Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
மார்ச் 2007

மீள்கோணம்
அழகிய பெரியவன்

கலாச்சார பாதுகாவலர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்கள், காதலர் நாள் கொண்டாட்டங்களை எதிர்ப்பதன் மூலம் காதலுக்கு இந்த ஆண்டும் உதவி செய்திருக்கிறார்கள்! பிப்ரவரி 14 அன்று ஒரு நாள் மட்டும் தங்களது எதிர்ப்பின் வழியே அவர்கள் செய்த உதவி அடுத்த பிப்ரவரி 14 வரை தாங்கும். எதிர்ப்புகளிலும், தடைகளிலும் தான் காதல் மேலும் ஊட்டமுடன் வளர்கிறது. இன்னும் இன்னும் சுவைக்கிறது. பசையைத் தடவிய பின்பு ‘காயவிட்டு' ஒட்டினால்தான் பொருட்கள் இறுக்கமாக ஒட்டிக் கொள்கின்றன.

இயற்கை மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் கடவுச் சீட்டு காதல். அதை வைத்துக் கொண்டு உலக மனங்களின் மூலை முடுக்கெல்லாம் நாம் போய் வரலாம். அது மானுட இயக்கத்தின் அச்சாணியும்கூட. தன்னளவில் காதல் எப்போதுமே புரட்சிகரமானதாக இருக்கிறது. முழுமையான புரிந்துணர்வை, சனநாயகத்தை, சமத்துவத்தை, உரிமையை அது விரும்புகிறது. இவை கிடைக்கவில்லை என்றால் அது போராடியும் பெறுகிறது. அப்போராட்டத்தில் உயிரையும் விடுகிறது.

சாதி, மதம், அதிகாரம், பணம் என எதுவுமே காதலின் பாய்ச்சலுக்கு முன் நிற்பதில்லை. அனைத்தையுமே காதல் துச்சமென மதிப்பதோடு உடைத்தும் பார்க்கிறது. கொண்டாட்டங்களினாலோ, அடையாள நாட்களினாலோதான் காதல் வளர்கிறது என்று எதிர்ப்பவர்களும், காதல் செய்கிறவர்களும் நினைத்துக் கொள்வார்கள் எனில், அது தவறு.

"தோட்டத்துக்கு வெளியே நீளும்
கிளைகளை
வெட்டிவிடும் தோட்டக்காரனே
பூமிக்கு அடியில்
நழுவும்
என் வேர்களை
என்ன செய்வாய்?''

என்ற அப்துல் ரகுமானின் கவிதை வரிகளில் சொல்வதென்றால், அது வேரைப்போல் விழிகளைப் புறக்கணித்து பரவுகிறது.

காபிரியேல் கார்சியா மார்க்வெசின் மாய எதார்த்த கதைகளில் வருவதைப் போல, காதல் உருவமற்ற அன்பாய் தேடிச் சென்று தொடுகிறது. களிமண்ணைப் போல மனதைப் பிசைந்து மனிதனைப் புதியவனாய் வரைகிறது காதல். காதல் தின கொண்டாட்டங்களை எதிர்ப்பவர்கள், தங்களின் எதிர்ப்புக்கு பல்வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். அவ் விளக்கங்களில் முதன்மையானது, காதலர் தின கொண்டாட்டம் - பண்பாட்டைச் சீரழிக்கிறது என்கிற விளக்கம்தான்.

இந்தக் குற்றச்சாட்டை எழுப்பும் அமைப்புகள் எவையெவை என்பதை நாம் கவனத்தில் கொள்வோம் என்றால், இக்குற்றச்சாட்டுகளின் தன்மையை எளிதில் புரிந்து கொள்ளலாம். பாரதிய வித்யார்த்தி சேனா, சிவசேனா, விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், இந்து முன்னணி, இந்து மகா சபா போன்ற அமைப்புகள். காஷ்மீரில் இயங்கும் துக்தரான்இமியாத், சமூகத் தீமைகளுக்கு எதிரான அமைப்பு, தமிழகத்தில் உள்ள சில முஸ்லிம் இயக்கங்கள் ஆகியவை தான் - இந்தக் கலாச்சார பாதுகாப்பு குரலை எழுப்புகின்றன. தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் தனது எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்திருக்கிறது. பா.ம.க., பிற இந்துத்துவ அமைப்புகளைப் போன்றே கலாச்சார சீரழிவு, தமிழ் மண்ணுக்குப் பொருந்தாத மேற்கத்திய கலாச்சாரம் என்ற குற்றாட்டினை முன்வைக்கிறது. தமிழ் அடையாளத்தைப் பேசும் அது காதலும் வீரமும் தமிழ் அடையாளம் என்பதை ஏனோ (வசதியாக) மறந்து விடுகிறது.

இந்துத்துவ அமைப்புகள் ‘வேலண்டைன்' நாள் வாழ்த்து அட்டைகளை கொளுத்துவது, அந்தக் கடைகளை சூறையாடுவது, காதலர்களை மிரட்டி தாக்குவதோடு, நட்சத்திர உணவு விடுதிகளில் நுழைந்து கலகம் செய்வது எனப் பல வழிகளில் எதிர்ப்பை காட்டியிருக்கின்றன. தமிழ் நாட்டில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். காதல் இணையரை கோவில்களுக்கு உள்ளே நுழைய விடாமல் தடுத்தார்கள். காதல் தினத்தை கொண்டாடக் கூடாது என அரசு ஏதேனும் ஆணை பிறப்பித்ததா என்று தெரியவில்லை. ஆனால், தனிமையில் சந்திக்கும் காதலர்களை விரட்ட காவலர்கள்கூட பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

இவ்வளவு மூர்க்கத்துடன் எதிர்ப்புகளைக் காட்டியும், அடக்குமுறைகளை கையாண்டும், ஒடுக்குமுறைகளை ஏவியும் - எந்தப் பண்பாட்டைக் காப்பாற்ற விரும்புகிறார்கள் இந்தக் கலாச்சாரக் காவலர்கள்? இந்துப் பண்பாட்டையன்றி வேறெந்த பண்பாட்டையும் அல்ல. இந்துப் பண்பாடு ஒரு சாதியப் பண்பாடு. சாதியம் - காதல், பால் உறவு, கைம்பெண் திருமணம் போன்றவைகளின் வழியே சாதிக்கலப்பு ஏற்படாத வகையில் காவல் நாயாய் நின்று பார்த்துக் கொள்ள விரும்புகிறது. இந்த சாதிய ஏற்பாட்டுக்கு எதிராய் கடைப்பிடிக்கப்படும் எந்த நடைமுறையும் அதற்கு உவப்பானதல்ல.

மது தர்மமே நமது சட்டம் என்று கூறிய இந்து அமைப்புகள் கட்டிக் காக்க விரும்பும் பண்பாடு சாதிய பண்பாடுதான். ‘சூத்திரனுக்குத் தன் சாதியிலும், வைசியனுக்கு தன் சாதியிலும் சூத்திர சாதியிலும், சத்திரியனுக்கு தன் சாதியிலும், வைசிய, சூத்திர சாதியிலும், பார்ப்பனனுக்கு தன் சாதியிலும், மற்ற மூன்று சாதியிலும் விவாகஞ் செய்து கொள்ளலாம்' என்ற சனாதன விதி மாறிவிடக்கூடாது என்பதே இவர்களின் அக்கறை.

உடல் ஆசையால் மனமொத்து ஆணும் பெண்ணும் சேர்தலையே காதல் என்கிறது இந்து தர்மம். அதற்கு அது தரும் பெயர் கந்தர்வம். கந்தர்வத்தை சத்திரியர்கள் எனும் ஆளும் வகுப்பாருக்கு உரிய மணமாக இந்து தர்மம் பரிந்துரைக்கிறது. பிராமம், தெய்வம், ஆருஷம், பிரஜாபத்தியம், ஆசுரம், கந்தர்வம் ஆகிய ஆறு வகை உயர்ந்த திருமணங்களை பார்ப்பனர்களுக்குப் பரிந்துரைக்கிற இந்து தர்மம், தானத்துடன் கூடிய முதல் நான்கினை மட்டுமே பார்ப்பனருக்கு வலியுறுத்துகிறது - அதாவது சுரண்டலும் பெண் தானமும் கொண்ட திருமணங்கள்.

காதல் செய்தோ, வன்முறையால் பெண்ணை தூக்கிக் கொண்டோ போய் திருமணம் செய்து கொள்ளும் சலுகையை ஆளும் வர்க்கத்தார்க்கு அளித்து அவர்களை திருப்திப்படுத்துகிறது இந்து தர்மம். பெண் வீட்டாருக்கு மணக்கொடை தருதல், வன்புணர்ச்சி மற்றும் உடல் கவர்ச்சியால் நேரிடும் புணர்ச்சி ஆகியவற்றால் நடைபெறும் திருமணங்களை - வைசிய, சூத்திர சாதிகளுக்கு உசிதமானது என்கிறது இந்து தர்மம்.

இந்த சமூகக் கட்டுப்பாடு என்கிற ‘சாதிய கட்டுப்பாட்டை' மீறுகிற துணிச்சலை யும், சுதந்திரத்தையும் காதலும், அதையொட்டிய நடைமுறைகளும் மனிதர்களுக்கு தருவதால், இந்து கலாச்சார பாதுகாப்பாளர்கள் கூக்குரலிடுகிறார்கள். எந்த நவீனத்தையும் தமக்கு சாதகமாக்கிக் கொள்வது; அந்த நவீனம் தமது இந்து சாதிய பண்பாட்டுக்கு ஊறுவிளைவித்தால் எதிர்ப்பது என்பதே சாதிய பண்பாட்டுக் காவலர்களின் அடிப்படைக் கொள்கை.

உண்மையில் இவர்கள் கலாச்சார சீரழிவு என்று கூப்பாடு போடுவதெல்லாம் போலியான கூப்பாடுகளே. திரைப்படத்தின் வழியாகவும், தொலைக்காட்சி அலைவரிசைகளின் வழியாகவும், செய்தி இதழ்களின் வழியாகவும், கேளிக்கைகளின் வழியாகவும் - இன்று எந்த வகை பண்பாடு பரப்பப்படுகிறது? இணையதளம் வழியாக, கணினி தொடர்பு வழியாக, தொலை பேசி மற்றும் செல்லிடப் பேசிவழியாக கலாச்சார ஊறு நிகழ வாய்ப்புள்ளதா, இல்லையா? இத்தகு பண்பாட்டுச் சீரழிவினை இந்துத்துவ வாதிகளால் தடுத்து நிறுத்த முடியுமா? ஆலமரத்தின் வேர்களைப் போல கிளை பிரிந்து, கிளை பிரிந்து, நுண் கிளைகளை ஊன்றி வியாபித்திருக்கின்றன நவீன ஊடகத்தின் கரங்கள்.

இந்த ஊடகங்கள் கற்பிக்கும் பண்பாட்டுச் சீரழிவுக்கு இந்த காவலர்களின் எதிர்வினை என்ன? இந்த பண்பாட்டுக் காவலர்கள் காப்பாற்ற முனையும் பண்பாட்டுக் கூறுகளேகூட, அதன் சீரழிவுக்கு அடிப்படையாக இருக்கின்றனவே. பெண்ணை சமமாகப் பார்க்கிற பார்வையை, சக உயிராகப் பார்க்கிற பார்வையை இந்து பண்பாடு கொண்டிருக்கிறதா? மூட கருத்தியல்களையும், அறிவுக்குப் புறம்பான வழக்கங்களையும் இந்து பண்பாடு விலக்குகிறதா? சக மனிதனின் மாண்பினையும், உரிமைகளையும் இந்து பண்பாடு போற்றுகிறதா? இப்படியான உயர்ந்த மானுட விழுமியங்கள் ஏதும் இந்து பண்பாட்டில் இல்லை. இதன் அடிப்படையில் கட்டமைக்கப்படும் இந்து மனம் மற்றும் சிந்தனைத் தொகுப்பு, பெண்ணை வெறும் உடலாகப் பார்க்க விரும்புகிறது. தனக்குக் கீழானவனாக கருதுகிறவனை ஒடுக்க வன்முறையைப் பயன்படுத்துகிறது. இந்த அம்சங்கள் மேற்கத்திய கேளிக்கை வடிவங்களில் இருக்கிறபோது மட்டும் பண்பாட்டுச் சீரழிவு என்று கூப்பாடு போடுகிறது.

பண்பாடு என்பது மக்கள் கூட்டத்தின் இயங்கு முறை மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு. அது காலத்துக்கு காலம் மாறுபடும். வேண்டாதவைகளை உதிர்த்து புதியவற்றைப் பூணும். தன்னை அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ளும். ஆனால், கலாச்சார காவலர்கள், பண்பாடு என்பதை கேள்விக்குட்படுத்த முடியாத அரூபமாய், புனிதமாய் கருதுகிறார்கள். இந்து பண்பாட்டில் இரண்டறக் கலந்திருக்கிற சாதி, குழந்தை மணம், தேவதாசி முறை, சாதியம், பெண் அடிமைத்தனம், சடங்கு சம்பிரதாயம், சோதிடம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன. ஆனால், காட்டுமிராண்டித்தனம் என்று இவைகளுக்கு எதிராய் போராட கலாச்சார காவலர்கள் யாரும் முன்வருவதில்லை. இந்தப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள நமக்கு அம்பேத்கர், பெரியார் போன்ற உருபெருக்கிகள் தேவைப்படுகின்றார்கள். சதி, கைம் பெண் மணமறுப்பு, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பெண் அடிமைத்தனங்களைப் புரிந்து கொள்ள, அம்பேத்கரின் பார்வை நமக்கு தேவைப்படுகிறது (பார்க்க : சர்மிளா ரெகே நேர்காணல், ‘தலித் முரசு', பிப். 2007).

இந்த கலாச்சார காவலர்களாலேயே சாதிய கலப்பு மணங்கள் தோற்கடிக்கப்படுகின்றன. இந்த காவலர்களே சாதி மறுப்பு இணையரை கொல்கின்றனர். விழுப்புரத்தில் நடந்த முருகேசன் கண்ணகி கொலையைப் பற்றி நாம் அறிவோம். இந்த கலாச்சார காவல் வேலையை தாங்களாகவே கையில் எடுத்துக் கொள்ளும் இவர்களின் குரல்கள் - அமைப்பு வேறுபாடுகளையும், மத எல்லைகளையும் கடந்து ஒன்றுபடுகின்றன. காதலர் தினத்தை ஏன் எதிர்க்கிறோம் என்ற கேள்விக்கு பா.ஜ.க. தரும் பதிலும் பா.ம.க. தரும் பதிலும் ஒன்றாகவே இருக்கிறது. காஷ்மீரில் இயங்கும் சமூகத் தீமைகளுக்கு எதிரான கூட்டமைப்பின் குரலும் ஒன்றாகவே இருக்கிறது. இந்து பண்பாட்டுக்கு கேடு என்று ஒருவர் சொன்னால் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஊறு என்று, மற்றொருவர் சொல்கிறார். இசுலாம் சமூகம் இதை அனுமதிக்கவில்லை, ஒழுக்கக் கேடு உருவாகும் என்கிறார் பிறிதொருவர். இந்த வகையான கலாச்சார பாதுகாப்பு குரல்களுக்கு மாற்றாக பெரிய குரல்கள் எதுவும் எழும்பவில்லை. திராவிடர் கழகம், சமூக நீதி மருத்துவர் சங்கம் போன்ற அமைப்புகளே காதலர் தின நிகழ்ச்சிகளை மாற்று அரசியலாக்கி கொண்டாடினர். தலித் அமைப்புகளின் நிலைப்பாட்டினை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.

காதலர் தினத்தை எதிர்க்கின்ற அமைப்புகளுடன் கை கோர்த்துக் கொள்வதோ, மவுனமாய் வேடிக்கை பார்ப்பதோ, தலித் அமைப்புகளின் நிலைப்பாடாக ஒருபோதும் இருக்கக் கூடாது. தலித் கருத்தியலுக்கு நேரெதிரான அரசியலை முன்னெடுக்கும் அமைப்புகளின் செயல்பாடுகள் தலித் அமைப்புகளுக்கும் கொள்கையளவில் எதிரானதுதான். எனவே, ஏதோ ஒரு வகையில் காதலர் தினத்தை தலித் அமைப்புகள் கொண்டாடியாக வேண்டும். காதலே சாதி அமைப்பை உடைக்கப் பயன்படும் உயிராயுதம் என்று நாம் உறுதியாக நம்பலாம். எனவே, காதல் செய்வீர் மானுடரே என்று உரக்கக் கூவலாம்.

காதலர் தினத்தை மாற்று அரசியலின் சாரத்தில் உரமாக்கிக் கொண்டாட வேண்டிய தேவையை சாதியச் சூழல் உருவாக்கித் தந்திருக்கிறது. சாதி மறுப்புத் திருமண நாளாகவும், சாதி மீறி காதலித்து உயிர் துறந்த தலித்துகளின் வீர வணக்க நாளாகவும் பிப்ரவரி 14அய் தலித் அமைப்புகள் கொண்டாட வேண்டும். சாதி மறுப்பு இணையரை சிறப்பிக்கும் நாளாக அரசே அந்த நாளை அறிவிக்க வேண்டும். இந்த மாற்றுச் செயல்பாடுகள், அந்த நாளை புதிய அர்த்தம் தரும் நாளாக மாற்றும்.

உலக அளவிலான காதலர் தின கொண்டாட்டங்களிலும்கூட, இதுபோன்ற புதிய போக்குகள் அதிகரித்து வருகின்றன. அவற்றுள் பிலிப்பைன்சில் நடந்த ஒரு நிகழ்ச்சி நம் கவனத்தை ஈர்க்கின்றது. பிலிப்பைன்சின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் தீவு பியர்ட்டோ பிரின்சஸா. இத்தீவின் கரைகளில் இருந்த அலையாத்தி காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் - சுற்றுச் சூழல் சீர்கேடும், இயற்கைப் பேரழிவு அபாயமும் உருவாகியுள்ளன. இந்த சிக்கலை கவனப்படுத்தும் வகையில் 100 இணைகள், காதல் தினத்தன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். வெறும் காலுடன், சேற்று நிலத்தில் இறங்கி அலையாத்தி மரக்கன்றுகளை நட்ட பிறகு, தமது தீவினை காக்க உறுதிமொழி எடுத்துள்ளனர். பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

‘தமது துணையை மட்டுமல்ல, சுற்றுச் சூழலையும் நேசிக்கும் உண்மையான காதலர்கள் நீங்கள்தான்' என்று அந்தத் தீவு நகரின் தந்தை அவர்களை வாழ்த்தியுள்ளார். இதைப் போன்ற பொருள் பொதிந்த நிகழ்வினை நம்மால் இங்கே நிச்சயம் நடத்த இயலும். குறைந்த அளவு ஒரே ஒரு சாதி மறுப்புத் திருமணத்தையாவது நாம் அன்று நிகழ்த்தலாம். அப்படி செய்தால் அது பெரும் வெற்றிதான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com