Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
மே 2006

மீள்கோணம்
அழகிய பெரியவன்

தொழிலாளர் நல அதிகாரிகளிடம், முதலாளிகள் சங்கத்திடம், முதலாளிகளிடம் பேச்சுவார்த்தைக்கென்று சலிக்காமல் நடந்திருக்கின்றார், ஜெ.ஜெ. தாஸ். கூலி உயர்வு கேட்டும், போனஸ், பஞ்சப்படி போன்ற பிற நலன்களுக்காகவும் இடையறாது போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 1943 ஆம் ஆண்டில் மாஜிஸ்ட்ரேட் தலைமையிலான குழுவிடம் பேசி, முதன் முதலாக இரண்டு ரூபாயை பஞ்சப்படியாகப் பெற்றுத் தந்திருக்கிறார் ஜெ.ஜெ. தாஸ். ­ன்று அணா என்ற அளவில் அதற்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த கூலி உயர்வு தொடர்பான உடன்படிக்கையும் அப்போது ஏற்பட்டிருக்கிறது. அவர் பெற்றுத் தந்த கூலி உயர்வுக்கு நன்றி கூறும் வகையில், தொழிலாளர்கள் எல்லோரும் சேர்ந்து அய்ந்து ரூபாயைத் திரட்டி வெகுமதியாக அளித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

J.J.Doss ஜெ.ஜெ. தாஸ் அவர்களின் தலைமையில் வார விடுமுறைகள், தேசிய விடுமுறைகள் ஆகியவற்றையும் தொழிலாளர்களின் பணியையும் முறைப்படுத்தும்படிபோராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. தொழிலாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ஜெ.ஜெ. தாஸ், தொழிலாளர் போராட்டங்களின்போது சிறை சென்றிருக்கிறார். நூல் ‘கோட்டா' உரிமத்தை அவர் பெற்றிருந்ததால் அவ்வப்போது மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகி, தொழிலாளர்களுக்கென இலவச துணிகளையும், உணவுப் பொருட்களையும் வாங்கித் தந்துள்ளார். 1947, 48 களில் தோல்பதனிடும் தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்தபோது, ‘கஞ்சித் தொட்டி' வைக்கக் கோரி அரசை பலர் நாடியிருக்கிறார்கள். ஜெ.ஜெ. தாஸ் அவர்கள், அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேசி ஏரியில் தூர்வாரும் பணியை ‘வேலைக்கு உணவு' திட்டத்தின் கீழ் பெற்றுத்தந்து தொழிலாளர் பசியாற உதவியிருக்கிறார்.

ஜெ.ஜெ. தாஸ் அவர்களைப் பற்றி நினைவுகூர்பவர்கள், அவன் உணர்ச்சி மிக்க பேச்சையும், அவருடைய பெரும் முயற்சியால் வெளிவந்த ‘உதய சூரியன்' இதழையும் முதன்மையானவைகளாகக் குறிப்பிடுகிறார்கள். அவருடைய உயரமான உடலமைப்பும், நாகரிகமாக உடை உடுத்தும் பாங்கும், தொழிலாளர்கள் இடையில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அவர் பேசும் சரளமான ஆங்கிலம் பிரமிப்பை உண்டாக்கியுள்ளது. ‘தோழா தோழா' என்றே எப்போதும் தொழிலாளர்களை அவர் அழைத்திருக்கிறார். அவர் பேச்சைக் கேட்ட தொழிலாளர்கள் சுயமரியாதையையும், வீரத்தையும் பெற்றிருக்கிறார்கள். ‘முதலாளிகள் தாக்கினால் அவர்களைத் திருப்பித் தாக்கு' ‘அடிக்க வந்தால் திருப்பி அடி' என்ற முழக்கங்களுடன் குருதியைச் சூடேற்றும் உரையாக அவரின் உரைகள் அமைந்திருக்கின்றன.

"யாராவது ஒரு இசுலாமியர் தாக்கப்பட்டால், இந்தியா முழுவதிலிருந்தும் இசுலாமியச் சமூகம் ஒன்றுபட்டு குரல் கொடுக்கிறது. தலித் தொழிலாளி தாக்கப்பட்டால் மட்டும் ஏன் அந்த ஒற்றுமை இருப்பதில்லை?' என்ற எடுத்துக்காட்டுகளோடும் ‘குமுறும் எரிமலைப் பாட்டாளி, ஒருநாள் குமுறியே தீருவான்' என்ற உணர்வுப் பிரவாகத்தோடும், Can’t you do it? என்ற ஆங்கில இடையீடுகளோடும் அவர் நிகழ்த்தும் உரையை ஒருமுறை கேட்டால் போதும், அந்தத் தொழிலாளி போராளியாகிவிடுவான்.

யாருக்கும் அஞ்சாத உரை, ஆற்றொழுக்கான உரை, கம்பீரமான உரை, உணர்வுத்தீயின் அனலைக் கக்கும் உரை அவரின் உரை என்கிறார்கள். இதனாலலேயே அவருக்கு தொழிலாளர் மத்தியில் ‘மாவீரன்' என்ற பட்டப் பெயர் வழங்கியிருக்கிறது. ஜெ.ஜெ. தாஸ் அவர்களின் பேச்சுத் திறனை வியந்து, அதனால் ஈர்க்கப்பட்டு என் பேச்சுத் திறனை வளர்த்துக் கொண்டேன் என்கிறார், பேரணாம்பட்டின் சமூகச் சீர்திருத்த மேடைகளில் வெடிப்புறப்பேசும் சிறந்த பேச்சாளரான ஆசிரியர் சவுந்தர பாண்டியன். ஜெ.ஜெ. தாஸ் அவர்களின் தொழிலாளர் நலப் பணிகள், வடஆர்க்காடு மாவட்டத்தோடு சுருங்கிப் போய்விடவில்லை. வடஆர்க்காடு மாவட்ட பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் முன்னணித் தலைவராகயிருந்த ஜெ.ஜெ. தாஸ், தமிழக அளவில் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் விளங்கியவர். இச்சங்கத்தின் துணைத் தலைவர்களாக சென்னை சைமன்பாலுவும், எல்லூர் டிட்டோவும் இருந்திருக்கிறார்கள். பொதுச் செயலாளராக சென்னை வி.பி. முருகையனும், உதவி செயலர்களாக திண்டுக்கல் ஏ.எஸ். துரைராசும், திருவெற்றியூர் ஞானசாமியும் இருந்துள்ளனர். நிர்வாகக் குழு உறுப்பினர்களாக சேலம், கோவை, திருச்சி, பெங்களூர், பெசவாடா, சென்னை, திண்டுக்கல், செம்பியம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருந்திருக்கிறார்கள் (‘தென்னாட்டு அம்பேத்கர் தளபதி கிருஷ்ணசாமி' ஏபி. வள்ளிநாயகம்; பக்கம் 163).

பட்டியல் சாதியினர் கூட்டமைப்பினைச் சேர்ந்த தலைவர் தளபதி பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி அவர்களோடும் பிற மாநிலத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனும் அவருடைய தொடர்பு நெருக்கமாக இருந்துள்ளது. 1942 இல் சென்னையில் கூடிய தோல்பதனிடும் தொழிலாளர்களின் மாநாட்டில் ஜெ.ஜெ. தாஸ் அவர்கள் பங்கேற்றிருக்கிறார். இம்மாநாட்டில் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கின்றனர். தொழிலாளர்களின் தொழில் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண முயல்வதோடு மட்டும் நின்றுவிடாமல், அவர்தம் சமூகப் பிரச்சினைகளுக்கும் சேர்த்தே எழுந்திருக்கிறது ஜெ.ஜெ. தாஸ் அவர்களின் குரல். ‘அரிசன' முன்னேற்ற மாநாடுகள், ஆம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பிற தலைவர்களுடன் இணைந்த இவரின் முயற்சியால் நடத்தப்பட்டிருக்கின்றன.

பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டிருந்த தாஸ், அண்ணல் தங்கோ, சி.பி. சிற்றரசு, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் தலைவர்களான அன்னை மீனாம்பாள், சிவராஜ் போன்றோர்களையெல்லாம் அழைத்து வந்து, தொழிலாளர்கள் இடையிலே உரையாற்றச் செய்திருக்கிறார். ஜெ.ஜெ. தாஸ் அவர்களின் மக்கள் தொண்டைப் பாராட்டும் விதத்தில் தொழிலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், 1947இல் பெரியார் வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டுள்ளார். “ஜெ.ஜெ. தாஸ் படித்தவர், பண்பாளர் என்று கேள்விப்பட்டேன். அவர் தன் சுகத்தை நாடாமல் தொழிலாளர் வர்க்க நலனுக்காக, அதுவும் இதுவரை கேட்பாரற்று இருந்த தொழிலாளர் நலனில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இவரைப் போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் நாட்டில் இருக்கின்ற பெரிய பெரிய தொழில் நிறுவனங்களுக்குத் தலைவராக வரவேண்டும்'' என்று அக்கூட்டத்தில் பெரியார் பேசியிருக்கிறார்.

தலித் தொழிலாளர்களின் நாயகனாக மட்டுமின்றி, ஒரு புரட்சியாளனாகத் திகழ்ந்திருக்கும் ஜெ.ஜெ. தாஸ் அவர்களின் மற்றொரு முக்கியப் பரிமாணம் அவர் ஒரு இதழாசிரியர் என்பதுதான். ‘உதயசூரியன்' என்ற பெயரில் அவர் வெளியிட்ட இதழின் விலை இரண்டு அணா. இரண்டு காளை மாடுகளைப் பூட்டி நிலத்தை உழும் ஏர்உழவனின் பின்னணியில், உதித்து எழும்பும் சூரியனின் கதிர்கள் தெரிவது போன்ற சின்னத்தைத் தாங்கி வெளிவந்துள்ளன அவ்விதழ்கள். இதழின் முகப்பு அட்டைகளில் தொழிலாளர் நிலைகுறித்த கருத்துப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிற்காலத்தில் ‘உதய சூரியன்' என்ற பெயரும், சின்னமும் திராவிடக் கட்சியால் பயன்படுத்தப்படுவதற்கு முன்னமே ஜெ.ஜெ. தாஸ் அவர்கள், அதை தலித் தொழிலாளர்களின் விடுதலைக் குறியீடாய்ப் பயன்படுத்தி இருக்கிறார்.

தொழிலாளர்களிடையே கருத்துப் பரப்பலை செய்வதற்கு, இந்த இதழ் தாஸ் அவர்களுக்கு காத்திரமாக உதவியுள்ளது. தொழிலாளர்களின் நிலையைப் பற்றி கட்டுரைகள் இவ்விதழில் எழுப்பப்பட்டுள்ளன. சமூகச் சீர்த்திருத்தக் கருத்துகளும், தலித் மக்களின் நிலைபற்றிய செய்திகளும் இதழில் தொடர்ந்து வெளிவந்துள்ளன. குடியாத்தம் நகரின் சந்தைப்பேட்டை பகுதியில் இதழ் அலுவலகம் இருந்திருக்கிறது. அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே இருந்த ‘கந்தசாமி முடி திருத்தக'த்துக்கும், ‘ராமசாமி தையல் கடை'க்கும் தாஸ் அவர்கள் அவ்வப்போது மாலை நேரங்களில் வருவது வழக்கமாம். அப்போது அவரை சந்திக்கவும், பேசவும் கொஞ்சம் பேர் அங்கு காத்திருப்பார்கள்.

1941 சனவரியில் ‘உதய சூரியன்' முதல் இதழ் வெளியானது. இதன் உதவி ஆசிரியராக தளபதி கிருஷ்ணசாமி இருந்தார். முதலில் வார இதழாகவும், 1946இல் மாதம் இருமுறை இதழாகவும், 1947 இல் மாத இதழாகவும் வெளியானது இந்த இதழ். வேலூர் விக்டோரியா அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்ட இவ்விதழ், சற்றேறக்குறைய தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வந்தது. தொழிலாளர் நலச் செய்திகள், பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் செய்திகள், அம்பேத்கர், பெரியார் தொடர்பான செய்திகள் போன்றவைகளை, தாங்கி வந்தது (தெ.அ.தா. கிருஷ்ணசாமி. பக். 67) இதழ். இவ்விதழின் வளர்ச்சிக்கு தாராளமாய் நிதி வழங்கும்படி, தாத்தா ரெட்டமலை சீனிவாசன் துண்டறிக்கை மூலம் தமிழக ஒடுக்கப்பட்ட மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். தொழிற்சங்க வேலைகளுடன் இதழுக்காகவும் ஜெ.ஜெ. தாஸ் உழைக்க வேண்டியிருந்தது. ‘எப்போதும் படித்தபடியும், எழுதியபடியுமே இருப்பார் சித்தப்பா' என்கிறார் தாஸ் அவர்களின் அண்ணன் மகன் சுந்தரேசன். ‘உன் சித்தப்பா மாதிரி படித்து பெரிய ஆளாக வரவேண்டும்' என்றுதான் அவ்வப்போது சுந்தரேசனிடம் அவருடைய அம்மா சொல்வார்களாம்.

‘தொழிலாளர்களை வெறுமனே கூலிக்காகப் போராடும் வயிற்று ஜீவிகளாக தாஸ் அணுகவில்லை. அவர்களை கருத்தியல் தெளிவுடனும், உணர்வுடனும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்பியவர் தாஸ். எங்கள் வீட்டில் ‘உதய சூரியன்', ‘உரிமை', ‘சமத்துவச் சங்கு' போன்ற இதழ்களே எங்கும் இருக்கும் என்கிறார் ஆசிரியர் சவுந்தரபாண்டியன். இவரின் தந்தையார் பெ. பெருமாள், ஜெ.ஜெ. தாஸ் அவர்களோடு நெருக்கமாக இருந்தவர். பிற்காலத்தில் தோல்பதனிடும் தொழிற் சங்க மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர். ‘உரிமை' இதழிலும், ‘உதய சூரியனி'லும் வரும் க. மாணிக்கவாசகம் போன்றோர் எழுதிய கவிதைகளை மனப்பாடமாக வீட்டிலிருக்கும்போதும், மேடைகளிலும் பெருமாள் அவர்கள் சொல்வாராம். இப்படி ஒவ்வொரு பொறுப்பாளர்களும், தொழிலாளர்களும் படித்துத் தெளிவடையும் விளக்காக ‘உதய சூரியன்' விளங்கியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

Doss cemetry ஜெ.ஜெ. தாஸ் எந்த அரசியல் அமைப்பையும் சாராதவராக இருந்திருக்கிறார். ஆனால் அம்பேத்கர், பெரியார் கருத்துகளைப் பின்பற்றுபவராகவும் பகுத்தறிவாளராகவும் திகழ்ந்திருக்கிறார். காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வு அவரிடம் மேலோங்கி இருந்திருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்புடன் மிக நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருந்துள்ளார். அவருடைய இறுதிக் காலங்களில் அரசியல் சிந்தனை அவரிடம் அதிகரித்திருக்கும்போல் தெரிகிறது. 1954 ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் தனி வேட்பாளராக வில், அம்பு சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறார். இந்தத் தேர்தலில் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் சார்பாக பள்ளிகொண்டா தளபதி கிருஷ்ணசாமி அவர்களும், பொதுவுடைமை இயக்கம் சார்பில் வி.கே. கோதண்டராமனும் நின்றார்கள். காமராசர் காங்கிரஸ் சார்பில் நின்றார். அவரைப் பெரியாரும், தி.மு.க., தமிழரசுக் கழகம், பிரபா சோசலிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் ஆதரித்தன. இத்தேர்தலில் காமராசர் வெற்றி பெற்று, முதலமைச்சராக ஆனார் என்பது அறிந்த செய்தி. காமராசர் முதல்வரான பிறகு ஜெ.ஜெ. தாஸ் அவர்களை ‘தொழிலாளர் ஊதிய நிர்ணய வாரிய'த்தின் உறுப்பினராக நியமித்திருக்கிறார்.

ஜெ.ஜெ. தாஸ் அவர்களின் இறுதிக் காலத்தில் அவரின் வயிற்றுக் கோளாறு தீவிரமடைந்திருக்கின்றது. உணவுக் கட்டுப் பாடின்றி அதிகம் இறைச்சி உண்பவராகவும், புகைப்பவராகவும், தொழிலாளர் பிரச்சினைகளுக்காக ஓய்வு ஒழிச்சலின்றி சுற்றுபவராகவும் இருந்தது, அவருடைய வயிற்றுப் புண்ணை அதிகப்படுத்தியிருக்கிறது. தனது 52 ஆவது வயதில் 1954 ஆம் ஆண்டு ஜெ.ஜெ. தாஸ் இறந்திருக்கிறார். அவருடைய இறுதி நாட்கள் கழிந்த பள்ளிகொண்டாவிலே, அவருடைய மனைவியின் விருப்பப்படி, அடக்கம் நடந்திருக்கிறது. பதினைந்து ஆண்டுகளாக (1933 - 54) தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்கும், மனித உரிமைகளுக்கும் ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபட்ட அந்த மனிதருக்கு அஞ்சலி செலுத்த, சுமார் ஏழாயிரம் தோல் பதனிடும் தொழிலாளர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.

ஜெ.ஜெ. தாஸ் அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்க ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடிஎன்று சுற்றியபோது ‘அழிந்த பிறகு' என்ற சிவராமகாரந்தின் கன்னட நாவல் என் நினைவுக்கு வந்தது. ஒரு மனிதன் இறந்துபோன பிறகு அம்மனிதனின் நண்பனொருவன், இறந்து போனவனின் நண்பர்களையும், ஊரையும் தேடிப்போய் அவரைப் பற்றிய ஞாபகப் பதிவுகளை அறிந்து கொள்ள முயற்சிப்பதே அந்நாவல். ஜெ.ஜெ. தாஸ் அவர்களைப் பற்றித் தேட முனைந்தபோது, நாவலில் வரும் நண்பனுக்கு ஒப்ப கசப்பான அனுபவங்களே கிடைத்தன.

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு போராட்டவாதியைப் பற்றிச் சொல்வதற்கு யாரும் இல்லை. ‘உதய சூரியன்' இதழ்களோ, தொழிற் சங்க நடவடிக்கை குறித்த எழுத்துப் பதிவுகளோ, புகைப்படங்களோ இல்லை. அவருடைய கல்லறையிலும் கூட பிறந்த தேதியும், இறந்த தேதியும் குறிப்பிடப்படாமலேயே நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. ஜெ.ஜெ. தாஸ் அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. வயதான அவருடைய அண்ணன் மகன் தவிர, இப்போது யாரும் இல்லை. இப்படியாக ஒரு போராளியைப் பற்றிய நினைவுகள் துடைத்து அழிக்கப்பட்டுக் கிடக்கின்றன. ஒரு போராளிக்குச் செய்யும் பெரும் துரோகம், அவருடைய நினைவுகளை அழித்தொழிப்பதுதான். இது அவர் உழைத்த சமூகத்திற்கு நித்திய அவமானம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com