Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
செப்டம்பர் 2007

மீண்டெழுவோம்


மனித உரிமைக்கு உரமிடுவோம்

Bihar violence இது மனித உரிமைகள் காலம் மட்டும் அல்ல; மீறல்களின் காலமும் கூட. ‘நாமக்கல் அருகே உள்ள அய்யன் காட்டில் பைக் திருட முயன்ற மர்ம நபரை, அப்பகுதி மக்கள் அரை நிர்வாணத்துடன் அருகில் இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்து நையப் புடைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்’ -‘தினமலர்', 3.9.07; சிறீபெரும்புதூர் அருகில் உள்ள ஆரனேரியில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த மூன்று இளைஞர்களை அப்பகுதி மக்கள் இரவு பத்து மணிக்குப் பிடித்து, அங்குள்ள மரத்தில் கட்டிவைத்து விளாசித் தள்ளினர். இரவு முழுக்க அடித்து உதைத்ததால், மூன்று பேரும் மயங்கிச் சாய்ந்தனர். ஆபத்தான நிலையில் அவர்களை சிறீபெரும்புதூர் போலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்து கொண்டு வாருங்கள் என போலிஸ் சொன்னதும், அம்மூவரையும் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு கிராம மக்கள் ஓட்டம் பிடித்தனர். தற்பொழுது ஆபத்தான நிலையில் மூவரும் சிகிச்சை பெறுகின்றனர்’ -‘தினகரன்', 30.8.07.

அடுத்து, பீகாரில் உள்ள பகல்பூர் மாவட்டத்தில் கோயில் வாசலில் பெண்ணிடம் செயினைப் பறித்த முகமது அவுரங்கசீப் என்ற இளைஞரை, மக்கள் மடக்கிப் பிடித்து கடுமையாகத் தாக்கினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு அவரை உதைத்து, பிறகு அவரது கால்களை கயிற்றால் கட்டி மறுமுனையை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதால், உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு அவுரங்கசீப் துடிதுடித்தார் (‘தி இந்து' 29.8.07). இக்கடுமையான மனித உரிமை மீறல் குறித்து நாடாளுமன்றத்தில் எழுந்த கண்டனக் குரல்களால், அவை ஒத்தி வைக்கப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையம், பீகார் காவல் துறை இயக்குநரிடம் பதில் அளிக்கும்படி கேட்டுள்ளது; தேசிய சிறுபான்மையினர் ஆணையமும் பீகார் அரசிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளது (இந்த மரபுகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை).

‘சாதி தர்மத்தை மீறுகின்றவர்களை கொலை செய்யலாம்' என்கிறது இந்து தர்மம். அதன் தொடர்ச்சியாகத்தான் இத்தகைய மீறல்கள் பார்க்கப்பட வேண்டும். இம்மூன்று நிகழ்வுகளிலும் காவல் துறையைப் போலவே, பொது மக்களும் வன்மத்தோடுதான் நடந்து கொள்கின்றனர். பொது மக்களின் இத்தகைய கொடூர சிந்தனைதான் ‘என்கவுன்டர்'களைப் புனிதப்படுத்துகின்றன. மனித உரிமைப் பண்பாட்டை அனைத்துத் தளங்களிலும் இடைவிடாமல் வளர்த்தெடுப்பதே இத்தகைய மீறல்களைத் தடுக்கும்.

சட்டம் ஒழுங்கை மீறாத தமிழகம்!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூர் பஞ்சாயத்து (தலித்) தலைவர் சந்திரகலா. இவர் தன் மீது கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக, மதுரை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இது குறித்து இவர் ‘குமுதம் ரிப்போர்ட்டர்' (2.8.07) இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘முதல் நாள் பஞ்சாயத்துக் கூட்டத்தில் நான் எனக்குரிய நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது, துணைத் தலைவர் சிவசுப்பு தேவரின் மகன் சங்கர் கணேஷ், ‘அவளுக்கு என்ன நாற்காலி கேட்குதா? அவளுக்கு முன்னாடி நான் உட்காரணுமா?' என்று கூறி உள்ளே வரமாட்டார்.

நான் பஞ்சாயத்துத் தலைவி என்றுதான் பேர். எந்த பஞ்சாயத்து விழாக்களுக்கும் என்னைக் கூப்பிட மாட்டார்கள். இதையெல்லாம் கலெக்டரிடம் எழுத்து மூலமாக ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எங்கள் ஊருக்குள் வந்து செல்லும் அரசு பஸ்களில் தலித் மக்கள் உட்கார்ந்து செல்ல அனுமதிப்பதில்லை. நின்று கொண்டுதான் பயணம் செய்தாக வேண்டும். அதற்கு நானும் விதிவிலக்கில்லை. கடந்து 18 ஆம் தேதி என் வீட்டு முன்பு, சிலர் கூடி நின்று என்னை சாதியைச் சொல்லி திட்டியதோடு, இனி நாற்காலியில் உட்காரக் கூடாது என அருவருக்கத்தக்க வார்த்தைகளால் மிரட்டி விட்டுச் சென்றார்கள். இதுபற்றி போலிசில் புகார் செய்தேன். திருவைகுண்டம் துணைக் கண்காணிப்பாளர் என்னைக் கூப்பிட்டு, ‘அவர்கள் மேல் வழக்குத் தொடர்ந்தால், உன் உயிருக்குதான் ஆபத்து. அதனால் சமரசமாகப் போய் விடு' என்று மிரட்டினார். நாங்கள் புகார் கொடுத்தால், அதைப் பதிவு செய்ய மறுக்கும் போலிசார், அவர்கள் கொடுத்த பொய்ப்புகாரின் பேரில் என் மீதும் என் கணவர் உள்ளிட்ட எட்டு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைவிடக் கொடுமை உண்டா சொல்லுங்கள்?’ என்று கேட்டிருக்கிறார்.

இதுகுறித்த விசாரணையை நீதிமன்றம் தொடங்கியுள்ளது. அது, சட்டம், மரபுகளை மீறாமல் ஆமை போல தன் கடமையை ஆற்றும் என்று உறுதியாக நம்பலாம். போதாத குறைக்கு, உயர் நீதிமன்ற வளாகத்தில், மனுநீதிச் சோழன் சிலை வேறு இருக்கிறது. அரசு தலைமை நிர்வாகியின் அதிகாரத்திற்கு கட்டுப்பட வேண்டிய துணைக் கண்காணிப்பாளர், தலித் தலைவர் என்பதால், தான் இயல்பாக மேற்கொள்ள வேண்டிய மரபான பணிகளைக்கூட செய்ய மறுக்கிறார். ‘அரசியல் (பஞ்சாயத்து) அதிகாரம்', ‘சமூக (ஜாதி) அதிகார'த்தின் முன்பு தோற்றுப் போகிறதே! மாவட்ட ஆட்சித் தலைவர் ‘தமது மாவட்டத்தில் சாதி -தீண்டாமைக் கொடுமைகள் இல்லை' என்று ஆட்சியாளர்கள் கூட்டத்தில் முதல்வர் முன்பு ‘வாய்மையையே வெல்லும்' அளவுக்கு அறிக்கை வாசிப்பார். தலைமைக் காவல் இயக்குநரும் சட்டம் ஒழுங்கு மிகச் சரியாகப் பாதுகாக்கப்படுவதாக பிரகடனப்படுத்துவார். உண்மைதான், எந்த ஆட்சியாக இருந்தாலும், ஜாதி சட்ட ஒழுங்கு மட்டும் மிகச் சரியாகத்தான் காப்பாற்றப்படுகிறது.

‘எங்களுக்கு சொந்த மாநிலத்துக்காரனும் தண்ணி தர்றதில்லைங்க'

Dhanam தனம். சேலம் மாவட்டம் கட்டிநாய்கன்பட்டியைச் சேர்ந்த தலித் சிறுமி. இவர், 1995 சூலை மாதத்தில் ஒரு நாள் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தாகத்திற்காக பள்ளியில் உள்ள குடிநீர்ப் பானையில் தண்ணீர் எடுத்துக் குடித்தார். இக்’குற்ற'த்திற்காக, அந்த வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியம் பிரம்பால் அடிக்க, அது தனத்தின் கண்ணில் பட்டு அவருடைய பார்வை பறிபோனது. இத்தீண்டாமைக் கொடுமை கண்டு கொதித்தெழுந்த அப்போதைய சென்னைப் பேராயர் மா. அசாரியா அவர்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘பெயின்ஸ்' பள்ளியில் தனத்தை சேர்த்துக் கொண்டார் (‘ஆனந்த விகட'னில் வெளிவந்துள்ளது போல, ‘சர்ச் பார்க் கான்வென்டில்' அல்ல). ஆனால், தனத்தின் தந்தை அதற்கு இடையூறாக இருந்ததால், ஒரு மாதத்திலேயே தனம் சென்னையில் தங்கிப் படிக்க முடியாமல் மீண்டும் சேலம் சென்று விட்டார்.

தற்பொழுது 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனம் எப்படி இருக்கிறார் என்பதை அறிய, ‘ஆனந்த விகடன்' (15.8.07) அவரை சந்தித்துள்ளது. அந்தப் பேட்டியில் தனம் பின்வருமாறு கூறியிருக்கிறார் : ‘சூரிய வெளிச்சம் பட்டாலே கண்ணுல தண்ணிவர ஆரம்பிச்சிருதுண்ணே. ஒரு மணி நேரத்துக்கு மேல புத்தகத்தைப் பார்த்துட்டே இருந்தா, கண்ணு வலிக்க ஆரம்பிச்சிடுது. மாசத்துக்கு ஒரு தடவை இன்னும் டாக்டருகிட்ட போய் கண்ணைக் காட்டிட்டுதான் இருக்கோம். குணமாகலை. இப்போ இங்கு ஜலகண்டபுரத்துல அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிச்சிட்டு இருக்கேன். எங்க ஊருலயே பத்தாவதுக்கு மேல ஸ்கூலுக்கு போயி படிக்கிறது நான் மட்டும்தான். லீவு நாள்னா நானும் செங்கல் சுமக்கப் போயிடுவேன்.

அன்னிக்கு பள்ளிக்கூடத்துல எதுக்காக சாரு என்னை அடிச்சாருன்னு அப்போ எனக்குத் தெரியலை. ஆனா, இன்னிக்கு எனக்கு நல்லாப் புரியுது. நாங்க கீழ் சாதிக்காரங்களாம். அதனால மேல் சாதிக்காரங்க குடிக்கிற டம்ளர்ல நாங்க தண்ணி குடிக்கக் கூடாதாம். அப்படி நான் குடிச்சதாலதான் அன்னிக்கு என்னை சார் அடிச்சிருக்காரு. சாதிக் கொடுமைங்கிறது தண்ணியில மட்டும் இல்லீங்க, இதோ எங்க ஊரைச் சுத்தி பவர் லூம் தறி ஓடுது. ஆனா, தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்க யாருக்கும் அங்கே வேலை கொடுக்க மாட்டாங்க. இத்தினி வருஷம் கழிச்சும் அப்படியேதான் இருக்கு ஊரும் உலகமும். ‘எங்கே, எங்க ஊருல ஏதாவதொரு குடியானவுங்க வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டுப் போய், ஒரு டம்ளர் தண்ணி வாங்கிக் கொடுத்துடுங்க பார்க்கலாம்?’

சிறுமி தனம் மிக ஆழமான, இயல்பானதொரு கேள்வியை தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து கேட்டிருக்கிறார். இது, தனிப்பட்ட தனத்தின் குரல் மட்டும் அல்ல. தமிழ் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ‘தனம்' களின் ஆதங்கம்! இன்னும் 12 ஆண்டுகள் கடந்தாலும், அவருக்கு ‘குடியானவுங்க' தண்ணி கொடுக்கப் போவதில்லை. ‘வந்தவர்களை வாழ வைக்கும் தமிழ்ப் பண்பாடு' என்று கூப்பாடு போடுகிறார்கள். ஆனால், இங்கு வாழ்பவர்களின் தவித்த வாய்க்கு தண்ணீர்கூட தருவதில்லை! ‘பக்கத்து மாநிலத்துக்காரன் தண்ணீர் தர மறுக்கிறான்' என்று வெகுண்டெழுகிறவர்கள், தங்கள் கவனத்தை சொந்த மாநிலத்துக்காரன் பக்கமும் கொஞ்சம் திருப்புங்களேன்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com