Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2007
சாதியை ஒழிக்கும் வழி என்ன?

19

உன்னதமான சமூகம் எது?

இதுவரை உங்களுக்கு ஆதரவாக இல்லாதவர்களைப் பற்றி முற்றிலும் வெளிப்படையாக, உங்களுடைய லட்சியத்துக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்களைப் பற்றிப் பேசினேன். மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுடனும் இல்லை; உங்களிடமிருந்து அந்நியப்பட்டும் இல்லை. அவர்களுடைய கண்ணோட்டத்தைப் பற்றிப் பேசலாமா, வேண்டாமா என்று நான் தயங்கிக் கொண்டு இருந்தேன். இரண்டு காரணங்களுக்காக பேசித்தான் ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

முதலாவதாக, அவர்கள் சாதிப் பிரச்சனையில் வெறும் நடுநிலை வகிக்கவில்லை. போர்க் கோலம் பூண்ட நடு நிலை வகித்து வருகின்றனர். இரண்டாவதாக, மக்களில் கணிசமான ஒரு தொகையினரின் கருத்தைத்தான் அவர்கள் சொல்கிறார்கள்.

இவர்களில் ஒரு பகுதியினர், இந்துக்களின் சாதி அமைப்பில் விசித்திரம் எதுவும் இல்லை; வெறுப்பு கொள்ளவும் எதுவும் இல்லை என எண்ணுகின்றனர். இவர்கள் முகமதியர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் போன்றவர்களைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்குள்ளும் சாதி இருக்கிறது என்ற உண்மையில் ஆறுதல் அடைகிறார்கள். இந்தப் பிரச்சனையைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் முன்பே நீங்கள் உங்கள் மனதில் ஓர் உண்மையைப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உலகத்தில் மனித சமூகம் என்பது, எங்குமே ஒரே முழு சமூகமாக இல்லை என்பதுதான் அந்த உண்மை. சமூகம் எப்பொழுதும் பன்முகப்பட்டதாகவே இருந்து வருகிறது. நடை முறையில் தனிமனிதன் ஒரு துருவத்திலும், சமூகம் மறு துருவத்திலும் நிற்கிறார்கள். இந்த இரண்டு துருவங்களுக்கும் இடையிலேதான் எல்லா வகையான சிறிய அல்லது பெரிய அளவு கொண்ட இணைக்கும் ஏற்பாடுகள் அதாவது குடும்பங்கள், நட்புறவுகள், கூட்டுறவுச் சங்கங்கள், வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், வழிப்பறிக் கூட்டங்கள் கொள்ளைக் கூட்டங்கள் ஆகியவை இருக்கின்றன.

இந்தச் சிறிய குழுக்கள் உறுதியாக இணைக்கப்பட்டு இருப்பது வழக்கம். சாதிகளைப் போலவே இச்சிறு குழுக்களும் தனித்து இயங்குகின்றன. அவர்களுக்கு என்று குறுகிய கண்டிப்பான சட்டங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இந்தச் சட்டங்கள், சமூக நலன்களுக்கு எதிரானவையாகத்தான் இருக்கும். அய்ரோப்பா ஆனாலும் சரி, ஆசியா ஆனாலும் சரி, எந்த ஒரு சமூகத்துக்கும் உள்ள நிலை இதுதான். குறிப்பிட்ட ஒரு சமூகம் உன்னதமான ஒரு சமூகமா என்பதைத் தீர்மானிக்க, கேட்கப்பட வேண்டிய கேள்வி, அந்தச் சமூ­கத்தில் குழுக்கள் இருக்கின்றனவா என்பது அல்ல. ஏனெனில், எல்லா ச­மூகங்களிலுமே குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.

உன்னதமான ஒரு சமூகம் எது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கேள்விகள்:

1.அந்தக் குழுக்களால் உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிற நன்மைகள் எத்தனை? அவை எத்தனை வகை?
2. மற்ற சமூ­கங்களுடன் எந்த அளவுக்கு அது முழுமையாகவும் சுதந்திரமாகவும் கலந்துறவாடுகிறது?
3. குழுக்கள், வகுப்புகள் போன்றவற்றை இணைக்கும் சக்திகளைவிட - பிரிக்கும் சக்திகள் அதிகமாக இருக்கின்றனவா?
4. இந்தக் குழு வாழ்க்கைக்குத் தரப்பட்டுள்ள சமூ­க முக்கியத்துவம் என்ன? குழு தனித்தே இயங்குவது, பழக்க வழக்கம், வசதி இவற்றின் காரணமாகவா? அல்லது மதத்தின் காரணமாகவா?

இந்தக் கேள்விகளின் அடிப்படையில்தான் இந்துக்களுக்கு இடையே இருக்கிற சாதிகளும் மற்ற மதத்தவருக்கு இடையே இருக்கிற சாதிகளும் - ஒரே இயல்பு கொண்டவைதானா என்பதை முடிவு கட்ட வேண்டும்.

இந்து அல்லாத பிற மதங்களில் சாதி

முகமதிய, சீக்கிய, கிறித்துவ மதத்தினருக்கு இடையே உள்ள சாதி முறைமைக்கும் இந்துக்களுக்கு இடையே உள்ள சாதி முறைமைக்கும் - இந்தக் கண்ணோட்டங்களை நாம் பொருத்திப் பார்த்தால், இந்து அல்லாதவரிடையே உள்ள சாதி முறை, இந்துக்களிடையே உள்ள சாதி முறையில் இருந்து அடிப்படையிலேயே மாறுபட்டவை என்பது, உங்களுக்கு நன்றாகவே புரியும். முதலாவதாக, மற்ற மதத்தவரிடம் உணர்வுப் பூர்வமாக இணைக்கும் எத்தனையோ காரணிகள் உள்ளன. அதுபோன்ற காரணிகள் இந்து மதத்தவரிடையே ஏதுமில்லை.

ஒரு சமூகத்தில் உள்ள குழுக்களுக்கு இடையில் தொடர்பு கொள்வதற்கும் - இணைந்து செயல்படுவதற்கும் சாத்தியக் கூறுகள் எந்த அளவுக்கு இருக்கின்றனவோ, அந்த அளவுக்கே அந்த சமூகம் வலிமை உடைய சமூகமாக இருக்கும். இந்த சாத்தியக் கூறுகளை கார்லைல், ‘பிரிந்து நிற்கிற வெவ்வேறு ­மூலக்கூறுகளை மறுபடியும் ஒருங்கிணைத்து ஒன்று சேர்க்கும் ஒரு நெகிழ் வுத்தன்மை உடைய இணைப்புக் கண்ணி''யாகக் கருதுகிறார்.

இந்து சமூகத்தைச் சிதறடிக்கும் ஆற்றல் பொருந்தியதாக இருக்கிறது சாதி. சாதியின் இந்த விளைவுக்கு எதிராக செயல்பட்டு, இந்து சமூகத்தை ஒருங்கிணைக்கும் சக்தி எதுவுமில்லை. மற்ற மதத்தவரிடையே ஒருங்கிணைக்கும் சக்திகள் ஏராளமாக இருக்கின்றன. இந்துக்களுக்குள் சாதிகள் இருப்பது போலவே, மற்ற மதத்தவர்களுக்குள்ளும் சாதிகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தபோதிலும் இந்துக்கள் சாதிக்குத் தருகிற சமூக முக்கியத்துவத்தை, மற்ற மதத்தினர் தருவதில்லை.

ஒரு முகமதியரையோ, சீக்கியரையோ நீ யார் என்று கேளுங்கள். தான் ஒரு முகமதியர் அல்லது சீக்கியர் என்றே அவர் பதில் சொல்வார். தனக்கென்று ஒரு சாதி இருந்தபோதிலும் கூட, அவர் தன் சாதியைச் சொல்வதில்லை. நீங்களும் அவருடைய பதிலில் திருப்தியடைந்து விடுகிறீர்கள். தான் ஒரு முகமதியர் என்று அவர் கூறியதும் நீங்கள் அவரை ‘நீ சன்னியா, ஷேக்கா, சையதா, சாதிக்கா, பிஞ்சாரியா?' என்றெல்லாம் கேட்கப் போவதில்லை.

தானொரு சீக்கியர் என்று அவர் கூறியதும், நீங்கள் அவரை ஜாட்டா, ரோதாவா, மாழ்பியா, ராம்தாசியா என்றெல்லாம் கேட்பதில்லை. ஆனாலும், ‘நான் ஓர் இந்து' என்று எவராவது சொன்னால், நீங்கள் அந்தப் பதிலால் திருப்தியடைந்து விடுவதில்லை. அவருடைய சாதி என்னவென்று விளக்கமாகத் தெரிந்து கொள்வது அவசியம் என்று உணர்கிறீர்கள். ஏன்? ஓர் இந்துவைப் பொருத்தமட்டில், அவருடைய சாதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் - அவர் எத்தகைய ஒரு மனிதன் என்பதை உங்களால் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியாது என்கிற அளவுக்கு, சாதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இந்துக்கள் மத்தியில் சாதிக்கு இருக்கிற சமூக முக்கியத்துவம், இந்து அல்லாதார் மத்தியில் இல்லை. இந்துக்களில் சாதி விதிமுறைகளை மீறிய ஒருவருக்கு ஏற்படும் பின்விளைவுகளைக் கவனித்தால், மேற்öசான்ன கூற்றின் உண்மை விளங்கும். முகமதியருள்ளும் சீக்கியருள்ளும் சாதிகள் இருக்கலாம். ஆனால், சாதி விதிகளை மீறிய காரணத்துக்காக அவர்கள் சாதியில் இருந்து விலக்கி வைக்கப்படுவது இல்லை. அதே நேரத்தில், இந்து ஒருவன் அப்படி நடந்து கொண்டால், அவன் கண்டிப்பாக சாதியில் இருந்து விலக்கி வைக்கப்படுவான். உண்மையில், சாதியில் இருந்து விலக்கி வைப்பது என்பது சீக்கியர், முகமதியர் அறியாத ஒன்றாகும்.

இந்துக்களுக்கு சாதியின் சமூக முக்கியத்துவம் என்பது என்ன, மற்றவர்களுக்கு சாதியின் சமூக முக்கியத்துவம் என்ன என்பதையே இது காட்டுகிறது. இரண்டாவது வேறுபாடு இது.

ஜாதிக்கு மத அங்கீகாரம் உண்டு

மூன்றாவதும், இதைவிட முக்கியமானதுமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. மற்ற மதத்தவரிடையே சாதியைக் கடைப்பிடிப்பது, புனிதமான மதக் கடமையாக இருக்கவில்லை; இந்து மதத்தவரின் சாதிகள் மதக் கடமை கொண்டதாக இருக்கின்றன. மற்ற மதத்தவரிடையே சாதி ஒரு பழக்கமாகத்தான் இருந்து வருகிறது; ஒரு புனிதமான நிறுவனமாக இருக்கவில்லை. சாதியின் உற்பத்திக்கு மற்ற மதத்தவர் காரணம் அல்ல. மற்ற மதத்தவரைப் பொருத்தவரை, சாதி அவர்களிடம் மிஞ்சி இருப்பது மட்டும்தான். மற்ற மதத்தவர் சாதியை ஒரு மதக் கோட்பாடாகக் கடைப்பிடிப்பது இல்லை. பல்வேறு சாதியினரும் தனித்து இயங்குவதும், ஒரு சாதியினரோடு மற்ற எந்த சாதியினரும் கலக்காமல் பிரிந்து இயங்குவதுமே பெருமைக்கு உரியது எனக்கருதி நடக்குமாறு, இந்து மதம் இந்துக்களைக் கட்டாயப்படுத்துகிறது.

சாதி விஷயத்தில் இதே மனப்போக்கைத்தான் மேற்கொள்ள வேண்டும் என்று மற்ற மதங்கள் கட்டாயப் படுத்துவதில்லை. இந்துக்கள் சாதியைத் தகர்த்தெறிய விரும்பினால் மதம் வழி மறிக்கும். ஆனால், மற்ற மதத்தவருக்கு இந்தத் தடை இல்லை. எனவே, மற்ற மதத்தவருக்கிடையே சாதிகள் இருந்த போதிலும், அவர்களுடைய வாழ்க்கையில் சாதிக்குத் தரப்படுகிற இடம் அதாவது முக்கியத்துவம் குறைவு.

‘ஒரே மதத்தவன்' என்கிற உணர்வைவிட, ‘தன் சாதிக்காரன்' ‘மற்ற சாதிக்காரன்' என்கிற சாதி உணர்வு தாழ்வானதுதான் என்று கருதச் செய்கிற இணைப்புச் சக்திகள் இந்து மதத்தில் குறைவு. எல்லா மதங்களிலுமே சாதி இருக்கத்தான் செய்கிறது எனத் திருப்தியடைவது, மிகவும் பயங்கரமான ஒரு மன மருட்சியேயாகும். இந்துக்கள் இந்த மனமருட்சியில் இருந்து எவ்வளவு சீக்கிரம் குணப்படுத்தப்படுகிறார்களோ, அந்த அளவுக்கு நன்மை ஏற்படும்.

எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியமானது

மற்றொரு சாரார், இந்துக்களுக்கு சாதி எந்தப் பிரச்சனையையுமே ஏற்படுத்தவில்லை என்கிறார்கள். இந்து சமூகம் காலத்தால் அழிந்து போகாமல் வாழ்ந்தே வருகிறது. ""வாழத்தகுதியுள்ள ஓர் அமைப்புதான் கால ஓட்டத்தில் அழிந்து விடாமல் வாழ முடியும்'' என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, சாதி போன்ற அம்சங்கள் இருந்தாலும் கூட, இந்து சமூ­கம் இன்றளவும் வாழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். "வாழ்க் கையைப் பற்றிய இந்து கண்ணோட்டம்' என்கிற தன் நூலில் பேராசிரியர் ராதாகிருஷ்ணன், இந்த மனப்போக்கை நன்றாகவே விளக்கியிருக்கிறார். இந்து மதம் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார் :

"இந்து நாகரீகம் நேற்றோ, இன்றோ தோன்றியது அல்ல. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டது அந்த நாகரீகம். இருந்த போதும் கூட, அது உயர்ந்த ஒரு நிலையை எட்டியிருக்கிறது. சில சமயங்களில் அதன் வளர்ச்சிப் போக்கிலே ஒரு தொய்வும் தேக்க நிலையும் இருந்தே வந்தது. அதையும் மீறி இந்து நாகரீகம் இன்றைய நாள் வரை தங்குதடையின்றி வளர்ந்தே வந்திருக்கிறது. நான்கு அய்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆன்மீகச் சிந்தனைகளும் அனுபவங்களும் தந்த நெருக்கடிகளைச் சமாளித்து வளர்ந்தது அந்த நாகரீகம்.

வரலாற்றின் தொடக்க காலம் முதற்கொண்டே பல்வேறு இனத்தவரும் பல்வேறு பண்பாட்டினரும் இந்தியாவில் வந்து குவிந்த போதும்கூட, இந்து மதம் தன்னுடைய மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அரசதிகாரத்தின் ஆதரவைப் பெற்றிருந்த மதமாற்றும் கூட்டத்தாராலும்கூட, பெரும்பான்மை இந்துக்களை தம் மதத்துக்கு மாற்ற முடியவில்லை. இந்து மதத்தில் உள்ள ஓர் உயிரோட்டம், அதைவிடச் சக்திவாய்ந்த காட்டாறுகள் போன்ற பிற மதங்களில் இல்லை. மரம் உயிரோடு இருக்கிறதா இல்லையா என்பதை அறிய, மரத்தைப் பிளந்து பார்க்க வேண்டியது இல்லை. இந்து மதத்தில் உயிரோட்டம் இருக்கிறதா என்பதை அறிய, இந்து மதத்தைப் பகுதிபகுதியாக எடுத்து ஆராய வேண்டியது இல்லை.''

பேராசிரியர் ராதாகிருஷ்ணன் சொல்வதெல்லாம் வேதம் என்று அவருடைய வாசகர்கள் கொள்வதற்கு, அவர் பெயரே போதுமானதாக இருக்கிறது. ஆனால், அதற்காக நான் என் கருத்தைக் கூறாமல் இருக்க முடியாது. உயிரைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது என்பதே, ஒன்று நீடித்து உயிர்வாழத் தகுதி உடையது என்பதற்கு சான்றாகிவிடும் என்கிற நச்சுவாதத்துக்கு அவர் சொற்கள் அடிப்படையாக அமைந்துவிடலாம். ஒரு சமூகம் வாழ்கிறதா அல்லது செத்து மடிகிறதா என்பது ஒரு கேள்வியே அல்ல. எந்தத் தளத்தில் அந்தச் சமூகம் வாழ்கிறது என்பதுதான் கேள்வி.

செத்து மடியாமல் உயிரைத் தக்க வைத்துக் கொண்டு வாழும் முறைகள் ஆயிரம் இருக்கலாம். ஒரு மனிதன் என்றாலும் சரி, சமூகம் என்றாலும் சரி, வெறுமனே வாழ்வதற்கும் பயன்பட வாழ்வதற்கும் இடையே கடல் அளவு வேறுபாடு உண்டு. போர்க் களத்தில் பகைவனோடு போரிட்டுப் பெருமையோடு வாழ்வதும் ஒரு வாழ்க்கை முறை; புற முதுகிட்டு ஓடி சரணாகதி அடைந்து ஒரு போர்க் கைதியாக வாழ்வதும் இன்னொரு வாழ்க்கை முறை.

இந்துக்களின் வெட்கங்கெட்ட வாழ்க்கை

தானும் தன் மக்களும் இன்னமும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற சுயதிருப்தியால், எந்த இந்துவுக்கும் எந்தப் பயனும் இல்லை. தன் வாழ்க்கையின் தரம் என்ன என்பதைத்தான் ஒவ்வொரு இந்துவும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்போதுதான் இன்னும் நாம் அழியாமல் இருக்கிறோம் என்று பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதை அவர் உணர்வார் என்று நான் நினைக்கிறேன். இந்துவின் வாழ்க்கை என்பது, தோல்விகளின் தொடர்ச்சியாகவே இருந்து வந்திருக்கிறது. நிரந்தரமான வாழ்க்கை என்று இந்து எதை எண்ணுகிறானோ, அது நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. அதற்குப் பதிலாக, உண்மையில் ஒவ்வொரு கணமும் செத்து மடிந்து கொண்டிருக்கிற வாழ்க்கை அது. உண்மையை ஒத்துக் கொள்ள அஞ்சாத நேர்மை உள்ளம் கொண்ட எந்த ஓர் இந்துவையும் வெட்கித் தலைகுனிய வைப்பதே மேற்கூறிய ‘அழியாமல் வாழும் முறை'.

20

உட்சாதிக் கண்ணோட்டம் தவறு

உங்களுடைய சமூக அமைப்பை மாற்றினால் ஒழிய, நீங்கள் முன்னேறவே முடியாது என்பது என் கருத்து. தாக்குதலுக்கோ, தற்காப்புக்கோ சமூகத்தை ஒன்றுதிரட்ட உங்களால் முடியாது. சாதி என்கிற அஸ்திவாரத்தின் மீது எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளை யும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும். முழுமை அடையாது.

ஆக, இனி எஞ்சியிருக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்: இந்துக்களின் சமூக அமைப்பை சீர்திருத்தி அமைப்பது எப்படி? சாதியை ஒழிப்பது எப்படி? மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி இது. சாதிய சீர்திருத்தத்தில் தேவையான முதல் நடவடிக்கை, உட்சாதிகளை ஒழிப்பதே என்று ஒரு கண்ணோட்டம் இருந்து வருகிறது. சாதிகளுக்குள் இருப்பதைவிட, உட்சாதிகளுக்குள் நடை உடைபாவனைகளிலும், அந்தஸ்திலும் பெரும்பாலும் ஒத்த தன்மை இருக்கிறது என்ற எண்ணமே இந்தக் கண்ணோட்டத்துக்கு காரணம். ஆனால், இந்தக் கண்ணோட்டம் தவறானது என்றே நான் கருதுகிறேன்.

தக்காண பார்ப்பனர்களையும் தென்னிந்தியப் பார்ப்பனர்களையும் விட, வட இந்தியப் பார்ப்பனர்களும் மத்திய இந்தியப் பார்ப்பனர்களும் சமூக அந்தஸ்தில் மிகவும் தாழ்ந்த நிலையில்தான் இருக்கிறார்கள். வட இந்தியப் பார்ப்பனரும், மத்திய இந்தியப் பார்ப்பனரும் சமையல்காரர்களாகவும் தண்ணீர் சுமப்பவர்களாகவும்தான் இருக்கின்றனர். மாறாக, தக்காணப் பார்ப்பனர்களும், தென்னிந்தியப் பார்ப் பனர்களும் உயர்ந்த ஒரு சமூக அந்தஸ்து பெற்று உள்ளனர். இதற்கு மாறாக, வட இந்திய வைசியர்களும் காயஸ்தர்களும் அறிவு நிலையிலும், சமூக நிலையிலும் தென்னிந்திய மற்றும் தக்காணப் பார்ப்பனர்களுக்குச் சமமானவர்களாய் இருக்கிறார்கள். தென்னிந்திய மற்றும் தக்காணப் பார்ப்பனர்கள் சைவ உணவுப் பழக்கத்தினர்.

காஷ்மீர் மற்றும் வங்காளப் பார்ப்பனர்கள், அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள். உணவு விசயத்திலும் அவர்களிடையே ஒத்த தன்மை இல்லை. இதற்கு மாறாக தக்காண, தென்னிந்தியப் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனர் அல்லாதவர்களில் குஜராத்திகள், மார்வாடிகள், பனியாக்கள், ஜெயின்கள் ஆகியவர்களுக்கும் உணவு விசயத்தில் மிக அதிகமான ஒற்றுமை காணப்படுகிறது.

ஒரு சாதியிலிருந்து மற்றொரு சாதிக்கு மாறுவதை எளிமையாக்க வேண்டும் என்ற நோக்கில், தென்னிந்தியப் பார்ப்பனர்களையும் வட இந்திய பார்ப்பனர்களையும் ஒருங்கிணைப்பதைவிட, வட இந்திய காயஸ்தர்களையும், தென்னிந்தியப் பார்ப்பனர் அல்லாதவர்களையும், தக்காணம் மற்றும் திராவிட நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர் அல்லாதவர்களையும் ஒருங்கிணைப்பது நடைமுறை சாத்தியமானது. உட்சாதிகளை ஒருங்கிணைப்பது முற்றிலும் சாத்தியமானது என்றே வைத்துக் கொள்வோம்.

உட்சாதிகளை ஒழித்து விடுவது என்பதே சாதிகளை ஒழிப்பதற்கு வழி வகுத்துவிடும் என்று எப்படி உறுதியாக நம்ப முடியும்?

இதற்கு மாறாக, சாதி ஒழிப்பு உட்சாதிகளை ஒழிப்பதுடன் நின்று விடலாம் அல்லவா? அப்படியானால், உட் சாதிகளை ஒழிப்பது, சாதிகளை வலுப்படுத்தவே துணை போகும். சாதிகள் முன்பு இருந்ததைவிட வலிமை மிகுந்தவையாகி, முன்பைவிட மிகுந்த விஷமத்தனமாகிவிடும். எனவே, சாதியை ஒழிப்பதற்கு உட்சாதிகளை ஒன்றாக இணைத்துவிடுவது என்கிற வழி, நடைமுறைச் சாத்தியமானதுமல்ல, பயனுள்ளதும் அல்ல. இது தவறான வழி என்பது எளிதில் நிரூபணமாகும்.

சமபந்தி விருந்து சாதியை ஒழிக்குமா?

சாதியை ஒழிப்பதற்கான இன்னொரு வழி சமபந்தி விருந்து என்ற கருத்தும் இருந்து வருகிறது. சாதியை ஒழிக்க சமபந்தி விருந்து மட்டுமே போதுமென்று நான் கருதவில்லை. சமபந்தி விருந்தை அனுமதிக்கிற எத்தøனயோ சாதிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், சாதி தன்மையையோ உணர்வையோ ஒழிப்பதில் சமபந்தி விருந்து வெற்றியடையவில்லை என்பது, பொதுவான அனுபவம். கலப்புத் திருமணமே சாதியை ஒழிப்பதற்கான உண்மையான வழி என நான் நம்புகிறேன். ரத்தக் கலப்பு மட்டுமே ‘எல்லாரும் நம்மவரே' என்கிற உணர்வை உருவாக்கும். இந்த உணர்வு, ஒவ்வொருவரையும் ஆட்கொள்ளாத வரை, தன்னுடைய சாதிக்காரனைத் தவிர்த்த மற்ற எல்லோருமே அயலார்தான், அந்நியர்தான் என்கிற பிரிவினை உணர்வு - அந்நிய உணர்வு மறையாது.

அரசைவிட, சமூகத்தை எதிர்ப்பதற்கே துணிவு வேண்டும்

கலப்புத் திருமணம் என்பது, சமூக வாழ்வில் மற்ற மதத்தைவிட இந்துக்களுக்கு மிக வலுவான காரணியாக அமைவது தேவை. சமூகத்தை ஒன்றிணைக்க பல்வேறு காரணிகள் ஏற்கனவே இருக்கும் பட்சத்தில், திருமணம் என்பது சமூகத்தில் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகவே இருக்கும். ஆனால், சமூகமென்பது பல்வேறு கூறுகளாகப் பிளவுபட்டுள்ள நிலையில் இந்தக் கூறுகளை இணைக்கும் சக்தியாக திருமணம் மட்டுமே இருப்பதால், அது அவசரத் தேவையாகிறது.

சாதியைத் தகர்த்தெறிவதற்கான உண்மையான வழி கலப்புத் திருமணமே. வேறு எந்த சக்தியாலும் சாதியை அழிக்க முடியாது. ஜாத்பட்தோடக் மண்டல், இந்த வழியிலான தாக்குதல் முறையை மேற்கொண்டு இருக்கிறது. அது நேரடியாக நெற்றிப் பொட்டில் தாக்குவதாகும். இந்துக்களிடம் உள்ள நோயை சரியாக இனம் கண்டுள்ளீர்கள். துணிவாக சுட்டிக்காட்டியும் இருக்கிறீர்கள். இதற் காக உங்களைப் பாராட்டுகிறேன்.

சமூக ஒடுக்குமுறையோடு ஒப்பிடும்போது, அரசியல் அடக்குமுறை ஒன்றுமே இல்லை. எனவே, அரசாங்கத்தை எதிர்க்கிற அரசியல்வாதியைவிட, சமூகத்தை எதிர்க்கிற சீர்திருத்தவாதியே மிகவும் துணிச்சல் உள்ளவன். சமபந்தி விருந்துகளும் கலப்புத் திருமணங்களும் தங்கு தடையின்றி நடைபெறும் போது மட்டுமே சாதியானது, சமூகத்தை இயக்கும் வலிமையை இழந்துபோகும் என்ற உங்கள் எண்ணம் சரியானதே.

யாரை வீழ்த்துவது - சாதி வெறியனையா? இந்து மதத்தையா?

நேõயின் மூலத்தை நீங்கள் தெரிந்து கொண்டு விட்டீர்கள். ஆனால், இந்த நேõய்க்கு நீங்கள் தர நினைக்கிற மருந்து சரியான மருந்துதானா? இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இந்துக்களில் பெரும் பான்மையினர் கலப்பு மணம் செய்யாதது ஏன்? பல சாதியினரும் சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளாததும் ஏன்? சாதி ஒழிப்பு என்கிற உங்கள் நோக்கம் பரவாமல் இருக்கக் காரணமென்ன? கலப்பு மணமும் கலந்துண்ணலும் இந்துக்கள் புனிதமாகக் கருதும் நம்பிக்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் எதிரானவை என்பதே.

சாதி என்பது, இந்துக்கள் ஒருவரோடொருவர் கலந்து விடாமல் தடுக்கிற - ஒரு செங்கல் சுவரோ, முள் வேலியோ அல்ல. அப்படி சாதி வெறும் சுவராகவோ, வேலியாகவோ இருந்தால் அதைத் தகர்த்துவிடலாம். சாதி என்பது ஒரு கண்ணோட்டம் - ஒரு மனநிலை. எனவே, சாதியைத் தகர்ப்பது என்றால், வெறும் பவுதீகத் தடையைத் தகர்ப்பது என்பது அல்ல. மாறாக ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்.

சாதி கெட்டதாக இருக்கலாம்; மனிதனே மனிதனிடம் மனிதத்தன்மையில்லாமல் நடந்து கொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் இருக்கலாம். இருந்தாலும், இந்துக்கள் சாதியைக் கடைப்பிடிக்கக் காரணம் என்ன? இந்துக்கள் மனிதத்தன்மை அற்றவர்களாய் இருப்பதோ அல்லது பிடிவாத குணமும் வக்கிர புத்தியும் கொண்டவர்களாய் இருப்பதோதான் காரணம் என்று கூற முடியாது.

இந்துக்கள் மிக ஆழமான மதப்பற்று உள்ளவர்களாக இருப்பதால்தான் சாதியைப் பின்பற்றுகிறார்கள். சாதியைக் கடைப்பிடிப்பதில் மக்களின் தவறு எதுவுமில்லை. சாதி என்கிற கண்ணோட்டத்தை இந்துக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்து இருக்கிற இந்து மதத்தின் மீதே தவறிருப்பதாக நான் கருதுகிறேன். என்னுடைய இந்தக் கருத்து சரியானதென்றால், நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி - சாதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் அல்ல; சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாஸ்திரங்களே உங்கள் பயங்கர எதிரி.

எது உண்மையான சாதி ஒழிப்பு வழிமுறை?

சம்பந்தி விருந்தில் கலந்து கொள்ளாதவர்களையும் கலப்பு மணம் செய்யாதவர்களையும் - விமர்சிப்பதும் கேலிசெய்வதும் அல்லது எப்போதாவது சில சமயங்களில் சமபந்தி விருந்தை நடத்துவதும், கலப்பு மணவிழாவைக் கொண்டாடுவதும் வீண் வேலையாகும். அது உங்கள் நோக்கத்தை எட்ட உதவப் போவதில்லை. சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையை அழித்தொழிப்பதுதான் - சாதியை ஒழிக்கும் உண்மையான வழிமுறை. மக்களுடைய கருத்துகளும் நம்பிக்கைகளும் இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்று வடிவமைக்கும் வேலையை, சாஸ்திரங்கள் இடைவிடாமல் செய்து வருகின்றன. இதை இனியும் நீங்கள் அனுமதித்துக் கொண்டிருந்தால், சாதியை ஒழிப்பதில் நீங்கள் எவ்விதம் வெற்றி பெற முடியும்?

சீர்திருத்தக்காரர்கள் பொதுவாக சாஸ்திரங்களின் அதிகாரத்தை எதிர்ப்பதில்லை. சாஸ்திரங்கள் புனிதமானவை; அடிப்படையான ஆதாரம் உடையவை என்று மக்களை நம்பும்படி விட்டுவிடுகின்றனர். அதே நேரத்தில் "மக்களின் செயல்கள் பகுத்தறிவு இல்லாதவையாக இருக்கின்றன. மனிதத் தன்மையே இல்லாதவையாக இருக்கின்றன'' என்று கூறி மக்களைக் கண்டிக்கின்றனர், விமர்சிக்கின்றனர். இது, சமூக சீர்திருத்தத்துக்கு ஏற்புடைய வழி அல்ல. மக்களின் செயல்கள் எல்லாம் சாஸ்திரங்கள் மக்களின் மனதிலே பதிய வைத்திருக்கும் நம்பிக்கைகளின் விளைவு கள்தான். எனவே, சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கையைப் போக்கிக் கொள்ளாதவரை - அதன் மீது கட்டமைக்கப்பட்ட தங்கள் போக்கை மக்கள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இதை தீண்டாமையை ஒழிக்க நினைக்கிற ‘மகாத்மா' காந்தி உள்ளிட்ட எந்த சீர்திருத்தக்காரர்களும் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை.

இந்து மதத்தை எதிர்க்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?

எனவே, அது போன்ற முயற்சிகள் எந்தப் பலனையும் தராததில் வியப்பு ஏதும் இல்லை. தீண்டாமையை ஒழிக்க நினைக்கிறவர்கள் செல்லுகிற அதே தவறான பாதையில்தான் நீங்களும் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது. சமபந்தி விருந்துகøளயும் கலப்பு மணங்களையும் ஏற்பாடு செய்வதும், அவை நடைபெற்றே ஆக வேண்டும் எனக் கிளர்ச்சி செய்வதும், செயற்கையான முறையில் உங்கள் கருத்துகளை மக்களிடம் திணிப்பதாகவே அமையும். ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும், சாஸ்திரங்களின் தளைகளில் இருந்து விடுவியுங்கள். மக்களின் மனங்களில் சாஸ்திரங்கள் உருவாக்கி வைத்திருக்கிற நாசகரமான கருத்தமைவுகளை நீக்கித் தூய்மைப்படுத்துங்கள். இதை நீங்கள் செய்து முடித்துவிட்டால், மக்கள் தாமாகவே முன்வந்து நீங்கள் சொல்லா மலேயே கலப்புமணம் செய்வார்கள்; சமபந்தி விருந்து நடத்துவார்கள்.

சாஸ்திரங்கள் சொல்வதாக மக்கள் நம்புகிற கருத்துகளை, உண்மையில் சாஸ்திரங்கள் சொல்லவே இல்லை என்று நீங்கள் ஆயிரம் விளக்கங்கள் தந்தாலும், ஆயிரம் வியாக்கியானம் செய்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை. சாஸ்திரங்களை மக்கள் எப்படிப் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். புத்தரும் குருநானக்கும் எடுத்த நிலைப்பாட்டை நீங்களும் மேற்கொள்ள வேண்டும். சாஸ்திரங்களை நிராகரித்தால் மட்டும் போதாது; புத்தரும் நானக்கும் செய்ததைப் போல, சாஸ்திரங்களின் அதிகாரத்தை மறுக்க வேண்டும். சாதி புனிதமானது என்ற கருத்தை, இந்து மதம் இந்துக்களிடம் உருவாக்கி இருக்கிறது. இந்து மதமே அவர்களிடம் உள்ள குறை என்று இந்துக்களிடம் சொல்வதற்கான துணிச்சல், உங்களிடம் இருக்க வேண்டும். அந்தத் துணிச்சல் உங்களுக்கு உண்டா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com