Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2005
பாபாசாகேப் பேசுகிறார்

கல்வியைப் பாகுபாடின்றி அனைவருக்கும் அளிக்கக் கூடாது II


சாதி அமைப்பு முறையில் வேறு சில தனித்த தன்மைகள் உள்ளன. இவை ஜனநாயகத்திற்கு எதிராக மோசமான விளைவுகளைக் கொண்டுள்ளன. சாதி அமைப்பின் இத்தகைய தனித்த தன்மைகளில் ஒன்று, அதனுடைய ‘படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை.' சாதிகள் சமமாக இல்லை. அவை ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று பொறாமை கொள்கின்றன. சாதி, தனக்கு மேலிருப்பவர் மீது வெறுப்பையும், தனக்குக் கீழ் இருப்பவர் மீது இழிவையும் சுமத்துகிறது. சாதி அமைப்பின் இந்தத் தன்மைதான் மிக மோசமான பின்விளைவுகளைக் கொண்டதாக உள்ளது. அது, மனமுவந்து உதவும் இணக்கமான சூழலை அழித்து விடுகிறது.

Ambedkar சாதியும் வர்க்கமும் எந்த இடத்தில் வேறுபடுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். சாதி அமைப்பில் இருப்பது போன்ற முழுமையான தனிமைப்படுத்துதல் வர்க்க அமைப்பில் இல்லை. சாதி அமைப்பில் சமமின்மையுடன் இணைந்த இரண்டாவது தீய விளைவு இது. இதன் மூலம் உள்ளார்ந்த உணர்வும், ஆதரவும் இரு சாதிகளுக்கிடையில் ஒருசார்புடையதாகத்தான் இருக்கிறது என்ற உண்மை விளங்குகிறது. மேலிருக்கும் சாதி, அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழியிலும், கீழிருக்கும் சாதி ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட வழியிலும் செயல்பட்டாக வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் சமமான வாய்ப்புகள் இல்லாததன் விளைவு சிலர் தலைவர்களாகவும், மற்றவர்கள் அடிமைகளாகவும் இருக்க அது கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கை அனுபவங்களை சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ளும் வாழ்வியல் முறை தடுக்கப்படுகிறது.

இது, சமூகத்தை வாய்ப்புகள் பெற்ற வர்க்கமாகவும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வர்க்கமாகவும் பிரிப்பதில் முடிவடைகிறது. இத்தகைய பிரிவினை, சமூக ஒருங்கிணைப்பைத் தடுக்கிறது. மூன்றாவதாக ஒரு தனித்தன்மை சாதி அமைப்பிற்கு இருக்கிறது. இது, ஜனநாயகத்தின் வேர்களையே நிர்மூலமாக்கும் தீய தன்மைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாதியினரும் குறிப்பிட்ட ஒரு தொழிலையே செய்ய வேண்டும் என்றும் அது நிர்பந்திக்கிறது.

சாதி அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? முதல் தடை, சாதி அமைப்பின் உயிர்நிலையான படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மையில்தான் இருக்கிறது. மக்கள் இரண்டு வர்க்கங்களாக மேல் என்றும் கீழ் என்றும் மட்டும் பிளவுபட்டிருந்தால், கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து, மேலே இருப்பவர்களை எதிர்க்க முடியும். ஆனால், இங்கு ஒரேயொரு கீழ் வகுப்பு இல்லை. வர்க்கம் என்பது, கீழ் வர்க்கம் என்றும், அதற்கும் கீழான வர்க்கம் என்றும் படிநிலைப்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளன. கீழே இருக்கும் வர்க்கம், அதற்குக் கீழ் இருக்கும் வர்க்கத்துடன் இணைவதில்லை. கீழே இருக்கும் வர்க்கம், தனக்குக் கீழே இருக்கும் வர்க்கத்தை உயர்த்தினால், தனக்கு இருக்கும் உயர் நிலையும், தனது சாதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் உயர் நிலையும் (அவர்களை மேலே உயர்த்துவதன் மூலம்) பறிபோய் விடும் என்றும் நினைக்கிறது...

கல்வி சாதியை ஒழித்து விடுமா? இதற்குரிய பதில் ‘ஆம்'; அதே நேரத்தில் ‘இல்லை'! இன்று வழங்கப்படும் கல்வியால், சாதியை ஒன்றும் செய்து விட முடியாது. அது எப்போதும் போலவே நிலைப் பெற்றிருக்கும். இதற்கு பார்ப்பன சாதியே மிகச் சரியான எடுத்துக்காட்டு. பார்ப்பனர்களில் நூறு சதவிகிதம்பேர் படித்திருக்கிறார்கள்; இல்லை, அவர்களுள் பெரும்பான்மையினர் மெத்தப் படித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒரேயொரு பார்ப்பனர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. உண்மையில், மேல் சாதியில் இருக்கும் படித்த நபர், கல்வி கற்காமல் இருப்பதைவிட, அவர் கல்வி கற்ற பிறகு சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புகிறார். ஏனெனில், சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள, கல்வி கூடுதல் நலனை அவருக்கு அளிக்கிறது. இதன் மூலம் அவர் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, கல்வி சாதியை ஒழிக்க உதவிகரமாக இல்லை.

கல்வியின் இன்னொரு எதிர்மறையான விளைவு இது. ஆனால், இதே கல்வி இந்திய சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டால், அது சாதியை ஒழிப்பதில் உதவிகரமாக இருக்கும்; அம்மக்களின் போராட்ட உணர்வை அதிகரிப்பதாகவும் இருக்கும். அறியாமையால், அவர்கள்தான் சாதி அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். ஒரேயொருமுறை அவர்களின் கண்கள் திறக்கப்பட்டுவிட்டால், அவர்கள் சாதி அமைப்புக்கு எதிராகப் போரிடத் தயாராகி விடுவார்கள்.

தற்பொழுதுள்ள கொள்கையின் குறைபாடு என்னவெனில், கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது; ஆனால், இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. சாதி அமைப்பு முறையை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள விரும்பும் இந்திய சமூகத்தின் சுயநலவாதிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு பலப்படுத்தப்படும். இதற்கு மாறாக, இந்திய சமூகத்தின் சாதி அமைப்பு முறையை நிர்மூலமாக்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு கண்டிப்பாக ஒழிந்துவிடும்.

‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா' 20.5.1956 ‘டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 17 பக் : 520



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com