Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=மே 2008

பாபாசாகேப் பேசுகிறார்

வெளியுறவுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது - III

Ambedkar இந்தியாவில் உள்ள பட்டியல் சாதியினர் போல் கடும் வேதனைக்கு ஆட்படும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா என்று நான் ஆச்சரியத்துடன் நோக்கினேன். வேறு எவரையும் நான் காண முடியவில்லை. இருந்தும் கூட பட்டியல் சாதியினருக்கு உதவிகள் எதுவும் ஏன் வழங்கப்படவில்லை? முஸ்லிம்களைப் பாதுகாப்பது குறித்து அரசு காட்டிவரும் அக்கறையை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பிரதமரின் முழு நேரமும் கவனமும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எங்கெல்லாம் எவ்வெப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தில் நான் யாருக்கும், பிரதமருக்கும் கூடப் பின்தங்கியவனில்லை.

ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில், பாதுகாப்பு தேவைப்படும் ஒரே பிரிவு மக்கள் முஸ்லிம்கள் மட்டும் தானா? பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இந்தியக் கிறித்துவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தேவை இல்லையா? இந்த சமூகங்களைக் காக்க பிரதமர் எத்தகைய அக்கறையைக் காட்டினார்? இதுவரை நான் எதையும் காணவில்லை. உண்மையில் முஸ்லிம்களைவிடக் கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மக்கள் இவர்களேயாவர்.

அரசாங்கத்தினால் பட்டியல் சாதியினர் புறக்கணிக்கப்படுவது குறித்து எனது கடுஞ்சினத்தை, உள்ளக் கொதிப்பை என் மனதிற்குள்ளேயே அடக்கி வைக்க என்னால் முடியவில்லை. பட்டியல் சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றில் எனது உணர்வுகளை வெளிப்படையாகக் கூறினேன். அவர்களுக்கு 12.5 சதவிகிதப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த சட்டத்தினால், பட்டியல் சாதியினர் பலனடையவில்லை என்ற எனது குற்றச்சாட்டு உண்மையா என மாண்புமிகு உள்துறை அமைச்சர் கேட்டார். அக்கேள்விக்கான பதிலில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் எனது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளில் அண்மையில் பட்டியல் சாதியினரின் பிரதிநிதிகள் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று, இந்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதற்கு பல துறைகள் ‘இல்லை' என்ற பதிலை அனுப்பியது என்று என்னிடம் கூறப்பட்டது.

எனக்குக் கிடைத்த தகவல் சரியாக இருக்குமேயானால், மாண்புமிகு உள்துறை அமைச்சர் கொடுத்த பதில் குறித்து நான் எந்தவிதக் கருத்தையும் கூறத் தேவையில்லை. எந்த மக்களிடையே நான் பிறந்தேனோ அந்த பட்டியல் சாதியினரின் மேம்பட்ட நிலைக்காக, சிறுவயது முதலே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். என் மனதில் வேறு எந்த உணர்வுகளும் இல்லை என்பதல்ல; எனது சொந்த நலன்களை மட்டும் நான் கருத்தில் கொண்டிருந்திருப்பேனேயானால், நான் விரும்பியதைப் பெற்றிருப்பேன்; காங்கிரசில் நான் சேர்ந்திருந்தால், அந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியையும் பெற்றிருப்பேன். ஆனால் நான் கூறியதுபோல, பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். எந்த நோக்கத்தை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதில் குறுகிய மனச் சிந்தனையுடன் இருப்பது நல்லது என்ற முதுமொழியை நான் பின்பற்றியிருக்கிறேன். ஆகவே, பட்டியல் சாதி மக்களின் லட்சியம் எவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதைக் காணும்போது, என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

எனது உணர்வைத் தூண்டிய மூன்றாவது விஷயம் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்ல; உண்மையில் பெரும் துன்பத்தையும் கவலையையும் கூட அது ஏற்படுத்தியது. நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் அத்துடன் இந்தியாவின் பால் பிற நாடுகள் கொண்டிருக்கும் அணுகுமுறையையும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், நம்மால் அவர்கள் கொண்டுள்ள போக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணராதிருக்க முடியாது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு சுதந்திர நாடாக நாம் வாழ்வைத் தொடங்கிய போது, எந்நாடும் நமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. உலகின் ஒவ்வொரு நாடும் நமது நண்பனாகத் தான் இருந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னர் இன்றோ நமது நண்பர்கள் அனைவரும் நம்மை கைவிட்டுவிட்டனர். நமக்கென நண்பர்கள் யாரும் இல்லை. நாமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டோம்; தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருக்கிறோம். அய்க்கிய நாடுகள் அவையில் நமது தீர்மானங்களை ஆதரிக்க எவரும் இல்லை.

நமது வெளியுறவுத் துறை கொள்கையை நினைக்கும் போது பிஸ்மார்க்கும் பெர்னார்ட் ஷாவும் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். "அரசியல் என்பது லட்சியத்தை அடைவதற்கான பந்தய ஆட்டமல்ல; மாறாக அரசியல் என்பது சாத்தியக் கூறுகளை எய்தும் பந்தய ஆட்டமாகும்'' என்று பிஸ்மார்க் கூறியுள்ளார். "நல்ல குறிக்கோள்கள் சிறந்தவைதான். ஆனால் அவை மிகவும் நல்லவையாக இருப்பது, பல நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது' என்று அண்மையில் பெர்னார்ட் ஷா கூறினார். உலகின் இரு பெரும் மேதைகள் கூறிய இந்த விவேகமிக்க கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவையாக நமதுவெளியுறவுக் கொள்கை உள்ளது.

- தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1320


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com