Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
நவம்பர் 2008


“அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ?''
ஆ. சிவசுப்பிரமணியன்

‘தலித் முரசு' சூலை 2008 இதழில், மார்க்சிய ஆய்வாளர் தோழர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் நேர்காணலை பதிவு செய்ததற்கு என் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேர்காணலில் வெளிவந்துள்ள பின்வரும் சொற்றொடர் வாஞ்சிநாதனின் தமிழ்க் கடிதத்தில் இல்லாததாகும். பேராசிரியர், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்ற வாஞ்சிநாதன் கடிதத்தின் தமிழாக்கத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று கருதுகிறேன். நான் வாஞ்சிநாதனின் அசல் தமிழ்க் கடிதத்தின் வாசகங்களை 1986இல் வெளிவந்த என்னுடைய "கார்ல் மார்க்சின் இலக்கிய இதயம்' நூலில் முதன் முதலாக வெளியிட்டுள்ளேன்.

VanchiManiyachi கடிதத்தில் ‘ஆர். வாஞ்சி அய்யர்' என்று தமிழிலும், R.Vanchiar of Shencottah என்று ஆங்கிலத்திலும் கையெழுத்திடப்பட்டுள்ளது. "வாஞ்சிநாதன்' எனும் பெயர் வழக்காற்றில் நிலைப் பெற்று விட்டது. இனி அவர் எழுதிய தமிழ்ச் சொற்றொடரை பின்வருமாறு தருகிறேன்: “எருது மாம்சம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சயனை George V என்று தான் உள்ளது. அய்ந்தாம் ஜார்ஜ் என்பதைக் குறிப்பிட George V என்று தெளிவாகத் தமிழ்க் கடிதத்தில் உள்ளது; "பஞ்சமன்' எனும் சாதிப் பெயராக எழுதப்படவில்லை.
-பெ.சு. மணி, எழுத்தாளர்-ஆய்வாளர், சென்னை-33

ஆ.சிவசுப்பிரமணியம் பதில் :

‘பஞ்சம்' என்ற சொல் அய்ந்து என்ற பொருளைத் தரும். அய்ந்து என்ற பொருளிலேயே ‘பஞ்ச தந்திரம்', ‘பஞ்ச பாண்டவர்', ‘பஞ்சமா பாதகம்', ‘பஞ்ச உலோகங்கள்' என்ற சொற்களில் ‘பஞ்சம்' என்ற அடைமொழி இடம் பெற்றுள்ளது. சாதிய அடுக்கு நிலையில், அய்ந்தாவதாகக் குறிப்பிடப்படும் தலித் மக்களைக் குறிக்க "பஞ்சமர்' என்ற சொல் முன்னர் வழக்கில் இருந்தது. “நால்வர்ணத்திற்கும் புறம்பான வர்ணத்தார்'' என்று சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் "பஞ்சமர்' என்ற சொல்லுக்குப் பொருள் தரும்.

மேட்டிமையோரால் பஞ்சமர் என்று அழைக்கப்பட்ட தலித் மக்களில் பெரும் பகுதியினர் பசு இறைச்சி உண்பது வழக்கம். இதை இழி செயலாக மேட்டிமையோர் கருதினர். மேலும் பஞ்சமர் என்ற சொல் இழிவான சொல்லாகவே பயன்படுத்தப்பட்டது. உணவு விடுதிகளில் "பஞ்சமருக்கு அனுமதியில்லை' என்ற வாசகம் இடம் பெற்றிருந்ததை இதற்கு சான்றாகக் குறிப்பிடலாம். இச்செய்திகளின் பின்புலத்தில் வாஞ்சி நாதனின் சட்டைப் பையிலிருந்த கடிதத்தைக் காண்போம்.

1911, சூன் 17 ஆம் நாள் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் என்ற வெள்ளை அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு,
தன்னையும் சுட்டுக் கொண்டு வாஞ்சிநாதன் இறந்தான். அவனது சட்டைப் பையில் தமிழில் எழுதப்பட்ட பின்வரும் கடிதம் இருந்தது (ரகுநாதன், 1982: 403): “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vandhi Aiyar of Shencotta

‘ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்' (1986) என்ற நூலை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, மேற்கூறிய அறிக்கைகளில் இடம் பெற்றிருந்த வாஞ்சி எழுதிய கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தேன். அதைத் தமிழில் மொழிபெயர்த்துப் பயன்படுத்துவதைவிட, மூலக்கடிதத்தின் வாசகங்களைப் பயன்படுத்துவது நல்லது என்று கருதினேன். தொ.மு.சி. எழுதிய ‘பாரதி காலமும் கருத்தும்' என்ற நூலில் வாஞ்சியின் கடிதம் இடம் பெற்றிருந்தது. அது வாஞ்சியின் மூலக்கடிதம்தான் என்பதை அவருடன் நிகழ்த்திய உரையாடலின் வாயிலாக உறுதி செய்து கொண்டேன். எனவே, எனது நூலில் அதைப் பயன்படுத்தியதுடன் பின்வரும் அடிக்குறிப்பையும் எழுதினேன்:

‘இந்தக் கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு எனக்கு கிடைத்த அரசு ஆவணங்களில் காணப்பட்டது. திரு. ரகுநாதன் தமது ‘பாரதி காலமும் கருத்தும்' (1982) என்ற நூலில் இக்கடிதத்தின் தமிழ் மூல வடிவத்தைக் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கப்பட்ட தடயங்களின் (Exhibits) தமிழ் அச்சுப் பிரதியிலிருந்து இதனை அப்படியே எடுத்து எழுதியதாக அவருடன் நிகழ்த்திய உரையாடலின் போது குறிப்பிட்டார். எனவே வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதத்தின் உண்மையான தமிழ் வடிவம் இதுவேயாகும்.'

தொ.மு.சி. தமது நூல்களையும் ஆவணங்களையும் தமது பெயரால் அமைந்த நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கிவிட்டார். 2001இல் அவற்றை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போது, தொ.மு.சி. நூலகத்தின் அறக்கட்டளை உறுப்பினரான பேராசிரியர் நா. ராமச்சந்திரனிடம் ஒரு காகிதக் கட்டை சுட்டிக்காட்டி, இது சிவசுப்பிரமணியனுக்கு உதவும் என்று கூறியுள்ளார். அவரும் அதை என்னிடம் கூற, நான் அதைப் பார்வையிட்டேன். அக்கட்டு முழுவதும் ஆஷ் கொலை வழக்கில் காவல் துறையினர் நீதிமன்றத்தில் வழங்கிய அச்சிட்ட தடயங்களின் தொகுப்பாக இருந்தது. உடனே அவசரமாக அதைப் பிரித்து வாஞ்சியின் கடிதத்தைத் தேடினேன். அதில் வாஞ்சியின் கடிதம் Exhibite EE என்ற தலைப்பில் தமிழில் அச்சிடப்பட்டிருந்தது. இதையும் "பாரதி காலமும் கருத்தும்' என்ற நூலில் ரகுநாதன் (1982 : 403) மேற்கோளாகக் காட்டியிருந்த கடிதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது ஓர் உண்மை புலப்பட்டது. மூலக்கடிதத்தில் இடம் பெற்றிருந்த எழுத்து மற்றும் ஒற்றுப்பிழைகளைத் திருத்தி ரகுநாதன் பதிப்பித்துள்ளார்.

பஞ்சமன் என்ற சொல்லையடுத்து George V என்று மூலக்கடிதத்தில் இருக்க, ரகுநாதன் அதை அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ளார். மற்றபடி மூலக்கடிதத்தின் வாசகங்களை ரகுநாதன் திருத்தி அமைக்கவில்லை. அய்ந்தாம் ஜார்ஜ் மன்னனை
“கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை'' என்று வாஞ்சிநாதன் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் எனது நூலில் (சிவசுப்பிரமணியன் 1986 : 77), “மேலும், ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சமய மற்றும் சனாதனப் பிடிப்புகளிலிருந்து விடுபட்ட புரட்சியாளர்களாக இல்லை. இவர்கள் அனைவரும் அன்றைய தமிழ் நாட்டில் சமூக மேலாதிக்கம் செலுத்தி வந்த பிராமணர், வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்களே. ‘ஜார்ஜ் பஞ்சமன்' என்று வாஞ்சியின் கடிதம் ஜார்ஜ் மன்னனைக் குறிப்பிடுகிறது. பஞ்சமர் என்பது தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிடும் இழிவான சொல். ஜார்ஜ் மன்னன் இழிவானவன் என்று குறிக்க, அவனைப் பஞ்சமன் என்றே வாஞ்சி அழைத்துள்ளான். இத்தகைய கருத்தோட்டம் உடையவர்கள் பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவது கடினம்'' என்று குறிப்பிட்டிருந்தேன். வாஞ்சியின் தியாக உணர்வை மதிக்கும் அதே நேரத்தில், அவரது சனாதான உணர்வை மறைக்க வேண்டியதில்லை என்பதே எனது கருத்து.

‘இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் பெ.சு.மணி எழுதிய நூல் 2002 இல் வெளியாகியுள்ளது. அந்நூலில் பக்.539இல், “வாஞ்சியின் சொந்தக் கையெழுத்தில் உள்ள தமிழ்க் கடிதம் கூட, புரட்சி வரலாற்று அரசாவணங்களில் இன்றுவரை சேர்க்கப்படவில்லை. பின்வரும் இந்த அசல் கடிதம் புரட்சியுணர்வின் இந்து சமய சார்பு வண்ணத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது'' என்று குறிப்பிட்டுவிட்டு, வாஞ்சியின் கடிதத்தை வெளியிட்டுள்ளார். நீதிமன்றத்தில் தடயமாக வழங்கப்பட்ட கடிதத்தில் இடம் பெற்றுள்ள, “கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை
George V என்ற வரி மட்டும் வேறு வடிவில் அதில் இடம்பெற்றுள்ளது. வேறு எவ்வித மாற்றமும் இல்லை.

பெ.சு. மணி மேற்கோளாகக் காட்டும் அசல் கடிதத்தில், கேவலம் என்ற சொல் நீக்கப்பட்டதுடன் “எருது மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சயனை George V என்று மாற்றம் அமைந்துள்ளது. இங்கு "கோமாமிசம்' (பசு மாமிசம்) எருது மாமிசமாகியுள்ளது. ‘பஞ்சமன்' ‘பஞ்சயனா'கியுள்ளான். ‘பஞ்சயனை' என்பது அய்ந்தாமாவனை என்ற பொருளைத் தந்து, அய்ந்தாம் ஜார்ஜைக் குறிக்கிறது. ஆனால் பின்வரும் ஆவணங்களில் இத்திருத்தம் இடம் பெறவில்லை.

ரகுநாதனிடம் இருந்த நீதிமன்றத் தடயம் Exhibit EE (பார்க்க புகைப்படம்). 2. தமிழ்நாடு அரசின் ஆவணக்காப்பகத்திலுள்ள எ.O.NO.:1471 என்ற ஆவணத்தில் இடம் பெற்றுள்ள வாஞ்சி கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, G.O. NO: 1471 இல் இடம் பெற்ற தமிழ்க் கடிதத்தின் மொழி பெயர்ப்பாகவே அமைந்துள்ளது. மேலும் பஞ்சயன் என்ற சொல், அய்ந்தாம் ஜார்ஜ் மன்னனைக் குறிக்கிறதென்றால், அடுத்து George V என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டியதில்லை. ஜார்ஜ் மன்னனை இழிவானவன் என்று சுட்டிக்காட்டவே பஞ்சமன் என்ற சொல்லை வாஞ்சி பயன்படுத்தியுள்ளான் என்பது வெளிப்படையானது.
பஞ்சமர்கள் எத்தகைய இழிவு படைத்தவர்கள் என்பதை விளக்கும் வகையில் “கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய'' என்ற சொற்கள் அடைமொழி போல் இடம் பெற்றுள்ளன.

இதனடிப்படையில் பார்க்கும்பொழுது, தாம் மேற்கோள் காட்டும் கடிதம்தான் ‘அசல் கடிதம்' என்ற பெ.சு. மணியின்
கூற்று, ஆவணச் சான்றுகளுடன் ஒத்துப் போகவில்லை என்பது புலனாகிறது. தாம் குறிப்பிடும் ‘அசல் கடிதத்தின்' மூலம் எது என்பதையும் அவர் சுட்டவில்லை. ‘நதிமூலம், ரிஷி மூலம்' போல் இதையும் கேட்கக் கூடாது என்று கருதிவிட்டாரோ என்னவோ?

பழைய இலக்கியங்களிலிருந்து, இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் வரை எல்லாமே இன்று மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தலித்திய மற்றும் பெண்ணிய நோக்கிலான மறுவாசிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில், வாஞ்சிநாதன் எழுதிய கடிதத்தில் இடம் பெற்றுள்ள மேற்கூறிய வரி மீது தலித்திய நோக்கில் மறு
வாசிப்பு நிகழ்வதைத் தடுக்க முடியாது. இந்நிலையில் வாஞ்சிநாதனைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு, மேற்கூறிய திருத்தங்களைத் தடாலடியாகச் செய்துவிட்டு, தான் மேற்கோள் காட்டும் கடிதம் தான் ‘அசல் கடிதம்' என்று பெ.சு. மணி
வலியுறுத்துகிறார்.

ஒரு வரலாற்று ஆவணத்தைத் தனது கருத்தியலுக்கு ஏற்ப பொருள் கொள்ளவோ, விமர்சிக்கவோ ஓர் ஆய்வாளனுக்கு உரிமையுண்டு என்பதில் அய்யமில்லை. அதே நேரத்தில் தன் விருப்பத்திற்கேற்ப வரலாற்று ஆவணத்தைத் திருத்துவது என்பது, நாணயமான ஆராய்ச்சி ஆகாது. தன் விருப்பத்திற்கேற்ப ஆய்வாளரே உருவாக்கிக் கொண்ட ஆவணமாகவே இது அமைந்துள்ளது. “அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ?'' என்ற பாரதிதாசனின் கவிதை வரிதான் பெ.சு. மணியின் ‘அசல் கடிதத்தை'ப் படித்தபோது நினைவுக்கு வந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com