Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=மார்ச் 2009

தலித் பார்ப்பான்!
சரண்குமார் லிம்பாலே

சரண்குமார் லிம்பாலே, மகாராட்டிர மாநிலத்தின் தலித் எழுத்தாளர்களில் முன்னோடியாகத் திகழ்பவர். "தலித் சிறுத்தைகள்' இயக்கத்தின் கலை இலக்கியப் போராளி. இதுவரை 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய சுயசரிதை மராத்திய வாசகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. 1984இல் வெளியான "அக்கர் மாஷி' (அரை சாதிக்காரன்) என்ற சுயசரிதை வேதனைகள் நிறைந்த அவர் இளமைக் கால வாழ்க்கையின் தலித் அடையாள அனுபவங்களை அனுபவிக்கிறது. லிம்பாலே, தற்பொழுது நாசிக்கில் உள்ள யஷ்வந்த் ராவ் சவான் திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் மண்டல இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். அவர் அண்மையில் எழுதிய சிறுகதையை இங்கு வெளியிட்டுள்ளோம்.

கொஞ்ச நாட்களாக சில பார்ப்பன நண்பர்கள் என்னைப் பார்க்கவும், எனது அறைக்கு முன்னால் தங்களது வண்டிகளை நிறுத்தவும் சேரிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் கேலி கிண்டலிலும், வெட்டி விவாதத்திலும் ஈடுபட்டு நாங்கள் பொழுதை போக்குவோம். எனது நண்பர்களின் வண்டியை நிறுத்துவதற்கு இடம் வேண்டும் என்பதற்காக, எனது பக்கத்து வீட்டுக்காரரான கைவண்டி இழுப்பவர் தனது கைவண்டியை தெருவில் தள்ளி நிறுத்திக் கொள்வார். என் நண்பனின் வருகை, மைதானத்தில் சூதாடிக் கொண்டிருப்பவர்களுக்குதான் எரிச்சல் அளிப்பதாக இருந்தது.

யாராவது "உயர் சாதி' நண்பன் ஒருவனின் ஸ்கூட்டரின் பின் சீட்டில் அமர்ந்தே நான் வீட்டுக்கு வருவதும் "உயர் சாதி' நண்பர்களுடனான சகவாசமும் எனது அக்கம் பக்கத்தாரிடம் எனது மரியாதையை உயர்த்தி விட்டது. சேரியிலுள்ள பொடியன்கள் எல்லாம் எனக்கு மரியாதையுடன் "ஜெய்பீம்' என்று வணக்கம் சொல்வார்கள். உள்ளூர்வாசிகள் என்னை "அண்ணா' என்று அழைக்கத் தொடங்கினார்கள். வங்கிக் கடனுக்கான படிவங்களை நிரப்பித் தரவும் சஞ்சய் காந்தி உதவித் திட்டம் தொடர்பான சில பணிகளுக்காகவும் அவர்கள் என்னிடம் வருவார்கள். சேரிகளில் நடக்கும் குடும்பச் சச்சரவுகளைத் தீர்த்து வைக்கவும் என்னை அணுகினார்கள்.

ஜோஷி என்கிற எனது நண்பன் வந்த ஒரு நாளில் பொது தண்ணீர்க் குழாயடியில் கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்தது. கெட்ட வார்த்தைகள் சரளமாக வந்து விழுந்தன. நாராசமான ஜாடை பேச்சுக்களும், ஆபாசமான அபிநயங்களோடு கூடிய கூச்சலும், அசிங்கமான கைச்சாடைகளும் சர்வ சாதாரணமாக சரமாரியாக நிகழ்ந்து கொண்டிருந்தன. அங்கே இதைப் போன்ற சேரிகளில் தினந்தோறும் நடைபெறுகின்ற ஒன்றுதான் இது. மிக அருகிலிருந்து இவையெல்லாவற்றையும் பார்த்த ஜோஷி அதிர்ந்து போய்விட்டார்.

""இந்த இடத்த முதல்ல காலி பண்ணிருங்க. இவங்கல்லாம் இவ்ளோ ஆபாசமான, காட்டுத்தனமான மக்களா இருக்காங்க. உங்க கொழந்தைகளப் பத்தி நெனச்சிப் பாருங்க. அவங்க ரொம்ப நல்ல கொழந்தைகளா புத்திசாலி கொழந்தைகளா இருக்காங்க. அவங்ககிட்ட இந்த சேரி என்ன மாதிரியான பாதிப்புகள உண்டாக்கும்? நீங்க ஒரு தேர்ந்த எழுத்தாளர். முக்கியமானவங்க எல்லாம் உங்களப் பார்க்க வருவாங்க. உங்க அந்தஸ்துக்குத் தக்க ஒரு நல்ல எடத்துக்கு நீங்க குடி போயிருங்க. இங்கெல்லாம் எப்படி இருக்கீங்க?''

ஜோஷி சொன்னது உண்மைதான். கொஞ்சங் கொஞ்சமாக "உயர் சாதி'ப் பகட்டுக் கலாச்சாரம் என் மீது படிந்தது. என் மனைவியும் இது குறித்து அச்சமும் அதிருப்தியும் கொண்டவராக மாறிக் கொண்டிருந்தார். நான் பிறந்த தலித் சாதி காலங்காலமாய் இருந்து வரும் பண்பாட்டுச் சூழலில் இருந்தும் மிக இயல்பாக எனக்குள்ளே ஊடுருவி விட்ட தலித் பண்பாட்டையும் மனநிலையையும் விட்டு விட்டு என்னால் வெளியேறிவிட முடியுமா என்பது எனக்கு சந்தேகமாகவும் இருந்தது. ஒரு மரியாதையான இடத்துக்கு நான் மாறியே ஆக வேண்டும்; இல்லை என்றால் என் குழந்தைகள் நரகம் போன்ற இங்கே இருந்து சீரழிந்து விடுவார்கள்.

நாங்கள் எங்களது வீட்டை மாற்ற வேண்டும்/நாங்கள் புழங்குகிற மொழியை மாற்ற வேண்டும்/நாங்கள் எங்களது பண்பாட்டை விட்டொழிக்க வேண்டும்/நாங்கள் ஒரு மரியாதையான இடத்துக்குக் குடிபெயர வேண்டும்/

இந்த மக்களுடன் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது.

இந்த மக்கள் அசிங்கமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள்/இவர்கள் ஒருபோதும் ஒருபோதும் மாறப் போவதில்லை/நான் இவர்களில் இருந்து வேறுபட்டவன்/நான் இவர்களுக்குச் சொந்தமானவன் அல்ல/தொடத் தகுந்த, "உயர் சாதி'யினருக்குச் சொந்தமானவன் நான்.

நான் மனதளவில் தயாராகி விட்டேன். ஒரு கண்ணியமான இருப்பிடத்திற்குக் குடியேறுவது என்று தீர்மானித்து விட்டேன். இனிமேற்கொண்டு தீண்டத்தகுந்தவர்களில் ஒருவனாக, ஒரு வெள்ளையனாக நான் இருப்பேன். என் மீது படிந்துள்ள தலித் என்னும் சுயத்தை ஒரு கிழிந்த, கந்தல் துணியைப் போல வீசி எறிய, கடினமாகவும் தொடர்ச்சியாகவும் முயலுவேன். ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த கண்ணியமான மனிதனாக நடந்து கொள்ள கற்றுக் கொள்வேன். கொச்சையான எனது மொழியைக் கைவிட்டு விட்டு நல்ல மொழியை இனிமேல் பயன்படுத்துவேன்.

ஒவ்வொரு தனிப்பட்ட தலித்தும் முன்னகர்ந்து பார்ப்பனச் சமூகத்தில் கலந்தால் கொஞ்சங் கொஞ்சமாக அவன் "உயர் சாதி' சமூகத்தில் ஒன்றிப் போய் விடுவான். இதுவொன்றும் ஒரு சமூகப் புரட்சிக்குக் குறைவானதல்ல என்று நான் காரணம் சொல்லிக் கொண்டேன். ஒரு தலித் தன்னைப் பார்ப்பனனாக மாற்றிக் கொள்ள வேண்டும். பார்ப்பனனின் மொழியைப் பயன்படுத்த அவன் கற்றுக் கொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்க்கை முறையையும் அவனுடையதைப் போல உயர்த்திக் கொள்ள வேண்டும். பூணூல் போட்டுக் கொள்வது உட்பட எல்லா வழிகளிலும் ஒரு பார்ப்பனனாய் வாழ்வது என்கிற எண்ணமே பூரிக்க வைப்பதாய் இருந்தது.

இறுதியாக நான் எனது வீட்டை இடம் மாற்றிக் கொண்டேன். வெள்ளையர் களுக்குண்டான இடத்தில் எனது வீட்டை அமைத்துக் கொண்டேன். எனது எண்ணத் தில் பார்ப்பனர்களே வெள்ளையர்கள். என்னை வழியனுப்பிய போது எனது மக்கள் "நாரையும் மீன்களும்' என்ற கதையை எனக்கு நினைவுபடுத்தினார்கள்.

எங்களது சேரியைப் போன்ற ஒரு ஏரி இருந்தது/எங்களைப் போன்ற மக்கள் இங்கிருப்பதைப் போலவே அந்த ஏரியிலும் மீன்கள் இருந்தன/அங்கு ஒரு வெள்ளை நாரை இருந்தது. இங்கு ஒரு வெள்ளையன்/மீன்களுக்கு நாரை நிறைய கதைகளைச் சொல்லி குதூகலப்படுத்தும்/புரட்சியைப் பற்றியதும் மாற்றத்தைப் பற்றியதுமான கதைகள்/பரிதாபத்திற்குரிய மீன்கள் நாரை சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நம்பின/ஒரு நாள் நாரை உணர்ச்சிகரமாக தூண்டிவிடும் விதமாகச் சொன்னது/சகோதரர்களே! இந்த ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் இது விரைவில் வற்றி விடப்போகிறது/நமது வாழ்க்கையே கேள்விக்குள்ளாகியிருப்பதால் நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும்/நீங்கள் எல்லாரும் சம்மதித்தால் உங்கள் அனைவரையும் வேறொரு ஏரிக்கு எடுத்துக் கொண்டு போய் விட நான் தயாராக இருக்கிறேன்/அங்கே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எல்லாமும் இருக்கின்றன/மீன்கள் மகிழ்ச்சியுடன் ஏக மனதாய் ஒத்துக் கொண்டன/விருப்பமுள்ள ஒரு மீனை தினமும் நாரை கவ்விக் கொண்டு பறந்து போகும்/நன்றியுணர் வுள்ள மீன்களால் அதன் தினசரி உணவு உறுதி செய்யப்பட்டதால் நாரை மிகுந்த நிறைவுடன் இருந்தது.

நானும் ஒரு ஏரியிலிருந்து இன்னொரு ஏரிக்குப் போகிற மீன். எனது மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டிகள் ஆகியோருடன் குறைவான எங்கள் உடைமைகள் ஒரு மாட்டு வண்டியில் அடைக்கப்பட்டு, நகரத்தின் பெரிய தெருக்கள் வழியாக ஊர்வலமாய் வந்து வெள்ளையர்களை அண்டை வீட்டார்களாகக் கொண்ட ஒரு புதிய காலனியில் உள்ள எங்களது வீட்டை வந்தடைந்தது.

எங்களது உடைமைகள் வண்டியின் ஒரு பகுதியை மட்டுமே நிறைக்கப் போதுமானவையாய் இருந்தன. பீரோக்கள், குளிர் சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, சமையல் எரிவாயு, மின்விசிறி, நாற்காலிகள், சோபா செட்டுகள், கட்டில்கள், தரைவிரிப்புகள் உள்ளிட்டவற்றை இனிமேல்தான் நாங்கள் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். எங்களது வெள்ளை அண்டை அயலாருக்குச் சமமான அளவுக்கு, எங்களது வாழ்க்கைத் தரத்தை நாங்கள் உயர்த்திக் கொள்ள வேண்டும். சேரியிலிருந்த எங்கள் முன்னாள் அயலாருடன் எந்தத் தொடர்பும் இனிமேல் வைத்துக் கொள்ளக் கூடாதென நான் தீர்மானித்துக் கொண்டேன்.

போன வாரம்தான் தினேஷ் காம்ளே என்னை சந்தித்திருந்தான். என்னோடு ஒட்டிக் கொண்டு இந்தப் புது வீட்டுக்கு வந்து விடுவானோ என்ற பயத்தில், ஓர் உணவு விடுதியில் நிறுத்தி ஒரு தேநீர் வாங்கிக் கொடுத்து அவனை கழற்றி விட்டு விட்டேன். அட்டைக் கரியைப் போன்ற அவனது நிறமும் அவனது லட்சணமும் கொஞ்சங்கூட சந்தேகம் இல்லாமல் சுத்தமான "மகர்' சாதிக்காரன் என்று காட்டிவிடப் போதுமானவை. நல்ல வேளையாக எனக்கு அம்மாதிரியான ஒரு தலித்தைப் போன்ற தோற்றம் இல்லை. எனது தலித் வேர்களை, என்னுடைய பேச்சும் வார்த்தைப் பிரயோகமும் துறந்து விட்டிருந்தன.

எங்களது அக்கம் பக்கத்து வெள்ளையர்களின் பழக்க வழக் கத்துக்கு ஒத்துப் போவதற்காக, எனது மனைவி வீட்டில் இருக்கும்போது கவுன் போட வேண்டியிருந்து. வீட்டில் ஒரு சத்திய நாராயணா பூஜைக்கு ஏற்பாடு செய்வதென்று நாங்கள் தீர்மானித் தோம். எங்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கிறது என்பதற்காக அல்ல; காலனியில் இருப்பதை உத்தேசித்து. இப்போது நான் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனாகி விட்டேன் என்று காட்ட வேண்டாமா? எல்லா தலித்துகளும் கொஞ்சங் கொஞ்சமாக சாதி இந்துக்களின் பொதுப் போக்கில் ஒன்றிவிட வேண்டும் இல்லையா? இதை அம்பேத்கர் தனது வாயால் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது எனக்கு.

ஒரு நாள், தினேஷ் காம்ளே தலித்துகளால் நடத்தப்பட இருக்கிற ஒரு பேரணியைக் குறித்த துண்டறிக்கையைக் கொடுப்பதற்காக எனது வீட்டுக்கு வந்தான். தலித் துண்டறிக்கைகளைப் படிப்பது, தலித் விழாக்களுக்கு அஞ்சோ, பத்தோ நன்கொடை அளிப்பது என்கிற அளவுக்கே சமீப காலமாய் தலித் விடுதலைக்கான எனது பங்களிப்பு சுருங்கி விட்டிருந்தது. தலித் இயக்கப் போராளிகளில் சிலரை வரவேற்றுப் பேசுவதன் மூலம் தலித் போராட்டத்திற்கான எனது பங்கை ஆற்றி விட்டதாக நான் காட்டி விட்டேன் என்று உணர்ந்தேன். அவர்களில் ஒருவர் என் வீட்டுக்கு வந்தால், தலித் இயக்கத்தைப் பலப்படுத்துவது, நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது, தற்போதுள்ள எல்லைகளுக்கு வெளியே அதை விரிவுபடுத்துவது என்று நீண்ட சொற்பொழிவு ஆற்றி பூசி மொழுகுவேன். ""இந்த சமூக அமைப்பு தகர்த்தெறியப்பட வேண்டும்'' என்று கொந்தளிப்புடன் முழங்குவேன். உண்மையில் உணர்வுப்பூர்வமான இவ்வுரையாடலை பார்ப்பனர்களிடமிருந்தே நான் கற்றுக் கொண்டேன்.

எனது பிரசங்கத்தில் குறுக்கிட்டு நிறுத்தி ""நாளைய பேரணிக்கு நீ வருவாயா?'' என்று நேரடியாகக் கேட்டான்.

""அது எப்படி முடியும்? நான் இப்போ போராட்டத்துல இல்லைன்னாக்கூட, தலித் போராட்டத்தப் பத்தி எழுதிக்கிட்டும் பேசிக்கிட்டும் தானே இருக்கேன். எனது அர்ப்பணிப்பு உண்மையானது. போராட்டத்துல பல நிலைகள் இருக்கு. சிலர் தலைமை தாங்குறதிலயும், பங்கேற்கிறதிலயும் தீவிரமா பங்கெடுப்பாங்க. எங்களை மாதிரியான சிலர் போராட்டத்துக்கு உத்வேகமூட்டி அறிவுப்பூர்வமா வழி நடத்துவாங்க. சரிதானே!'' எனத் தற்காப்புடன் சொன்னேன்.

தினேஷ் காம்ளே எகத்தாளத்துடன் சிரித்து விட்டு, ""உன்னைச் சுத்தி இருக்கிற சூழல் உன்னை துருப்பிடிக்க வச்சிகிட்டிருக்கு. நீ தீந்துகிட்டிருக்க. நீ ஒரு தலித் பார்ப்பானா மாறிட்டே'' என்றான்.

கடுமையான கோபம் வந்தது எனக்கு. இதைப் போன்ற ஒரு நாகரீகமான காலனியிலே குடியிருக்க அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. எனவே, இம்மாதிரி விஷத்தை உமிழ்கிறான். உதவாக்கரை! என்று எனக்கு நானே காரணம் சொல்லிக் கொண்டேன்.

தினேஷ் காம்ளே போய்விட்டான். போவதற்கு முன்னால் எனது மனசாட்சியைக் காயப்படுத்தி விட்டு சென்றான். சுதந்திரத்திற்குப் பின் வளர்ந்து, பரிணாமம் பெற்று, அந்நியமாதல், புரட்சி, செயல்வீரம் என முழக்கமிட்டுக் கொண்டே நாம் வெகு தொலைவு வந்து விட்டோம் என்று அறிந்திருந்தாலும் கூட, சிலர் தங்களை சுதந்திரப் போராட்டத் தியாகிகள் என்று மார் தட்டுவார்கள் இல் லையா, அது மாதிரி இவனும் உரிமை கொண்டாடுகிறான். பேரணி, அறப்போர், புரட்சி, கருத்தரங்கம், தலித் லட்சியம், தலித் ஒற்றுமை என்பன போன்ற வார்த்தைகளை ஊட்டியே குழந்தைப் பருவத்திலிருந்து வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.

தலித் நோக்கில் நின்று ஆவேச முழக்கமிடும், பொதுப் புத்தியைக் குற்றஞ்சாட்டிக் கிழிக்கும் பிற தலித் பேச்சாளர்களைப் போலில்லாமல் கொஞ்சம் அமர்ந்த தொனியில் பேசுவதால், எனக்கு இப்போது ஒரு ஜனரஞ்சகப் பேச்சாளன் என அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. என்னுடைய பேச்சு நடுநிலைமை வகிப்பதாகவும், சமரசம் நாடுவதாகவும், வெறுப்பு அற்றதாகவும் இருக்கும். இப்போக்கு வெகுவாக வரவேற்கப்பட்டது. பெரும்பாலான கூட்டங்களில் பேச்சாளனாக நானே அழைக்கப்பட்டேன். இதன் மூலம் கொஞ்சம் பணமும், பத்திரிகைகளில் பிரபலமும் எனக்கு லாபம். பிரபலமானவர்கள் வட்டத்தில் எனது பெயரும் சேர்ந்தது. நான் பேசுவதற்காக வெளியூர் செல்லும் பொழுதுகளில் அமர்க்களமாக வரவேற்கப்பட்டு – விடுதிகளிலும், ஓய்வறைகளிலும் தங்க வைக்கப்பட்டேன்.

ஒரு காலத்தில் தலித் போராட்டத்தில் செயலூக்கமான பங்கை நான் வகித்ததும், அதன் மூலம் கிடைத்த ஒரு தலித் செயல் வீரனின் உண்மையான வாழ்வனுபவமும் – எழுதுவதற்கு எனக்கு கருப்பொருளாய் இருந்ததுமே இவற்றுக்கு எல்லாம் காரணம். எனது புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு திறனாய்வு செய்யப்பட்டு, விரிவாக விவாதிக்கப்பட்டன. பல்வேறு கூட்டங்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றுக்கு அழைக்கப்பட்டு எங்கும் தலையில் தூக்கி கொண்டாடப்பட்டேன். செத்த மிருகங்களைத் தூக்குவது, தரைகளைப் பெருக்கி சுத்தம் செய்வது, பொதுக் கழிப்பிடங்களை சுத்தம் செய்வது போன்ற அசிங்கமான வேலைகளுக்குப் பழக்கப்பட்ட என் கைகளால் – இப்போது ரிப்பன் வெட்டி விழாக்களைத் தொடங்கி வைக்கவும், சிறப்பு அழைப்பாளராய் இருக்கவும் பேறு பெற்றேன். காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது!

பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகளுக்குப் பேச்சாளனாக அழைக்கப்பட்டு விடுதிகளில் தங்குவது வழக்கமாகி விட்டதில், நட்சத்திர விடுதி அறைகளின் ஆடம்பரம் பழக்கப்பட்டதாகி விட்டது. வழக்கமாக என்னிடம் கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்கான எனது வழக்கமான பதில்களும், மது விருந்துகளில் அமைதியாக பகிரப்படுவதாயின. எனது விருப்பத்துக்கேற்ற மாதிரியான ஒரு தலைப்பில் ஓர் உரையைத் தயாரித்து, அவ்வருடம் முழுவதும் கணக்கற்ற முறை அதை ஒப்பிக்கப் பழகிக் கொண்டேன். மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். பொது மக்கள் மத்தியில் புகழ், விளம்பரம், பேச்சுக் கலையின் மூலம் பணம், புத்தகங்களிலிருந்து மதிப்பூதியம், விருந்துபசரணைகள்... ராஜ போக வாழ்க்கைதான்!

""இன்னிக்கி நிகழ்ச்சியில் பேசுறதுக்கு ஏன் ஒத்துக்கிட்டே?'' என்று தினேஷ் காம்ளே ஒரு நாள் கேட்டான். ""அதனாலென்ன?'' என்று பதிலுக்கு கேட்டேன்.

""அவங்க ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கைச் சேர்ந்தவங்க. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தலித்துகளுக்கு கடும் எதிரிகள்.''

""எந்த மேடையிலேயும் நம்ம கருத்த முன்வைக்கிறதுல என்ன தப்பு? நம்முடைய நோக்கத்துக்கு உண்மையானவங்களா நாம இருந்தா அதுவே போதுமானது'' என்று விவரித்தேன் நான்.

""அவங்க உன்ன முழுங்கி ஏப்பம் விட்டுருவாங்க. உன்னோட கூர்மைய நீ இழந்துகிட்டு வர்றே. உம் பேச்சும்கூட மொண்ணையாகிட்டே வருது. உன்னோட அணுகுமுறையும் மென்மையானதா நீர்த்துப் போனதா ஆயிட்டுது'' என விமர்சித்தான்.

""இது வரையிலும் நான் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அதாவது தலித்துகளுக்கு மட்டும் பேசிக்கிட்டு இருந்தேன். இப்போ பல தரப்பட்ட நிலையில் உள்ளவங்க என்னோட பார்வையாளரா இருக்காங்க. அவங்க என்னோட அணுகுமுறையை ஏத்துக்கிறாங்க'' என்றேன், தன்னிலை விளக்கமாக.

என்னைச் சுற்றி ஓர் எல்லையை வகுத்துக் கொண்டு, அதற்குள்ளே வாழ்வதில் மகிழ்வடையும் எனது நிலையை மிகுந்த வலியுடன் நான் உணரும் வண்ணம் தினேஷ் செய்து விட்டான். எனக்கு நானே போட்டுக் கொண்ட எல்லைகள் என்னைச் சங்கடம் செய்தன. தலித் லட்சியத்துக்கு ஆதரவான நிலையிலிருந்து விலகிப் போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை என் இதயத்தில் நான் உணர்ந்தேன்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு போன் செய்து, நான் வந்து சேர்ந்து விட்ட தகவலைத் தெரிவித்தேன். உடனே ஒரு கார் வந்து என்னை ஏற்றிக் கொண்டு மிகப் பெரியதொரு பங்களா முன்பு இறக்கி விட்டது. என் இயல்பிலேயே நான் எவற்றை எல்லாம் எதிர்ப்பேனோ அவையனைத்தும் அங்கிருந்தன. சமீபகாலமாக எனது மொழியும் அதன் உச்சரிப்பும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மாறிவிட்டிருந்தது. ஒரு பார்ப்பனர் உச்சரிப்பதைப் போன்று நான் மராத்தியை உச்சரித்தேன். எனது உடைகளும் தேர்ந்தெடுத்தவையாகவும் கண்ணியமானவையாகவும் இருந்தன.

""பிரயாணம் எப்பிடி இருந்தது? ரொம்ப களைப்பா இருப்பேள்! போய் ஒரு குளியல் போட்டுண்டு வந்தேள்னா பிரஷ்ஷாயிடுவேள்'' இøதப் போன்ற கரிசனங்களால் நான் திக்குமுக்காடி விட்டேன். மது, விருந்து, சுகமான உரையாடல் எனப் பொழுது இனிதே கழிந்தது. எனக்கு விருந்தளிப்பவர் கலை, இசை, ஓவியம், புத்தகங்கள், ஆர்வமூட்டும் உரையாடல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற ரசிகராய் இருந்தார். அவருக்கு ஓர் அழகிய மகளும் இருந்தார். மூக்தா என்பது அவருடைய பெயர். அவள் அழகியாகவும் தாராள மனம் கொண்டவராகவும் இருந்தார். தனது தந்தைக்கு ஏற்ற பெண்ணாக இருந்தார். எனக்கு விருந்தளிப்பவரின் வீட்டில் சிறந்த தலித் எழுத்தாளர்களான தயாபவார், நாராயண் சுர்வே, லக்ஷ்மன் மானே, சென்காம்பிளே போன்றவர்களது புத்தகங்களும் சிறந்த இலக்கியப் "பிதா மகர்'களான அம்ரிதா பிரீதம், பி.எல். தேஷ்பாண்டே, ரஞ்சித் தேசாய் போன்றவர்களது படைப்புகளும் நிரம்பியிருந்தன. இவர்கள் அனைவரின் இருப்பும் ஓர் இலக்கியக் கடலுக்குள் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது.

அவர்கள் குடும்பத்துடன் என்னோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அதன் ஒரு பிரதி அவர்களது ஆல்பத்தில் இடம் பெற்றது. என்னுடைய ஒரே வருத்தம் என்னவெனில், முக்தா எனக்கு நெருக்கமாக நிற்கவில்லை என்பதுதான்!

""நாட்டுப்புறத்தானுக எல்லாம் கட்டுப் பெட்டியான சனாதன இந்துக்கள். சேரி தலித்துகள் அஞ்சு பேரு எரிஞ்சு போனத ஒருபோதும் மறக்காதே. அந்த படுபாத கத்தச் செஞ்சது இவங்கதான்'' என்று தினேஷ் காம்ளே சொன்னான்.

""திரும்பித் திரும்பி பழசயே கிண்டிகிட்டு இருக்கக் கூடாது. மக்கள் மாறுவாங்க. மனமாற்றங்கிறது சாத்தியந்தான்னு நான் நம்புறேன். நீ சொல்ற அதே மக்கள்தான் பெரிய மனதுடன் என்னை வரவேற்றார்கள். அவங்க சாதியுணர்வு கொண்டவங்களா இருந்தா, தங்களோட வீட்டுல தங்கும்படி என்னைக் கேட்டிருக்க மாட்டாங்க. ஏதாவதொரு ஓட்டலில் கொண்டு போய் விட்டிருப்பாங்க'' என்று பதில் சொன்னேன்.

""மிக பிரபலமான ஒரு தலித் எழுத்தாளரா நீ ஆயிட்டே. இந்த பணக்காரங்களோட வீட்டு விருந்தாளா இருப்பே. கோட்டும் சூட்டும் மாட்டிக்கிட்டு ஒரு பெரிய அரங்கத்தில இருந்துகிட்டு பாவப்பட்ட தலித்துகளோட நெலயப் பத்தி நெஞ்சப் பிளக்கிற மாதிரியான ஒரு பேச்சை நீ பேசுவே. அதுக்குச் சன்மானமா கணிசமான ஒரு தொகை ஒனக்குக் கெடைக்கும். இதெல்லாம் போலித்தனமானது. தற்காலிகமானது. சாதாரண தலித் மக்களோட என்ன மாரியான உறவு உனக்கு இருக்கு? தலித்துகளின் மீதான அடக்குமுறைகளை, அநியாயங்களை, அவமானங்களை காசுக்குக் கூவி விக்கிறவனா நீ மாறிட்டே'' என்று ஆவேசத்துடன் கூறினான் தினேஷ் காம்ளே.

""எனக்குன்னு எல்லைகள் இருக்கு. ஒரு வெகுஜனப் போராட்டத்துல ஒவ் வொருத்தரோட பங்கும் வரையறுக்கப்பட்டிருக்கு. இயக்கத் தொண்டன்ங்கிறவன் வெகுஜனப் போராட்டத்துல நேரடியா பங்கெடுக்கணும். எழுத்தாளங்கிறவன் பண்பாட்டுத் தளத்துல தன்னோட எழுத்துக்கள் மூலமாகவும், பேச்சுக்கள் மூலமாகவும் தலித்துகளோட நிலையை வன்மையா முன்னெடுத்துக்கிட்டுப் போக வேண்டியிருக்கு. இந்த இலக்கை நோக்கித்தான் நான் தொடர்ந்து கிட்டிருக்கேன். அதே நேரத்துல தலித் விடுதலைக்கு எதிரா எதையும் செஞ்சிடாம கவனமா இருக்கேன்'' என்றேன் நான்.

""நீ ஒரு ஒட்டுண்ணியா மாறிட்டே. தலித் மக்களின் வேதனை மிக்க போராட்டத்தை உறிஞ்சி வாழ்ந்துகிட்டிருக்கே. நமது மக்கள் எல்லாம் ஜெயிலுக்குள்ளே தூக்கிப் போடப்படும்போது, அவங்களுக்கு எதிரா இந்த அநியாயங்களைச் செய்யறவங்க தர்ற விருந்துபசரணைகளை நீ அனுபவிச்சிட்டு இருக்க. உனக்கு வெக்கமாயில்லையா?'' என்றான்.

தினேஷ் காம்ளேயிடம் என்ன பிரச்சனை என்றால், எல்லா சந்தர்ப்பத்திலும் ஒரு வெகுஜனப் போராட்டத்துக்கான வாய்ப்பைக் கண்டுபிடித்து விடுவதுதான். அவனைப் பொருத்தவரைக்கும் எல்லா இந்துவும் மோசமான வெறி பிடிச்சவங்க. அவ்வளவுதான். அவனை என்னோடு அழைத்துக் கொண்டு வந்ததன் மூலம் பெரிய மடத்தனத்தை செய்து விட்டேன் எனப் புரிந்து கொண்டேன்.

விழா நிறைவடைந்த பின் விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவர் சொன்னார்: ""எங்கள் சேர்மன் இது மாதிரியான கூட்டங்களுக்கு வரவே மாட்டார். இன்னைக்கு விதிவிலக்கு. அவர் கடைசி வரைக்கும் உக்காந்திருந்தார். அறிவுஜீவிகளோட இதயத்தை நீங்க வென்றுட்டீங்க. நீங்க பேசுன முறைய எல்லாரும் பாராட்டினாங்க. இதுக்கு முந்தி வந்த ஒரு பேச்சாளர், அவர் பேர நான் சொல்ல மாட்டேன். தான் இன்னது தான் சொல்றோம்கிற உணர்வு இல்லாத அளவுக்குப் போதையிலிருந்தார். டின்னர்லயும் பெரிய குழப்படிய பண்ணிட்டார். உங்க நடத்தைய நாங்க பாராட்டத்தான் வேணும். வெளியூருக்கு வந்தா யார்தான் குடிக்காம இருப்பா? நாங்களும் குடிப்போம், ஆனா எல்லாம் கூட்டம் முடிஞ்சப்புறம்தான்.''

அங்கிருந்து முதல்வர், செயலாளர், துறைத் தலைவர், விழா ஏற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோருடன் கல்வி நிறுவனத் தலைவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அன்புடனும் மரியாதையுடனும், நல்ல விதமாகவும் நான் அனைவராலும் நடத்தப்பட்டேன். அவர்களது நடத்தைகள் எவ்வளவு மாசற்றவை என நான் வியந்து கொண்டே இருந்தேன். தலித்துகளாகிய நாங்கள் சில வேலைகளில் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டு, எல்லாரையும் ஒரே விதமாக முத்திரை குத்தி விடுகிறோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் நிறைய உரையாடல்கள் நடைபெற வேண்டும். அதன் மூலம் தலித்துகளுக்கும் "உயர் சாதி'யினருக்கும் இடையில் உள்ள புரிதலில் உள்ள குறைபாடுகள், அறியாமைகள், சந்தேகங்கள் ஆகியவற்றை நீக்குவதற்கு உதவியாக இருக்கும்.

""சாதி வித்தியாசங்களுக்கு எந்த முக்கியத்துவமும் நாங்கள் கொடுப்பதில்லை. உண்மையைச் சொல்றதுன்னா எங்கள் வீட்டிலேயே ஒரு தலித் மாணவன வச்சிருந்தோம். அவன்தான் எனக்கு தினசரி டீ போட்டு குடுப்பான்'' கல்வி நிறுவனத்தின் தலைவர் "தாராள' மனதுடன் தெரிவித்தார். அவரது குரலில் பரிவு தென்பட்டதா என்பதை நான் கவனிக்கவில்லை. சகோதரத்துவம், தோழமை ஆகிய உணர்வுகள் என்னை ஆட்கொண்டிருந்தன.

வீட்டு வேலைக்காரன் எனது தேநீர் கோப்பையையும் தட்டையும் மேசை மீதிருந்து எடுத்துக் கொண்டு போனான். மீண்டும் ஒரு சுற்று வந்தனங்கள் முடிந்த பிறகு நான் விடை பெற்றேன். தினேஷின் நேரடி வர்ணனை உடனடியாகத் தொடங்கியது.

""நீ சாப்பிட்ட எல்லா பாத்திரங்களையும் தனியா குமிச்சுப் போட்டாங்களே கவனிச்சியா? நீ உக்காந்த சோபா துணிங்கள எல்லாம் மூட்டையா கட்டி லாண்டிரிக்குன்னு போட்டாங்க கவனிச்சியா?''

வீட்டு வேலைக்காரன் எனது கப்பையும் சாசரையும் எடுத்தபோது நானும் கவனித்தேன். அவன் சொல்வது உண்மைதான். சால்வை, டம்ளர், கட்டில், நாற்காலி என்று நான் பயன்படுத்திய எல்லாமும் என்னைப் போன்று குறிப்பிட்ட சாதிக்காரர்களுக்கென்றே ஒதுக்கப்பட்டவையாய் இருந்ததை நானும் கவனித்தேன்.

""உன்ன மாதிரி தலித் எழுத்தாளர்களை தங்கள் வீட்டுல ஓர் இரவு கழிக்கணும்னு அழைக்கிறப்ப எல்லாம் தீண்டாமை தன்னோட அசிங்கமான தலைய தூக்குது. தாராளவாதம், சமத்துவம் என்கிற வெளித்தோற்றத்துக்குப் பின்னாடி நுட்பமான, ஆனா திட்டவட்டமான இழிவுபடுத்துற நடவடிக்கைகள் நடக்கத்தான் செய்யுது. ஓர் உள்ளூர் தலித்தின் நிழலைக்கூட தங்கள் வீட்டு வாசலில் விழ அனுமதிக்க மாட்டாங்க இதே ஆட்கள்.''

தினேஷ் காம்ளேயின் வார்த்தைகள் உண்மையின் எரி அம்புகள் மாதிரி சரமாரியாய் என்னுடைய இதயத்தை துளைத்தன. நான் உயிரற்ற களிமண் பிண்டம் மாதிரி சுருங்கிப் போனேன். பதிலே பேச முடியாத கையறு நிலை. அவ்வீட்டாரின் சகிப்புத் தன்மையின் எல்லைகளை நான் கண்ணாரக் கண்டுவிட்டேன். என்னுடைய மனிதாபிமானத்தின் எல்லைகளையும், அவர்களுடைய மனிதாபிமானத்தின் எல்லைகளையும் குறித்த உண்மைகள் உறைத்தன எனக்கு.

தமிழில் : ம. மதிவண்ணன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com