Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=மார்ச் 2009

பெரியார் பேசுகிறார்

ஆரிய மத அபிமான வெறியை விட்டு மான அபிமானத்துடன் சிந்தியுங்கள் - II


Periyar பார்ப்பானிடம் அன்பு, பார்ப்பானிடம் நேசம் வைத்துப் பார்ப்பான் போல வேஷம் போட்டு நடித்துக் கொண்டு, சூத்திரனாக இருக்கச் சம்மதிக்கும் ஒருவன், அதுவும் திராவிடனாக இருப்பவன் இஸ்லாமியரிடம் அன்பு, நேசம், வேஷம், நடிப்பு நடித்துச் சூத்திரன் அல்லாதவனாக, திராவிடனாகவே இருப்பதில் என்ன வெட்கக்கேடு என்பது நமக்கு விளங்கவில்லை. மொத்தத்தில் 100க்கு 10 பேர்களாக மக்களிடம் நேசம் பூண்டு, கலந்து – சுதந்திரத்தோடு, மானத்தோடு வாழ வெட்கமோ, வெறுப்போ பட்டுக் கொண்டு 100க்கு 3 பேராய் இருக்கும் நம்மிலும் வேறுபட்ட, நம்மை இழிவுபடுத்தும் மக்களுடன் சேர்ந்தவர்களாகச் சொல்லிக் கொண்டு – மானம், சுதந்திரம் இல்லாமல் இழிவாழ்வு வாழ்வதற்கு மனம் சகிக்கக் காரணம் என்னவென்றால், பார்ப்பான் நம்மை இஸ்லாத்துக்கு

எதிரிகளாக ஆக்கியதைப் "பேய், பிசாசு, பூச்சாண்டியாக' போதித்து இருப்பதைத் தவிர, வேறு காரணம் என்ன சொல்ல முடியும்? நம்மிடத்திலே இல்லாத கெட்ட பழக்கம் இஸ்லாத்தில் என்ன இருக்கிறது? இஸ்லாத்தில் இல்லாத நல்ல பழக்கம் நம்மிடத்தில் என்ன இருக்கிறது? நாம் எந்த நல்ல காரியத்தை, சீர்திருத்தத்தைச் செய்வதை இஸ்லாம் தடுக்கிறது?

""கையை வெட்டினாலொழிய பிழைக்க மாட்டாய்'' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். ""காலை வெட்டினாலொழிய பிழைக்க மாட்டாய்'' என்றால் காலை வெட்டி விடச் சம்மதிக்கிறோம். மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போட வேண்டுமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கின்றோம். எடுத்துவிட வேண்டுமென்றால் கர்ப்பப் பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கியப் பண்டங்களை இழந்தாவது உயிர் வாழ சம்மதிக்கிறோம்.

அப்படி இருக்க ஓர் அயோக்கியர் கூட்டம் நம்மை ஜெயித்து, அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கின்ற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்திலும், தந்திரத்திலும் புகுத்தி, இழிவுபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால், எதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம் என்றால் இந்த இழிவு எப்பொழுதுதான் – எந்த வகையில் தான் மறைவது என்று கேட்கிறேன்.

கோபிக்கும் தோழர்களே! வேத சாஸ்திரங்களை, புராண, இதிகாசங்களை நெருப்பிட்டுக் கொளுத்துவதால் சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. கோவில்களை இடிப்பதாலோ, விக்கிரகங்களை உடைத்துத் தூள்தூளாக்குவதாலோ, சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. மறுபடியும் தோசையைத் திருப்புவது போல் பழையபடி திருப்பிவிடப் பார்ப்பனருக்குத் தெரியும், முடியும். திரா

விடன் என்று சொல்லிக் கொள்வதால் மட்டும் சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. இந்து மதம் லேசில் ஒழியாது. அது பச்சோந்தி போல் சுலபத்தில் சாகும் மதமல்ல. அதைச் சாகடிப்பதற்கு நம் ஆயுளும் நம் பேரன்மார் ஆயுளும் கூடப் போதாது. ஆகவே நாம் அதை (இந்து மதத்தை) விட்டு விலகுவதுதான் நம் ஆயுளில் முடியக்கூடிய காரியமாகும். அந்தப்படி நாம் விலகினோமேயானால், நாம் யார் என்று சொல்லிக் கொள்ள இன்றைய நிலைக்கு ஒரு பெயர் வேண்டும். அதைப் புதிதாக உண்டாக்க வேண்டும், பரப்ப வேண்டும். அதை இன்றைய காந்தி சர்க்கார் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும். அதற்குச் சட்டம், சம்பிரதாயம், செலாவணி ஏற்பட வேண்டும். அதற்கு உண்டான பிரதிநிதித்துவம் – உரிமை நிர்ணயித்து ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும்.

இவ்வளவும் செய்வதென்றால் பார்ப்பன எதிர்ப்புக்கும், சூழ்ச்சிக்கும், பனியாக்கள் ஆதரவுக்கும் முன்னால் சுலபத்தில் ஆகக் கூடியதா என்பதையும் சிந்தியுங்கள். பிறகு இப்படி எல்லாம் இல்லாமல் இந்தக் கஷ்டங்களுக்கும், முடியாமைக்கும் ஆளாகாமல் ஏற்கனவே ஏற்பட்டு, உலகம் பூராவும் செல்வாக்கும் செலõவணியும் பெற்று, எவரும் சிந்தித்து ஒப்புக் கொண்டு அமுலில் இருந்து வருவதும், நமது உண்மையானதும், உரிமையானதுமான கொள்கை கொண்டதுமாய் இருக்கும் சமுதாய சமத்துவ சமயத்தை ""நான் தழுவிக் கொண்டேன்'' என்று சொல்லுவதில் என்ன தப்பு, என்ன கஷ்டம் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

எனவே யோசியுங்கள். தயவு செய்து ஆழ்ந்து கவலையோடு யோசியுங்கள். ஆரிய மத அபிமானம் என்னும் வெறியை விட்டுவிட்டு, மான அபிமானம் வைத்து யோசியுங்கள், கோபியாதீர்கள்.

சிந்தித்து ஒரு முடிவுக்கு வராமல், இஸ்லாம் மார்க்கமும், இந்து மார்க்கமும், இரு மார்க்க மக்களும் முட்டிக் கொண்டால் நட்டம், அடி, உதை, சாவு திராவிடனுக்குத்தான். பார்ப்பானுக்கு எவ்வித நட்டமும் இல்லை என்பது மாத்திரமல்லாமல் அவனுக்கு வரும்படி உண்டு. இகலோக கோர்ட்டில் பீசு, லஞ்சும்; பரலோக கோர்ட்டில் திதி, திவசம் முதலிய வைதிகச் சடங்கு – இவற்றால்தானே

ஆரியர்கள் இன்று மேல்நிலையில் வாழ்ந்து கொண்டு நம்மைத் தனது அடிமையாக, வைப்பாட்டி மகன் என்பதாகச் சட்டம், சாஸ்திரம் வகுத்து இழிவுபடுத்தினான் என்பதல்லாமல் வேறு எதனால்? ஆகவே, மற்றொரு முறை சிந்தியுங்கள். மறுபடியும் எழுதுகிறேன்.

"இழிவு நீங்க இஸ்லாம்' என்ற தனது திருச்சி உரைக்கு வந்த பல அதிருப்தி குறிப்புகளுக்கு பெரியார் அளித்த பதில். "குடிஅரசு' 5.4.1947


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com