Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
நவம்பர் 2008


பொது அறிவு
மருந்துகளிடம் எச்சரிக்கை

டாக்டர் நீ. சுந்தரராமன்

மிகக் கடுமையான நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மருந்துகளை உட்செலுத்துவதற்கான வடிவம் தான் ஊசி. வாய்வழியாக மருந்தைச் சாப்பிட முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதற்கான மாற்று வழிதான் ஊசி. மாத்திரை, ஊசி இரண்டுமே ஒரே வேதிப் பொருளால் தயாரிக்கப்படக்கூடியவைதான். சில மருந்துகளை வாய்வழியாகக் கொடுத்தால் ஏற்காது என்பதால் ஊசி வழியாகச் செலுத்துகின்றனர். இந்தமுறை சிலருக்கு மட்டுமே பொருந்தும் நல்ல முறையில் வாய் வழியாகவே கிரகித்துக் கொள்ளக்கூடிய மருந்துகளை ஊசி வழியாகச் செலுத்துவதைத் தான் நாம் எதிர்க்கிறோம்.

ஊசி மூலம் மருந்து கொடுப்பது பெரும்பாலும் தேவையற்றது. அதிலும், குறிப்பாக சாதாரண, தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் ஊசி மூலம் தான் மருந்து கொடுக்கிறார்கள். அது தேவையற்றதாகும். அத்துடன், இவை தொற்று நோய், ஒவ்வாமை நோய் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் புதிய சிரிஞ்சைப் (ஊசி) பயன்படுத்துவது இல்லை. ஊசி போடுவதற்கு 20 நிமிடங்களுக்கு மேல் கொதிக்கும் வெந்நீரில் போட்டுத் தூய்மை (Sterilised) செய்வது அரிதாகவே நடக்கிறது. இதன் மூலம் "எய்ட்ஸ்' கிருமிகள் பரவிட ஓரளவு வாய்ப்புகள் உள்ளன.

AccuTabwhitetabs வாய்வழியாக உட்கொண்டாலும் சரி, ஊசி வழியாகச் செலுத்தினாலும் சரி, ஒரே மாதிரி பயன்தரக்கூடிய பல மருந்துகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஊசி மூலம் செலுத்தக் கூடிய வடிவத்தில் விற்கப்படும் மருந்துகளின் விலை மிக அதிகம்.
கலர் ஊசி, சத்து ஊசி என்று அழைக்கப்படும் ஊசிகள் மூன்று வகை வைட்டமின்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
டாக்டர்கள் அடிக்கடி ஊசியைப் பயன்படுத்துவதற்கு மக்கள் அதை விரும்புவதும் ஒரு காரணமாகும். பல நோயாளிகள் ஊசி
போடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்; அல்லது ஊசி போடுகின்ற டாக்டர்களையே திறமையானவர் என்று அங்கீகரித்து அடிக்கடி அவர்களிடமே செல்கின்றனர்.

மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெறாதவர்களும், ஆர்.எம்.பி. டாக்டர்களும் அடிக்கடி ஊசிகளைப் பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துகிறார்கள். இவ்வகை ஊசிகள் உடனடி நிவாரணத்தை அளிக்கின்றன என்பதால் மக்களும் அதிகமாக விரும்புகின்றனர். இந்த உடனடி நிவாரணம் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளாமல் தவறான முறையில்
அவற்றைச் செலுத்துகின்றனர். டாக்டர் உங்களை ஊசி போட்டுக் கொள்ள சொல்லுகிறபோது ‘இதே பயனைத் தரக்கூடிய மாத்திரைகள் இருந்தால் கொடுங்கள்' என்று டாக்டரிடம் கேளுங்கள். தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டும் ஊசியைப் பயன்படுத்துங்கள் என்று டாக்டரிடம் தெரிவியுங்கள்.

குழந்தைகள் நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு மட்டுமே ஊசியைப் (தடுப்பூசி) பயன்படுத்த வேண்டும். குறிப்பாக தட்டமையைத் தடுக்க டிபிடீ(DPT) போன்ற ஊசிகள் வரவேற்கக் கூடியதும் அவசியமானதுமாகும். பெரியவர்கள் அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட்டனஸ் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது அழுக்குகள் நிறைந்த காயம் இருந்தாலோ டெட்டனஸ் தடுப்பு ஊசி போடுவதற்கு வற்புறுத்த வேண்டும். 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் டெட்டனஸ் தடுப்பு ஊசி போடாதவர்கள் மட்டுமே இந்த நேரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

மருந்துகளின் பெயர்கள்

பலத்தை அதிகப்படுத்தப் போடுகிற ஊசிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த எண்ணிக்கை மிக அதிகம். டாக்டர்கள் அளிக்கின்ற தண்ணீர் மற்றும் சலைன் தவிர்த்தவை இவை. 1. நியுரோபையோன், 2. சயோநியுரோன், 3. விட்நியுரின், 4. ட்ரைநியுரிசால், 5. நியுரோட்ராட், 6. பெவிடாக்ஸ் இத்துடன் மேலும் 10 மருந்துகளின் பட்டியல் உள்ளது. இவை சில உதாரணங்கள் மட்டுமே.

வைட்டமின் டானிக்குகளும் விலை உயர்ந்த வைட்டமின் மாத்திரைகளும்

syringe_needle_combo அனேகமாக அனைத்து டானிக்குகளும் தடை செய்யப்பட வேண்டும். வங்கதேசம் போன்ற நாடுகளில் கூட, இந்த டானிக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. காரணம், இதற்குச் செலவிடப்படும் பணம் முழுவதும் விரயமாகும். இந்த டானிக்குகளின் கூட்டுப்பொருள் அறிவியல் பூர்வமற்ற முறையில் அமைந்துள்ளது. அத்துடன் பொருத்தமற்ற நேரத்திலேயே இவை பெரும்பாலும் கொடுக்கப்படுகின்றன.

ஒருவருக்குக் குறிப்பிட்ட வைட்டமின் பற்றாக்குறை இருக்கிற நேரத்தில் மட்டுமே உரிய வைட்டமின்கள் கொடுக்கப்பட வேண்டும். பெரும்பாலான வைட்டமின் மாத்திரைகளின் விலை குறைவாகத்தான் இருக்கிறது. ஒருவருக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களும் ‘சரிவிகித உணவில்' உள்ளது. சரிவிகித உணவுதான் மலிவான, பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் வைட்டமின்களைப் பெறும் வழியாகும். வைட்டமின் பற்றாக்குறையைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் சிறந்த வழி, சரிவிகித உணவுதான்.

பச்சை இலைகளுடன் கூடிய காய்கறிகள், பால், கைக்குத்தல் அரிசி, புழுங்கல் அரிசி ஆகியவற்றின் மூலம் ‘பி' வைட்டமின் சத்துக்களை பெற முடியும். அரிசி வடிக்கிற கஞ்சித் தண்ணீரைக் குடித்தால் ‘பி' வைட்டமின் பற்றாக்குறையைத் தவிர்க்க முடியும். காய்கறிகளை உண்ணுவதால் ‘சி' வைட்டமின் சத்தைப் பெற முடியும். புளிப்பான பழங்கள், நெல்லிக்காய், எலுமிச்சை பழங்கள் மூலம் ‘சி' வைட்டமின் சக்தியை அதிகமான அளவு பெற முடியும். பச்சை இலைகளுடன் கூடிய காய்கறிகளிலிருந்து வைட்டமினைப் பெற முடியும். மஞ்சள், சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளில் (காரட், பீட்ரூட், மாங்காய், பப்பாளி) "ஏ' வைட்டமின் உள்ளது. ‘ஏ' வைட்டமினைப்பெறுவதற்குக் கொஞ்சம் செலவு அதிகமாகும்.

அதனால் என்ன? ‘ஏ' வைட்டமின் உள்ள சில வகை டானிக்குகள், மாத்திரை வடிவிலும் கிடைக்கின்றன. ஒருவருக்கு ‘ஏ' வைட்டமின் பற்றாக்குறை இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையோ அல்லது அரசு சுகாதார நிறுவனத்தையோ அணுகி, அம்மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ளலாம். வெய்யிலில் இருந்து கிடைப்பது ‘டி' வைட்டமின். எனவே வெய்யிலில் சிறிது நேரம் இருந்தாலே இது கிடைத்துவிடும். ‘ஈ' வைட்டமினைப் பெறுவதற்குக் கூட மாத்திரைகள் அவசியமில்லை.

இலைகளுடன் உள்ள காய்கறிகள், பால், முட்டை, தானியங்கள் (கம்பு, கேழ்வரகு) ஆகியவற்றை உண்பதால் சுண்ணாம்புச் சத்துகளைப் பெற முடியும். இலைகளுடன் கூடிய பச்சைக் காய்கறிகள், வெல்லம், பனைவெல்லம், அசைவ உணவு ஆகியவற்றில் இருந்து இரும்புச் சத்தைப் பெற முடியும். பெரும்பாலான பெண்களுக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது. இந்த இரும்புச் சத்துள்ள மாத்திரைகளின் விலை குறைவானது தான். கடைகளில் விற்கும் வைட்டமின் டானிக்குகளில் மேலே குறிப்பிட்ட வைட்டமின் சத்துகள் அனைத்தும் இருப்பது இல்லை.

அத்துடன் அவை சரியான விகிதத்திலும் இருப்பத்தில்லை. ஆகையால் நல்ல உணவுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும். வைட்டமின் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டால் அதைப் போக்குவதற்கு விலை மலிவான மாத்திரைகளே போதும். இவை விலை உயர்ந்த மாத்திரைகளுக்கு ஈடானவை. விலை குறைந்த, விலை அதிகமான பல வைட்டமின்கள் அடங்கிய மாத்திரைகள், இரும்புச் சத்து மாத்திரைகளின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

fruits 1. பெக்காடெக்ஸ் (பல வைட்டமின்கள்)
2. பெக்காடெக்ஸமின் (பல வைட்டமின்கள்)
3. காம்ப்ளக்ஸ் பி (ஜென்ரிக் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் மட்டும்)
4. கொபாடக்ஸ் போர்ட்டி (பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் மட்டுமே)
5. பெர்சோலெட் (இரும்புச் சத்து மாத்திரை
6. மேக்ரோபோபின் அயர்ன் (இரும்பு மற்றும் அனீமியா எதிர்ப்பு வைட்டமின்)
7. பிபோல்-இஸட்

ஆரோக்கிய உணவு

செரிலாக், நெஸ்டம், ஆர்லிக்ஸ், போன்விட்டா... இப்படி டின்னில் அடைக்கப்பட்ட விலை உயர்ந்த ஏராளமான வகை உணவுகள் கிடைக்கின்றன. இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் பயனுடன் ஒப்பிட்டால், நாம் அதற்குக் கொடுக்கும் விலை மிக அதிகம். ஒரு கிலோவுக்கு 200 ரூபாய்க்கு மேல் கொடுக்கிறோம். ஆனால் அந்த அளவுப் பயன் நமக்குக் கிடைப்பதில்லை.
இதை வாங்குவதில் பணக்காரர்களுக்குப் பிரச்சினை இல்லை. பாலின் சுவையை விரும்பாத குழந்தைகளுக்கு அதன் வாசனையை மாற்றி கொடுப்பதற்குத்தான் இதைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், மருத்துவர்கள் இந்த டின் உணவுகளை ‘ஊட்டச்சத்தின்மைக்கான' உணவாகப் பரிந்துரைப்பது அறிவியலுக்கு எதிரான செயலாகும்.

-நன்றி : "வேண்டாம் இந்த மருந்துகள்' சவுத் விஷன், சென்னை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com