Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2006

"மேலாதிக்கத்தை அனுமதிக்க முடியாது''
வெனிசுவேலா அதிபர் ஹூயுகோ சாவேஸ் அய்.நா. அவையில் முழக்கம்

உலக நாடுகளை ஆளும் அரசாங்கங்களின் பிரதிநிதிகளே! எல்லோருக்கும் என் காலை வணக்கம். முதலில் நான் உங்களை மிகுந்த அன்புடன், இந்தப் புத்தகத்தை வாசிக்காதவர்களை, வாசித்துப் பார்க்க அழைக்கிறேன். நோம் சோம்ஸ்கி, அமெரிக்காவில் போற்றப்படுகிற முக்கியமானவர்களில் ஒருவர். உலகத்து அறிவு ஜீவி. அண்மையில் அவர் எழுதிய புத்தகம், "மேலாதிக்கம் அல்லது எஞ்சி வாழ்தல் - அமெரிக்காவின் ஏகாதிபத்திய உத்திகள்'' (புத்தகத்தை தலைக்கு மேல் தூக்கி, பொதுக்குழு கூட்டத்திற்கு காட்டுகிறார்) இது, மிகவும் அற்புதமான புத்தகம். இந்தப் புத்தகம் 20 ஆம் நூற்றாண்டிலும், இப்போதும் இந்த உலகில் என்னவெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நம் பூமிக் கோளத்தைக் கவ்வியுள்ள ஆபத்தையும் அது விளக்குகிறது.

Hugo Chavez அமெரிக்க சாம்ராச்சியத்தின் மேலாதிக்க வெறி, இந்த பூமியில் மனித இனம் அழிந்து போகச் செய்யும் ஆபத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. இப்பேராபத்து குறித்து அமெரிக்க மக்களுக்கும், உலக மக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை செய்கிறோம். இதை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும். நம் தலைக்கு மேல் இது வாளைப் போலத் தொங்குகிறது. இந்தப் புத்தகத்திலிருந்து பல பக்கங்களை இங்கு வாசிக்க எத்தனித்திருந்தேன். ஆனால், நேரமின்மையால் நீங்கள் இந்நூலைப் படிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.

இந்நூலை முதலில் படிக்கும் படி நம் அமெரிக்க சகோதர, சகோதரிகளை நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், ஆபத்து அவர்களின் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. பேய் (அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்) உங்கள் வீட்டில் உள்ளது. பேய், பேய், பேயே வீட்டில் குடிகொண்டுள்ளது. அப்புறம் பேய் நேற்று இங்கு வந்தது. நேற்று பேய் மிகச் சரியாக இங்கே வந்தது (சற்று விலகி நிற்கிறார்). அதனால்தான் இன்று வரை இந்த இடத்தில் கந்தக நெடி வீசுகிறது.

சகோதர - சகோதரிகளே! நேற்று, இந்த மேடையிலிருந்து அமெரிக்க அதிபர், நான் பேய் என்றழைக்கும் அந்த மேன்மை தாங்கியவர் இங்கு வந்தார். இந்த உலகத்தின் முதலாளி போல் அவர் பேசிக் கொண்டிருந்தார். இந்த உலகத்தையே சொந்தமாக வாங்கிவிட்டவர் போல் பேசிக் கொண்டிருந்தார். ஒரு மன நல மருத்துவரை அழைத்து நேற்று இங்கு அமெரிக்க அதிபர் விடுத்த அறிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏகாதிபத்தியத்தின் செய்தித் தொடர்பாளரைப் போல் அவர் பேசினார். உலகில் உள்ள மக்கள் மீதான மேலாதிக்கம், சுரண்டல், கொள்ளை என இவற்றின் செயல் வடிவங்களைத் தொடர்ந்து நீட்டிப்பதற்கான அருமருந்துகளுடன் அவர் இங்கு வந்தார்.

சோம்ஸ்கி மிகச் சரியாகவும், பொருள் பொதிந்தும் கூறுவதைப் போல், அமெரிக்கா தனது மேலாதிக்க வெறியை நிலைநாட்டுவதற்குப் பல்வேறு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதை நம்மால் அனுமதிக்க முடியாது. உலக சர்வாதிகாரம் ஒருங்கிணைவதை அனுமதிக்க முடியாது. உலகையே ஜனநாயகப்படுத்தப் போவதாக அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய ஜனநாயகம் எத்தகையது? மேட்டுக்குடியினரின் போலி ஜனநாயகம். வேறு மாதிரியாக சொன்னால் வெடிகுண்டுகளாலும், ஆயுதங்களாலும் கட்டமைக்கப்படுகிற ஜனநாயகம். என்ன விசித்திரமான ஜனநாயகம் இது! அமெரிக்க அதிபர் நேற்று நம்மிடம், இதே இடத்தில், இதே அறையில் சொன்னார் (நான் வாசிக்கிறேன்), "எங்கு வேண்டுமானாலும் பாருங்கள், தீவிரவாதிகள் வழிகாட்டுகிறார்கள் - ஏழ்மையிலிருந்து விடுபட்டுத் தப்பிப்பதற்கான ஒரே வழி வன்முறை, ஆயுதம், தியாகம்.''

அவர் எங்கு பார்த்தாலும் அவருக்கு தீவிரவாதிகள் மட்டுமே தெரிகிறார்கள். அவர் உங்கள் நிறத்தைப் பார்த்தவுடன், அய்யோ இவர் தீவிரவாதி எனக் கூப்பாடு போடுகிறார். ஈவோ மோரால்ஸ், பொலிவியாவின் மேன்மை தாங்கிய அதிபர் இவர்களைப் பார்த்தால் அவருக்குத் தீவிரவாதி போல் தெரிகிறது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு காணுமிடங்களெல்லாம் தீவிரவாதிகள் தெரிகிறார்கள். உலகம் விழித்துவிட்டது. உலகத்து மக்கள் எழுச்சி பெற்று தங்கள் குரலைப் பதிவு செய்கிறார்கள். எனக்கு அழுத்தமாகத் தோன்றுகிறது - அன்புலகின் சர்வாதிகாரியே! உன் வாழ்நாளின் மீதிப் பகுதியை பகல் கனவு கண்டு கழிக்கப் போகிறாய்; ஏனெனில், நாங்கள் எல்லாம் விழித்துக் கொண்டோம். எல்லோரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சமத்துவத்திற்காக, சுயகவுரவத்திற்காக, தேசங்களின் இறையாண்மைக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

பின்பு அமெரிக்க அதிபர் கூறினார் "நான் மத்திய கிழக்கின் மக்களோடு நேரடியாக உரையாட இங்கு வந்தேன். அவர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன் எங்கள் தேசம் அமைதியை விரும்புகிறது.'' அது உண்மைதான். நீங்கள் பிரான்ஸ், நியூயார்க், வாஷிங்டன், சான்டியாகோ, சான்பிரான்சிஸ்கோ என எந்த நகரத்து வீதிகளில் நிற்கும் அமெரிக்க குடிமக்களிடம் சென்று, உங்கள் தேசத்திற்கு எது வேண்டும் எனக் கேட்டால், அவர்கள் ஆம் அமைதி வேண்டும் என்றுதான் பதிலளிப்பர். ஆனால், அமெரிக்க அரசாங்கம் அமைதியை விரும்பவில்லை. அரசாங்கத்திற்கு போர்களின் மூலம் தன் சுரண்டலை, செல்வாக்கை, மேலாதிக்கத்தைச் செலுத்துவதிலேயே விருப்பம் உள்ளது. அமைதி வேண்டுமாம்! ஆனால், ஈராக்கில் என்ன நடக்கிறது? லெபனானில் என்ன நடக்கிறது? பாலஸ்தீனத்தில் என்ன நிகழ்கிறது? கடந்த 100 ஆண்டுகளாக லத்தின் அமெரிக்க நாடுகளில், உலகின் பிற நாடுகளில் என்ன நடக்கிறது? இது தவிர இப்போது புதிய மிரட்டல்கள் வேறு. வெனிசுவேலா மிரட்டப்படுகிறது; ஈரான் மிரட்டப்படுகிறது.

லெபனான் மக்களிடம் அவர் பேசினார். உங்களில் பல பேர், உங்கள் வீடுகள், சமூகங்கள் போர்களில் சிக்கியுள்ளதைப் பார்த்தீர்களா? என்ன புரட்டான பேச்சு இது? பொய் சொல்வதற்கு வெட்கப்படாத பேர்வழி. பெய்ரூட்டில் பொழிந்த குண்டுகள் மில்லி மீட்டர் துல்லியமாக இலக்கைத் தகர்த்தன. எதிர்த்தாக்குதல்கள் எங்கு நடந்தன? இஸ்ரேல் பாலஸ்தீன, லெபனான் மக்களின் மீது குண்டு மழை பொழிகிறது. இது, ஏகாதிபத்தியம், பாசிசம் நிகழ்த்தும் இனப்படுகொலை. இதுதான் நடந்தது. நாம் துன்பத்துக்குள்ளாகிறோம். ஏனெனில், நாம் பற்றி எரியும் வீடுகளை, நிர்மூலமாக்கப்பட்ட குடியிருப்புகளை கண்களால் பார்த்தவர்கள். அமெரிக்க அதிபர் உலகத்து மக்களிடம் பேச வந்தாராம்! அவர் ஆப்கானிஸ்தான், லெபனான், ஈரான் மக்களிடத்தில் நேரடியாகவே பேசினாராம். அதிபர் உலகத்து மக்களிடம் நேரடியாக உரையாடியது போல், அவர்களுக்கு இந்த மேடை வழங்கப்பட்டால் அவர்கள் என்ன பேசி இருப்பார்கள்? தெற்கின் மக்கள் என்ன கூறியிருப்பார்கள் என என் மனதில் சில யூகங்கள் எழுகிறது. அவர்கள், "அமெரிக்க ஏகாதிபத்தியவாதியே! வீட்டுக்குப் போ'' என ஒற்றைக் குரலில் முழங்கியிருப்பார்கள்.

என் நண்பர்களே! கடந்த ஆண்டும் இதே இடத்தில் சந்தித்தோம். கடந்த எட்டு ஆண்டுகளாக இதைத்தான் மீண்டும் மீண்டும் செய்து வருகிறோம். இப்போது சில விஷயங்கள் உறுதிப்பட்டுள்ளது. இங்குள்ள யாரும் அதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். நாம் நேர்மையாக ஒப்புக் கொள்வோம். அய்.நா.வின் நடைமுறையால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான அய்க்கிய நாடுகள் அவை தகர்ந்துவிட்டது. காலாவதியாகிவிட்டது. இது பயனற்றது. ஆண்டுக்கு ஒரு முறை இங்கு இப்படிக் கூடுவது, சந்தித்துக் கொள்வது, உரை நிகழ்த்துவது, அறிக்கைகள் தயாரிப்பது, நல்ல பேச்சைக் கேட்பது நல்லதுதான். ஆனால், இந்த அவை தனது எல்லா அதிகாரங்களையும் இழந்து வேடிக்கை பார்க்கும் இடமாக மாற்றப்பட்டு விட்டது. உலகின் ஆபத்தான சூழ்நிலையின் மீது எந்த வினையும் புரிய முடியாத அவையாகி விட்டது. ஆதலால், வெனிசுவேலா மீண்டும் முன்மொழிகிறது - அய்க்கிய நாடுகள் அவையை மீட்டுருவாக்கம் செய்வோம்.

முதலாவது, விரிவாக்கம் பற்றியது. பாதுகாப்பு அவையின் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினராக வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு நிரந்தர இடம் அளித்து விரிவாக்க வேண்டும். இரண்டாவது, உலக நாடுகளிடையேயான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான, வெளிப்படையான நடைமுறைகள், முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மூன்றாவது, ஜனநாயகமற்ற ‘வீட்டோ' உரிமையை செயலிழக்கச் செய்வது. பாதுகாப்பு அவையின் முடிவுகளில்கூட தலையிடும் இந்த வல்லமை படைத்த ஜனநாயகமற்ற அதிகாரம் நிர்மூலமாக்கப்பட வேண்டும். சமீபத்திய எடுத்துக்காட்டாக, பாதுகாப்பு அவையின் முடிவைத் தகர்த்த அமெரிக்க ‘வீட்டோ' அதிகாரம், பாலஸ்தீனத்தை அழிக்க இஸ்ரேலுக்கு உதவியது. நாம் எல்லோரும் கைகட்டி இதை வேடிக்கை பார்த்தோம். அய்.நா.வில் தீர்மானம்கூட தடுக்கப்பட்டது.

Chavez and Fidel castro நான்காவது, அய்.நா.வின் பொதுச் செயலரின் அதிகாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். நேற்று, பொதுச் செயலர் அவரது பிரியாவிடை உரையை ஆற்றினார். அதில் அவர் ஒப்புக் கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை படுமோசமாக மாறியுள்ளது; வறுமை, பசி, வன்முறை, மனித உரிமை மீறல் என எல்லாம் சீர்கெட்டுக் கிடக்கிறது. இதுதான் அய்.நா. தகர்ந்ததற்கும், அமெரிக்க மேலாதிக்கத்திற்குமான ரத்த சாட்சியங்கள். இதைத் தெரிவிக்கத்தான் உறுப்பு நாடான வெனிசுவேலா அய்.நா.வின் மீது கடந்த ஆண்டு சர்ச்சையைத் தொடங்கியது.

எங்கள் குரலை, எங்கள் ஆலோசனைகளை முன்வைத்தோம். எங்கள் குரல் சுதந்திரமானது, சார்பற்றது. இந்த சர்வதேச கட்டுமானத்தை மீட்டெடுத்து, அமைதியை, தன்மானத்தை நிலைநாட்டுவதற்கான குரல். இப்படித்தான் வெனிசுவேலா தன்னை முன்வைத்தது. பாதுகாப்பு அவைக்கு நாங்கள் தேர்வு பெற்றுவிடக் கூடாது என்பதற்கு அமெரிக்க அரசாங்கம் எங்களை வெளிப்படையாகத் தாக்கியது. தடுத்தது. சர்வாதிகாரம் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது. சுதந்திர குரல்களை கேட்க பயப்படுகிறது. எங்களை தீவிரவாதிகளென அழைக்கிறது. ஆனால், அவர்கள்தான் உண்மையான தீவிரவாதிகள்.

இவை எல்லாவற்றையும் மீறி நாம் நம்பிக்கையுடன் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரு கவிஞன் இதை சொல்லியிருந்தால் ‘மறுக்கவியலாத நம்பிக்கை' எனக் குறிப்பிட்டிருப்பார். எத்தனைப் போர்கள், தடுக்க வேண்டிய தாக்குதல்கள், மனித சமூகம் அழித்தொழிக்கப்பட்டது என இவைகளைக் கடந்து புதிய விடியல் புலர்ந்து கொண்டிருக்கிறது. யோசிப்பதற்கான மாற்று வழிகள் உருவாகி விட்டன. வித்தியாசமாக சிந்திக்கக் கூடிய இளம் தலைமுறை வந்துவிட்டது. இவை எல்லாம் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ளது. அது போலவே, அமெரிக்கா மற்றும் நவதாராளவாத உலகம் பற்றிய பிம்பங்களும் சிதைந்து விட்டன. இந்த வழிமுறைகள் ஏழ்மையை உற்பத்தி செய்பவையே. இதை இனி யாரும் நம்பத் தயாராக இல்லை. நாம் இனி புதிய உலகத்தை வரையறுக்கத் தொடங்கலாம். பொழுது புலரத் தொடங்கிவிட்டது. இதை நீங்கள் ஆப்பிரிக்காவிலும், அய்ரோப்பாவிலும், லத்தின் அமெரிக்காவிலும் காணலாம். இந்நம்பிக்கையளிக்கும் பார்வையை நான் வலியுறுத்த விரும்புகிறேன். நம்மை நாம் பலம் பொருந்தியவர்களாக உருமாற்ற வேண்டும். போடுவதற்கான மனத்திண்மையை வளர்க்க வேண்டும், நாம் விழித்திருக்க வேண்டும், புதிய உலகை உருவாக்க வேண்டும்.

கியூபாவை குறிப்பிட்டோம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் அங்கே குழுமியிருந்தோம். அங்கிருந்து மகிழ்ச்சி பொங்க இங்கு வந்திறங்கினோம். அங்கே ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது. 15 நாடுகள் அடங்கிய அணிசேரா கூட்டமைப்பு மீண்டும் பிறந்தது. அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உங்களிடம் உள்ளது. 50 நாடுகளின் தலைவர்களால் முன்மொழியப்பட்டு, மனம் திறந்த விவாதங்கள் நிகழ்ந்த பிறகுதான் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு, புத்துயிர்ப்புடன் பிறந்தது. அந்தக் கூட்டமைப்பை முன்னெடுத்துச் செல்ல உங்கள் ஆதரவைக் கோருகிறேன். நீங்கள் அறிவீர்கள். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை வழிநடத்தப் போவது பிடல் காஸ்ட்ரோதான். அவர் திறம்பட செயலாற்றுவார் என்பதில் அய்யமில்லை.

‘பிடல் செத்துவிடுவார்' என அவர்கள் நினைத்தார்கள். தற்பொழுது அவர்கள் மன வருத்தமடைவார்கள். ஏனெனில், அப்படி நிகழவில்லை. மீண்டும் தனது கரும்பச்சை உடையில் அவர் காட்சியளிக்கிறார். அவர் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்குகிறார். மீண்டும் தெற்கிலிருந்து சூளுரைத்து, ஒரு புதிய படை புறப்பட்டுள்ளது. நாங்கள் தெற்கிலிருந்து வந்தவர்கள். இந்த அறிக்கைகளுடன், இந்த எண்ணங்களுடன், இந்த விமர்சனங்களுடன், எனது கோப்பை மூடுகிறேன்.

இந்த பூமியைக் காப்பாற்ற நமக்கு புதிய வழிகள் வேண்டும். பூமியை ஏகாதிபத்தியத்தின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்றியாக வேண்டும். அதுவும் நம்பிக்கையுடன் இந்த நூற்றாண்டிலேயே அந்தக் காட்சியை, அந்தக் காலத்தை நாம் விரைவாக எட்டி விடுவோம். அந்தப் புதிய விடியல், நம் குழந்தைகளுக்கானது. நம் பேரக் குழந்தைகள், அய்.நா.வின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி பெறப்பட்ட அமைதி தவழும் சூழலில் வாழ வேண்டும்.” புனரமைக்கப்பட்ட அய்.நா. தேவை. அதற்கு அய்.நா. இயங்குமிடத்தை மாற்ற வேண்டும். வேறு எங்காவது அதை மாற்றலாம். எங்காவது தெற்கில், நாங்கள் வெனிசுவேலாவை முன் மொழிகிறோம். 

வெனிசுவேலா அதிபர் செப்டம்பர் 20, 2006 அன்று அய்.நா. அவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. தமிழில் : அ. முத்துக்கிருஷ்ணன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com