படுத்தாதே. மக்கள் மன்னரை மனதார வாழ்த்தி மகிழும்படி நீ ஆட்சி செய். உன் நிர்வாகத்தால் அத்தகைய உறவை ஏற்படுத்திக் கொள். இஸ்லாம் தனது நற்குணங்களால் வளரும். அது பேரச்சத்தால் வளராது. சுன்னி, ஷியா பிரிவுகள் மத்தியிலான வேற்றுமைகளை அலட்சியம் செய். அவை இஸ்லாத்துக்குப் பின்னடைவே. நம் ஆட்சிப் பகுதி நோய்வாய்படாதிருக்க, பல சமூகங்கள் மத்தியிலும் இணக்கமான நல்லுணர்வைப் பேணு. மகிழ்ச்சியான சமூகம் தான் நோயற்ற சமூகம்'' (தேசிய அருங்காட்சியகம், புது தில்லி).

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம்

ஆண்டு இந்து முஸ்லிம் சீக்கியர் பிற மொத்தம்
1988 0 29 0 0 29
1989 6 73 0 0 79
1990 177 679 6 6 868
1991 34 549 6 11 600
1992 67 747 10 45 869
1993 88 891 4 44 1027
1994 104 835 11 73 1023
1995 97 1013 4 51 1165
1996 114 1175 2 44 1335
1997 64 717 1 59 841
1998 159 678 1 40 878
1999 98 648 0 17 763
2000 132 661 40 9 842
மொத்தம் 1140 8695 85 399 10319
சதவிகிதம் 11.0 84.3 0.8 3.9 100


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com