Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
நவம்பர் 2007
பெரியார் பேசுகிறார்

இழிவைத் துடைத்தெறியும் அரசியல் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை!

இன்று அரசியல் துறையில் நமக்கு என்ன குறை உள்ளது? எழுதப் படிக்கத் தெரியாத, 21 வயது வந்த, தற்குறிகளுக்கு எல்லாம் ஓட்டு அளிக்கப்பட்டு இருக்கின்றது. இவன்கள் எல்லாரும் தமிழ் நாட்டில் மந்திரியாகவும், சட்டசபை மெம்பராக வரவும் உரிமை அளிக்கப்பட்டு இருக்கின்றது. இது மட்டும் அல்ல, இன்று பறையர், சக்கிலிகள் என்று இழிவுபடுத்தப்பட்டவர் எல்லாரும்கூட கலெக்டராக, ஜட்ஜாக, மந்திரியாக வர வாய்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. பெண்கள் எல்லாரும் சட்டசபை மெம்பராகலாம், மந்திரியாகலாம். இதைவிட வேறு என்ன வேண்டும்? இவ்வளவு உரிமைகள் இருந்தாலும்கூட, நாம் இவற்றால் எந்தவித நன்மையும் அடையாததோடு தொல்லைகள்தானே அடைந்து வருகிறோம்?

Periyar தோழர்களே! 100க்கு 97 நபர்கள் நாம். நாம்தான் இழிமக்களாக, சூத்திரர்களாக, பெரிய உத்தியோகம் பார்க்காதவர்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றோம். உழுவது, சிரைப்பது, வெளுப்பது, நெய்வது, கக்கூஸ் எடுப்பது முதலிய எல்லா அத்தியாவசியமான தொழிலும் செய்வது நாம்தான். இப்படிப்பட்ட நாம் இழிமக்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றோம். இந்த நிலை ஏன்? என்னையா! இன்றைய அரசியல் உரிமையைவிட இந்தக் கட்சிக்காரர்கள் வேறு என்ன வேண்டும் என்கின்றார்கள்? கழுதைக்கு, மாட்டுக்கு, குதிரைக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்கின்றார்களா?

இந்த நாட்டில் அரசியல் என்பதாக ஒன்று என்றுமே இருந்ததில்லை. புராண காலம் தொட்டு நான் கூறுகின்றேன். எவன், என்ன கொள்கைப் பேரில் மக்களுக்கு நன்மை ஏற்படும் முறையில் ஆட்சி செய்தான் என்று கூற முடியுமா? எல்லாம், அசுரன் ஆள்வதா? தேவர் (பார்ப்பான்) ஆள்வதா? என்ற போட்டிதானே இருந்தது?

அடுத்து, சேரன், சோழன், பாண்டியன், வெங்காயம் என்பவர்கள் ஆண்டதாகக் கூறப்படுகின்றதே! இந்தப் பசங்களாவது மக்களுக்கு என்று ஏதாவது நன்மை ஏற்படும்படி ஆண்டு இருக்கிறார்களா? இந்தப் பசங்கள் வெளிநாட்டுக்குப் போய் வென்றார்கள், அது பண்ணினார்கள், இது பண்ணினார்கள் என்று பெருமை அடித்துக் கொள்கிறார்களே! இந்த ராஜாக்களில் எவனாவது மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று ஒரு பள்ளிக்கூடம் கட்டினார்கள் என்று கூற முடியுமா? இந்த முட்டாள் பசங்கள், பார்ப்பான் படிக்க வேத பாடசாலை, சமஸ்கிருதப் பள்ளிகள் ஏற்படுத்தி, ஓசிச் சோறும் போட ஏற்பாடு செய்து இருப்பார்களே ஒழிய, நமது சமுதாயத்திற்காக என்று எந்த காதொடிந்த ஊசி அளவாவது நன்மை செய்தார்களா?

நான் ஒன்றும் விளையாட்டுக்கு ஆகவோ, இவர்களைத் திட்ட வேண்டும் என்பதற்காவோ இப்படிக் கூறவில்லை. தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் என்ற ஊர்க் கோயிலில் போய்ப் பார்த்தால் தெரியும். வரகுண பாண்டியன் என்ற ராஜா, தன் மனைவியை, தான் மோட்சம் அடைவதற்காகப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்தது சித்திரமாக கோயில் சுவரிலேயே தீட்டப்பட்டு இருக்கின்றது! இவனது சிவ பக்தியின் மேலீட்டைப் பற்றிப் பட்டினத்தார் பாடியுள்ள பாடலிலேயே - வரகுண மகாராஜன் தன் மனைவியினைப் பார்ப்பானுக்குக் கொடுத்ததைப் புகழ்ந்து பாடியுள்ளார். இந்தப் பாண்டியன், சேர, சோழர்களை எல்லாம் வென்ற பராக்கிரமசாலி என்று சரித்திரம் கூறுகின்றது. இப்படிப்பட்டவன்தான் இப்படிக் கேவலமாக மானமற்று நடந்து கொண்டான்.

இந்த அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். இவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது எல்லாம் ‘இவன் மனு முறை தவறாது ஆண்டவன்' என்றும் புகழ்ந்து கூறப்படுகின்றது! அடுத்து நாயக்கனோ, மராட்டியனோ, முஸ்லிமோ ஆட்சி செலுத்தினார்கள் என்றாலும், இவர்களும் மக்களுடைய குறைபாடுகள் மற்றும் தேவைகள் என்ன என்று ஆய்ந்து அதற்காகப் பரிகாரம் தேடியவர்கள் அல்ல. நமது தற்குறி நிலைமையைப் போக்கவும், நம் இழிவுகள் போக்கவும் பாடுபடவே இல்லை. அடுத்து வெள்ளைக்காரன் ஆண்டான். இவனாவது நமது இழி நிலையினைப் போக்கவும், நமது தற்குறித் தன்மையினையும் போக்க வேண்டும் என்ற கருத்தை வைத்து ஆண்டார்களா? இல்லையே!

அடுத்து சுதந்திரம் - வெங்காயம் வந்தது என்று கூறிக் கொண்டார்களே - நடந்ததா? காமராசர் முதலமைச்சர் பதவிக்கு வரும்வரை 10, 12 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ததே, இவர்களாவது நமது தற்குறித் தன்மையினைப் போக்க முயன்றார்களா? இல்லையே! ஆனால், பார்ப்பான் மட்டும் எந்தக் காலத்திலும் 100க்கு 100 படித்தவர்களாகவே ஆதிக்கக்காரர்களாகவே இருந்து இருக்கின்றனர். எனவே, இந்த நாட்டு மக்களின் குறைபாடுகளைப் போக்க வேண்டும்; இழிவினைத் துடைக்க வேண்டும் என்ற கொள்கையின் பேரில் எந்தக் காலத்திலும் அரசியல் நடைபெறவே இல்லை.

(வட ஆற்காடு மாவட்டம் பேரணாம்பட்டில் 7.4.1961 அன்று ஆற்றிய உரை)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com