Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
மே 2006

சமூக விடுதலை நோக்கிய பயணம்

‘எக்ஸ்ரே’ மாணிக்கம்

உலகில் எங்குமே ஒரு தொழிலை, குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் மட்டுமே செய்ய வேண்டுமென்ற கட்டாய நிலை இல்லை. ஆனால், இந்தியாவில் சில வேலைகளை சில சாதிகள் மட்டுமே கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்ற நிலையிருந்தது. கால ஓட்டத்தில் குறிப்பிட்ட சாதிகள் செய்து வந்த பல வேலைகள் மாறி, பரவலாகப் பலரும் செய்யும் நிலை வந்துள்ளது. ஆனால், காலங்கள் மாறினாலும் கிராமங்களில் செட்யூல்டு மக்கள் சுடுகாட்டு வேலையை செய்தே ஆக வேண்டும் என்ற சாதிய அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Social Justice கோயில், குளம், உணவகம் மற்றும் பொது இடங்களில் செட்யூல்டு மக்களும் மற்ற சாதியினர் போன்று சமூகச் சுதந்திர உரிமைப் பெற்றிட மதம், சமூக, அரசியல் தளங்களில் போராடியது போன்று கிராமங்களில் பிணம் மற்றும் செத்தமாடு தூக்கிப் புதைத்தல் ஆகிய வேலைகளைப் பரம்பரையாக செட்யூல்டு மக்கள் செய்தே ஆக வேண்டுமென்ற நிலையை மாற்றி, எல்லாப் பிரிவினரும் செய்யும்படியாகப் போராடிப் பொது வேலையாக்கியே தீர வேண்டும்.

கிராமத்தில், இறந்த சாதி இந்து ஒருவரை அடக்கம் செய்யும் இடுகாட்டு வேலையைச் செய்ய மறுத்திடும் செட்யூல்டு மக்களுக்கும் அவ்வூரிலுள்ள மற்ற எல்லா சாதிகளுக்கும் இடையே உயிர்ப்பலி சண்டையே ஏற்படுகிறது. விடுதலைக்குப் போராடுவோரும் மாற்றாரும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒன்றுக்கொன்று போராடிக் கொண்டிருக்கும் நிலையை மாற்றி அமைத்திட, சமூக அரசியல் தளங்களில் பிரச்சினையை மய்யமாக்கித் தீர்வு கண்டாக வேண்டும்.

மனித வாழ்முறை சுழற்சியில் பிறந்த குழந்தையை வீட்டிற்குக் கொண்டு வருவதும், இறந்த மனிதனை வீட்டை விட்டு வெளியேற்றுவதும் தொடர் நிகழ்ச்சியாகும். வெளியேற்றப்பட்ட மனிதனை வீதியில் போட முடியுமா? சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற மற்ற பெரு நகரங்களிலும் இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இடுகாட்டு அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று அடக்கம் செய்யப்படுகிறது. அவ்வேலை என்பது ஒரு சாதி சார்ந்த வேலையாய் இல்லாமல் தனி மனித வேலையாக மாறியதுடன் இன்று நகரங்களில் பல சாதியைச் சேர்ந்தவர்களும் அவ்வேலையைச் செய்வதைப் பார்க்கலாம்.
ஆனால், நகரத்தில் நகராட்சி வேலையாக இடுகாட்டு வேலை இருப்பது போன்று, கிராமத்தில் கிராம ஊராட்சி வேலையாக ஆக்கப்படாததால் மற்ற சாதிகளுக்கு செட்யூல்டு வகுப்பைச் சேர்ந்தவரே அவ்வேலையைச் செய்தாக வேண்டும். இது, இந்து மதம் வார்த்தெடுத்த கொடுமை நிறைந்த அடக்குமுறை அடிமைப்படுத்திய தீண்டாமையாகும். இந்திய அரசியல் சட்டப்படி, யாரையும் கட்டாயப்படுத்தி எந்த ஒரு வேலையையும் செய்ய வைப்பது குற்றமாகும். ஆனால், நடை முறையில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

மேற்சொன்ன தீண்டாமையை செட்யூல்டு மக்கள் ஒழிக்காதவரையில், படிப்புப் பல படித்து அந்தஸ்துள்ள ஆயிரம் பதவிகள் வகித்தாலும், அரசியல் அதிகாரப் பீடத்தில் அமர்ந்தாலும், தீண்டாமையை ஒழித்த சமூகமாய் ஆகாதவரையில், மற்றவர்கள் மத்தியில் யாருக்கும் மரியாதையில்லை. இதை உணராதவர் மனிதரில்லை. வர்ணாசிரம இந்து மதம் என்று ஆதிக்கம் பெற்றதோ அன்று, முதலில் நான்கு வர்ணமாக்கி, பின்பு பல்வேறு சாதிகளாகப் பிரித்தனர். பிறகு வர்ண அடிப்படையில் தொழில் ஏற்படுத்தியபோது அக்கோட்பாட்டை எதிர்த்துப் போராடிய இன்றைய செட்யூல்டு மக்களின் முன்னோர்களை, அன்று பார்ப்பனர்களும், அவர்களின் ‘அடைகாப்பிற்குள்' சென்ற சாதி இந்துக்களும் சேர்ந்து கொண்டு, அடக்கித் தாழ்த்தி கட்டாயமாகத் திணிக்கப்பட்ட வேலைகளில் ஒன்றுதான் சுடுகாட்டு வேலையாகும்.

தமிழக அளவில் மேற்சொன்ன வேலையிலிருந்து கிராம செட்யூல்டு மக்களை விடுவிக்க கடமையாற்றுவோரின் சிந்தனைக்கு இக்கருத்து கொண்டுவரப் பெற்ற போது, வெவ்வேறு இடங்களிலிருந்து உடன்பாட்டுச் சிந்தனையும், ஒத்திசைவு போன்ற தோற்றமுடைய எதிர்க்கருத்தும் வந்தன. அவற்றில் ஒன்று, எப்பொழுதும் பொருளாதார அடிப்படையிலேயே சிந்தித்துப் பழக்கப்பட்டவர்களின் கருத்திலிருந்து வந்த செய்தி:

“கிராமத்தில் இறந்த மனிதனையோ, மாட்டையோ அடக்கம் செய்வதற்கு வருமானம் கிடைக்கும் அல்லவா?'' என்பதாகும். அக்கருத்துடையோரின் சிந்தனையில் செட்யூல்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செய்ய மறுக்கின்றார்கள் என்றால், விருப்பப்பட்ட மற்ற சாதியாரை வருமானத்திற்காகச் செய்ய வைக்கலாமே என்ற கருத்தினை முன்வைக்காமல், பரோபகார சிந்தனை முத்திரை குத்தி, வருமானம் வருமானம் என்பதா?

வருமான அடிப்படையில் அக்கருத்தினை ஆய்வு செய்துதான் பார்ப்போம். கிராமங்களில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், எந்த ஒரு கிராமத்திலும் தினசரியோ, வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ, ஆண்டிற்கு ஒரு மு றையோகூட மனிதர்கள் இறப்பதில்லை. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மு றை ஒரு கிராமத்தில் மரணம் ஏற்படுகிறது. அதை அடக்கம் செய்யும் மனிதர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை வாழ்நாள் வருமானம் என்று சொல்வார்களேயானால், அது வடிகட்டிய வளர்ச்சி பெறாத மனநிலையையே காட்டுவதாகும்.

பொருளாதார அடிப்படையில் பொருந்தாதக் கூற்றைப் பொருத்திக் காட்டும் தந்திரக் கலையும் பொய்த்துப் போய் விடுகிறது. ஆகவே இறந்தவற்றை அடக்கம் செய்வது தவிர்க்க மு டியா பொதுச் சமூகக் கடமையாகும். அதை ஒரு சாதி மட்டும் செய்யாமல், மற்றவர்களும் செய்யும்படியான விதிமுறையை ஏற்படுத்த வேண்டும். அது எவ்வாறு?

நகரங்களில் சுடுகாட்டு வேலை என்பது நகராட்சி வேலையாக உள்ளது போன்று, கிராமங்களிலும் கிராம ஊராட்சி மன்ற வேலையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்படியானால் ஒவ்வொரு கிராமத்திற்கும் அவ்வேலையைச் செய்ய நிரந்தர மாதச் சம்பளத்தில் ஆட்கள் நியமிக்க, ஊராட்சி மன்ற நிர்வாக செலவிற்குள் முடியுமா?

ஒவ்வொரு கிராமத்திலும் மாதச் சம்பளத்தில் அவ்வேலையைச் செய்ய நியமிப்பது தேவையற்றது; அசாத்தியமானது, நடைமுறைக்கு வாராது. எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்டிற்கு ஒருமுறைகூட இறப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில், கிராமங்களில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், இறப்பு விகிதம் குறைவாக இருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் ஊருக்கு ஊர் அவ்வேலையைச் செய்ய மாத சம்பளத்தில் ஆட்கள் நியமனம் செய்யத் தேவையில்லை. ஊராட்சி மன்ற நிர்வாகச் செலவு இக்குறிப்பிட்ட வேலைக்கு மிகாமலும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் செயற்படுத்துவது எவ்வாறு?

மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓர் ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட கிராமங்கள் சுமார் பதினைந்திலிருந்து இருபது வரை இருக்கலாம். ஊராட்சி மன்றம் மூலமாக ஓர் ஊராட்சி சுடுகாட்டு வேலை செய்ய முழுநேர நிரந்தரத் தொழிலாளியாக இரண்டு நபர்களை நியமனம் செய்ய வேண்டும். இப்பொழுது அந்த வேலை என்பது செட்யூல்டு மக்கள் செய்த வேலை போய் ஊராட்சி மன்ற (அரசாங்கம்) வேலையாக மாற்றப்படுகிறது. மேற்சொன்ன வேலையை செய்ய, ஊராட்சி மன்றம் பொது அறிவிப்பு செய்து, வேலை வாய்ப்பு மனுபெற்று விருப்பப்பட்ட யார் வேண்டுமானாலும் செய்யும்படியாக நியமிக்க வேண்டும். எல்லாச் சாதியினருக்கும் அவ்வேலையாட்கள் அவ்வேலைகளைச் செய்ய வேண்டும்.

இவ்வாறாக ஒரு கிராமத்தில் ஒருவர் இறந்தாலோ, மாடு செத்தாலோ ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குத் தெரிவித்து அடக்கம் செய்ய பணம் கட்டி உத்தேசமாக, இறந்த நபருக்கு ரூபாய் அய்ம்பதும், செத்தமாட்டிற்கு ரூபாய் பத்தும் உரிய ரசீது பெற்றவுடன் ஊராட்சி மன்றத் தொழிலாளி வந்து நல்லடக்கம் செய்வார். ஊராட்சி மன்ற வேலையாட்களாக உள்ள இரண்டு நபர்களுக்கும் எல்லா நாட்களிலும் சுடுகாட்டு வேலை இருக்கப் போவதில்லை. ஆகவே, ஊராட்சிமன்ற அலுவலக வேலையை அவர்களது நிலைமைக்கு ஏற்ப வழங்கலாம்.

இவ்வாறு ஊராட்சி மன்றம் இரண்டு நபருக்கு மாதச் சம்பளம் கொடுப்பதால், சற்று செலவு ஊராட்சி மன்றத்திற்கு அதிகம் ஆகலாம் அல்லவா? அச்செலவை ஓரளவு ஈடுசெய்யும் ஒரு வழியாக ஊராட்சி மன்றத்தால் ஆண்டிற்கு ஒரு முறை ‘நற்சேவை' வரி என்று (உத்தேசமாக ரூ. 20) வீட்டுவரி வாங்கும் போது சேர்த்து வசூலிக்கலாம்.

இவ்வாறாக ஏற்பட்டால், கிராமங்கள் தோறும் செட்யூல்டு மக்கள் செய்து வந்த வேலையானது மாற்றப்படுவதால், செட்யூல்டு சமூகம் முழுவதும் தீண்டாமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட சமூகமாக மாறுதல் அடையும். இதுவரை நாம் ஆய்ந்த கருத்தின் செயலாக்கம், தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அதைச் சட்டமாக இயற்றி, ஊராட்சி மன்றங்கள் நிறைவேற்றும் போதுதான் செட்யூல்டு மக்களுக்கு விடுதலை கிடைக்கும்.

நிர்ணயித்த இலக்கை அடைய அரசியல் தீர்வு ஒன்றே வழியாகும். அத்தீர்வை வென்றடைய, தொடர் சமூக எழுச்சியும் அரசியல்வாதிகளின் ஊக்கமும் ஒன்றிணைந்து உந்து சக்தியாக செயற்பட்டால் வெற்றி நிச்சயம். இக்கருத்தினை தேர்தல் களத்தில் பிரதிபலிக்கச் செய்வது நமது கடமையன்றோ!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com