Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2006

"ஒவ்வொரு இல்லமும் ஒரு நூலகமாக இருக்க வேண்டும்''

Jeyaraman டாக்டர் என். ஜெயராமன் வட தமிழ் நாட்டிற்கும் தென் தமிழ் நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாக விளங்கும் புதுகை மண்ணின் தலித் ஆளுமைகளில் தன்மையானவர். "படித்த வர்க்கம் என்னை வஞ்சித்துவிட்டது' என்ற அண்ணல் அம்பேத்கரின் கூற்றுக்கு விதிவிலக்கு ஆனவர். தன் தொழில் நேர்மையாலும், திறமையாலும் - கடும் உழைப்பினாலும், திட்டமிட்ட லட்சிய வாழ்க்கை முறைமையினாலும் பொருளாதாரத்தில் உச்சத்தை எட்டினாலும், ஒடுக்கப்பட்ட தம் வர்க்கத்தினரின் உறவுக்கும் உரிமைக்கும் ஆழங்கால் பதித்து வருபவர். தலித் அமைப்புகளின் அடைகாப்புக்குள் அடங்காதவராக இருப்பினும், தலித் அமைப்புகளின் கருத்துகள், காரியங்கள் வீரியம் பெற பின்புலமாக இருப்பவர்.

பிரமாண்டமான தன் வீட்டின் ஒரு பகுதியை அம்பேத்கர் - பெரியார் - மார்க்ஸ் நூலகம் ஆக்கியவர். தொழிலின் வளர்ச்சியை குறிவைத்து, தன் அடையாளத்தை மறைத்து வாழும் பெரும்பாலான தலித் மருத்துவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு, தன் மருத்துவமனையில் அம்பேத்கர், பெரியார் மற்றும் தன்னை ஆளாக்கிய பெற்றோர்களின் படங்களை கம்பீரமாக, நடுநாயகமாக வைத்திருப்பவர். பல் சிகிச்சை நிபுணத்துவத்தில் ஏற்றம் பெற்று, மருத்துவத் தொழிலில் வல்லவராக வலம் வருபவர். தன் மருத்துவமனையின் கால் நூற்றாண்டு விழாவினை, டாக்டர் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய பொன்விழாவோடு இணைத்து கொண்டாட இருப்பவர்.

சாதி ஒழிப்பினைத் தன் தனிமனித வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டிய டாக்டர் ஜெயராமன் அவர்கள், வெகுமக்களின் விடுதலையை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது எனும் போக்கில், அறிவியல் கலை - இலக்கிய மன்றத்தின் தலைவராகப் பொறுப்பேற்று உள்ளவர். சமூகமனிதர் டாக்டர் ஜெயராமன் அவர்களை கால நெருக்கடிகளினூடே சந்தித்துப் பரிமாறிக் கொண்டபோது...

சந்திப்பு : அ.த. யாழினி

தலித் சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் யாரும் தங்கள் மருத்துவமனையில், இவ்வளவு பெரிய அளவிலான டாக்டர் அம்பேத்கர் படத்தை வைத்திருந்து நாங்கள் பார்த்தது இல்லை. நீங்கள் வைத்திருக்கின்றீர்களே!

உலக அளவில் மானுட விடுதலைக்கு வித்திட்டவர் காரல் மார்க்ஸ். வர்க்க பேத விடுதலையை தன்மைப்படுத்தியவர் அவர். இந்தியாவில் சாதியக் கட்டுமானத்தை உடைத்து, தலித் மக்களின் விடுதலையை தன்மைப்படுத்தியவர் டாக்டர் அம்பேத்கர். தீண்டாமையின் ஆணவம் சாதியில் இருக்கின்றது. சாதிக்கு மூலம் கடவுள். கடவுளையும் கடவுளை உருவாக்கிய பார்ப்பனனையும் ஒழித்தால், தீண்டாமை ஒழியும் எனப் பணி செய்தவர் பெரியார். எனவே தான் இவர்கள் மூவர் படங்களையும் எனது மருத்துவமனையில் வைத்திருக்கின்றேன்.

சாதிகளைக் கொண்டு பின்னப்பட்ட இந்த சமூகஅமைப்பு பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

1972 இல் நான் பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தபோது, எனது சொந்த கிராமமாகிய புத்தாம்பூரில் (புதுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ.) நானும் எனது நண்பரும் அங்குள்ள டீக்கடையில் உள்ளே உட்கார்ந்து கண்ணாடி டம்ளரில் டீ சாப்பிட்டதற்காக (யார் என்று தெரியாமல் கொடுத்து விட்டார்கள்) அன்று இரவே பதினைந்து முதல் இருபது பேர் வரை புதுக்கோட்டைக்குத் திரண்டு வந்து, என் தகப்பனாரை சந்தித்து சாதிக்கட்டை மீறி உன் பையன் கடைக்குள் வந்துவிட்டான். இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும். மறுபடியும் இப்படி நடந்தால், மின்கம்பத்தில் கட்டிவைத்து விடுவோம். தெரியாத பையன் என்பதால் விட்டு வைக்கிறோம். கண்டித்து வை என்று எச்சரித்துச் சென்றனர். இந்த அனுபவமே எனக்கு சாதிப்பாகுபாட்டை முதலில் உணர்த்தியது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தபோது, அங்கு அனுபவித்த தீண்டாமை வேறுவிதமாக இருந்தது. கிராமத்தில் மூர்க்கத்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் பின்பற்றப்படும் தீண்டாமையை எதிர்த்து புகார் செய்யலாம், வழக்கு தொடுக்கலாம். ஆனால், கல்வியாளர்கள் மத்தியில் தலித் மாணவர்களிடம் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமை என்பது, பழிவாங்கும் வடிவத்தில் இருக்கும். இதற்கு புகார் எல்லாம் கொடுக்க முடியாது. ஏன் என்று கேட்டால், அதன் பதில் தேர்வு முடிவுகளில் பிரதிபலிக்கும். எனவே, ஏன் என்றுகூட சிந்திக்காமல் அனுபவிக்கும் வன்கொடுமை கல்லூரிகளில் நடந்தேறி வருகிறது.

தலித்திய சிந்தனைக்குள் எப்போது வரத் தொடங்கினீர்கள்?

எனது சகமாணவர்களான டாக்டர் ஜெயவேல், டாக்டர் குகாநந்தம், டாக்டர் பாலுச்சாமி போன்றவர்களின் நெருங்கிய நட்பு, தலித் மாணவர்களின் சமூகநிலையை மேலும் உணர வைத்தது. சகோதரர் கே.ஆர்.எம். ஆதிதிராவிடர் அவர்களின் நட்பு முழுமையான தலித்திய சிந்தனையை என்னுள் உருவாக்கியது. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரையும், தந்தை பெரியாரையும் எனக்குள் பதிய வைத்தவரும் அவரே. 1980களுக்குப் பிறகு என்னுள் மார்க்சிய சிந்தனைகளை உருவாக்கியவர், தற்போது திராவிட மக்கள் இயக்கத்தின் மாநில அமைப்பாளராக இருக்கும் திரு. சதாசிவம் அவர்கள்.

சென்னை மருத்துவக் கல்லூரி எனக்குள் பல மாற்றங்களையும், சிந்தனைகளையும் வளர்த்தது. 1975 இல் தலித் இனப்போராளி சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்து ‘தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்' தொடங்கியபோது, அதில் உறுப்பினராகச் சேர்ந்து சில காலம் பணியாற்றினேன். 1979 இன் தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய எஸ்.சி./எஸ்.டி. மாணவர் மாநாட்டில் பங்கேற்றுப் பணியாற்றினேன். அதே ஆண்டு இறுதியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக தனியாக புத்தக வங்கி தொடங்குவதற்காக, இசையமைப்பாளர் இளையராஜாவை அழைத்து மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டியது எல்லாம் மாணவராக இருந்த காலத்தில், தலித்திய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள எனக்குக் கிடைத்த தளங்களாக நான் கருதுகிறேன்.

உங்கள் குடும்பப் பின்னணி பற்றி சொல்லுங்கள்.

எனது தாயார் திருமதி கண்ணாயி அம்மாள். தந்தை திரு. நாகையா, நீதிமன்றத்தில் பணியாற்றினார். அம்மா குடும்பப் பணிகளைப் பார்த்து வந்தார். அதிலிருந்து பெற்ற மிகக் குறைந்த வருமானத்தில் மூன்று பையன்கள், அய்ந்து பெண்கள் அனைவரையும் வறுமையைப் பொருட்படுத்தாமல் படிக்க வைத்தார். ஒரு மூத்த சகோதரனும், மூன்று மூத்த சகோதரிகளுக்கும் அடுத்ததாக நான் அய்ந்தாவது பையன். எனக்குப் பிறகு ஒரு இளைய சகோதரனும், மூன்று இளைய சகோதரிகளும் உள்ளனர். துணைவியார் திருமதி மணிமேகலை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வரலாற்றுத் துறையில் முதுகலை ஆசிரியையாகப் பணிபுரிகிறார். மகன் சென்னையில் உள்ள தனியார் பல்மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர். மகள் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தகவலியல் படித்து வருகிறார். நான் புதுக்கோட்டை மா. மன்னர் கல்லூரியில் புகுமுக வகுப்பும், புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் படித்தேன். 1981 முதல் புதுக்கோட்டையில் மருத்துவப் பணி செய்து வருகிறேன்.

அனைத்து சமூகத்தினரையும் சார்ந்து நிற்கவேண்டிய நிலையிலும்கூட, உங்கள் சமூகத்தினை நீங்கள் அடையாளப் படுத்துவதன் நோக்கமென்ன?

இரண்டாயிரம் ஆண்டுகளாக அனைத்தும் மறுக்கப்பட்டுக் கிடந்த தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இன்று சில வசதிகளைப் பெற்ற பின்பு அதற்குக் காரணமானவர்களின் உழைப்பைக்கூட மறந்துவிடுகின்றனர். மூன்று வேளை உண்பதற்கு உணவு கிடைத்தவுடன் தன்னை ஒரு தலித் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகின்றனர். ஆனால், இந்த வெட்கம் தேவையில்லாதது. ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மை நாமே மறைத்துக் கொண்டு வாழ்வதைவிட, பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, நம்மை நாமே அடையாளப்படுத்திக் கொள்வதே பகுத்தறிவின் இயல்பு. அத்தகைய நோக்கில் என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்ளவே இப்படங்களை நான் பணிபுரியும் இடத்தில் வைத்திருக்கிறேன்.

இந்தத் தலைவர்கள் படங்களை மருத்துவமனையில் வைத்திருப்பதால், தங்களைக் காணவரும் நோயாளிகளுக்கு எந்தவிதமான பிரதிபலிப்பு ஏற்படுகின்றது?

இந்துக்களாக இருப்பவர்கள் இந்துக்களை மட்டுமே சார்ந்து எந்தத் தொழிலையும் செய்வதில்லை. இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் தங்கள் மதத்தினருக்காக மட்டும் ஒரு தொழிலைத் தொடங்குவதில்லை. தங்கள் கடவுள் படங்கள் மூலம் ஒவ்வொருவரும் தங்களையும், தாங்கள் சார்ந்துள்ள மதத்தையும் அடையாளப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்கள் இதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்று எண்ணாதபோது, நான் மட்டும் ஏன் அவ்வாறு நினைக்க வேண்டும்? தங்களின் சமூக அடையாளத்தை மறைத்து வாழும் தலித்துகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமென நான் எண்ணுகிறேன். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் தன் தனித் திறமையை வெளிப்படுத்தும்போது, சமூகத்தில் எல்லாத் தரப்பிலும் நாம் தவிர்க்க முடியாத சக்தியாகி விடுகிறோம்.

தலித்துகள் எதற்கும் அருகதையற்றவர்கள், எந்தத் திறமையும் இல்லாதவர்கள் என்றுதான் இன்றுவரை ஆதிக்க சாதியினர் பறைசாற்றி வருகின்றனர். இத்தகைய கூற்றுகள் அனைத்தும் பொய். வாய்ப்பு கிடைத்தால் தலித்துகளாலும் சமூகத்தில் சிறந்த நிலையை அடைய முடியும். மற்ற சமூகத்தினருக்கு நிகராக உயர்ந்து காட்ட முடியும் என்பதை உணர்த்துவதற்காகவே இவ்வில்லத்தைக் கட்டினேன். தொழில் திறமை, கடின உழைப்பு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை முறையாக சேமித்தல், முறையாக முதலீடு செய்வது என்பதற்கான வெளிப்பாடும் தான் இந்த இல்லம். இதுகூட என் சமூகத்தை வெளிக்கொணர்வதற்காகத்தான்.

Jeyaraman in his library வீட்டின் உள்ளடக்கமாக ‘அபெகா' நூலகம் அமைத்ததன் நோக்கமென்ன?

இல்லம் என்பது உண்பதற்கும், உறங்குவதற்குமான இடமாக மட்டும் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது அறிவை வளர்க்கும் இடமாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு இல்லம் ஒரு நூலகமாக இருக்க வேண்டும். அதிலும் தலித்துகளின் இல்லம் என்பது சிறியதாக இருந்தாலும், சிந்தனைக் கூடங்களாக இருக்க வேண்டும். ‘அபெகா' என்பது அம்பேத்கர், பெரியார், காரல்மார்க்ஸ் என்பதன் சுருக்கம். வீடே நூலகம், நூலகமே வீடு. டாக்டர் அம்பேத்கர்தான் இந்த விஷயத்தில் எனக்கு வழிகாட்டி. தலித்தியம் பற்றிய சிந்தனையாளர்கள் பலர், தற்பொழுது இந்நூலகத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். என் நூலகத்தின் முக்கிய சேகரிப்பாக டாக்டர் அம்பேத்கர், பெரியார், காரல்மார்க்சின் நூல்களை வைத்திருக்கிறேன். இவர்களை முழுமையாகக் கற்றுணர அன்று எனக்கு கிடைக்காத வாய்ப்பினை, இன்றைய தேவையாளர்களுக்கு கிடைக்கும்படி செய்வதே என் நோக்கமாகும். உணர்வுப்பூர்வமாக மட்டுமல்லாது அறிவுப்பூர்வமாகவும், டாக்டர் அம்பேத்கரை உள்வாங்கிக் கொள்வதே தலித் விடுதலையை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்லும் சரியான வழியாக அமையும்.

உங்கள் நூலகத்தில் உள்ள நூல்களில் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய நூல்கள் எவை?

டாக்டர் அம்பேத்கர் எழுதிய ‘சாதி ஒழிப்பு', ‘காந்தியும், காங்கிரசும் தீண்டாத மக்களுக்குச் செய்தது என்ன?', ‘புத்தரும் அவரது தம்மம்' இந்த மூன்று நூல்களும் தான் மிகப் பெரிய மாற்றங்களைத் தந்தது.

சாதி ஒழிப்பு நூலின் மூலம் சாதி வெறும் கற்பனை என்பதையும், தீண்டாமை என்பது என்மீது வலியச் சுமத்தப்பட்ட இழிவு என்பதையும், நானும் என் சமூகம் சாதியற்றவர்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். சாதிக்கு மூலம் இந்து மதம். இந்த மதத்திற்குள் வாழும் வரை தீண்டாமையை விட்டு எந்த ஒரு தலித்தும் விடுதலை பெற முடியாது என்பதையும், தீண்டாமையிலிருந்து வெளியேற சரியான தீர்வும் சொன்ன ஒப்பற்ற நூல் அது. இந்தியாவின் ஆட்சிமன்ற நீதி நூல் மனுஸ்மிருதி என்றால், காந்தியம் சட்ட நூல். வெறிபிடித்த இந்துக்களின் இரக்க குணத்திலிருந்துதான் தலித் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றார் காந்தி. அவர்களின் கருணையிலிருந்துதான் இவர்களின் தீண்டாமை நீங்கும் என்றார். ஆனால், சுதந்திரம் பெற்று இந்தியா சர்வ வல்லமை பெற்ற குடியரசு நாடாகியும்கூட இன்னமும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. தீண்டாமை என்பது கிரிமினல் குற்றம் என்று அய்.பி.சி. கூறுகின்றது. சட்டப்படியான தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்றால், இந்து மதத்தைக் கைது செய்து மரண தண்டனை நிறைவேற்றியிருக்க வேண்டும். தலித் சாதிப் பெயரைச் சொல்லிப் பேசினால் பிணையில் வரமுடியாத வழக்குத் தொடரலாம் என்று சட்டம் கூறுகின்றது. ஆனால் சாதியை உருவாக்கி, சாதிவெறியர்களை தினம் தினம் உரமேற்றி வளர்த்து தீண்டாமையை ஏக இந்தியர்களின் சொத்தாகப் பாதுகாத்து வரும் இந்து மதத்தை ஏன் தண்டிக்கவில்லை? இதற்கு ஏன் சட்டம் செய்யவில்லை? இதைத்தான் டாக்டர் அம்பேத்கர் தனது ‘காந்தியும், காங்கிரசும் தீண்டாத மக்களுக்குச் செய்தது என்ன?' என்ற நூலில் தெளிவுபடுத்துகின்றார்.

காங்கிரஸ் என்பது காவி அணியாத இந்துத்துவா! காங்கிரஸ் என்ற கட்சியும் காந்தியக் கோட்பாடும் எத்தனை காலங்கள் ஆட்சி செய்தாலும், இம்மக்களின் தீர்வுக்கு எந்தக் காலத்திலும் வழி சொல்லாது. இதற்கெல்லாம் தீர்வாகத்தான் ‘புத்தரும் அவரது தம்மம்' நூலில் தெளிவுபடுத்தியிருக்கின்றார். இவை ­ன்றும் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்ற ஒவ்வொரு தலித்தும் படிக்க வேண்டிய நூல்களாகும்.

சாதியை ஒழிப்பதற்கான உங்களின் முயற்சி என்ன? அதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கின்றீர்களா?

சாதியை ஒழிப்பதற்கான வழிகளில் ஒன்றாக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சாதி மறுப்புத் திருமணத்தைத் தீர்வாக வைக்கின்றார். அதன் வழியில் நான் சாதிமறுப்புத் திருமணம் செய்து கெண்டேன். அதன் மூலம் என்னைச் சேர்ந்த உறவினர்களையும், என் துணைவியாரின் உறவினர்களையும் சாதி மறுப்பாளர்களாக ஒன்றிணைத்திருக்கின்றேன். சாதி மறுப்புத் திருமணத்தின் மூலம் சாதியை ஒழிக்க முடியும் என்பதற்கு நான் சரியான எடுத்துக்காட்டாக இருப்பதாகக் கருதுகிறேன். இது எனக்கு வெற்றிதான்.

பேட்டி அடுத்த இதழிலும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com