Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
நவம்பர் 2005

தலித் இலக்கியம்: அழித்தலில் இருந்து திமிறி எழுதல் வரை

இந்தியாவின் இலக்கிய வரலாறும், கொள்கை கோட்பாடுகளும் அதன் படிப்பினைகளும், தலித் இலக்கியங்களைப் பற்றிப் பேசும்போது, ஒரு தனித்தன்மையான அணுகுமுறையில் அமைதி காக்கின்றன. இருப்பினும், தலித் இலக்கியப் பண்பாட்டுப் பதிவுகளும் அதன் செயல்பாடுகளும் இந்திய சமூகம், வரலாறு மற்றும் இலக்கியத் தளத்திலும், எழுத்துகளிலும் ஒரு திறனாய்வு மதிப்பீட்டுடன் குறுக்கீடு செய்துள்ளன. மகாத்மா ஜோதிபா புலேயின் ஆழ்ந்த தாக்கங்களைப் பெற்ற பாபாசாகேப் அம்பேத்கர், இந்திய அடையாளத்தின் ஆதிக்க, சாதிய அமைப்புகள் மீது பல கேள்விகளை எழுப்புகிறார். இந்திய வரலாறு, புராணங்கள், இந்து மதத்தின் புனித நூல்களாகக் கருதப்படுகின்றவை அனைத்தையும் படித்து, ஆய்வுக்குட்படுத்தி அதன் பிறகுதான் தலித்துகளுக்கு ஒரு தனி அடையாளம் தேவை என விவாதிக்கிறார்.

Sharankumar Limbale அம்பேத்கருக்குப் பிறகு எழுச்சி அடைந்த இளம் தலித் தலைமுறையினர், தங்களின் அரசியல் செயல்பாடுகளுக்கும், அமைப்புகளை உருவாக்குவதற்கும், எழுத்துகள் மூலம் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் அம்பேத்கரின் நூல்கள் பெரிதும் உதவின. சரண்குமார் லிம்பாலேவும் அம்பேத்கரின் எழுத்துகளால் எரியூட்டப்பட்டவர். அவரைப் போன்ற பல தலித் எழுத்தாளர்கள், தலித் மக்களின் உண்மையான வாழ்வியலையும் அவற்றின் அனுபவங்களையும் நூல்களாகப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய சுதந்திர இயக்கத்தின் செயல்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோதும் அல்லது அதற்குப் பின்பும் அன்றைய நடுத்தர தேசியவாதிகளும், மார்க்சியவாதிகளும், தலித் தலைவர்களை காலனியாதிக்க ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் என்றும், அம்பேத்கரை ஆங்கிலேயரின் கைக்கூலி என்றும் கடுமையாக விமர்சித்தார்கள். 1970 களில் எஸ்.ஜி. சர்தேசாய் என்கிற பொதுவுடைமை இயக்கத் தலைவர், சாதியக் கட்டமைப்பை மீளாய்வு செய்தார். அவ்வாறு மீளாய்வு செய்யும்போது, தலித்துகள் தங்கள் நிலையிலிருந்து மாற்றத்தை நோக்கிச் செல்வதை, சாதி இந்துக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை மிக நுட்பமாகப் பதிவு செய்தார்.

...தலித்துகளின் விடுதலைக்குப் பல தோழமை அமைப்புகளின் ஆதரவு தேவை என்பதை அம்பேத்கர் உணர்ந்திருந்தார். சுரண்டல் தன்மை கொண்ட, தீண்டத்தக்கத் தொழிலாளர் கூட்டம்தான் தலித்துகளுக்கேற்ற தோழமைக் கூட்டாளிகள் என்பதையும் உணர்ந்திருந்தார். இந்த இருபிரிவுகளுக்கிடையே ஒரு பிணைப்பையும், அமைப்பையும் உருவாக்க முயன்றார். அதே சமயத்தில் நம் மூச்சைத் திணறடிக்கின்ற சாதிய, இந்து சமூக அமைப்புக்கு எதிராக ஆழ்ந்த கசப்புணர்ச்சி கொண்டிருந்தார் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. அவர், சாதி இந்துக்களை மிகக் கடுமையாகச் சாடுகிறார். குறிப்பாக, மக்கள் போராட்டங்களில் சாதி இந்துக்களுக்கு எதிராக தீண்டத்தகாதவர்களை எழுச்சியுறச் செய்கிறார். அதே போன்று, ஒரு தேசியவாதியாகவும் அவர் எழுந்து நிற்கிறார். ஆங்கிலேயரின் கைக்கூலியாகத் தன்னை ஒருபோதும் அவர் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் ஆங்கிலேயர்களை ஒரு மூன்றாவது அணியாகவும், சாதி இந்துக்களுக்கு எதிரான ஆதரவாளர்களாகவும் பார்த்தார். சாதி இந்துக்களின் மேலாதிக்கத்துக்கு எதிராக சில உதவிகள் கிடைக்கும் என்றும் நம்பினார். இந்த எண்ணம் அம்பேத்கருக்கு மட்டுமல்ல, அவரைப் போன்ற தீண்டத்தகாத மற்றும் சூத்திரத் தலைவர்களிடம் இருந்தது.

தொடக்க கால மராட்டிய இலக்கியங்கள், தலித்துகளை அழிக்க முயன்றது. மறைக்க முயன்றது. ஆனால், தற்கால நவீன படைப்பில் தலித்துகளை ஒரு கட்டுக்குள் வைக்க முயல்கிறது. இந்தத் தீண்டத்தகாத ‘பிறன்' என்பவர், இப்போது வெளியே, அனைவர் கண்ணுக்கும் தெரிகிறார். ஆனால், இரக்கம் அனுதாபம் என்கிற பின்புலத்தோடுதான் இப்போது அவர் கண்ணுக்குத் தெரிகிறார். வாய்திறந்து பேசும்போது தெரிவதில்லை. லிம்பாலே கூறுவதுபோல, அவர்கள் தன் அடையாளம் பெற்ற மக்களாகக் காட்டப்படுவதில்லை. அவர்களை இரக்கத்திற்குரியவர்களாக, பரிதாபத்திற்குரியவர்களாகக் காட்டுவதுதான் தொடர்கிறது.

இந்து சமூகம் எப்படி அடித்தட்டு தலித்தை உருவாக்கி, அவரை ‘பிறன்' என்பவராக ஆக்கியுள்ளது என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். தலித்தின் தன்மைக்கும், தலித்தின் நிலைக்கும் இணையான தன்மையை, நிலையை வேறெங்கும் காண முடியாது. பல ஒற்றுமைகள் இருந்தாலும் இணை என்பது எங்குமில்லை. தலித் உணர்வு நிலையை லிம்பாலே ஒரு அடிமையின் நிலையோடு ஒப்பிடுகிறார். மற்ற தலித் எழுத்தாளர்கள் தலித் உணர்வுநிலையை ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் நிலையோடும், பெண்களின் நிலையோடும் ஒப்பிடுகின்றனர். சர்தேசாய் போன்ற பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள், வர்க்கப் போராட்டத்திற்கும் சாதிப் போராட்டத்திற்கும் இடையே தொடர்பு வேண்டும் என்கின்றனர். தலித் தலைவர்கள் இதனை மறுத்து, வெறுத்தனர். இதனால் கண்டனத்திற்குள்ளாயினர். இக்கண்டனத்திற்கு எதிர்வினையாக லிம்பாலே, தலித் என்பதற்கு பொருள் விளக்கம் கொடுக்கிறார். இவ்விளக்கம், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, உடைமை - உரிமைகள் பறிக்கப்பட்ட எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு பரந்த பார்வை கொண்ட விளக்கமாகும்.

தலித் இலக்கியங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சவால் என்னவென்றால், தலித் தன்மையின் தனித்துவமான அனுபவங்களை அச்சு மாறாமல் அப்படியே பதிவு செய்வதுதான். இது ஒரு வகையில் முதல்படியான ஊமை இலக்கியங்களை வெளிக்கொணர்ந்துள்ளது. தலித் இலக்கியங்களின் பெரும்பகுதியானது, ஒவ்வொரு தலித்தைப் பற்றிய வாழ்க்கைப் பதிவாக இருக்கின்றது. மற்றவைகளைவிட, தலித்துகளின் தன்வரலாற்று அனுபவங்களே பெருமளவு இடத்தைப் பூர்த்தி செய்து நிற்கின்றது. கற்பனை சார்ந்த எழுத்துகளில்கூட, தலித்துகளின் வாழ்க்கை வரலாறும், தன் வரலாறும்தான் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தானாக எடுத்து இயம்புகின்ற முறையானது, தலித் அனுபவங்களை மாறாமல் எடுத்துக்கூறும் ஒரு முயற்சியாகும்.

தலித்துகளின் வாழ்க்கை, கவிதை மற்றும் கற்பனைப் படைப்புகளில் வெளிப்படும் அனுபவங்கள் எதையும் மறைப்பதில்லை. கற்பனையைப் புனைந்தும் படைப்பதில்லை. இப்படைப்புகளில் உயிர் வாழ்கின்ற மக்கள் கருணையை, இரக்கத்தைத் தேடி நிற்கும் பாத்திரங்கள் அல்ல. இவர்களின் வாழ்வு பரிதாபமானது. அவமானத்தைத் தரக்கூடியது. தாங்கள் தீட்டானவர்கள், அசுத்தமானவர்கள் என்பதை நாள்தோறும் நினைவுபடுத்தக்கூடியது. சட்டங்களை மீறி குற்றங்களைச் சுமக்கும் தன்மை கொண்டது. சாதி இந்துக்களின் மேலாதிக்கப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், இவர்களின் வாழ்விலும் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளன. தலித் இலக்கியங்களில் இவை எல்லாம் கற்பனைகளால் அழகுபடுத்தப்படாமலும், நியாயப்படுத்தப்படாமலும் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற பதிவுகளின் மூலம் தலித்துகள், தங்களின் கொடுமைகளை எடுத்துக்கூறி, தங்களைப் பற்றித் தாங்களே இரக்கப்பட்டுக் கொள்கிறார்கள் என்பதை வெளிக்காட்டவில்லை. இயங்க முடியாத அவல நிலையை எடுத்துக்கூறி வருத்தப்படவில்லை. தலித்துகளிடம் இதுபோன்ற காரணங்கள் இருப்பதால், சாதி இந்துக்களின் இலக்கியங்கள் இதைப் பதிவு செய்யாமல் தங்கள் பார்வையைப் பதிவு செய்துள்ளன.

இவ்விலக்கியங்களில் நிறைந்து காணப்படுகின்ற தலித்துகள் நற்பண்புகளின் உச்சாணிக் குன்றுகளல்ல. ஆனால், அவர்களிடம் உயிர், வாழ்க்கை, போராட்டம், வெற்றி ஆகியவை உள்ளன. அவர்களிடம் இருக்கின்ற தலித் தன்மை மறைவதில்லை. இந்தச் சிக்கல் நிறைந்த பதிவுகள்தான் தலித்துகளின் உண்மையான அனுபவமாக இருக்கின்றது. தலித் இலக்கியங்கள் வரலாறு இல்லாதவை அல்ல. அதற்கென வரலாறு உண்டு. காலம், இடம், சூழல் ஆகியவற்றுக்கு உட்பட்டது. நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போல, தலித் அனுபவங்களின் வரலாற்றுப் படிமம், தலித் எழுத்துப் பதிவுகளும் பிற இலக்கியங்களைச் சுட்டுவதிலிருந்து வெளிப்படுகின்றன. தலித்துகள் தங்கள் வரலாற்றில் பயன்படுத்துகின்ற புராண, இதிகாச கதாபாத்திரங்களை சாதி இந்துக்களின் இலக்கியச் சிறையிலிருந்தும், பேய்த்தனமான உடும்புப் பிடியிலிருந்தும் தங்களை விடுவித்துக் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைக்கப் பயன்படுத்துகின்றனர்.

தலித் இலக்கியங்கள் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் லிம்பாலே. இந்தக் குறிக்கோள்கள் புரட்சிகரமானது. மாற்றங்களை உருவாக்கக்கூடியது. விடுதலை கொடுப்பது என வர்ணிக்கின்றார். குறிப்பாக, தலித் இலக்கியம் பார்ப்பனிய இலக்கியத்தை எவ்வாறு தடை செய்கின்றது என்பதை நிறுவுகின்றார். அவ்வாறு நிறுவுவதற்கு சில காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றார். பார்ப்பனிய இலக்கியம் மிகத் தொன்மை வாய்ந்த இந்திய அழகியல் தத்துவங்களைப் பின்பற்றவில்லை என்கிறார். கலை இலக்கியம் என்பது இரக்கம், அன்பு, பயம், கோபம் ஆகிய உணர்வுகளைத் தூண்ட வேண்டும். ஆனால், தலித் இலக்கியம் கடந்த காலங்களில் பக்தி இலக்கியங்களின் மறு உலக சிந்தனைகள், நடுத்தர சிற்றுடைமை வர்க்கத்தினரின் ஆசைகள், ஆகியவற்றில் பங்கேற்பதில்லை. கடைசியாக, தலித் இலக்கியங்கள் இன்ப உணர்ச்சிகளையோ, மென்மை உணர்வுகளையோ, அல்லது தன்னைத்தானே வெறுத்து இரக்கம் கொள்கிற உணர்வுகளையோ கொடுப்பதில்லை.

தலித் இலக்கியங்கள் புரட்சிகரமானது. மாற்றம் உண்டாக்கக் கூடியது என்கிற நிலையை அடைகிறது என்றால், இதனைப் படைத்த எல்லா தலித் எழுத்தாளர்களும் முற்போக்குச் சிந்தனையாளர்களோ, சமத்துவ சமூகப் பார்வை உடையவர்களோ, அல்லது மார்க்சியவாதிகள் என்பதாலோ அல்ல. இந்த இலக்கியங்கள் எல்லாம் தலித்துகளின் அவலநிலையை மாற்ற உதவுவதாலும், சாதி அமைப்புக்கு எதிராக சவால்விட்டுச் செயல்படுவதாலும், இதனைத் தீவிரவாத இலக்கியங்கள் என்றும் சொல்லலாம். அதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட இலக்கியங்கள். இந்த தீவிரவாதத்தின் மூலாம்பர ஊற்றாக பாபாசாகேப் அம்பேத்கரின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் அமைந்துள்ளன.

தலித்துகளின் உண்மை நிகழ்வுகளை, அன்றாட வாழ்வியலை அப்படியே, அப்பட்டமாகப் பதிவு செய்வதால், தலித் இலக்கியம் தீவிரச் செயல்பாடு கொண்டிருக்கின்றது என்று லிம்பாலே கூறுகிறார். இவ்வாறு படைப்பதன் மூலம் தீண்டத்தகாத ‘பிறன்' என்பவர், சாதி அமைப்பை அத்துமீறி உரக்கக் குரல் எழுப்புகிறார். அவ்வாறு குரல் எழுப்புவதன் மூலம் ஆதிக்கச் சாதியினரின் தூய்மையையும், சுத்தத்தையும் அழிக்கிறார். இனி தலித்துகளை கண்ணுக்குத் தெரியாமல் எங்கேயும் மறைக்க முடியாது என்கிற கருத்தானது, ஏற்கனவே தீட்டுப்படாமல், அசுத்தப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகின்ற சாதி இந்துக்களின் அனைத்து இடங்களையும் தீட்டுப்பட வைத்தது. அந்த வெற்றிடங்களில் தன் மக்களைக் கொண்டு நிரப்பியது. ஆதிக்கச் சாதியினரின் இடங்களில் உள்ளவர்களின் உண்மை நிலையை நேருக்கு நேர் சந்திக்க வைத்தது. இது ஒருவிதமான எதிர்க் கூட்டமைப்புச் செயல்பாடாகும்.

Sharankumar Limbale's book on Dalith literature செயற்கையாக வடிவமைக்கப்பட்ட வரலாற்றுச் செய்முறைகளையும், சாதியச் சமூக அமைப்பை சட்ட அடிப்படையில் நியாயப்படுத்துகின்ற முயற்சிகளையும் தலித் எழுத்தாளர்களின் அனுபவங்களால் படைக்கப்படுகின்ற ஒரு புரட்சிகர சமூகத்தின் சாயல் இது. இதன் மறுபக்கம் முற்றிலும் மாறுபட்டது. மிகவும் முக்கியமானது. அதாவது, தலித்துகளின் முழுமையான மனிதத் தன்மையை நிலைநாட்டுகின்ற செயலாகும். இந்த இலக்கியங்கள் தலித்துகளின் தன் அடையாளம், தனக்குரியத் தன்மை, வரலாறு ஆகியவற்றை வலியுறுத்துகின்றது. இவர்கள் செயல்வீரர்களோ, நடிகர்களோ அல்ல. தாராள சீர்திருத்த எண்ணம் கொண்ட ஆதிக்கச் சாதி எழுத்தாளர்கள் படைத்த போலிகள் அல்ல. ஆதிக்கச் சமூகத்தின் உதவியை நாடி நிற்கின்ற, அவர்களின் இரக்கத்தைச் சார்ந்து நிற்கின்ற கோழைகள் அல்ல. தனக்கென வரலாறு இல்லாத அனாதைகள் அல்ல.

அரக்கர்களாக சித்திரிக்கப்பட்ட ராவணனோ, பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட அங்குலி மாலாவோ, கட்டைவிரல் வெட்டப்பட்ட ஏகலைவனோ, சூர்ப்பனகையோ அல்ல. தங்கள் வரலாற்றைத் தாங்களே கட்டமைக்கின்ற வரலாற்றின் நாயகர்கள். தாங்கள் மீட்டுருவாக்குகின்ற, கட்டமைக்கின்ற வரலாற்றில் இருந்து நம்பிக்கையையும், மானுடத்தை அழுத்திக் கூறும் உரிமையையும் பெறுகிறார்கள். இந்த அணுகுமுறைகளில் பார்க்கும்போது, தலித் இலக்கியத்தின் மய்யக்கரு தென்படுகின்றது.

தலித் இலக்கியங்களைப் பற்றி இடதுசாரி இலக்கிய மதிப்பீட்டாளர்களும், மிகவும் முற்போக்கான இடதுசாரிகளும்கூட எதுவும் பேசுவதில்லை. பேசாமல் அமைதியாக இருந்தே சாதிக்கிறார்கள். பெரும்பான்மையான தலித் இலக்கியங்கள் ஆங்கில மொழியில் கிடைப்பதில்லை. பல தலித் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அவரவர் தாய் மொழியில் எழுதியிருக்கிறார்கள். தற்போதுதான் சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில் தலித் இலக்கியங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு முக்கியக் காரணம் உண்டு.

இந்த படைப்புகள் அனைத்தும் இரட்டைப் பிரிவுக்குள் அடங்குவதில்லை. அது மட்டுமல்ல, பிரச்சனைகளை சிக்கலுக்குள்ளாக்குகின்றன. ஓர் அடிமைப்படுத்தப்பட்ட சமூகம், சுதந்திரத்துக்கு முன்பு ஒரே நேரத்தில் எப்படி அடிமைப்படுத்துகின்ற சமூகமாக இருக்க முடியும்? அது எப்படி சுதந்திரத்திற்குப் பின்னும் தொடர்ந்து இருக்க முடியும்? கடைசியாக, இதில் இன்னொரு சிக்கலும் உண்டு. கருத்தியல் அடிப்படையில் தலித் எழுத்தாளர்களை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குள் அடக்க முடியாது. அவர்களின் படைப்புகளில் தலித் என்பவர் மய்யக் கருவாகச் சுழலுவதால், தலித் எதிர்நோக்குதலைப் பலவீனப்படுத்துகிற எல்லா முயற்சிகளையும் மிக வன்மையாக எதிர்க்கிறார்கள். தலித் எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும்கூட அதன் மய்யமாக இருக்கிறார்கள்.

தலித் இலக்கியங்களைத் தள்ளி வைப்பதன் மூலம் தலித் அல்லாதவர்களுக்குத் தேவையான சித்தாந்தங்களை உருவாக்கவும், காலனியாதிக்கத்துக்குப் பிந்தைய காலத்தின் அடிப்படையில் கருத்துகளைத் தோற்றுவிக்கவும் காரணிகள் உருவாகலாம். ஆனால், இந்தத் தள்ளிவைப்பு அல்லது புறக்கணிப்பு என்பது நீடிக்கும் வரை அவர்கள் உருவாக்குகின்ற சித்தாந்தங்களும், கருத்துகளும் முழுமை பெறாத ஒரு அரைகுறைதான். இந்த இந்தியாவைப் போல!

சரண்குமார் லிம்பாலே, மகாராட்டிராவின் புகழ்பெற்ற தலித் எழுத்தாளர். அவருடைய 23 ஆவது நூல் Towards an Aesthetic of Dalit LIterature. இந்நூலை, தமிழில் ‘தலித் இலக்கியம்: விடுதலையின் திசைகள்' என்ற தலைப்பில் ‘புத்தா வெளியீட்டகம்' விரைவில் வெளியிட இருக்கிறது. இந்நூலை அறிமுகப்படுத்தி கனடாவின் ‘யார்க் பல்கலை' மானுடவியல் பேராசிரியர் அலோக் கர்ஜி எழுதியவற்றில் இருந்து சில பகுதிகளை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளோம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com