Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
நவம்பர் 2007
பாபாசாகேப் பேசுகிறார்

பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறுவதால் சுரண்டல் முடிவுக்கு வந்து விடுமா? - VII


Ambedkar மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். திரண்டிருக்கும் தொழிலாளர் வர்க்கம் அரசியலே வேண்டாம் என்று சபதம் எடுத்துக் கொள்வதால், அந்த வர்க்கமே அழிந்து போகும் என்றுதான் சொல்வேன். நாம் இதுவரை சமூக சீர்திருத்தத்தை நோக்கியே நமது முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அவற்றைப் பொருளாதாரச் சீர்திருத்தம் நோக்கியும் செலுத்த வேண்டிய அவசியத்தை நாம் மறந்திருந்தோம் அல்லது அரைகுறையாகக் கருத்தில் கொண்டிருந்தோம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். நாம் அனுபவித்த எல்லா கொடுமைகளுக்கும் மூல காரணம் பொதுவானது. நம்மீது சமூக, பொருளாதார ஆதிக்கம் செலுத்துபவர்கள் நமக்குச் சொந்தமான, நம் கையில் இருக்க வேண்டிய அரசியல் அதிகாரத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டதுதான் அந்த மூல காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியலுக்கு வருவெதன்றால் கட்சி அமைத்துக் கொள்வது என்று பொருள். கட்சிப் பின்னணி இல்லாத அரசியல் வீண் வேலை. சுயேச்சையாக இருப்பேன் என்று சில அரசியல்வாதிகள் சொல்லலாம். அவர்கள் தங்கள் நிலத்தை தனிமையில் உழுது கொண்டு இருக்க வேண்டியதுதான். அத்தகைய அரசியல்வாதிகளை நான் எப்போதுமே நம்புவது இல்லை. யாரோடும் சேர முடியாத ஓர் அரசியல்வாதி, எந்தப் பயன் நடைமுறை நோக்கத்துக்கும் பயன்பட மாட்டான். அவனால் எதையும் சாதிக்க முடியாது. அவனுடைய நிலத்தில் ஒரு புல்கூட முளைக்காது. பெரும்பாலான அரசியல்வாதிகள் சுயேச்சையாக இருக்க நினைப்பது, அவர்களுடைய அறிவு நேர்மையால் அல்ல; தங்களுக்கு அதிக விலை நிர்ணயித்துக் கொண்டு, தங்களைத் தாங்களே விற்றுக் கொள்வதற்காகத்தான். இதற்காகத்தான் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் சுதந்திரமாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அரசியலில் சுயேச்சை பற்றிய என் மதிப்பீடும், அனுபவமும் இதுதான்; கட்சியில்லாமல் அர்த்தமுள்ள அரசியல் நடத்த முடியாது என்பதே என் கருத்து.

எந்தக் கட்சியில் சேருவது என்பது அடுத்த கேள்வி. எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. காங்கிரசில் சேரலாமா? அப்படிச் சேர்ந்தால் தொழிலாளி வர்க்கத்துக்கு உதவிகரமாக இருக்க முடியுமா? காங்கிரஸ் அல்லாத ஒரு தனி அமைப்பு, சுதந்திரமான அரசியல் அமைப்பு தொழிலாளர்களுக்குத் தேவை. இக்கருத்தைத் தொழிலாளர் தலைவர்கள் சிலர் எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் என்பவர்கள், சோஷலிஸ்டுக்கான தொழிலாளர்கள் ஓர் அமைப்பாகத் திரள வேண்டும் என்னும் கருத்துடையவர்கள். அந்தத் தொழிலாளர் அமைப்பு காங்கிரசுக்குள்ளேயே செயல்படலாம் என்று அவர்கள் நினைக்கலாம். அதே போல் இன்னொரு பிரிவு, தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்கிறது. அவர்களின் பிரதிநிதி திரு. ராய் அவர்களின் கருத்துப்படி, காங்கிரசுக்குள்ளேயும் சரி வெளியிலேயும் சரி, சொந்தமாகத் தனி அமைப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பவர்கள் அவர்கள். இந்த இரண்டு பிரிவினரோடும் நாம் முற்றாக மாறுபட வேண்டும் எனக் கருதுகிறேன்.

நிறைய பேருக்கு திரு. ராய் ஒரு புதிர். எனக்கும் அப்படித்தான். ஒரு கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் தொழிலாளர்களுக்குத் தனி அரசியல் அமைப்பு இருக்கக் கூடாது என்கிறார்! எத்தகைய மோசமான முரண்பாடு இது! இந்தக் கருத்து நிலையை கேள்விப்பட்டால், கல்லறையில் இருக்கும் லெனின்கூட புரண்டு படுப்பார். இந்திய அரசியலின் முழு முதல் நோக்கம், ஏகாதிபத்தியத்தை ஒழிப்பது என்று சொல்லும் ராய் – இப்படி ஒரு கருத்து நிலைக்கு எப்படிதான் நியாயம் கற்பிப்பாரோ? அவரது கருத்தில் எந்தப் பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏகாதிபத்தியம் மறைந்தால், இந்திய முதலாளித்துவமும் அடையாளம் தெரியாமல் நொறுங்கிவிடும் என்பதை நிரூபித்தால், ராயின் கருத்தை நாம் ஏற்க முடியும். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டுப் போய் விடுகிறார்கள் என்றாலும் இங்கிருக்கும் நிலப்பிரபுக்களும், ஆலை முதலாளிகளும் வட்டி வணிகர்களும் மக்களைச் சுரண்டுவது நின்று விடவா போகிறது? இந்த அடிப்படை எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள பெரிய புத்திசாலித்தனம் தேவையில்லை. வெள்ளைக்காரன் போன பிறகும் தொழிலாளி தன்னுடைய நலன்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடித்தான் தீர வேண்டும். அதற்காக அவன் அமைப்பு அடிப்படையில் திரள்வது அவசியத்திலும் அவசியம். காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் இதைப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

ஏகாதிபத்தியத்தைப் போலவே முதலாளித்துவத்தோடும் போரிட வேண்டும். அதற்காக ஒன்று திரள வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்படித் திரளும் தொழிலாளர் அமைப்பு, காங்கிரசின் உள் அமைப்பாகத்தான் இயங்க வேண்டும் என்னும் நிபந்தனையை யும் அவர்கள் விதிக்கிறார்கள். காங்கிரசுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான இந்தக் கட்டாயக் கூட்டணியின் அவசியம்தான் எனக்குப் புரியவில்லை.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:182)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com