Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2005

குடியரசுத் தலைவரின் ‘மநுதர்ம' ஆணை - 1950

ஏ.எம்.சின்னப்பா, ஏ. பிலோமின் ராஜ்

Boy ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் சாதி ஒடுக்குமுறை' என்ற தலைப்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் து. ராஜா ‘இந்து' நாளேட்டில் (24.6.05) ஒரு கட்டுரை எழுதியிருந்தார் (இதன் மொழிபெயர்ப்பு சூலை ‘தலித் முரசி'ல் வெளிவந்தது). தமிழ் நாட்டின் சில கிராமங்களில், தலித்துகள் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த முடியாத அரசமைப்புச் சட்டத்தின் தோல்வி குறித்து நமது கவனத்தை ஈர்த்திருந்தார். இந்தப் பிரச்சினையில் மட்டும் அரசமைப்புச் சட்டம் தலித்துகளை தோல்வியுறச் செய்யவில்லை. அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமையின்படி, தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு மதத்தைப் பின்பற்றும் தலித்துகளில் ஒரு பகுதியினருக்கு மட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டே வருகின்றன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பிற தலித்துகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் தலித் கிறித்துவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, இன்றளவும் செவிசாய்க்கப்படவில்லை.

கிறித்துவத்தில் சாதி அமைப்பு இல்லை என்ற வழக்கமான காரணத்தைச் சொல்லி, தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகின்றது. இது சரியானதுதான். ஏனெனில், கிறித்துவம் எத்தகைய சாதிப் பாகுபாட்டையும் வலியுறுத்துவதில்லை. ஆனால், இந்தியச் சூழல் வேறுபட்டது. நமது சமூகம், சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. கருவறை முதல் கல்லறை வரை, சாதி அளவுகோலே அனைத்து நிலைகளிலும் கோலோச்சுகிறது. அனைத்து மதங்களைச் சார்ந்த தலித்துகளும், சாதிய மதிப்பீடுகளைக் கொண்ட இதே சமூகத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர். மதத்தை மாற்றிக் கொள்வதால் மட்டும் தலித்துகளுடைய சமூக பொருளாதார நிலை மாறிவிடுவதில்லை. அவர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் மீதான சமூக அடையாளம், சமூக வெறுப்பும் அவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தவே செய்கின்றன.

ஒரு தலித் வேறெந்த மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும் அவர் தீண்டத்தகாதவராகவே இந்தச் சமூகத்தால் கருதப்படுகின்றார். தலித்துகள் மீதான வன்கொடுமைகளைப் பொறுத்தவரை, ஒரு ‘இந்து தலித்'துக்கும், கிறித்துவ தலித்துக்கும் எந்தப் பாகுபாடும் இருப்பதில்லை.

இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணைதான் பிரச்சினைக்குரிய ஒன்றாக இருக்கிறது. குடியரசுத் தலைவர் ஆணை - 1950, ‘‘இந்து மதத்தைத் தவிர, வேறு மதங்களைப் பின்பற்றும் எந்தவொரு நபரையும் பட்டியல் இனத்தவராகக் கருத முடியாது'' என்று கூறுகிறது. இந்த ஆணையை மேலோட்டமாகப் படிக்கும்போதே அதன் பாகுபாட்டுத் தன்மை விளங்குகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு மட்டும் இடஒதுக்கீட்டின் பயன்களை அளிக்கும் இந்த அரசாணை, ஒட்டுமொத்த தலித் சமூகத்தை மத அடிப்படையில் பிரிக்கிறது. சாதியும், பிற்படுத்தப்பட்ட சமூக - பொருளாதார நிலையும் இடஒதுக்கீட்டுக்கான அளவுகோலாக இருப்பதற்குப் பதில், சாதிக்கும் மதத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பே, இப்பிரச்சினையின் மய்யப் புள்ளியாகக் கருதப்படுகிறது.

குடியரசுத் தலைவரின் இந்த ஆணை, அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகளை மீறுவதாக இருக்கிறது. விதி 15: ‘‘அரசு குடிமக்களை மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபடுத்தாது.'' ஆனால், இங்கு அரசாங்கமே ஒரு சாதிப் பிரிவினரை மதத்தின் அடிப்படையில் பாகுபடுத்துவதைக் காண முடிகிறது. விதி 25 : ‘‘அனைத்து மனிதர்களுக்கும் சுய சிந்தனைக்கான சுதந்திரத்திற்கும், சுதந்திரமாக மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை உண்டு.''

ஆனால், குடியரசுத் தலைவர் ஆணை, தலித்துகள் சுதந்திரமாக தம் விருப்பப்படி மதத்தைத் தேர்வு செய்து கொள்வதை மறுக்கிறது. உண்மையில், இது சட்டத்தில் உள்ள பாதுகாப்பையும், சலுகைகளையும் பயன்படுத்தி தலித்துகள் ஒரே மதத்தில் இருக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் விருப்பப்படி, வேறு மதத்தைத் தேர்வு செய்வதையும் சலுகைகளைக் காரணம் காட்டி தடுக்கிறது.

மேலும், குடியரசுத் தலைவர் ஆணை சிவில் உரிமைகள் சட்டம் 1976, தீண்டாமைக் (குற்றங்கள்) சட்டம் 1955, பட்டியலின, பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 ஆகிய சட்டங்கள் வழங்கும் பாதுகாப்பு உரிமைகளை கிறித்துவ தலித்துகளுக்கு மறுக்கிறது. ஒரு ‘தலித் இந்து' பெண்ணும், தலித் கிறித்துவப் பெண்ணும், சாதி அல்லது, மதக் கலவரத்தின்போது பாலியல் வன்முறைக்கு ஆளானால், இந்தச் சட்டங்கள் ‘தலித் இந்து' பெண்ணை மட்டுமே பாதுகாக்கும்; தலித் கிறித்துவப் பெண்ணைப் பாதுகாக்காது. எனவே, குடியரசுத் தலைவரின் ஆணை ஒரு குடிமகனின் மனித உரிமைகளை வெளிப்படையாகவே மீறுவதாக இருக்கிறது. இந்தியா கையெழுத்திட்டுள்ள அய்க்கிய நாடுகள் அவையின் பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தின் 18 ஆவது பிரிவு - விதி 2,3 அய் மீறுவதாகவும் இது இருக்கிறது.

Old dalith man ஒருவருடைய மதத்தை மாற்றிக் கொள்ளுவதன் மூலம் அவருடைய சாதியை மாற்றிவிட முடியாது என்றும், கிறித்துவத்திற்கு மாறும் பட்டியலின சாதியினர், மதமாற்றத்திற்குப் பிறகும் சாதியால் ஏற்படும் இன்னல்களை அனுபவிக்கின்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக நடைமுறை உண்மையைச் சுட்டிக் காட்டியுள்ளது. இது குறித்த சில தீர்ப்பு வரிகளை மேற்கோள் காட்டுவது இங்கு பொருத்தமாக இருக்கும்.

‘‘அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பான இடஒதுக்கீட்டை, நம்பிக்கைகள் அல்லது மதமாற்றம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அவர்களுக்கு (தலித் கிறித்துவர்களுக்கு) மறுப்பது இடஒதுக்கீடு மற்றும் மதச்சார்பின்மை முதலிய தத்துவங்களுக்கு ஊறுவிளைவிப்பதாக அமைந்து விடும்'' - Article 271 of the Mandal Case Judgement, Cfr. Page No. 367, Vol.6, No.9, Nov.30, 1992, Judgement today.

‘‘நமது நாட்டில் சாதி என்பது, மிகவும் வருந்தத்தக்க அளவில் மக்களை ஒடுக்கி வருகிறது. அது எந்தளவுக்குச் சென்றிருக்கிறது என்றால், மதங்களைக் கடந்தும் சென்றிருக்கிறது. சாதி அமைப்பு பிற மதங்களிலும் ஊடுறுவி இருக்கிறது. இந்து மதத்திலிருந்து மாறுபட்ட கருத்து கொண்ட பிரிவினர்கள், சாதி அமைப்பை ஏற்க மறுத்தவர்களும், பிற மத நம்பிக்கைகளைக் கொண்டவர்களும்கூட, இன்று சில நேரங்களில் பழமைவாத இந்துக்களைப் போல மிக இறுக்கமாக சாதி முறையைக் கடைப்பிடிக்கின்றவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் நம்மால் தலித் கிறித்துவர், நாடார் கிறித்துவர், ரெட்டி கிறித்துவர்கள், கம்மவா கிறித்துவர், முஜ்பி சீக்கியர் என்போரைப் பார்க்க முடிகிறது...'' - Article 469, Mandal case Judgements. Page 450, Vol.6, No.9, Nov.30, 1992, Judgement today.

‘‘மதத்தை மாற்றிக் கொள்வதன் மூலம், எல்லா நேரங்களிலும் சாதிகளை ஒழிப்பதில் வெற்றி பெற்றுவிட்டதாகச் சொல்ல முடியாது. மதம் மாறியவர்கள் தங்கள் சாதிகளையும், தொழில்களையும் புது மதங்களுக்கும் சுமந்தே செல்கின்றனர். இதன் விளைவு, சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்கள் மத்தியிலும் வேறுபட்ட அளவுகளில் சாதி கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, சாதியம்தான் இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த அடித்தளமாக இருக்கிறது. அதன் அளவுதான் மதத்திற்கு மதம் வேறுபடுகிறது.'' – Article 400, Mandal case Judgement vol 6, No.9, Nov.30, 1992, Judgement today. மேற்கூறிய தீர்ப்புகளை உற்று நோக்கினால், குடியரசுத் தலைவரின் ஆணை, வெளிப்படையான பாகுபாட்டைக் கொண்டதாகவே இருப்பதைக் காண முடியும்.

உச்ச நீதிமன்றம் தவிர, சிறுபான்மையினர் ஆணையம் இடஒதுக்கீடு விரிவாக்கப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கிறது: ‘‘...பட்டியல் இனப் பிரிவுகளிலிருந்து வந்த கிறித்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பவுத்தர்கள் சமூக, பொருளியல் ஏற்றத் தாழ்வுகளை மதமாற்றத்திற்குப் பிறகும் அனுபவிப்பதால், அவர்களுக்கு மதமாற்றத்திற்கு முன்பு வழங்கப்பட்டிருந்த இடஒதுக்கீட்டு உரிமைகள், அவர்களுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதில் எந்த எதிர்ப்பும் இருக்க வேண்டியதில்லை'' – Annual Report of the Minorities Commission, New Delhi 1980 Page 31.

இந்தியாவில் கிறித்துவர்கள் சிறுபான்மையினராக (2.4. சதவிகிதம்) இருப்பினும், அவர்களுள் பெரும்பான்மையின மக்கள் (ஏறக்குறைய 65 சதவிகிதம்) தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுடைய சமூக பொருளியல் நிலை, இந்தியாவில் உள்ள பொதுவான தலித் மக்களைவிட மாறுபட்டதாக இல்லை. மேலும், தலித் கிறித்துவர்கள் கோரும் சம உரிமைகளுக்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. குடியரசுத் தலைவரின் ஆணை இருமுறை மாற்றப்பட்டுள்ளது. 1956 இல் தலித் சீக்கியர்களை இணைப்பதற்கும், 1990 இல் நவீன பவுத்தவர்களை இணைப்பதற்கும், குடியரசுத் தலைவரின் ஆணை மாற்றப்பட்டது.

1990 ஆம் ஆண்டு, பட்டியல் இனப் பவுத்தவர்களுக்கு அளிப்பதைப் போன்றே அவர்களுக்கு இணையாக தலித் கிறித்துவர்களுக்கும் சம நீதி வழங்கக்கோரி, நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுந்தது. நிதிநிலை விவாதத்தின்போது, தலித் கிறித்துவர்களையும் இணைக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ஆணையை மாற்ற வழிவகுக்கும் சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட இருந்தது. அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், நவீன பவுத்தர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டவரைவு ஒருமனதாக நிறைவேறிய பிறகு, தலித் கிறித்துவர்களுக்கும் இந்த உரிமைகளை அளிக்கும் இடஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி அளித்தார்.

Girl சூன் 17, 1992 அன்று பட்டியலின சாதியினர் / பழங்குடியினர் சமூகப் பொருளியல் மற்றும் அரசியல் நிலை குறித்த தேசிய மாநாடு ஒன்றை, நாடாளுமன்ற அவையின் பட்டியலின சாதியினர் மற்றும் பழங்குடியினர் நடத்தினர். அப்போது, இந்திய அரசு தலித் கிறித்துவர்களின் பாகுபாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரில் இதற்கானச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிறித்துவ சமூகத்தினரும் இடையறாது பேரணிகள், மறியல்கள் நடத்தி, இறுதியாக சீதாராம் கேசரி சமூக நலத்துறை அமைச்சராக இருந்தபோது, 1996 மார்ச் மாதம் அரசாணையை மாற்றக் கோரி ஒரு குழுவாக அவரை சந்தித்தனர். ஆனால், சில நடைமுறைச் சிக்கல்களால், இச்சட்டவரைவு நாடாளுமன்ற விவாதத்திற்கு வராமல் போய்விட்டது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மே 2004 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, இச்சட்டத்திற்குப் புத்துயிர் அளிக்கவும், அரசாணையை மாற்றக் கோரியும் பிரதமரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

குடியரசுத் தலைவரின் ஆணையில் உள்ள 3 ஆவது பத்தி, பாகுபாடு உடையதாக இருக்கிறது என்றும், அதை நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த பதிலுரையில் (23.08.2005) அட்டார்னி ஜெனரல், அரசு இப்பிரச்சினையை ஆய்வு செய்ய ஒரு ஆணையத்தை நியமித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். ஆனால், இதற்கு முந்தைய அரசுகளால் பல்வேறு ஆணையங்கள் அமைக்கப்பட்டு, ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை தலித் கிறித்து வர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனப் பரிந்துரையும் செய்துள்ளன.

எனவே, இப்பிரச்சினையில் மேலும் ஆணையங்களை நியமிப்பது தேவையற்றது. பொருத்தமற்றது. ஆணையங்களை அமைப்பது, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முடிவைத் தள்ளிப்போடுவதற்குதான் என்பது தெளிவாகிறது. அதற்குப் பதில், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 1996 இல் தொடங்கிய இப்பிரச்சினையை முடித்து வைக்க வேண்டிய தார்மீகக் கடமையைச் செய்ய வேண்டும். உடனடியாக, இச்சட்டவரைவை நாடாளுமன்றத்தில் வைத்து, இன்னலுக்குள்ளான தலித் கிறித்துவர்களுக்கு நீதி வழங்கிட வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியும் சமூக ஒடுக்குமுறையும் ஒன்றிணைந்து செல்ல முடியாது. மக்கள் நலனைக் குறிக்கோளாகக் கொண்ட ஓர் அரசு, தன் நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்குமான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பிரிவினரான தலித்துகளை மட்டும் வளர்ச்சிக்கானப் பாதையிலிருந்து ஒதுக்கிவிட்டு, அதுவும் அவர்கள் கிறித்துவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் ஒதுக்கிவிட்டு வளர்ச்சியை நோக்கிச் செல்வது என்பது, ஒட்டுமொத்த நாட்டுக்குமான அவமானமாகும்.

புது டெல்லியில் 31.8.2005 அன்று நடைபெற்ற, ‘தேசிய ஒருங்கிணைப்புக் குழு' கூட்டத்தில் தலித் கிறித்துவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இக்கோரிக்கையை முக்கிய நீதிபதிகளும், பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆதரித்தனர். அரசு இப்பிரச்சினையில் நல்லதொரு முடிவைக் கண்டு, வரலாற்றுத் தவறை சரி செய்யும் என்று நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறோம்.

டாக்டர் ஏ.எம். சின்னப்பா, சென்னை மயிலை மறைமாவட்டத்தின் பேராயர். இவர், ‘தலித் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோருக்கான கத்தோலிக்கப் பேராய ஆணைய'த்தின் தலைவரும் ஆவார். ஏ.பிலோமின் ராஜ், இவ்வாணையத்தின் தேசியச் செயலாளர். இக்கட்டுரை, ‘இந்து' நாளேட்டில் 22.9.2005 அன்று வெளிவந்தது.

புகைப்படங்கள் : ஜெனிபர்நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com