Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=நவம்பர் 2007

சாதிய தேசியப் போர் - III

அழகிய பெரியவன்

சாதி ஒழிப்பின் வழியேயான அம்பேத்கரின் ஏகாதிபத்திய எதிர்ப்பை நாம் புரிந்து கொள்வதற்கு, அவர் எழுதிய ‘கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத் துறையும் நீதித் துறையும்', ‘பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதி ஆதாரங்களின் பரிணாம வளர்ச்சி' ஆகிய இரு நூல்களும் பெரும் உதவி புரிகின்றவையாக விளங்குகின்றன. அந்நூலின் ஓரிடத்தில் இப்படி எழுதுகிறார் அம்பேத்கர் : "ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் நடப்பிலிருந்த வருவாய் அமைப்பைப் பாகுபாடின்றி ஆய்வு செய்யும்போது, வரிவிதிப்பில் நீதியோ, நியாயமோ இல்லாதிருந்தது என்பதைக் கூறமுடியும். அது ஒரு கொடிய கிண்டல்...''

இந்நூல் முழுக்கவும் வெள்ளை காலனி அரசின் நிதிக் கொள்கையையும், வருவாய் சுரண்டலையும் ஆய்வு செய்து, ஏகாதிபத்தியத்தின் கோரமுகத்தினை வெளிக்கொணர்கிறார். ஒவ்வொரு வெள்ளை அதிகாரியும், 4 இந்திய அதிகாரிகளின் சம்பளத்தை ஒரு சேரப் பெறுவதையும், அவர்களின் ஏகபோக வாழ்க்கையையும், 1857 ஆம் ஆண்டு போரினை ஒடுக்க அரசு செலவிட்ட 4 கோடி பவுண்டு செலவினை -இந்திய மக்கள் மீதே வரியாக சுமத்தியதையும், ராணுவத்தின் பெரும் செலவையும், மோசமான வரிகளையும், இன்னும் பல சுரண்டல் கூறுகளையும் நுணுகி ஆய்ந்து, ஏகாதிபத்தியத்தின் இதயத்தின் மீதே குத்த முனைகிறார் அம்பேத்கர்.

அம்பேத்கரின் ஏகாதிபத்திய விமர்சனங்களும், சாதி ஒழிப்புப் போராட்டங்களும் இணைந்து -விடுதலைப் போராட்டத்திற்கானப் புதிய வரையறையை இன்று வழங்குவதுடன், அவர் அழுத்தமும், கவனமும் கொடுத்த சாதியொழிப்புப் போராட்டத்திற்கான மிகப்பெரும் வலுவினையும் இன்று சேர்க்கின்றன. அவருக்கு இணையாக காங்கிரஸ் போன்ற இயக்கங்களுடனும், தன்னெழுச்சியாகவும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலித்துகளின் மீதும் இந்த புதிய வரையறை வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. சாதி ஒழிப்பையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் ஒரு சேர கைகொண்டவர்கள் தலித்துகள் என்பதால், தலித்துகள் கூடுதலான கவனத்துக்கும் மரியாதைக்கும் உரியவர்களாக ஆகிறார்கள்.

ஏகாதிபத்தியத்தின் பாதிப்புகள் இன்று தலித் மக்களையே அதிகம் தாக்குவதாக உள்ளன. 1991இல் நிலமற்ற தலித்துகளின் எண்ணிக்கை 70 சதவிகிதம் எனில், இன்று அது 75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தலித்துகளில் வேலையற்றோர், கல்வியற்றோர், சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரக் கேடால் பாதிக்கப்படுவோர், கல்வியின் உலகமயமாக்கலால் பாதிக்கப்படுவோர், வறுமையால் பீடிக்கப்பட்டோர் பிறரைக் காட்டிலும் அதிகம். அந்நியரை எதிர்த்து, மீண்டும் பழையபடியே தமது அரசு ஆதிக்க அதிகாரத்தினை மீட்டெடுத்துக் கொண்ட சாதி இந்துக்களுக்கு-இந்திய சுதந்திரப் போர் முடிவுற்ற ஒன்று. தலித்துகளுக்கோ அது ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு என்று இன்னும் நீள்கிற, முடிவுறாத விடுதலைப் போர். அவர்கள் உள்நாட்டு ஏகாதிபத்தியத்தையும், அயல்நாட்டு ஏகாதிபத்தியத்தையும் ஒருசேர இணைத்து இன்னும் எதிர்த்துக் கொண்டே உள்ளனர்.

அம்பேத்கர் ஜனநாயகத்தின் மீது மிகவும் ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையில் உறுதியுடனும் இருந்தார். காங்கிரசை விமர்சிக்கும்போதும், வெள்ளையரசினை விமர்சிக்கும்போதும், அவர் சமூக ஜனநாயகம் என்ற அடிப்படையிலிருந்தே தனது வாதங்களைத் தொடுத்தார். அவரின் நூல்களில் மட்டுமல்ல, அவரின் உரைகளிலும்கூட ஜனநாயகத்தின் மீது அவர் கொண்டிருந்த காதல், வனப்புடன் மிளிர்கிறது. எல்லா விதமான மக்கள் போராட்டங்களுக்கும் அடிப்படையில் அதுவே நீரோட்டம் போன்று ஓடிக் கொண்டிருக்கிறது.

ஜனநாயகம் என்ற சொல், இன்று பல தளங்களில் பொருள் கொள்ளப்படுகிறது. சற்றே பிசகினாலும் வேறு வகையான அழுத்தத்திற்கு உள்ளாகிவிடும் ஆபத்துடனேயே இச்சொல் இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கின்ற சாதியப் படிநிலை கொண்ட சமூகத்தில் பொதுமைப்படுத்தப்பட்ட ஜனநாயகம், எதிர் விளைவு களையே உருவாக்கும் என்பதை நாடு விடுதலை பெற்றதிலிருந்தே நாம் பார்த்து வருகின்றோம். சட்டத்தின் முன் இங்கு எல்லோருமே சமம்தான். எல்லோருக்கும் ஒரு நிறைதான். ஆனால், நடைமுறையிலோ அவ்வாறு இல்லை.

எனவேதான் நாம் ஜனநாயகத்தின் பலன்களை ஒடுக்கப்பட்ட மக்கள் திரளுக்கு கூடுதலாக அளித்திடக் கோருகிறோம். தனித் தொகுதியும், இருவாக்கு முறையும், இடஒதுக்கீடும், நிதி நல்கைகளும் அப்படித்தான் நடைமுறைக்கு வந்தன. இவை சலுகைகளல்ல. இந்திய மக்கள் திரளை ஜனநாயகப் படுத்துவதற்கான செயல் திட்டங்களாகவே நாம் இவற்றைப் பார்க்க வேண்டும். இந்த செயல்திட்டங்களின் முட்டுக்கட்டைகளாக, அன்றிலிருந்தே காங்கிரஸ் இருந்து வந்துள்ளது. காங்கிரசோடு எல்லா சாதிய அமைப்புகளும் கைகோத்துக் கொண்டுள்ளன.

ஜனநாயகம் என்பதும், குடியரசு என்பதும் வெறுமனே சொல் விளையாட்டாகவும், வார்த்தை அப்பமாகவும் மாற்றப்படுமானால், அது கொடுங்கோன்மை நிலையினை எளிதில் அடைந்துவிடும். இந்தியாவில் ஜனநாயக சர்வாதிகாரம், இன்று அப்படித்தான் உருவாகி நிலைப்பெற்றுள்ளது. சாதி என்ற நிறுவனப்படுத்தப்பட்ட கொடுங்கோன்மை எந்திரத்துடன், அரசு அதிகாரமும், அரசு நிர்வாகமும், ஊடக ஆளுமையும் புது எந்திரங்களாக இணைந்து கொண்டுள்ளன. இவைகளுக்கு இடையிலே ஒடுக்கப்பட்டோரின் ஜனநாயகம் நசுக்கப்பட்டுவிட்டது எனலாம். துளிர்விடும் அதன் இலைகளை இந்த எந்திரங்கள் வெள்ளாடுகளாக ஆட்டிப் பறித்து மென்றுவிடுகின்றன.

இந்த ஆபத்தினை மிகவும் தொலைநோக்குடன் உணர்ந்தவர் அம்பேத்கர் எனலாம். அவர் விடுதலைப் போராட்டக் காலத்திலும், அதன் பிறகும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக விடுதலையில் மிகவும் கவனமுடன் இருந்தார். அதனால்தான் அவர் சமூக ஜனநாயகத்தை இடையறாது வலியுறுத்தினார். "தேசிய அரசுக்கோ, சுயராஜ்ஜியத்திற்கோ நான் எதிரி அல்லன். விடுதலைக்கும் நான் எதிரி அல்லன். எனக்கும் விடுதலை கிடைக்கும். கல்வியும் நலவாழ்வும் கிடைக்கும் என்றால் நானும் விடுதலைக்காகவும், தேசியத்துக்காகவும் போராடத் தயாராக இருக்கிறேன்'' என்று மிகத் தெளிவாகச் சொன்னவர் அவர் (1944 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 -சென்னை நகரசபை உரை).

எல்லோரும் விடுதலை விடுதலை என்று கூவிக் கொண்டிருந்தபோது -விடுதலைக்குப் பிறகு என்ன நடக்கும், என்ன நடக்க வேண்டும் என்பதைப் பேசியவர்கள் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட மிகச் சிலரான சமூக மாற்றத்திற்காக உழைத்த தலைவர்களே. இந்தியா என்கிற உருவாகாத தேசியத்தை ஆளுகின்ற வெள்ளை அரசு போன பிறகு, அதன் ஆட்சிப்பீடம் ஆளும் (சாதிய) வர்க்கத்திற்குள்தான் போகும். அப்படி எனில் இரு அரசுகளுமே ஒன்றுதான் என்றார் அம்பேத்கர். ஆளும் அரசு -ஆளப்போகிற அரசு என்ற இந்த இரு எதிர்மைகள், ஏகாதிபத்தியம்/காலனியம்-சாதியம் என்ற அடிப்படையில் ஒரே தன்மைகளைக் கொண்ட போலி எதிர்மைகள்.

அவைகளுக்கு உண்மையான எதிர்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரம் மற்றும் விடுதலை என்கின்ற தலித் சமூக ஜனநாயகம்தான். எனவே, அதை உருவாக்குவதற்கான போராட்டமே முதன்மையானது என்பதை மிகவும் தெளிவாக வரையறை செய்தது அவர் தொலைநோக்குப் பார்வை. இதன் அடிப்படையிலேயே அவர், அரசியல் அதிகாரம் ஆளும் வர்க்கத்தை பலப்படுத்த மட்டும் பயன்படும் என்றால், மற்ற வகுப்பாரின் உரிமைகள் நசுக்கப்படும் என்றால், தற்போதைய அரசை (வெள்ளையரசு) இப்போது விமர்சிப்பது போல விமர்சிக்க வேண்டாம் என்கிறார். இதன் பொருள் நமக்கு மிகவும் தெளிவானது. வெள்ளையரசும், காங்கிரசும் அடிப்படையில் ஒரே தன்மை கொண்டவையாக இருக்கின்றன என்பதே அது. அவை இரண்டுமே தலித் விடுதலைக்கு எதையும் செய்யவில்லை என்பதே.

இந்தியாவுக்கு தன்னாட்சி வழங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட சைமன் ஆணையத்தை எதிர்க்கின்ற போக்கு காங்கிரசிடம் இருந்தபோது, தீண்டத்தகாதவர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டை முடிவு செய்ய நாகபுரியில் ஒரு மாநாடு நடைபெற்றது. 1930 ஆகஸ்டு 8,9 ஆம் தேதிகளில் இம்மாநாடு கூட்டப்பட்டது. தலித் மக்களால் நடத்தப்பட்ட மாபெரும் மாநாடு இது. இதில் தலைமை உரையாற்றிய அம்பேத்கர், தலித் மக்கள் இந்திய விடுதலையையும், வெள்ளை அரசையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக வரையறுக்கிறார். தலித் மக்கள் வெள்ளை அரசை விமர்சிக்கவில்லை. ஆதரவுப் போக்குடனேயே அவர்கள் நடந்து கொண்டனர் என்ற காங்கிரசின் பொய்ப்பரப்புரைக்கு அவரின் உரையிலும், அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் மிகத் தெளிவான விடை இருக்கிறது.

"தீண்டாமையால் நீங்கள் அருவருக்கத்தக்க இழிநிலையில் இருந்தீர்கள். வெள்ளையரின் ஆட்சிக்கு முன்னர் நிலவிய தீண்டாமையை அகற்ற, வெள்ளையரசு ஏதேனும் செய்துள்ளதா? வெள்ளையர் வருமுன் கிணறுகளிலிருந்து நீர் எடுக்க உங்களுக்கு உரிமையில்லை. வெள்ளை அரசு கிணறுகளை அணுக, உங்களுக்கு உரிமை பெற்றுத் தந்துள்ளதா? வெள்ளையர் வருமுன் ஆலயங்களில் நுழைய உங்களுக்கு அனுமதி கிடையாது. இப்போது நீங்கள் நுழைய முடியுமா? வெள்ளையர் வருமுன் காவல் துறைப் பணியில் சேர உங்களுக்கு அனுமதி கிடையாது. வெள்ளையர் வருகைக்கு முன் போர்ப்படைகளில் சேர்ந்து பணியாற்ற உங்களுக்கு அனுமதி கிடையாது. வெள்ளை அரசு இப்போது உங்களை சேர்த்துக் கொள்கிறதா? பெரியோர்களே, இந்த வினாக்களில் எதற்குமே ஆம் என்று நீங்கள் விடை கூற இயலாது'' என்று சொல்லும் அம்பேத்கர், "உங்கள் இன்னல்கள் யாவும் ஆறாத புண்களாய் அப்படியே தொடர்கின்றனவேயன்றி அவற்றிலிருந்து இளைப்பாறுதல் ஏதும் கிடைக்கவில்லை'' என்கிறார்.

சாதிய அரசோ, காலனிய அரசோ எதுவாயினும் தலித்துகளின் நிலை ஒன்றேயெனில், இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் எதிர்த்துப் பிறிதொன்றை ஆதரிப்பது முட்டாள் தனமானதாகும். எனவேதான் தலித்துகள் இந்த இரு அமைப்புகளையும் எதிர்த்தனர். தமக்கான விடுதலைக்கும், உரிமைக்கும் தேவையான செயல்திட்டங்களிலே தனி வியூகம் அமைத்து அவர்கள் ஈடுபட்டனர். ‘சைமனே திரும்பிப்போ' என்று அன்றைக்கு காங்கிரஸ் சொன்ன போது, சைமன் குழுவை சந்தித்து தலித்துகள் சட்ட ரீதியாக அரசின் ஆட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்து நெருக்கடி தந்தன அன்றைய தலித் அமைப்புகள்.

இந்தியாவுக்கென உருவாக்கப்படும் தன்னாட்சி அதிகாரம், இங்கே ஏற்கனவே நிலவிவரும் சாதியக் கூறுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் திட்டங்களை உருவாக்கும் என்றால், அதனால் சிறிதும் பயன் இல்லை. அப்படி உருவாக்கப்படும் தன்னாட்சி, முழுமையான ஜனநாயகத் தன்மை கொண்டதாக இருக்காது. "ஒரு குடியரசு எந்த வடிவத்தை மேற்கொண்டாலும், மிகமிக ஜனநாயகத் தன்மையுடைய குடியரசுகூட, பூர்ஷ்வா குடியரசாக இருக்குமானால், நிலம், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் தனியுடைமையைப் பாதுகாக்குமானால், சமுதாயம் முழுவதையும் தனிப்பட்ட மூலதனம் கூலியடிமை நிலையில் வைக்குமானால்... அப்பொழுது இந்த அரசு என்பது, சிலர் மற்றவர்களை அடக்கி வைப்பதற்காக உள்ள எந்திரமேயாகும்'' என்கிறார் தனது அரசு பற்றிய உரையில் லெனின்.

உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என்று நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளும் இந்தியாவில், விடுதலைக்குப் பிறகான நீண்ட வருடங்களில் இன்றும் சூழல் அவ்விதமேதான் இருக்கிறது. இங்கே இன்றைக்கும் தலித்துகள் பஞ்சமி நிலம் கேட்டும், இலவச நிலம் கேட்டும் போராடுகிறார்கள். தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரிக்கை வலுவாக எழுப்பப்படுகிறது. தேர்தலிலேகூட தலித்துகள் அச்சமின்றி ஈடுபட முடியவில்லை. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி நாயினும் கீழாய் கடையராய் கிடக்கின்றனர் பல கோடி மக்கள். 240 கோடி மதிப்புள்ள சொகுசு விமானத்தை அம்பானி தன் மனைவியின் பிறந்த நாளுக்குப் பரிசாக வழங்குகின்ற இந்தியாவில்தான், ஒரு வாய் சோற்றை தன் இணைக்கும், குழந்தைகளுக்கும் அளிக்க முடியாத வறியவர்களும் இருக்கிறார்கள்.

இந்தக் கொடுமையான முரண்பாட்டை களைகின்ற எண்ணத்துடன்தான் அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோருக்கான ஜனநாயகத்தை முன்மொழிந்தார். நாடு விடுதலை பெற்றால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று அவருக்கு அப்போது கூறப்பட்டது. அவர், புதிய களம் எதிலும் காலடி எடுத்து வைக்கும் முன், அங்கே மறை குழி ஏதேனும் உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார். விடுதலைக்குப் பின் எல்லாம் சரியாகிவிடும் என்பதைப் போன்ற ஒரு பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியாவில் விடுதலைக்குப் பிறகு எதுவெல்லாம் சரியானது, எதுவெல்லாம் சரியாகவில்லை என்பதை இப்போது நாம் அறிவோம்.

கல்வி கற்ற பின் எல்லாம் சரியாகிவிடும், காதலித்தவளை/வனை கைப்பிடித்த பின் எல்லாம் சரியாகிவிடும் என்ற எளிமையான கருத்துகளிலிருந்து புரட்சிக்குப் பின் எல்லாம் சரியாகி விடும் என்ற உயர்ந்த லட்சிய முழக்கங்கள் வரையிலும், நாம் அய்யப்பட வேண்டும். அம்பேத்கர் நமக்கு அளித்திடும் தெளிவு இது. இறுதி இலக்குக்குப் பிறகு என்ன என்று கேட்பது அறிவியல் பார்பட்ட அடிப்படை வினா. வெள்ளை அரசு போய்விட்ட பிறகு வருகின்ற இந்தியர்களின் அரசில் தலித்துகளின் நிலை என்ன? என்ற வினாதான் அன்று அம்பேத்கர் உள்ளிட்ட தலித் தலைவர்களாலும், தலித் மக்களாலும் எழுப்பப்பட்டது. அக்கேள்வி இன்றுவரை பல்வேறு பிறப்புகளை எய்தி உயிர் வாழ்ந்து வருகிறது.

-வளரும்

**********

இன்று நாம் பேசத் தவறினால்
இடுகாட்டு அமைதி கவிந்து விடும்

ஒவ்வொரு குடும்பமும் கருகிப் போகும்
ஒவ்வொரு வீடும் சாம்பல் குவியலாகும்

அமைதிக்கு அப்பால் இருந்து
அவலக் குரல் மீண்டும் வரும்

இங்கு யாரும் இல்லை
யாருமே இல்லை-
யாருமே இல்லை!

நம் காலத்தின் மிக முதன்மையான கதை என்று தலைப்பிட்டு "தெகல்கா' ஆங்கில வார ஏடு, ஒரு சிறப்பு இதழை வெளியிட்டுள்ளது. ரத்தப் பிசுபிசுப்புடன் இருக்கும் அந்த வெண்ணிறத் துண்டை நாம் எடுத்துப் புரட்டுகிறோம். வெண்ணிற மனசாட்சியின் ஒரு துண்டு; அல்லது கடைசியாய் எஞ்சி இருந்த வெண்ணிற அமைதியின் மேலும் தெறித்த ரத்தம். குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலைகள். அந்த நூலில் உள்ளவை எல்லாமே அக்கொலையாளிகளின் வாக்குமூலங்கள்...

"நான்தான் கொன்றேன். ஆமாம் நான்தான் கொல்பவர்களை உற்சாகப்படுத்தினேன். நான் ஆயுதங்களை கொடுத்தேன். நான் வன்கலவியில் ஈடுபட்ட பின்னர் அப்பெண்ணைக் கொன்றேன். நான் கொன்ற பின் மகாராணா பிரதாப்பைப் போல பெருமிதமாய் உணர்ந்தேன்...''

இவ்வளவு கொடூரமான மனநிலையை மதம் உருவாக்கும் என்பதைப் பகுத்தறிய விரும்பாதவர்களுக்கு மேலும் ஓர் ஆதாரம் இது. கொன்றதையும், வன்கலவி புரிந்ததையும், எரித்ததையும், வெட்டியதையும் சற்றும் கூச்சமின்றி, குற்ற உணர்வேயற்று விவரிக்க, மதவெறியூறிய ஒரு மனிதனால் அன்றி யாரால் முடியும்? உயிருடன் உலவித் திரிந்து அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஹிட்லர் நரேந்திர மோடியுடன் எல்லோருமே கைகோத்து செய்த கூட்டுக் கொலைகள்தான் இவை. 2002 பிப்ரவரி 27 ஆம் தேதி கோத்ரா, சபர்மதி விரைவு தொடர் வண்டியில் அயோத்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர் கரசேவகர்கள். தொடர்வண்டி நிலையத்தில் வந்து நின்ற அவ்வண்டியின்

எஸ்-6 பெட்டியில் இன்றும் உறுதிப்படுத்தப்படாத காரணங்களால் தீப்பிடித்தது. 59 பேர் அச்சம்பவத்தில் இறந்தனர். இறந்தவர்களின் தனித்த அடையாளங்களோடு அது பார்க்கப்படாமல் அனைவரும் இந்துக்கள் என்று செய்திகள் கட்டவிழ்த்து பரப்பப்பட்டன. குஜராத்தில் கலவரம் பரவியது. அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் ரத்த வெறியுடன் விலங்குகள் நடத்திய வேட்டையை உலகமே கண்டது. 2000 பேர் கொல்லப்பட்டனர். இக்கொலைகளில் நேரடியாகப் பங்கேற்றவர்கள், உதவி செய்தவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள், திட்டத்தை உருவாக்கிக் கொடுத்த அனைவருமே இந்து வெறியர்கள் அல்லர். காவல் துறை, அரசு நிர்வாகம், நீதித் துறை, பொது மக்கள் என்று பிறரும் இருந்தனர். பா.ஜ.க., பஜ்ரங்தள் போன்ற இந்து வெறி அமைப்புகளோடு சில இடங்களில் வேறு சில அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் கைகோத்துக் கொண்டனர். இதை ஒருவரின் வாக்குமூலம் சொல்கிறது.

நடுக்கமுடன்தான் இந்த வாக்குமூலங்களை நம்மால் படிக்க முடியும். எல்லா கொலைகளுமே அரசியல் உள்நோக்கத்தை கொண்டவை. இந்து மதவெறி அரசியல். அதைத் தூண்டி அதிகாரத்தில் இருக்க நினைப்பவர்களின் அரசியல். சனாதன தருமத்தின் அரசியல். நவீன இந்தியாவில் நடந்தேறிய மனிதகுலம் வெட்கப்படக் கூடிய எல்லா மத வன்முறைகளும், மதக் கருத்தியல்களின் முரண்பாடுகளை காரணமாகக் கொண்டு உருவாகவில்லை. மலிவு அரசியலுக்கே நடந்துள்ளன. மேலும் இக்கொலைகள், குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்குள்தான் நடக்கின்றன. அக்காலங்களில் இந்துத்துவ தொய்வோ, எழுச்சியோ, புதுப்பிப்போ நடந்திருக்கிறது. எல்லா வன்முறைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். 1980 இல் மொராதாபாத்தில் நடந்த கலவரத்தில் 1500லிருந்து 2000 பேர். 1981இல் பிகார்சரீப்பில் 80 பேர். 1984 இல் டெல்லியில் சீக்கியருக்கு எதிரான வன்முறையில் 3000 பேர். 1987 இல் மீரட்டில் நடந்த வன்முறையில் 350 பேர். 1989 இல் பாகல்பூரில் 1000 பேர். 1992 இல் மும்பையில் 1,788 பேர். 2002 இல் அகமதாபாத்தில் 2000 பேர் ("இந்தியா டுடே', நவம்பர் 2007).

இந்தப் படுகொலைகள் நடந்தபோதும் நடக்கிறபோதும் நாம் எப்போதுமே பார்வையாளர்களாகவே இருக்கப் பழகிவிட்டிருக்கிறோம். இரண்டாம் உலகப் போரின்போது சிதைக்கப்பட்ட மனித குலத்தை நினைத்து, இனி கவிதை செத்துவிட்டது என்றார்கள். இந்தக் கொலையாளிகளின் வாக்குமூலங்களைப் படிக்கிறபோது அப்படிதான் தோன்றுகிறது. இனி மெல்லிய சொற்களுக்கு இடமில்லை. செயலுக்கு மட்டும்தான் மதிப்பிருக்கும். இந்தக் கொடூரத்தையும் வன்முறையையும் ஆழமாக உணர்கிறவர், நான் இந்தியாவில் இருப்பவன் என்பதை வெட்கமின்றிச் சொல்வதற்கு இனிமேல் பழகிக் கொள்ள வேண்டும்.

ரத்தம் ...
யாருடையதாக வேண்டுமானாலும் இருக்கட்டும்
நம்முடையதோ அவர்களுடையதோ
மானுடம் குருதி வடிக்கிறது.

கிழக்கிலோ மேற்கிலோ
யுத்தம் எங்கு நடந்தாலும் அமைதி காக்கும் பூமி
குருதி சிந்துகிறது.

குண்டுகள் எங்கு விழுந்தபோதும்-
வீடுகள் மீதாயினும் எல்லையின் மீதாயினும்
கட்டமைக்கும் ஆன்மா காயம் படுகிறது.

வயல்கள் கருக்கப் பட்டால்
நம்முடைய வயலானாலும் சரி-
அயலவர் வயலானாலும் சரி
பஞ்சத்தால் வாழ்வு பாதிக்கப்படுகிறது.

பீரங்கி வண்டிகள்
முன்னேறினால் என்ன? பின்னேறினால் என்ன?
பூமித் தாயின் கருப்பை மலடாக்கப்படுகிறது.

வெற்றியின் பூரிப்பானால் என்ன?
தோல்வின் சோக கீதமானால் என்ன?
உயிரோடு இருப்பவர்கள்தான்
சுமக்க வேண்டும் பிணங்களை.

எனவே தான், ஓ ... நாகரீக மாந்தரே
யுத்தங்கள் ஒத்தி போடப்படுவதே
நன்மை பயக்கும்.
உங்கள் வீட்டிலும் சரி, எங்கள் வீட்டிலும் சரி,
தீபங்கள் தொடர்ந்து ஒளி விடட்டும்.

-இரண்டு கவிதைகளும் புதுவை ஞானம் அவர்களால் மொழி மாற்றம் செய்யப்பட்டவை. "நேர்' இதழில் வெளியானவை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com