Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2006

மீள்கோணம்
அழகிய பெரியவன்

Azhakiya Periyavan குழந்தைகள் வாழ்வதற்குப் பாதுகாப்பு அற்ற, போதிய வசதிகள் கிடைக்காத மிக ஆபத்தான நாடுகளில், ஆறாவது நாடாக இந்தியா இருக்கிறது என அண்மையில் ‘ராய்டர்' செய்தி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது. இதைப்போன்றே ஓர் ஆய்வறிக்கை, பெண்கள் வாழ்வதற்கும் மிக ஆபத்தான நாடாக இந்தியா இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. தேசிய குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கை அது. இந்தியாவில் சராசரியாக 29 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார் என்று கூறுகிறது அவ்வறிக்கை. 16 நிமிடத்திற்கு ஒரு பெண் வீதம் கொலை செய்யப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமை, மணக்கொடை வன்கொடுமை உள்ளிட்ட 1 லட்சத்து 55 ஆயிரத்து 553 குற்றங்கள், கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, 2004 ஆம் ஆண்டைக் காட்டிலும் 1519 அதிகம். இந்தியத் தலைநகர் டில்லியே குற்றங்களின் தலைநகராகவும் இருக்கிறது. இங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகம்; குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகம். தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 14.1 சதவிகிதம் என்றால், தில்லியில் அது 27.6 சதவிகிதம்.

பெண்களுக்கு எதிராய் வளர்ந்து வருகின்ற குற்றங்களின் எண்ணிக்கை மிகுந்த கவலை அளிக்கிறது என்று அறிக்கை விட்டு, நாட்டுத் தலைவர்களைப் போல வெறும் வாயை மெல்ல முடியாது நம்மால். செயலில் இறங்கியாக வேண்டும். குறைந்த அளவு சுரணையும், கோபமுமாவது வரவேண்டும். அப்போதுதான் இந்த நிலையை மாற்ற முடியும். கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் செய்தித்தாள்களில் வெளியாகி வருகின்ற செய்தியை கவனமாகப் படிக்கிறபோது, நடப்பு ஆண்டில் இந்தக் குற்றங்களின் எண்ணிக்கை மேலும் பெருகும் போலிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை சொல்கின்ற குற்றங்களில் பெரும்பாலானவை பழங்குடியினப் பெண்களுக்கும், தலித் பெண்களுக்கும் எதிராகவே இழைக்கப்பட்டிருக்கும் என்பதில் அய்யமில்லை. எல்லா பெண்களுமே வன்முறைக்கு இலக்காகும் வகையில் இருந்தாலும், தலித் மற்றும் பழங்குடியினப் பெண்கள்தான் மேலும் ஆபத்தான சூழலில் இருக்கிறார்கள். அண்மையில் வெளியான பல செய்திகள் அதற்குச் சான்றாக உள்ளன.

மத்தியப் பிரதேசம், நாகர்கார்கை சேர்ந்த ரோடிபாய் என்ற பழங்குடியினப் பெண் தனது கணவருடனும், மகளுடனும் மகாரஜ்பூர் என்கிற இடத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, நான்கு பேரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். ஆகஸ்டு மாதம் 21 அன்று இக்கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது. இருபது நாளாகியும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று போன பிறகே இரை செரிக்காத மலைபாம்பைப் போல் காவல் துறை திரும்பியிருக்கிறது.

அரியானாவில் ரோடாக் என்ற இடத்தை சேர்ந்த தலித் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி இருக்கிறார். உரிய முதல் தகவல் அறிக்கையும், மருத்துவச் சான்றும் வழங்காததால், தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த முனைந்த உறவினர்கள், சோனியாவையும் சந்திக்க முயன்றிருக்கிறார்கள். தமிழகத்தில் செங்கம் அருகில் இரவில் திரைப்படம் பார்த்துவிட்டுத் திரும்பிய பழங்குடிப் பெண் ஒருவர், சிலரால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போபாலுக்கு அருகிலும், வேறு சில பகுதிகளிலுமாக இரண்டு உடன்கட்டை ஏற்றும் கொடுமைகள் நடந்திருக்கின்றன. ஜானகி ராணி என்கிற ஒரு பெண்ணும், வேறொரு மூதாட்டியும் உடன்கட்டை ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இக்கொடூரங்களில் ஒன்றில், அம்மூதாட்டி உடன்கட்டை ஏற முனைந்தபோது யாரும் தடுக்கவில்லை. வேடிக்கை பார்த்திருக்கிறது கூட்டம்.

தமிழகத்தின் தலைநகராம் சென்னையின் மாநகராட்சி இயங்கும் வெள்ளை மாளிகைக்குள்ளும் இத்தகு கறைச் செயல்கள் நடைபெறுவதாக செய்திகள் சொல்கின்றன. அங்கே துப்புரவுப் பணியாற்றும் பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு அதிகாரிகள் உள்ளாக்குவதாக புகார்கள் எழும்பியுள்ளன. தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் நிர்மலா வெங்கடேஷ் விசாரணைக்கு வந்து போயிருக்கிறார்.

"2020க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக கட்டி எழுப்புவதற்கு கல்வி அறிவு பெற்ற பெண்கள் மிகவும் அவசியமானவர்கள்'' என்று நம் நாட்டின் குடியரசுத் தலைவர், அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் பேசிவிட்டுப் போவது ஒருபுறம் இருக்க, நாள்தோறும், நொடிகள்தோறும் பெண்களின் பாதுகாப்பின்மை அதிகரித்துக் கொண்டிருப்பதும் இந்த நாட்டிலே நேர்ந்து கொண்டிருக்கிறது.

நாகரிக சமூகத்தில்தான் நாம் இருக்கிறோம் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ‘கள்ளக் காதல்', ‘அழகி கைது', ‘கற்பழிப்பு' என்கின்ற ஆண் நிலை சொல்லாடல்களுடன் தினம் தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. காதலிலும், பாலுறவுச் சிக்கல்களிலும் காவல் துறையும், சமூகமும் ஒரே கருத்தைதான் கொண்டுள்ளன. எனவே, நடவடிக்கைகள் பெண்களுக்கு எதிராகவேதான் எடுக்கப்படுகின்றன. பெண்களை மய்யப்படுத்தியே தான் அந்தச் செய்திகளும் வெளியிடப்படுகின்றன. இந்த வக்கிரமான ஒரு சார்பு மனோபாவத்தின் வெளிப்பாடாகத்தான் அண்மையில் சென்னை வண்டலூரில் ஒரு பெண்ணை, ஊரின் மய்யத்தில் கட்டிவைத்துத் துன்புறுத்தியதும் நிகழ்ந்திருக்கிறது.

சபரிமலை கோவில் விஷயத்தில் பெண்களுக்கு ஆதரவாக நின்று, அரசும், இடதுசாரி இயக்கங்களும், பெண்ணிய இயக்கங்களும் பெண்களுக்கென ஒரு கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், முற்போக்கு பேசும் இடதுசாரி அமைப்புகளும், அரசும் கேரளத்தில் ஆணாதிக்க தடித்தனத்துடன் நடந்து கொண்டுள்ளன. ‘அரசு கோயில் விஷயத்தில் தலையிடாது' என்று அறிவிக்கிறது கேரள அரசு. இது, சபரிமலை கோயில் சிக்கல் அல்ல; பெண்களின் உரிமைச் சிக்கல். ஒரு பொறுப்புள்ள அரசு இதில் பெண்களுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டாக வேண்டும். ஆனால், அரசே பெண்களுக்கு எதிராக இருக்கிறது. பெண்கள் பணியாற்றும் இடங்கள், வழிபாட்டு இடங்கள், சமூக இயங்கு வெளிகள், குடும்பம் என அனைத்து இடங்களிலும் மிகக் கடுமையான பெண் ஒடுக்குமுறை சூழலே நிலவுகின்றது. அடக்குமுறை எனும் கயிற்றின் மீதே தினமும் நடக்கிறாள் பெண்.

‘பெண்கள் பணியாற்றுகின்ற அரசு, பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை விசாரிக்க ஒரு தனி குழு அமைக்கப்பட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், ‘இந்த உத்தரவு செயல்படுத்தப்படாமல் இருக்கிறது' என்கிறார் பெண்கள் தேசிய ஆணையத்தின் உறுப்பினர் நிர்மலா வெங்கடேஷ். படித்த பெண்களுக்கும், வெளிநாட்டில் பணிபுரியும் பெண்களுக்கும் பெரும் சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லும் அவர், அடித்தட்டுப் பெண்களுக்கே கடும் சிக்கல்கள் இருப்பதாக சொல்கிறார். அவர்களே எளிதில் கொடுமைகளுக்கு இலக்காகக் கூடியவர்கள். கல்வியறிவு இன்மை, அறியாமை, மதம், வறுமை, சாதியம் எனப் பல்முனைத் தாக்குதல்களை அப்பெண்கள் சந்திக்கிறார்கள்.

சாதியம் உயிர்த்திருக்கும் இடமாகவும், பாதுகாக்கப்படும் இடமாகவும் பெண் உடல் இங்கு கருதப்படுகிறது. சாதியத்தின் அடக்குமுறைகளும், எச்சரிக்கைகளும், தண்டனைகளும் அவள் மீதே எழுதப்படுகின்றன. நட்ட நடு வீதியில் கணவன் முன்பாகவும், பிள்ளைகள் முன்பாகவும், பிற ஆண்களின் முன்பாகவும் சாதியத்தின் ஒடுக்குமுறை விதியை எழுத அவர் உடல் திறக்கப்படுகிறது. அம்மணப்படுத்தப்படுகிறது. இந்த வல்லுறவைப் பார்த்துக் கொண்டு நிற்கும் கையாலாகாத ஆண் இணையைப் போலத்தான் எல்லாமும் இந்தக் கொடுமைகளுக்கு முன்னால் நிற்கின்றன. கண்டன அறிக்கைகள், பட்டினிப் போராட்டங்கள், எழுத்துகள், விசாரணைகள், அமைப்புகள் என எல்லாமே! தலித் இயக்கங்கள்கூட தலித் பெண்கள் விசயத்தில் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை. இதற்குத் தேவை உறுதியான தீர்வுகளும், தண்டனைகளும். அவை கிடைக்கவில்லை எனில், தன்னெழுச்சியான எதிர்ப்புகள் மக்களிடமிருந்து கிளம்பும்; கிளம்புகின்றன.

ரோடிபாய் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதை எதிர்த்து பழங்குடியினருக்கும், காவல் துறைக்கும் இடையிலே மோதல் வெடித்திருக்கிறது. புகார் கொடுத்து இருபது நாட்களாகியும் எதுவும் நடக்கவில்லை. காவல் நிலையத்தைப் பழங்குடியின மக்கள் முற்றுகை இட்டிருக்கிறார்கள். உரிய விடை கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்களுக்கும், அதை அடக்கிய காவல் துறைக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில், ஓர் ஆய்வாளரும், ஒரு பழங்குமுடியும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

**********

போலி சான்றிதழ் மூலம் தலித் மற்றும் பழங்குடியினரின் சலுகைகளை களவாடிக் கொள்ளும் சாதி திருடர்களைப் பற்றி சென்ற இதழில் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு பல தோழர்கள் நேரிலும், தொலைபேசி வழியாகவும் அது குறித்த பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள். சில தோழர்கள் நம்மிடம் சொன்ன செய்தியின் அடிப்படையில், ஒன்றிரண்டு ஊர்களில் (மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் தேர்வுநிலை பேரூராட்சிகள்) சிறு ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம். சிப்பந்திகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளின் அலுவலகங்களில் பணிபுரிவோர் ஆகியவர்களிடமிருந்து நமக்குக் கிடைத்த நம்பகமான செய்திகள், நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஒவ்வொரு சிறு நகரங்களிலும் போலி சாதி சான்றிதழ்களைப் பெற்று, தலித் மற்றும் பழங்குடியினரின் சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலை தமிழகம் முழுவதும் மட்டுமல்ல. இந்தியா முழுவதுமே இருக்கலாம்! ஒரு சிறு நகரத்திலேயே இருநூறுக்கும் மேல் என்றால் ஒட்டுமொத்த தமிழகத்திலும், இந்தியாவிலும் போலி சான்றிதழ்களின் மூலம் ஏமாற்றி வாழ்வோரின் எண்ணிக்கை, பல லட்சங்களை, கோடிகளைத் தொடலாம். அப்படியெனில் தலித் மக்களுக்கும், பழங்குடியினரின் நலனுக்கும் ஒதுக்கப்படும் "சொற்ப' நதியில் பாதி இந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் கைகளுக்குதான் போய்ச் சேருகின்றன. இதைத் தடுக்காவிடில் எந்தவித முழுமையான முன்னேற்றமும் தலித், பழங்குடியினர் வாழ்வில் ஏற்படப் போவதில்லை என்பது உறுதி.

கையூட்டும், சாதி சான்றிதழ்களை வழங்குவது, பதிவது ஆகியவற்றில் இருக்கும் நடைமுறைகளும், போலி சான்றிதழ்களைப், பெறுவதில் பெரும் பங்காற்றுகின்றன. பணத்தினால் இந்தப் போலி சான்றுகள் பெறப்படுவதோடு, பள்ளிச் சான்றுகளும் துணை புரிகின்றன. பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போதும், சேர்க்கையின்போதும் உரிய சாதி மற்றும் வருவாய் ஆவணங்களைப் பள்ளி நிர்வாகம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கம்மாரா, கொண்டா ரெட்டி போன்ற பழங்குடியினப் பெயர்களும், குறவன், சக்காலா போன்ற தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இனப் பெயர்களும், தமது சாதிப் பெயர்களை மாற்றி போலி சான்றிதழ்களைப் பெற ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு உதவுகின்றன.

அண்மையில் மய்ய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், சாதி மறுப்புத் திருமணங்களை செய்து கொள்ளும் இணையருக்கு அய்ம்பதாயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. சாதிய கண்ணோட்டத்தில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக இத்தொகையினை அளிப்பதாக இத்துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்துள்ளார். இத்திட்டம் வரவேற்புக்குரிய ஒன்றாகும். ஆனால், இதையும்கூட சாதி திருடர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவார்கள். அவர்கள் நாவில் இப்போதே நீர் ஊறத் தொடங்கி இருக்கும்! சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களோடு இணைந்து, போலி சான்றிதழ் பெற்று வைத்துள்ளவர்களும் இச்சலுகை தொகையைப் பெற்று வருகிறார்கள்.

இதில் அவர்களுக்கு எந்த சமூகச் சிக்கலும் எழுவதில்லை. அரசு சலுகைகளைப் பெறவும், கல்விச் சலுகைகளைப் பெறவும், வேலை பெறவும் தலித், பழங்குடி என்ற போலி சான்றிதழ்! திருமணம் செய்து கொள்ள சொந்த சாதிப் பெண்! போலி சான்றிதழ்களின் உதவியுடன் சாதி மறுப்பு (கலப்புத் திருமண) திருமண உதவித் தொகை! இப்படி நடக்கின்றது ஏமாற்று வேலை. தலித், பழங்குடியினர்களும், சமூகப் போராளிகளும் இந்த ஏமாற்று வேலைகளைத் தடுக்க செய்ய வேண்டியது ஒன்றுதான். ஒவ்வொருவரும் தம் பங்குக்கு ஒரு சாதி திருடரையும், அதற்குத் துணைபோகும் முதுகெலும்பற்ற அரசு அலுவலரையும் பிடித்துத் தர வேண்டும். மூர்க்கமுடனும், முனைப்புடனும் இந்த செயல் நடக்குமானால், சாதி திருட்டு குறைந்து விடும்.

மதச்சார்பற்ற அரசு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் அரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும். இணைந்து, செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாடு முழுவதும் பாடும்படியான "சேர்ந்திசை நிகழ்ச்சியை' ஏற்பாடு செய்திருந்தன. அன்று பாடப்பட்ட பாடல் ‘வந்தே மாதரம்'. இது, கின்னஸ் சாதனையாகக்கூட இருக்கலாம்! இதைப் பாடுவதற்கு குரல் வளம் தேவையில்லை, தேசபக்தி இருந்தாலே போதுமானது என்றும், பாட மறுத்தவர்களுக்கு முனகலாம், குரல் உயர்த்திப் பாட வேண்டியதில்லை என்றும் தளர்வு விதிமுறைகள் வழங்கப்பட்டன.

இந்தியாவிற்கு வெளிநாட்டினரை அதிக அளவில் இழுக்கும் கேளிக்கை நோக்குடன், வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவும், பாடவும் சுற்றுலாத்துறை ஒரு பரிந்துரையைச் செய்திருந்தது. இந்த வேண்டுகோளை மனித வளத்துறை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, செப்டம்பர் ஏழாம் தேதி பதினோரு மணிக்கு இந்தப் பாடலை இந்தியர் அனைவரும் பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. குழந்தையைக் கிள்ளிவிட்டது போன்ற இந்த அரசாணைக்கு எதிர்ப்புகள் கிளம்பவே, அதைக் ‘கட்டாயமில்லை' என திரும்பப் பெற்றுக் கொண்டு, தொட்டிலை ஆட்டத் தொடங்கிவிட்டது அரசு. ஆளும் அரசின் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்க்கும் பா.ஜ.க., இந்த ஆணைகளுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், இதைச் செயல்படுத்தும் அதிகாரத்தைத் தனதாக்கிக் கொண்டது. அக்கட்சி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், சட்டிஸ்கர் ஆகியவற்றில் இப்பாடல் பாடுவதை கட்டாயமாக்கியது. பாடலாம், ஆனால் கட்டாயமில்லை என தமிழகம் உட்படப் பல மாநிலங்கள் முடிவெடுத்தன.

செப்டம்பர் ஏழாம் தேதி, பதினோரு மணிக்கு, குறித்தபடி - தில்லியில் மனித வள மேம்பாட்டுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் மய்ய அரசின் அமைச்சர்களும், முன்னாள் காங்கிரஸ் பிரதமர் குஜ்ரால் போன்றோரும் பாடினார்கள். நாடு முழுவதும் உள்ள 2.5 லட்சம் நேரு யுவகேந்திரா மய்யங்களில் இப்பாடல் பாடப்பட்டது. டேராடூனில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தேசிய மய்யக் குழுவில் ராஜ்நாத் சிங், அத்வானி உள்ளிட்டோர் பாடினார்கள். தில்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி ‘எல்லோரும் சேர்ந்து பாடுங்கள்' என்றதும், அனைவரும் பாடினர்.

குஜராத்தில் மோடி தலைமையில் சிறு ஊர்வலம் நடத்தப்பட்டு, இறுதியில் வந்தே மாதரம் பாடப்பட்டது. பல இடங்களில் இசுலாம் அமைப்புகள் பாட வைக்கப்பட்டன. இசுலாம் குழந்தைகள் பாடவைக்கப்பட்டனர்; அரசின் தன்மை மற்றும் ஆணையை அவர்கள் தெளிவாகவே புரிந்து கொண்டனர். எனவே, அவர்களைப் பாட வைத்தனர் என்று சொல்வதே பொருத்தமுடையதாக இருக்கும். குஜராத்திலும், ராஜஸ்தானிலும், காஷ்மீரிலும் இன்ன பிற இடங்களிலும் இப்படி பாட வைத்தது நடந்தேறியது. ‘பாட முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்' என்றார் விசுவ இந்து பரிசத்தின் தலைவர் அசோக் சிங்கால். ஜாம்செட்பூரில் பத்தாயிரம் பாடல் பிரதிகளை வழங்கி மக்களைப் பாடும்படி கட்டாயப்படுத்தியது சிவசேனா.

நாடெங்கிலும் உள்ள இசுலாம் அமைப்புகளும், சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டியும், சிரோன்மணி அகாலிதளமும், மதச்சார்பற்ற அமைப்புகளும் இந்தப் பாடல் பாடப்படுவதை எதிர்த்தன. ஒரு பாடலுக்காக இப்படி நாடு முழுக்கவும் வன்முறை கிளம்பும்படியான சூழல் வலிந்தும் தேவையில்லாமலும் உருவாக்கப்பட்டது. கலம்பகப் பாடலைப் போலவும், அறம் பாடுவதைப் போலவும் ஆக்கப்பட்டுவிட்ட வந்தே மாதரம் பாடல், பங்கிம் சந்திர (சாட்டர்ஜி) என்ற பார்ப்பன எழுத்தாளரால் எழுதப்பட்டது. 1773 இல் இசுலாம் மன்னர்களை நாட்டை விட்டு விரட்ட மிகச் சிறிய அளவிலே ஏற்பட்ட இந்து துறவிகளின் கிளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, பங்கிம் சந்திரரால் எழுதப்பட்ட ‘ஆனந்த மடம்' நாவலில் அந்தப் பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த நாவலில் இந்து மக்களை இசுலாமிய மன்னர்களுக்கு எதிராகத் திரட்டவும், வெறியூட்டவும் இப்பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ராமன் குறிப்பிட்ட இடத்தில்தான் பிறந்தான் என்று பொய்யாக பா.ஜ.க. வாதிடுவதை போலத்தான், இந்தப் பாடலும் 1906, செப்டம்பர் ஏழில் முதலில் பாடப்பட்டதாக இன்று அது கூறுகிறது. இதற்குப் பிற அமைப்புகளும் துணை போகின்றன. ஆனால், வரலாற்று ஆய்வாளர் சுமித் சர்கார் இந்தப் பாடல் 1875 இல் எழுதப்பட்டு, 1882 இல் ‘ஆனந்த மடம்' நாவலில் வெளியிடப்பட்டது என்று கூறியிருக்கிறார். இப்பாடலைப் பற்றிய புதுப்புது கருத்துகள் இன்று அனைவராலும் வெளியிடப்படுகின்றன.

"வந்தே மாதரம் பாரதத் தாயை பூசை செய்யவோ, சிலையை வழிபடவோ வலியுறுத்தவில்லை. அது, இந்தியாவை வணங்குவதைக் குறிக்கிறது'' என்பது வாஜ்பேயியின் கருத்து. "இப்பாடல் நமது முன்னோரின் சொத்து. தேச விடுதலைக்கான விடுதலை முழக்கமாக இது இருந்தது. இதை எல்லோரும் பாடினார்கள்'' என்றார் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங். எதிர்க் கருத்து சொன்னவர்களை பா.ஜ.க.வும் அதன் சங்பரிவாரங்களும் கடுமையாக விமர்சித்துள்ளன. சாதி, மதம், கலாச்சாரம் போன்ற சில அடிப்படை விசயங்களில் காங்கிரசுக்கும், இந்துப் பரிவாரங்களுக்கும் பெருத்த வேறுபாடு ஏதும் இல்லை என்பது, இந்த விசயத்தில் உறுதியாகி இருக்கிறது.

ஒரு மதத்திற்கு எதிரான, அதன் மக்களுக்கு எதிரான வகுப்புவாத, மதவாத கருத்துகளைக் கொண்ட நாவலில் பயன்படுத்தப்படும் பாடல் எப்படி தேச விடுதலைப் பாடலாக ஆக முடியும்? "வாருங்கள், நாம் சென்று அந்த இசுலாமியப் பாவிகளின் இருப்பிடங்களை அழிப்போம். அப்பன்றிகளை கலைத்துக் குச்சிகளையெல்லாம் காற்றில் பறக்க விடுவோம். பகவன் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கின்ற ஒரு நாவலின் பாடல், எப்படி தேச பக்திப் பாடலாக இருக்க முடியும்?

இந்தியாவைப் பொறுத்தவரை, தேசியம், தேசப்பற்று ஆகியவை ஆதிக்க சாதியினருக்கே உரியதாகவும் அவர்களின் சொத்தாகவும் கருதப்படுகின்றன. பாரத மாத - தேசப்பிதா எல்லாமே இந்து கடவுளர்களாக உருவகப்படுத்தப் படுகின்றனர். இந்து மதம் இந்தியாவின் (அதிகாரப்பூர்வமாக) அறிவிக்கப்படாத மதமாக இருக்கிறது. இந்தியா இந்து பூமியாக கருதப்படுகிறது. இந்த கருத்தோட்டங்களை வலியுறுத்தும் பாடலாக, பாரத மாதாவை உமையாக, சக்தியாக, காளியாக உருவகப்படுத்தும் பொருள் தருகின்ற பாடல்கள் தேச பக்திப் பாடல்களாகப் பாடப்படுகின்றன. பாட கட்டாயப்படுத்தப்படுகின்றன. உண்மையில், இந்தியா திராவிடர்களின் பூமி, பூர்வ பவுத்தர்களின் மண், மதம் சாராத, இயற்கை நெறிகளுக்கு இயைந்த வாழ்வை மேற்கொண்டவர்களின் நாடு என்பது வரலாறு சொல்லும் பாடம். ஆனால், இந்த உண்மைகள் தேச பக்தி கூச்சல்களில் மூடிமறைக்கப்படுகின்றன.

சாலமனின் சபையில் திருட்டு அன்னை, குழந்தையை உரிமை கொண்டாடி கூச்சலிடும்போது, செய்வதறியாது திகைத்து நிற்கும் உண்மையான அன்னையைப் போல், இந்நாட்டின் பூர்வகுடிகள் தேசியத்தின் முன் நிற்கிறார்கள். இந்த சர்ச்சையில் மதம் ஒரு துருப்புச் சீட்டாக, விசையாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அன்னிய மதங்கள் என்று கூச்சலிடும் இவர்கள், தேசிய மதமாக சொல்கிற இந்துமதமும்கூட இந்த நாட்டு மதமல்ல! வேறு மதங்கள் எதுவாயினும் அதை இன்று பின்பற்றுபவர்களில் பெரும்பான்மையானவர்கள், இம்மண்ணின் தொல்குடிகள். எனவே இந்துத்துவமும், அது எழுப்பும் சர்ச்சையும், அது வலியுறுத்தும் பண்பாடும், இலக்கியங்களும், அடையாளங்களும் எப்போதுமே வெகுமக்களுக்கு எதிரானவையாக இருந்து வருகின்றன. இந்துத்துவத்துக்கு எதிரான மாற்று மதங்களுக்கும் பெரும் சவாலாக இருந்து வருகின்றன.

இப்பாடலை தேசியப் பாடலாக கருதக் கூடாது என தாகூரும், நேருவும், சுபாஷ் சந்திர போசும் வலியுறுத்தியிருக்கிறார்கள். 1937இல் சென்னை சட்டப் பேரவையில் இப்பாடலைப் பாடியபோது, எழுந்து நிற்காத இரு இசுலாமிய உறுப்பினர்களை முன்வைத்து பெரிய சர்ச்சை எழுந்திருக்கிறது. ராஜகோபாலா(ச்சாரி) இப்பாடலைப் பாடச் செய்வதில் முனைப்பு காட்டியிருக்கிறார். 1937இல் லக்னோ முஸ்லிம் லீக் மாநாடு இப்பாடல் பொதுத் தலங்களில் பாடுவது, இசுலாமியர்களின் வெறுப்புக்கு உரியது என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இந்த எதிர்ப்பு அலைகளின் ஊடே மீண்டும் மீண்டும் இப்பாடலின் புத்தாக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இந்தப் பாடலைப் பாடுவதின் நிலைப்பாட்டில், தி.மு.க. அரசின் இரட்டை நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது. "சரஸ்வதி வந்தனம் பாடமுடியாது' என்று மாநாட்டிலிருந்து வெளியேறிய நிலைப்பாடு இன்று ஏன் இல்லை? வன்மையாகச் சொன்னாலும், மென்மையாகச் சொன்னாலும் அதிகாரத்தின் சொற்கள் ஒரே பொருளைத்தான் எப்போதும் தரும். பா.ஜ.க. சொல்கிறதா, காங்கிரஸ் சொல்கிறதா என்பதை கொள்கை சார்ந்த விசயங்களில் பார்க்கத் தேவையில்லை.

அண்ணா சொல்லியிருப்பதைப் போல், துண்டின் மீதான அக்கறையைவிட வேட்டியின மீதான கவனமும், நிலைப்பாடும்தானே மிகவும் முக்கியம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com