Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2005

ஆதிக்கம் - ஆபாசம் - ஆண்கள்
அமைதி காக்கலாமா பெண்கள்?


India today ‘‘பெண் வெறும் உடல். ஆண்களைப் பராமரிக்கவும், அவனுக்கு சுகம் கொடுக்கவும், வாரிசைப் பெற்றுக் கொடுக்கவுமே பெண் படைக்கப்பட்டவள். வலிமை மிக்கவனான ஆண் எவ்வளவு கொடுமையானவனாக, கெட்டவனாக இருந்தாலும், மனைவி என்பவள் கணவனுக்குக் கட்டுப்பட்டு, அவனால் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு, குடும்பத்தை வழி நடத்திச் செல்ல வேண்டும். கணவனை விட்டுப் பிரிவதைப் பற்றியோ வேறு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது பற்றியோ அவள் கனவிலும் நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தாலோ, கணவனுக்கு மட்டுமே முழுமையான சுகம் தர படைக்கப்பட்டவள் வேறொருவனால் பலாத்காரம் செய்யப்பட்டாலோகூட, அவள் கற்பை இழந்தவளாகவும், கெட்டுப் போனவளாகவும் ஆகிறாள். அன்றிலிருந்து அவள் வாழ்வதற்கானத் தகுதியையும் இழக்கிறாள்'' - கற்புக்கு இந்து மதம் கொடுக்கும் விளக்கம் இந்த ரீதியிலானது.

இந்த முட்டாள்தனமான கருத்து தங்களுக்குச் சாதகமாக இருப்பதால், எல்லா தரப்பு ஆண்களும் பெண்களின் கற்பைக் கட்டிக்காக்க காலங்காலமாகப் போராடுகிறார்கள். பழமைவாத மற்றும் அடிமைத்தனமான கற்பிதங்களால் பெண்களையும் தலித் மக்களையும் ஆண்டாண்டு காலமாக அடிமைகளாக வைத்திருக்க, இந்து மதத்துக்குத் துணை போகிறார்கள் அனைத்துத் தரப்பு ஆண்களும். அவர்களால் பெண்களும்.

இன்றைய அரசியல் தலைவர்கள், ‘தமிழ்ப் பண்பாட்டு' முலாம் பூசிய இந்து மதக் கற்பிதங்களைக் கட்டிக்காத்து, சாதி அழிந்துவிடாதபடியும், பெண்ணடிமைத்தனம் ஒழிந்துவிடாதபடியும், மூடநம்பிக்கைகளிலிருந்து மக்கள் மேம்பட்டு விடாதபடியும் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். ‘கற்பு' என்ற ஒற்றைச் சொல், இன்று தமிழகத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பது அதன் விளைவே. ‘தமிழகப் பெண்கள் கற்பில்லாதவர்களா?' என்று பெண்களே சிலிர்த்துக் கொண்டு போராடுவது, பகுத்தறிவு மண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் களங்கம். தலித் தலைவர்களின், தலித் பெண்களின் இந்த ஆர்ப்பாட்டம், இந்து கற்பிதங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி என்ற வேதனையோடு....

- ஜெனிபர்

உலகம் முழுக்க பெண்கள் எத்தனையோ வகையானப் போராட்டங்களை நாள்தோறும் நிகழ்த்துகிறார்கள். அவையெல்லாம் அடிமைத்தனத்துக்கும், தன் மீதான வன்முறைக்கும் எதிரானவை. ஆனால், தமிழகப் பெண்கள் மட்டும் தங்கள் மீதான அடிமைத்தனம் நிலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராட்டம் நடத்துகிறார்கள். கேட்டால், தமிழ்க் கலாச்சாரமாம்! யாரால் உருவாக்கப்பட்டது இந்தக் கலாச்சாரம்? ஆண், கடவுள் மற்றும் மதத்தின் உதவியுடன் தன் சுயநலத்துக்காகத் தோற்றுவித்த பாரம்பரியக் கட்டுப்பாடுகள்தான் இன்றும் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் நசுக்குகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கலாச்சாரம் என்ற வார்த்தையும் அடிமைத்தனம் என்ற வார்த்தையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. பெண் வீட்டை விட்டு வரக் கூடாததும், அவள் பேதையாக இருக்க வேண்டியதும், ஆணின் அனுமதியின்றி சிறு துரும்பையும் அசைக்க முடியாதவளாக இருப்பதும், ஆணைத் தொழுது, அவனுக்குக் கட்டுப்பட்டு, அவன் சொல்வதை உண்டு, உடுத்தி, அவனுக்குப் பின் தூங்கி முன் எழுவதே தமிழ் அடிமைக் கலாச்சாரம். தந்தை பெரியார் உருவாக்கிய தொடர்ச்சியான பகுத்தறிவுப் பிரச்சாரங்களால் தமிழகம் ஓரளவுக்கு இதிலிருந்து விடுபட்டிருந்தது. ஆனால், அந்த ஜனநாயகச் சூழலுக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது.

அந்தரங்கத்தை ஆபாசமாக்கி வியாபாரம் பார்க்கும் பத்திரிகை, திரைப்படம், மாணவ - மாணவியர் பேசிக் கொள்வதைக்கூட கலாச்சார சீரழிவாகப் பார்க்கும் கல்வி நிறுவனங்கள், தனிமனித சுதந்திரத்தைக் குற்றமெனக் கருதும் காவல்துறை, பாலியல் கருத்துகளைப் பெண் வெளிப்படையாகப் பேசினால், அவற்றுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள் என தமிழகம் முழுக்க ‘ஒழுக்கக் காவலர்'களாக - ‘பண்பாட்டுக் காவலர்'களாக நின்று, பெண்களைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

குஷ்பு விவகாரத்தை பூதாகரமாக்கி... ஊடகங்கள் பொருளாதார ஆதாயமும், மத அமைப்புகள் சிறுபான்மையினர் எதிர்ப்பு ஆதாயமும், கட்சிகள் அரசியல் ஆதாயமும் தேடுவதில் குறியாக இருக்கின்றன. குழம்பிய குட்டையில் ஆளாளுக்குத் தூண்டில் போட்டுக் காத்திருக்கிறார்கள். கிடைத்தவரை அவரவருக்கு லாபம் என்றாலும்கூட, பெண்கள் அமைப்புகளையும் மகளிரணியையும் ஒன்றிணைத்துக் கொண்டு, இந்தச் சமூகத்தில் பெண்ணடிமைத்தன சித்தாந்தங்களை ஆழ ஊன்றுகின்றனர் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கண்டிக்க வேண்டியிருக்கிறது.

‘இந்தியா டுடே' இதழிலும், ‘தினத் தந்தி' நாளிதழிலும் குஷ்பு கூறியிருக்கும் கருத்துகளில் இவர்கள் கூறும் அவதூறு இல்லை. தமிழகப் பெண்கள் கற்பில்லாதவர்கள் என்றோ, திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ரீதியிலோ - அவர் எந்தக் கருத்தையும் அதில் கூறவில்லை. மாறாக, ‘‘பெண்கள் திருமணமாகும்போது, கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்'' என்கிறார். மேலும், ‘‘திருமணத்துக்கு முன்பு ‘செக்ஸ்' வைத்துக் கொள்ளும் போது, கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்'' என்றும், இறுதியாக, ‘‘பெண்கள் தமது ‘செக்ஸ்' விருப்பங்களைப் பற்றிப் பேசினால், அவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும்'' என்றும் சொல்கிறார்.

Outlook கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் எத்தனை எத்தனை சிறுமிகளும், இளம் பெண்களும் ஆண்களால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமடைந்து அதை மறைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? ‘எய்ட்ஸ்' என்னும் உயிர்க்கொல்லி நோயாலும், பால்வினை நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாகப் பெண்கள்; அதிலும் (ஆண்களால் இழைக்கப்படும் கொடூரங்களுக்கு) குடும்பப் பெண்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்குப் பாலியல் கல்வி தீர்வாக இருக்கும் என்று குஷ்பு வலியுறுத்தியதைத் தவறு என்று சொல்கிறார்கள் இந்த ‘ஒழுக்கக் காவலர்கள்'.

புள்ளி ராஜாவுக்கு ‘எய்ட்ஸ்' வருமா? என்று ஒரு விளம்பரம் தமிழகத்தையே கலங்கடித்தது. ‘பாலியல் தொழிலாளர்களிடம் ‘போகும்' ஆண்களை ஆணுறை பயன்படுத்தச் சொல்லி அது வலியுறுத்தியது. ‘மனைவியைத் தவிர வேறு பெண்களிடம் போகாதே, போனால் உனக்கு ‘எய்ட்ஸ்' வரும் என்று அச்சுறுத்தாமல், போ, ஆனால் ஆணுறை பயன்படுத்து என்று ‘ஆலோசனை' கொடுத்தது. அப்படிப் பலரிடம் கற்பிழந்த ஆண்மகனை இந்த சமூகம் வெறுக்குமா? கெட்டுப் போனவன் என்று குற்றம் சாட்டுமா? வேசி என்றோ, விபச்சாரி என்றோ சாடுமா? பாதுகாப்பான உடலுறவு குறித்து மேடை போட்டு ‘மைக்' அமைத்து ஆணுக்குப் பரிந்துரைக்கலாம். அதுவே பெண்ணுக்கென்றால், அதுவும் ஒரு பெண்ணே என்றால் பொத்துக் கொண்டு வருகிறது. கலாச்சார சீரழிவாக்கப்படுகிறது. இதுதான் தமிழகம். உரிமைகளுக்காக குரல் கொடுத்தால் செவிமடுக்காத இந்தச் சமூகம், கற்பொழுக்கம் என்ற அடிமைத்தனத்துக்கு மட்டும் எப்படியெல்லாம் வக்காலத்து வாங்குகிறது பாருங்கள்.

குஷ்புவின் தனிப்பட்ட கருத்துகளை இவ்வளவு பரபரப்பாக்கியது யார்? அவர்களுடைய தேவை என்ன? அதே ‘இந்தியா டுடே'யில் ‘செக்ஸ் சர்வே'க்காக கவிஞர் சுகிர்தராணியும் கருத்துக் கூறியிருக்கிறார்: ‘‘ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுச் சாரத்தின் வழி நின்று திருமணத்தில் ஒருவனோடு இணையும்போது, கன்னித்தன்மையும் கற்பும் எதிர்பார்க்கப்படுகின்றன. கற்பைப் பற்றிப் பேசும்போது, பெண்களின் பாலியல் சுதந்திரம் முன் நிற்கிறது. தன் உடலை மற்றவர்க்கு வழங்குவதிலுள்ள தன் விருப்பத்திலிருந்து அது தொடங்குகிறது. மரபுகளைக் கட்டுடைத்து ஆண் மதிப்பீடுகளை மீறும்போது, கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவாக அது பார்க்கப்படுகிறது. இங்கு விளிம்பில் நிற்க வைக்கப்படுகிறவர்கள் பெண்களே. கற்பு, பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை பெண்களிடம் மட்டுமே எதிர்பார்ப்பது எந்தச் சமூகத்திற்கும் அழகல்ல; அவசியமும் அல்ல.''

சுகிர்தராணியின் இந்தக் கருத்துகள், குஷ்புவின் கருத்துகளை விடவும் மிகக் கூர்மையாகக் கற்பின் மீதும், கன்னித் தன்மையின் மீதும் கேள்விகளை எழுப்புகின்றன. ஆனால், அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்வதன் மூலம் அரசியல் லாபம் ஒன்றும் அவர்களுக்குக் கிட்டப்போவதில்லை என்பதுதான் உண்மை.

சர்ச்சை தொடங்கிய இடத்திலிருந்து பார்ப்போம். மாலை நாளிதழ்களின் மொத்த விற்பனையே இருபதாயிரம் படிகள் இருக்க, ‘தினகரன்' குடும்பத்தைச் சேர்ந்த ‘தமிழ் முரசு' மட்டும் லட்சத்தை நோக்கி அதிவேகமாக போய்க் கொண்டிருக்கிறது. காரணம், அவர்கள் கொடுக்கும் கிளு, கிளு, கிசு, கிசு செய்திகள். கூடவே இலவசப் பொருட்கள். ‘இந்தியா டுடே'யில் குஷ்பு கொடுத்த பேட்டியிலிருந்து ஆங்காங்கே சில வார்த்தைகளை உருவிப் போட்டுத் தலைப்புச் செய்தியாக்கி நாலைந்து பேரிடம் இது குறித்துக் கருத்து கேட்டு, பக்கத்தை நிரப்ப, விஷயம் சர்ச்சையானது. அப்பாடா தமிழ் நாடே இன்றைக்கு நாம் உருவாக்கின செய்தியால் கதிகலங்கிப் போயிருக்கிறது என்று ‘தமிழ் முரசின்' ஆசிரியர் குழு காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

தமிழ்ப் பத்திரிகைகளுக்கு இதைவிட பெரிய வேலையோ, பொறுப்போ என்ன இருக்கிறது? யார் கற்போடு இருக்கிறார்கள், யார் அதை இழக்கிறார்கள் என்று ஆராய்ந்து சொல்லி, இந்த சமூகத்தை மேன்மை அடையச் செய்யும் ஒற்றைக் குறிக்கோளோடு இயங்கும் ‘தமிழ் முரசு' மாதிரியான பத்திரிகைகள், புழுத்துப்போன பழமைவாதிகளின் கூடாரமாகவே இருக்கிறது. கற்பொழுக்கம் பற்றி இவ்வளவு அக்கறைப்படுகிறவர்கள்தான் முழுப் பக்க கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு காசு பார்க்கிறார்கள். ஆனால், கலாச்சாரத்துக்கு ஏதாவது கேடு வந்தால் மட்டும் அவர்களால் ஒருபோதும் தாங்கிக் கொள்ள முடியாது!

உலகம் முழுக்கவே வறுமை அதிகரித்திருக்கிறது. உத்திரப்பிரதேசத்திலும் மகாராட்டிராவிலும் சத்தின்மையால் குழந்தைகள் செத்து மடிகின்றன. கோகோ கோலா மாதிரியான பன்னாட்டு நிறுவனங்கள் நிலம், நீர், உழைப்பு என எல்லாவற்றையும் சுரண்டுகின்றன. எங்கும் ஊழல், பெண்களுக்கெதிரான, குழந்தைகளுக்கெதிரான வன்முறை, போதைப் பொருள் பெருக்கம், அதிகரிக்கும் சாதி அடக்குமுறை - இதெல்லாம் தலைப்புச் செய்தியாகத் தகுதியற்றவை. நடிகைகளைப் பின் தொடர்ந்து போய், அவர்களின் அந்தரங்கங்களை வியாபாரமாக்குவதை மட்டுமே முழு நேரத் தொழிலாக வைத்திருக்கும் பத்திரிகைகளின் உச்சபட்ச அரிப்புதான் குஷ்பு விவகாரம்.

குஷ்புவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகளும், பா.ம.க.வும் ஏன் இவ்வளவு காட்டமாகக் களமிறங்க வேண்டும்? திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்க போராட்டம் நடத்துகிறவர்கள், தரமான திரைப்படங்களை எடுக்கச் சொல்லி போராடுவதில்லை. பெண்களைக் கொச்சைப்படுத்தும் பாலியல் வக்கிர சிந்தனையைத் தூண்டும் குலுக்கு நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசப் பாடல்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லையே ஏன்?

Dinamalar தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் ‘ஒழுக்கக் காவலர்'கள், அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறார்கள். பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கிறது, அண்ணா பல்கலைக் கழகம். பெண்கள் தாங்கள் விரும்பிய உடையை அணியத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு வீராங்கனையான சானியா மிர்சாவை கண்டிக்கிறது ‘ஜமாத்'. ‘பிரைவேட் பார்ட்டி' களில் கேமராவோடு புகுந்து, கணவர்களோடு இருக்கும் பெண்களைப் புகைப் படம் எடுத்து வெளியிடுகின்றன பத்திரிகைகள். இப்படியே போனால், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதும், ஆண்களோடு சேர்ந்து பணியாற்றுவதும், கல்வி பயில்வதும்கூட நாளை குற்றமாக்கப்படும். இதற்கு அரசும் துணைபோகிறது.

கற்பொழுக்கத்துக்காகப் பெண்களை நரம்பு புடைக்க துடைப்பத்தோடு களமிறக்கிய இந்தத் தலைவர்கள், அப்பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டிற்காகவோ, பாலியல் துன்புறுத்தல் சட்ட வரைவுக்காகவோ, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றச் சொல்லியோ குரல் கொடுக்கவில்லையே! பெண்களுக்கு ‘ஒழுக்கத்தை' வலியுறுத்துவதன் மூலம் அவர்கள் அடிமை வட்டத்திலிருந்து வெளியேறிவிடாமல் பார்த்துக் கொள்ளலாம். உரிமையை வலியுறுத்தினால், பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி நாட்டை ஆளக் கிளம்பிவிடுவார்கள். அப்புறம் இந்த ஆண்களுக்கு ஆக்கிப்போடவும், சேவை செய்யவும் ஆளில்லாமல் போய்விடுமே!

தமிழ் என்ற ஒற்றை ஆயுதம், அரசியலுக்கு எந்தளவுக்குப் பயன்படும் என்பதை திருமாவளவனுக்கும் ராமதாசுக்கும் முன்பே புரிந்து கொண்டவர் தங்கர்பச்சான். அண்மையில், ‘பணத்துக்காக நடிக்கிற நடிகைகள் விபச்சாரிகளுக்கு சமம்' என்ற ‘அரிய' கருத்தை வெளிப்படுத்தியவர். தங்கர்பச்சானைப் பொறுத்தவரை விபச்சாரியாக இருந்தாலும், பணம் பற்றி கவலைப்படாமல் அவள் சுகம் தேடி வரும் ஆணுக்குப் பத்தினியாகப் படுத்து எழுந்திரிக்க வேண்டும் (பார்க்க: ‘தென்றல்' படம்). முழுக்க முழுக்க பெண்ணடிமைத்தன கருத்துகளை வைத்துப் படங்கள் எடுத்துவிட்டு, ‘தமிழ்ப் படம் எடுக்கிறேன்', ‘நானொரு தமிழன்', ‘தமிழ்க் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கிறேன்' என்று பிதற்றுகிறார்.

நடிகைகளை விபச்சாரிகள் என்று தங்கர்பச்சான் திட்டியதற்கான காரணம், அவரின் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' படத்தில், நாயகி நவ்யா நாயர் தனக்கு சிகையலங்காரம் செய்யும் பெண்ணுக்குத் தர வேண்டிய அறுநூறு ரூபாய் சம்பள பாக்கியைக் கேட்டு படப்பிடிப்பை ரத்து செய்தார். தங்கர்பச்சானே இந்தப் படத்தை தயாரித்திருப்பதால், ஒரு தயாரிப்பாளரின் நிலை நடிகைகளுக்குப் புரியவில்லை என்று புலம்பியிருக்கிறார். ‘கேவலம் அறு நூறு ரூபாய் பணத்துக்காக' என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அந்த அறுநூறு ரூபாய், பளிங்கு மாளிகையில் குடியிருக்கும் தங்கர்பச்சானுக்கு வேண்டுமானால் கேவலமாக இருக்கலாம். சிகையலங்காரம் செய்யும் அந்தப் பெண்ணுக்கு? குழந்தைக்குப் பால் வாங்கவோ, பள்ளிக் கட்டணம் கட்டவோ, மருத்துவச் செலவுக்கோ அந்தப் பணம்தான் வாழ்வாதாரம்.

உழைத்ததற்கு கூலி கேட்டதற்கு ‘தேவிடியா' என்று திட்டுகிறார் தங்கர்பச்சான். தனக்குக் கீழ் பணிபுரிபவரின் வயிற்றுப்பாட்டைக்கூட புரிந்து கொள்ள முடியாத தங்கர்பச்சானை, தமிழ் சமூகம் அவர் எந்தச் சூழலில் அப்படிப் பேட்டிக் கொடுத்தார் என்பதை மட்டும் புரிந்து, பதவிசாக நடந்து கொள்ள வேண்டுமாம்.

தங்கர்பச்சான் என்ன சமூக விடுதலைக்காகவா படம் எடுத்துவிட்டார்? அவர் படத்தில் குலுக்கு நடனங்கள் இல்லையா என்ன? ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' யில் கூட, அரைகுறை உடையில் பெண்ணை ஆட வைத்திருக்கிறார். தங்கர்பச்சானுக்கு தெரிந்த ஒரே தமிழ்க் கலாச்சாரம் பெண்ணடிமைத்தனம் என்பதை அவரின் படங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. கணவன் என்னதான் பொறுப்பற்றவனாக, ஊதாரியாக, சோம்பேறியாக, குடிகாரனாக, பெண்களைத் தேடிப் போகிறவனாக இருந்தாலும் - மனைவி என்பவள் அதைப் பொருட்படுத்தாமல், தையல் வேலை செய்தாவது சம்பாதித்து, வீட்டையும் கவனித்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து, உலகெல்லாம் சுற்றித் திரும்பி வரும்போது, கொஞ்சமாய் கோபித்துக் கொண்டு அணைத்துக் கொள்ள வேண்டுமாம். ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' வலியுறுத்தும் பத்தினித்தனம் தமிழ்க் கலாச்சாரம் இதுதான்!

தங்கர்பச்சான் நடிகைகளை கேவலப்படுத்தியபோது கொதித்துப் போன நடிகைகளில் குஷ்பு குறிப்பிடத்தக்கவர். ஒரு ஆண், நடிகைகளாகிய பெண்களைப் பார்த்து ‘விபச்சாரி' என்று சொன்னபோது திரண்டு வராத மகளிரணியும் - பெண்கள் அமைப்பும், ஒரு பெண் பாலியல் விஷயங்களுக்காக குரல் கொடுக்கும்போது மட்டும் சீறிப்பாய்வதன் நியாயம் புரியவில்லை. ‘நடிகை என்பவளே ஒழுக்கக்கேடானவள்தான்' என்ற எண்ணம் சமூகத்தின் ரத்தத்திலேயே ஊறிப் போயிருக்கிறது. அதனால்தான் குஷ்புவுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாதிரியான அமைப்புகள்கூட, ஆதரவாக அழுத்தமான குரல் கொடுக்கவில்லை. ஆணாலேயே பாலியல் வக்கிரங்கள் அரங்கேறுகின்றன என்றாலும், பெண் மட்டுமே அவச் சொல்லுக்கு பலியாக்கப்படுகிறாள். ஆணாதிக்கச் சமூகத்தின் கை பொம்மைகளாகத்தான் பெண்கள் இன்றும் இருக்கிறார்கள் என்ற உண்மை சுட்டெரிக்கிறது.

Women agitating against Kushboo திரை உலகமே திரண்டு நின்று கண்டித்ததால், காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அவமானப்பட்ட தங்கர் பச்சானின் பழிவாங்கும் படலம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. வன்னியச் சாதி வெறியரான அவருக்குத் தோள் கொடுக்கவே பா.ம.க.வின் இந்த நாடகம். திரைப்படங்கள், பாடல்கள், விளம்பரங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எதில் இல்லை பாலியல் வக்கிரம்? அத்தனையும் ஆபாசமாகிக் கொண்டிருக்கிறது. பண்பாட்டுச் சீரழிவின் தொடக்கம், வளர்ச்சியும் ஆண்களாலேயே நிகழ்த்தப்படுகிற சூழலில், பெண் உடல் தினம் நசுக்கப்படுகிறது. பார்வையாளர்களை உடல் கூச வைத்த ‘சன்டேன்னா ரெண்டு' என்ற ‘தினமலரின்' விளம்பரத்தை எதிர்த்து ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை இந்த ‘ஒழுக்கக் காவலர்'கள்! மிக மிக வக்கிரமான இந்த விளம்பரத்தை வைத்து தனது நாளேட்டின் விற்பனையைப் பெருக்கத் துடிக்கும் ‘தினமலர்' தான் ‘கலாச்சாரத்தின் காவல் நாயா'கச் செயல்படுகிறது.

‘இந்தியா டுடே'யும் ‘அவுட்லுக்' இதழும் ‘செக்ஸ் சர்வே' என்கிற பெயரில் மிகக் கேவலமான, அநாகரிகமான, அந்தரங்கத்தைக் கொச்சைப்படுத்தும் கேள்விகளைக் கொண்டு கருத்துக் கணிப்பு நடத்தி, அதை ஆபாசப் புகைப்படங்களோடு வெளியிடுகின்றன: ‘‘பெண்களின் எந்தப் பகுதி ஆண்களைக் கவரும்? உங்கள் பார்ட்னர் முன் சுய இன்பத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா? யாருடன் முதலில் செக்ஸ் வைத்துக் கொண்டீர்கள்? வாய் வழி செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆண்களின் எந்த உறுப்பை செக்சியானதாகக் கருதுகிறீர்கள்?...'' சமூக விடுதலைக்கு உதவும் கேள்விகளா இவை? நியாயப்படிப் பார்த்தால் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பா.ம.க.வின் சீற்றம் இப்பத்திரிகைகள் மீதுதானே இருந்திருக்க வேண்டும்?

இங்கு இன்னொரு செய்தியையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இதே விடுதலைச் சிறுத்தைகள் இதற்கு முன்பு நடத்திய சமூக விடுதலைப் போராட்டங்களை, இந்தப் பத்திரிகைகள் - இத்தனை கொட்டை எழுத்துகளில் தலைப்புச் செய்தியாக்கியதா? திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த கொடுமையையோ, பாப்பாபட்டி, கீரிப்பட்டி சாதி வக்கிரத்தையோ முதன்மைச் செய்தியாக வெளியிட வேண்டும் என்ற அக்கறையும் பொறுப்பும் அவர்களுக்கு இருந்ததா?

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த குஷ்புவை எதிர்த்து, இந்துத்துவா அமைப்புகள் பெரிய போராட்டம் எதுவும் நடத்தவில்லை. சாதி இந்துக்களும், தலித்துகளும் அவர்களை முந்திக் கொண்டு போராடி, ஆதிக்கவாதிகளையே வாயடைக்க வைத்துவிட்டார்கள். சாதி இந்துக்களும், தலித் அமைப்புகளும் - இந்து ஆதிக்கவாதிகளோடு ஒத்துப்போவது இது முதல் முறை அல்ல. ஆனால், பெண் எதிர்ப்பு என்று வரும்போது இஸ்லாமியர்களும் இந்துத்துவவாதிகளோடு நேர்கோட்டில் நிற்பதுதான் விந்தையிலும் விந்தை! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ‘குஷ்புவை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது'. மதங்களையோ மதவாதிகளையோ இங்கு குறை சொல்ல புதிதாக ஒன்றுமில்லை. காரணம், அவர்கள் ஒருபோதும் பெண் விடுதலைக்கு உழைக்கப் போவதில்லை. பார்ப்பான் மூளை எப்படி தலித் விடுதலை பற்றி சிந்திக்காதோ, அதே போலதான் ஆண் மூளையும் பெண் விடுதலையை ஏற்காது.

எல்லா துறைகளிலும் பெண் முன்னேறிவிட்டதைப் போன்ற தோற்றம் இருந்தாலும், இன்னும் உளவியல் ரீதியாக தன்னை வலிமையற்றவளாக எண்ணும் போக்கே நீடிக்கிறது. அதனால்தான் எத்தகைய பெரிய பதவியில் இருந்தாலும் குடும்ப வன்முறைக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் பெண் ஆளாக நேர்கிறது. ராணுவ ஆட்சியையும், தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகளையும் எதிர்த்து மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டத்திற்குத் தலைவணங்கலாம். ஆனால், தமிழகப் பெண்கள், போராடி ஒழிக்க எவ்வளவோ அடிமைத்தனங்கள் ஓங்கி நிற்கையில், ‘நாங்கள் கற்புக்கரசிகள்' (நாங்கள் அடிமைகள்) என்று ‘பெருமை'யோடு பெண்ணியத்துக்கு எதிராகப் போராடுவது கண்டு அவமானத்தில் தலை குனிவதைத் தவிர வேறு வழியில்லை.

ஜனநாயகத்துக்கு எதிரான ஆதிக்கவாதிகளையும் ‘ஒழுக்கக் காவலர்'களையும் கண்டிக்காமல் வளரவிட்டோமானால், பெண் விடுதலையும் அதனால் சமூக விடுதலையும் வேரோடு அழித்தொழிக்கப்பட்டுவிடும். இதுகாறும் வளர்த்தெடுக்கப்பட்ட பகுத்தறிவும், பெண் சுயமரியாதையும் மிக வேகமாக பொசுக்கப்படுகிறது. இதற்கு அனைத்துத் தரப்பு ஆண்களும் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். ஆக, இங்கு ஒன்றிணைய வேண்டியது பெண்கள். ஆதிக்கம் - ஆபாசம் - ஆண்கள் இம்மூன்றுக்கெதிராகவும் ஒரு நிலையான போராட்டத்தைப் பெண்கள் உடனே தொடங்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில், தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில், இந்துமதக் கற்பிதங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, தன் கொடிய கால்களால் இந்தச் சமூகத்தைப் புரட்டி எடுக்கும். அந்தத் தாக்குதலில் மிகக் கொடூரமாக பலியாகப் போவது தலித் மக்களும் பெண்களும்தான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com