Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=மார்ச் 2008

நினைவாற்றலை அதிகரிக்க மாத்திரைகள் அவசியமா?
முனைவர் தி. சிவக்குமார்

இது தேர்வுக் காலம். மாணவர்களும் பெற்றோர்களும் ஒரு சேர ‘மதிப்பெண்கள்’ என்ற இலக்கில் பயணிக்கிறார்கள். நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஞாபக சக்திக்கான மாத்திரை விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. நமது குழந்தைகளுக்கு இன்னும் ஞாபக சக்தி கூடினால் 100 மதிப்பெண் உறுதி என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். வாங்கித் தருகிறார்கள். இந்த மாத்திரைகளால் ஞாபகசக்தி கூடுமா? எவ்வளவு காலம் பயன்படுத்தினால் ஞாபக சக்தி கூடும்? நீண்ட காலம் பயன்படுத்தினால் ஓரளவு பயன் கிடைக்கலாம்.

நினைவாற்றல் மூளையின் முக்கியச் செயல்பாடு. ஞாபகசக்தி மனித குலம் முழுமைக்கும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் தேவையான ஆற்றல் ஆகும்! வயது ஆக ஆக ஞாபகசக்தி குறைகிறது. வயதானவர்கள் பழங்கால நிகழ்ச்சிகளைச் சொன்னால் ‘அபார ஞாபகசக்தி' என்கிறோம். நமக்கு நினைவில் நிற்காத ஒன்றை அடுத்தவர் எடுத்துச் சொன்னால், அவரின் நினைவாற்றலுக்காக புகழ்கிறோம்.

நினைவாற்றல் பயிற்சியால் வளப்படுத்தக்கூடிய ஆற்றல். நினைவு என்பது தேவையைப் பொறுத்தது. மூளை எவ்வளவு தகவல்களை வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளும். ஆனால் அடிக்கடி பயன்படும் தகவல்கள் நினைவில் மேல் அடுக்கில் இருக்கும். பயன்படுத்தாத தகவல்கள் புதைந்து கிடக்கும். தேவைப்படும்போது வெளிவராமல் போகும். இதை ஞாபக மறதி என்கிறோம்.

ஞாபக மறதி ஏற்பட பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது காலம். அண்மை நாள் நிகழ்ச்சிகள் ஞாபகம் இருக்கும். பழங்கால நிகழ்வுகள் ஞாபகம் இருக்காது. இது இயற்கை. அடுத்தது விருப்பமான தகவல்கள் ஞாபகத்தில் நிற்கும். கவனகப் பயிற்சியில் நினைவாற்றலை கூர்மைப்படுத்தி நினைவேந்தல்களாக பலர் இருந்துள்ளனர். பயிற்சிக்கும் ஞாபக சக்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்போது யோசிப்போம். மாத்திரையால் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியுமா என்று. பயிற்சிக்குப் பதில் மாத்திரை போதுமா?

மாத்திரை நினைவாற்றலை மேம்படுத்தாது. மரபார்ந்த சித்த மருத்துவத்தில் ஞாபக சக்திக்காக மருந்துகள் இருக்கின்றன. வல்லாரை, பிராமி கொண்டு இம்மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. நோய்க்காக தரப்படும் மருந்து அனைவருக்கும் ஒன்றே போல் பயன் தரலாம். ஆனால், நினைவாற்றல் குறைவு நோயல்ல! எனவே ஞாபக சக்திக்கான மாத்திரைகள் ஒரே விளைவை எல்லோருக்கும் ஏற்படுத்தாது.

நினைவாற்றலின் மூன்றாவது கூறு சூழல். அந்த நேரத்தின் சூழல் நினைவாற்றலைப் பாதிக்கும். எல்லா வினாக்களுக்கும் விடை தெரியும். ஆனால் தேர்வுக் கூடத்தில் சில வினாக்களுக்கு விடை ஞாபகத்துக்கு வராது. ஏன்? தேர்வுக் கூடம், தேர்வு என்ற சூழல்தான் காரணம். பயம், பதற்றம், படபடப்பு, அதீத எதிர்பார்ப்பு போன்ற உணர்வுகள் நினைவாற்றலைப் பாதிக்கின்றன. கல்விமுறை, தேர்வு ஆகியன நினைவுகூர்தலை மட்டுமே மய்யப்படுத்துகின்றன. எனவே ‘மனப்பாடம்' தான் தேவைப்படும் திறன் என்றாகிறது. வேறு வழியில்லாமல் பிள்ளைகளுக்கு மனப்பாட சக்தியை பெற்றோர்கள் அதிகப்படுத்த விரும்புகிறார்கள். அதற்காக மாத்திரை ஏன்?

‘சூழல்' என்ற கூறில் கவனம் செலுத்தலாம். பிள்ளைகளுக்குப் படிப்பதில் ‘நெருக்கடி' கொடுக்க வேண்டாம். வீட்டை ‘பள்ளிக்கூடமாக' மாற்ற வேண்டாம். வீடு, பள்ளிக்கூடம் இரண்டும் வேறு வேறு. வீடு என்றால் சுதந்திரம், நேரக்கட்டுப்பாடு இல்லாமை கண்காணிப்பு அற்ற நிலை. இந்த உணர்வுகளை பெற்றோர் மதிக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் மலர்ச்சியுடன் படிப்பார்கள். வீடும் பள்ளிக்கூடம் போலாகிவிட்டால் 24 மணி நேரமும் ‘படிப்பு' என்ற சுமையில் பிள்ளைகள் நசுங்கிப் போவார்கள்.

தெரிந்தது, தெரிந்ததைப் பயன்படுத்துவது ஆகியவற்றை சோதனை செய்வது தான் நல்ல தேர்வு முறை. ஞாபக சக்தியையும் மதிப்பெண்களையும் கொண்டு பிள்ளைகளை அடிப்பது தேவையற்றது. பெற்றோர்கள் ஆசிரியர்களாக இல்லாமல் நல்ல அப்பா, அம்மாவாக இருந்தாலே போதும். கெடுபிடி இல்லாத உகந்த சூழலை வீட்டில் உருவாக்கித் தந்தால் பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். ஞாபக சக்திக்கான மாத்திரை சாப்பிட்டு ஆனந்த் உலக சதுரங்க வாகையர் ஆகவில்லை. அவர் வாகையர் ஆனபிறகுதான் அந்த மாத்திரை விளம்பரத்தில் நடித்தார். உங்கள் பிள்ளைகளுக்கு மாத்திரைகள் வேண்டாம். நீங்கள் ஏற்படுத்தித் தரும் இதமான சூழலே போதும்!

உலகம் தோன்றிய கதை: நல்லான்

உலகம் எப்படித் தோன்றியது என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? அதிகாலையிலோ, இரவிலோ வானத்தைப் பார்த்து வியக்கும்போது அப்படி ஒரு வினா உங்களுக்குத் தோன்றியிருக்குமே அல்லது மழை வரும்போதே, பேய்க்காற்று வீசும் போதோ, இடி மின்னலைப் பார்க்கும் போதோ கூட அந்த வினா தோன்றியிருக்கலாம். இல்லையா? நிலவைக் கண்டு வியக்கும் போதும், வானவில்லையும், பூக்களையும், மலை உச்சியில் நின்று இயற்கையையும் ரசிக்கும் போதும் நீங்கள் அவ்வினாவை மனதில் நிச்சயம் எழுப்பிக் கொண்டிருப்பீர்கள்.

அழகும், அற்புதமும், ஆபத்தும் நிறைந்த உலகம்! எப்படித்தான் இது உருவானது? யாராவது உருவாக்கினார்களா? அதுவே உருவானதா? ஏற்கனவே இருந்து வந்ததா? இந்த வினாக்களுக்கு விடையைக் காண நமக்கு அறிவியல் மட்டும்தான் கைவிளக்காக விளங்குகிறது. இதனால், இது, இப்படி உருவானது என்று காரண காரியங்களோடு புரிந்து கொள்ள பகுத்தறிவு உதவுகின்றது. அறிவியல் அறிஞர்கள் தமது பகுத்தறிவினைக் கொண்டு பல ஆண்டுகளாக ஆய்வுகளைச் செய்து சில உண்மைகளை கண்டுபிடித்து உள்ளார்கள்.

உலகம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது நாம் வாழும் பூமியைத்தான். ஆனால் பூமி மட்டுமே உலகம் அல்ல. நமது புவி நாம் வாழும் அகண்ட பிரபஞ்சத்தில் ஒரு சிறிய துகள். அவ்வளவே! நீங்கள் உங்களின் அறையை ஓர் அண்டமாக கற்பனை செய்து கொண்டால், அந்த அறையின் ஏதோ ஒரு மூலையில் காற்றில் மிதக்கும் ஒரு சிறிய தூசிதான் நமது புவி. புவியின் பரப்பளவு 510 மில்லியன் சதுர கிலோமீட்டர்! அதன் எடை சுமார் 6000 மில்லியன் டன்கள்! (ஒரு மில்லியன் = பத்து லட்சம்). இந்த தூசுத் துகளே இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்றால், மொத்த அண்ட வெளியும் எவ்வளவு பெரிதாக இருக்கும்!

பிறகு பேசுவோம் குழந்தைகளே...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com