Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
மார்ச் 2007

கூடங்குளம் அணு உலை: தமிழர்களே பிணமாகத் தயாராகுங்கள்!
அசுரன்

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு மற்றும் உயர் கல்வியில் இடஒதுக்கீடு என்று பல்வேறு சிக்கல்களைப் பற்றி கவலைப்பட்டு போராடிக் கொண்டிருக்கின்றன, தமிழக அரசியல் கட்சிகளும் அமைப்புகளும். ஆனால், ஒப்பீட்டளவில் இவற்றையெல்லாம் ஒன்றுமில்லை என்றாக்கக்கூடியதாக, பல்லாயிரம் ஆண்டுகாலத்திற்கு நம் எதிர்காலத்தையே அச்சுறுத்தக்கூடிய, ஒட்டுமொத்த தமிழகத்தையே சுடுகாடாக்கக் கூடிய சூழல் பேரழிவாக - கூடங்குளத்தில் 2 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவை போதாதென்று இன்னும் 4 அணு உலைகளையும் அங்கேயே அமைப்பதென்று கங்கணம் கட்டிச் செயல்படுகிறது இந்திய அரசு. இன்று மற்றெல்லா பிரச்சினைகளையும் ஓரம் கட்டிவைத்துவிட்டு, கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராட வேண்டிய மிக இக்கட்டான நிலையில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம்.

தொடக்கம் முதலே முரண்பாடுகளும் மோசடிகளும் நிறைந்திருப்பதே கூடங்குளம் அணுமின் திட்டம்! 1988 நவம்பர் 20 அன்று சோவியத் ஒன்றியத்துடனான ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் திட்டம் - மக்களின் கடும் எதிர்ப்பாலும், சோவியத் ஒன்றியத்தின் சிதைவாலும் 90களில் கைவிடப்பட்டது. இருப்பினும், 1997இல் தேவ கவுடாவும், 2001இல் வாஜ்பாயும் ரஷ்ய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் கூடங்குளம் திட்டம் புதுப்பிக்கப்பட்டது.

1994 சுற்றுச் சூழல் சட்டப்படி, 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட எந்தவொரு திட்டமும் அது தொடர்பான சுற்றுச் சூழல் துறை உரிய மதிப்பீட்டாய்வு நடத்தி, அறிக்கையை மக்கள் மன்றத்தின் முன்வைத்து, மக்களின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். ஆனால், 1988 இல் அனுமதி பெற்றுவிட்டோம் என்ற காரணத்தைக் கூறி அணுசக்தித் துறை இதற்கு மறுத்து வருகிறது. உண்மை என்னவெனில், 1988 ஒப்பந்தமும் இப்போது நடைமுறைப்படுத்தப்படுவதும் ஒரே ஒப்பந்தமல்ல. இரண்டுக்குமிடையே ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, அப்போது அணு உலைக்காக குமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை நீரை எடுத்துக் கொள்ளப் போவதாக கூறப்பட்டு வந்தது. இப்போதோ அதனைக் கைவிட்டுவிட்டு, கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்தப் போகிறார்களாம் (இதற்கு டாடா நிறுவனத்துடன் 2004 இல் 116 கோடி ரூபாய்க்கு ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது).

மேலும், 1998 முதல் 2001க்கு இடைப்பட்ட காலத்தில் நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் உருகிய பாறைக்குளம்பு வெடித்து வெளிவந்தது போன்ற நிலவியல் மாற்றங்கள் நடந்துள்ளன. கூடங்குளத்தில் அணுஉலை கட்டப்படும் பகுதியின் நிலமேலோடு, மிக பலவீனமாக இருப்பதாக அப்பகுதியில் ஆய்வு நடத்திய பேராசிரியர் ம. ராமசர்மா, டாக்டர் பிஜூ லாங்கினோஸ் ஆகியோர் தெரிவிக்கின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் அணுசக்தித் துறை கணக்கில் கொள்ளவே இல்லை. மேலும் 4 அணு உலைகளை கூடங்குளத்தில் அமைக்க மக்கள் கருத்தை கேட்டு நிற்கிறது அணுசக்தித் துறை. இதற்காக 2004 இல் ‘நீரி' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கையைப் பார்த்தால், இவர்களெல்லாம் விஞ்ஞானிகள்தானா அல்லது ‘ரெண்டாம் கிளாஸ்' மாணவர்களா என்ற அய்யப்பாடே நமக்கு எழுகிறது.

சில முக்கிய முரண்பாடுகளைப் பார்ப்போம்.

 2001 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள பின்னரும், இதில் முழுமையாக 1991 மக்கள் தொகை கணக்குகளே (அதுவும் தவறாக) பயன்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கூடங்குளத்திலிருந்து 29.6 கி.மீ தொலைவிலுள்ள நாகர்கோவில் நகரின் மக்கள் தொகை 2,662 என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில், 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை இங்கு 2,09,665 ஆகும்.

 இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டுக் கழகமே அணுஉலையிலிருந்து 16 கி.மீ. தொலைவுக்குள் 10,000 மக்கள் உள்ள ஊர் இல்லாமலிருப்பதை விரும்புகிறது. இங்கோ இந்த எல்லைக்குள் உள்ள கூடங்குளத்தின் மக்கள் தொகை 11,029. பழவூரின் மக்கள் தொகையோ 15,811. லெவிஞ்சிபுரத்தின் மக்கள் தொகையோ 12,679.

 இந்த அணுஉலைகளில் எவ்வளவு எரிபொருள் பயன்படுத்தப்படும்; அதிலிருந்து எவ்வளவு கதிரியக்க கழிவு வெளியாகும் என்பது போன்ற தகவல்கள்கூட இல்லை. பல்லாயிரம் டன் கதிரியக்கக் கழிவை இங்கே எப்படி பாதுகாக்கப் போகிறார்கள் என்பது குறித்து ஏதும் சொல்லப்படவில்லை.

 வெறும் 460 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணுஉலைகள் இரண்டிலும் இருந்து வெளியாகும் கழிவு நீரால் அப்பகுதி கடல் 10.3 டிகிரி வரை சூடாகிறது. இங்கே 1000 மெகாவாட் திறனுடைய 6 உலைகளாம். ஆனால், கடல் நீர் மட்டும் 7 டிகிரிதான் சூடாகுமாம்!

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதையே அறியாத இவர்கள் கட்டும் அணுஉலைகள் மிகப் பாதுகாப்பானதாக இருக்கும் என்று நாம் எப்படி நம்புவது? இத்திட்டத்தால் குமரி முதல் ராமநாதபுரம் வரையிலுமுள்ள மீனவர் வாழ்க்கை என்னவாகும்? கடல் மாசுபட்டால் பல்லாயிரம் கோடி செலவில் தோண்டப்படும் சேதுக்கால்வாயில் வெளிநாட்டுக் கப்பல்கள் வருமா? விபத்து ஏற்பட்டால், தென் மாவட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான வழிவகை என்ன என்று எதுவுமே இன்று வரை அறியத்தரப்படவில்லை.

அத்துடன் இவர்கள் சொல்வதையும்கூட அப்படியே ஏற்றுக் கொள்ளவும் இயலாது. முதலில் மின்னணு கட்டுப்பாட்டிற்கு என்று கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் படுகாயமடைந்தனர். அணு உலைக்கான கருவியொன்று கொண்டு வரப்பட்ட சரக்குந்து உயர் அழுத்த மின்கம்பியில் பட்டதால் இருவர் பலி. அண்மையில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளத்திற்கு வந்தபோதுகூட, அவர் நின்ற இடத்திற்கு சில அடிகள் தொலைவில் இருந்த அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. குளிர்சாதனத்தை இயக்க கூரைக்கு மேல் பொறி யாளர் ஏறினாராம், அது இடிந்து விழுந்ததாம். இவர்கள்தான் நம்மைக் காப்பாற்றப் போகிறார்களாம்!

எண்பதுகளின் இறுதியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும் குமரி மாவட்ட விவசாயிகளும் பரவலாக, தமிழக மக்களும் கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிராகப் போராடினர். கட்சிகளைப் பொறுத்தளவில், அப்போது தி.மு.க. இதனை கடுமையாக எதிர்த்தது. அப்போதைய அதன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான வைகோ, கூடங்குளம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு பிரதமர் ராஜிவ் காந்தியுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். பின்னர் அடிக்கல் நாட்டுவிழா கைவிடப்பட்டது. இன்று தி.மு.க. திட்டத்தை ம.தி.மு.க. ஆதரிக்கிறது!

பா.ம.க.வும் தொடக்கத்தில் இத்திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தது. பின்னர் ஒருமுறை அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாசு, தன்னை டெல்லியில் விஞ்ஞானிகள் சந்தித்து இதுபற்றி தெளிவாக விளக்கியதாகவும், அதற்குப் பிறகுதான் அணுஉலை கூடங்குளத்தில் பாதுகாப்பாக அமைக்கப்படுவதாகத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இப்போது...?!

இதழ்களில் ‘தினமணி' அதிகளவில் எதிர்ப்புக் கட்டுரைகளை வெளியிட்டு விழிப்புணர்வூட்டியது. ‘துக்ளக்' இதழ்கூட உலையை ஆதரிக்கவில்லை. இன்றோ கூடுதலாக 4 அணுஉலைகளை அமைக்கும் ஒப்பந்தத்தில் புதின் கையெழுத்திட்டதும் துள்ளிக் குதித்து வாழ்த்துப் பாடுகிறது ‘தினமணி'. அப்போது, "அய்க்கப்' மாணவர் அமைப்பு, திராவிடர் கழகம், கோவை ராமகிருட்டிணன் - தி.க., இந்திய மக்கள் முன்னணி, எஸ்.யு.சி.அய்., முற்போக்கு இளைஞர் அணி உட்பட ஏராளமான அமைப்புகளும் தனிநபர்களும் தமிழகம் முழுவதும் மக்களைத் திரட்டிப் போராடின. பழ. நெடுமாறன், பெ. மணியரசன் உட்பட ஏராளமான தலைவர்கள், அறிவுஜீவிகள் அவற்றில் பங்கேற்றனர் (இப்பட்டியல் முழுமையானதல்ல). ஆனால், இன்று இவர்களில் பலரையும் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டியிருக்குமோ என்று கருதுமளவிற்கு கூடங்குளம் தொடர்பாக தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது.

இருப்பினும், எந்தத் தலைவரின் வருகைக்காகவும் காத்திருக்கவில்லை மக்கள். கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்காக, மக்கள் கருத்தை கேட்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 6 அன்று நெல்லையில் நடத்தப்பட்ட கருத்தாய்வு கூட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மீனவர்கள், விவசாயிகள், மருத்துவர்கள், மாணவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், தொண்டமைப்பினர் எனத் திரண்ட மக்களின் கடும் எதிர்ப்பால் பாதியிலேயே கூட்டம் கைவிடப்பட்டது. இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பங்கேற்றார். இதில் பங்கேற்ற ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு, மக்களால் அம்பலப்படுத்தப்பட்டார்.

சனவரி 25, 2007 அன்று கூடங்குளத்தில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட சுமார் 1800 பேர் பங்கேற்ற மாபெரும் மறியல் போராட்டம், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரில் நடைபெற்றதுடன் அங்கு பணிக்குச் சென்ற பணியாளர்களும் மக்களால் தடுக்கப்பட்டனர். பிப்ரவரி 15 அன்று கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் போராளி மேதாபட்கர் தலைமையில் சுமார் 7000 பேர் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு ஆஸ்வால்ட், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், மீனவர்கள், விவசாயிகள் என சாதி, மத எல்லைகளைக் கடந்து மக்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இப்பிரிவினைகளைப் பயன்படுத்தி மக்களைப் பிளவு படுத்துவோருக்கு எதிராக ஒன்றுபட்ட குரல் எழுப்பப்பட்டது. இந்நிகழ்வு இப்பகுதி மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"வாழ்வாதாரத்துக்காக, அகிம்சை வழியில் நீங்கள் போராடுகிறீர்கள். வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை இந்த அரசுக்கு உணர்த்தி இருக்கின்றீர்கள். ஆனால், அரசு வன்முறையை விரும்புவது போல் அழிவு சக்திக்கு ஊக்கமளித்து வருகிறது. மக்களின் சக்திக்கு முன் எந்த கதிர் வீச்சு சக்தியோ, அணுசக்தியோ நிற்காது. மக்களின் ஒட்டுமொத்த கருத்துதான் முக்கியமே தவிர, ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த பட்டினிப் போராட்டம்தான் மக்களின் கருத்தறியும் கூட்டம். இயற்கையோடு இணைந்ததுதான் மனித வாழ்க்கை. வாழ்வதற்குதான் நாம் இருக்கிறோம். சாவதற்கு அல்ல. அணுசக்தி விஷயத்தில் எல்லாமே கமுக்கமாகத்தான் வைக்கப்பட்டுள்ளன. இன்று பாதுகாப்பு தருவோம், மக்களை இடப் பெயர்ச்சி செய்யமாட்டோம் என்று கூறும் அரசாங்கம், நாளையே உங்களை கைவிட்டுவிடும். மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தலித்துகள் என அனைவரின் நலனும் முக்கியம். இந்த விஷயத்தில் சாதி, மத பேதம் இல்லாமல் நீங்கள் போராட வேண்டும்'' என்று மேதாபட்கர் எழுச்சியுரை ஆற்றினார்.

இதனையடுத்து, கூடங்குளம் பஞ்சாயத்து தலைவர் எழிலரசு, அணுஉலைக்கு ஆதரவாக கருத்து கூறியதால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் 3000 பேர், பிப்ரவரி 23 அன்று தலைவரை யும் உறுப்பினர்களையும் ஊர்வலமாக அழைத்து வந்து பதவி விலகக் கோரினர். இதனையடுத்து 10 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். இதனிடையே எப்படியாவது மக்கள் கருத்தாய்வு நடத்தி கூடுதல் அணுஉலைகளுக்கும் அனுமதி வாங்கத் துடிக்கிறது அணுசக்தித் துறை.

கடந்த அக்டோபரில் பாதியில் கைவிடப்பட்ட கூட்டத்தின் முடிவில், இந்த சுற்றுச் சூழல் ஆய்வறிக்கையின் தமிழாக்கம் தரப்படும்; நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி என 3 இடங்களிலும் கருத்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என்றெல்லாம் மாவட்ட ஆட்சியரும், மாசுக் கட்டுப்பாடு வாரியமும், அணுசக்தித் துறையும் ஒப்புக் கொண்டனர். ஆனால், இப்போதோ இவற்றுக்கு மாறாக, அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் கூட்டம் நடத்துவதாக அறிவித்துவிட்டு, எதிர்ப்பு ஏற்பட்டதும் அவர் வெறும் பார்வையாளராகவே பங்கேற்பார் என்று கூறுகிறார்கள். சுற்றுச்சூழல் சட்டப்படி நீதிபதி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மட்டுமே இவற்றில் பங்கேற்க முடியும்; அமைச்சர்கள் பங்கேற்க முடியாது. சட்டம் என்னவாக இருந்தால் என்ன, எப்படியாவது இதனை நிறைவேற்றியே தீருவது என்று தீர்மானித்துவிட்டார்கள் ஆட்சியாளர்கள். அதற்கேற்பவே, தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்புவதாகவும் அவர்களை காவல் துறையினர் உன்னிப்பாக கண்காணிப்பதாகவும், இத்திட்டத்திற்கு எதிராகச் செயல்படுவோர் மீது என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிப்படையாகச் சொல்ல இயலாது என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார், நெல்லை மாவட்ட ஆட்சியர் பிரகாஷ்.

அணுகுண்டு வெடித்தால் எத்தகைய கொடூரங்கள் நிகழ்ந்து, புல் பூண்டே பல தலைமுறைகளுக்கு முளைக்காமல் நாசமாகும் என்பதை இரோஷிமா, நாகசாகி மூலம் உலகம் அறிந்திருக்கிறது. அத்தகைய அணுகுண்டுகளைத் தயாரிக்கும் அணுஉலைகளால் ஆபத்து நிகழ்ந்தால் ஏற்படும் விளைவுகள் கற்பனைக்கு எட்டாதவை. இருப்பினும், அணுஉலைகளை தொடர்ந்து தமிழகத்தில் நிறுவ ஆட்சியாளர்கள் முடிவெடுத்து விட்டனர். இனி தமிழர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து களம் காண்பதே, மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களின் கடமையாகும். இல்லையெனில், தமிழ்ச் சமூகம் பிணக்குவியலாவதற்கு தயாராவதைத் தவிர வேறு வழியில்லை.

மின்சாரமும் இல்லை; குண்டும் இல்லை அடிமைத்தனம்தான் மிஞ்சும்!: டாக்டர் ஆர். ரமேஷ்

தொடக்க காலம் முதலே இந்திய அணுசக்தித் துறை தன் திறமை குறித்து, மக்கள் மத்தியில் பல கட்டுக்கதைகளை உலவ விட்டுக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, 1962 இல் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் ஹோமி பாபா, 1987 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் அணுசக்தி மூலம் சுமார் 25,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வோம்' என்று அடித்துக் கூறினார். அவரைத் தொடர்ந்து அணுசக்தித் துறைக்கு தலைமை தாங்கிய டாக்டர் விக்ரம் சாராபாய், ‘2000 இல் இந்திய அணுஉலைகள் சுமார் 45,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்' என்று சத்தியம் செய்தார். இந்த சத்தியங்கள் யாவும் நீரில் எழுதப்பட்ட வாசகங்களே என்பதைக் காலம் நிரூபித்திருக்கிறது.

ஆனால், இன்றும் இந்திய அணுஉலைகள் வெறும் 3310 மெகாவாட் மின்சாரத்தையே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. அப்படியும் 2030 ஆம் ஆண்டிற்குள் 40,000 மெகாவாட் மின்சாரத்தையும், 2052 ஆம் ஆண்டுக்குள் 2,75,000 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யப்போவதாக மார்தட்டிக் கொண்டிருக்கின்றன.

அணுசக்தித் துறையின் இந்த வாதங்கள் அனைத்தும் வெறும் கையில் முழம் போடும் செயலாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், மத்திய அரசு ஆண்டுதோறும் அறிவியல் ஆராய்ச்சிக்காக ஒதுக்கும் பணத்தில் மக்களின் உடல்நலத்தைப் பேணுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், மத்திய அரசின் இந்தப் பணத்தில் 1.1 சதவிகிதத்தை மட்டுமே உபயோகிக்கும் நிலையில், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பேணுவதற்கான ஆராய்ச்சிகள் வெறும் 0.1 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்தும் நிலையில் அணுசக்தித் துறையோ ஒவ்வொரு ஆண்டும் இந்தக் ‘கனவு நிலை'யை அடைவதற்காக இந்நிதியில் 11.12 சதவிகிதத்தை அல்லவா அனுபவித்துக் கொண்டிருக்கிறது?

தன்னைவிட 30 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்படத் தொடங்கிவிட்டதும், 100 மடங்குக்கும் அதிகமான ஆராய்ச்சிப் பணத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதுமான அணுசக்தித் துறையைவிட, காற்றாலைகளால் கடந்த 20 ஆண்டுகளிலேயே கூடுதலான அளவில் மின்சாரத்தைத் தயாரிக்க முடிந்திருக்கிறதே! அப்படியானால் யாருக்கு அதிக நிதி அளிக்கப்பட வேண்டும்?

அணு உலை அமைக்கப்படுவது மின்சாரம் தயாரிக்க என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அணுகுண்டு தயாரிக்கத்தான் என்று சிலர் ரகசியமாக திருப்திபட்டுக் கொள்கிறார்கள். மின்சாரம்தான் கிடைக்கவில்லை; அணுகுண்டாவது நமக்கு கிடைக்குமா?

1974 ஆம் ஆண்டில் இந்திய அரசு அணுகுண்டை வெடித்துப் பரிசோதனை செய்தது. இதன் காரணமாக, அணு விநியோகக் குழுமம் என்ற சர்வதேச அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் - அணு எரிபொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள் அனைத்தும் கூடி, இந்தியாவுக்கு இனி அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்களையோ, பொருட்களையோ விற்பது இல்லை என்று முடிவெடுத்தன. 1998 ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு அணுகுண்டுகளை மீண்டும் பரிசோதனை செய்தபோது, இந்தத் தடை மேலும் இறுகிப் போனது.

அணுசக்தி விசயத்தில் இந்தியாவுக்கு உதவும் ரஷ்ய அரசின் முடிவை, அமெரிக்க அரசு தொடக்கம் முதலே எதிர்த்து வந்திருக்கிறது. அமெரிக்க அரசின் கடுமையான எதிர்ப்பைத் தாங்க முடியாத ரஷ்ய அரசு, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு இந்த இரண்டு அணுஉலைகளைத் தவிர மேற்கொண்டு எந்தவித உதவியையும் இனி ரஷ்ய அரசு செய்யாது என்பதையும், தாராப்பூர் அணுஉலைக்குத் தேவைப்படும் செரிவூட்டப்பட்ட யுரேனியத்தை இனி விநியோகிக்காது என்பதையும் வெளிப்படையாகவே அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க அரசின் தயவு இல்லாமல் இந்திய அணுமின் திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற முடிவுக்கு அரசு வந்தது. அணுப்பொருள் விநியோகக் குழுமத்தின் அதிமுக்கிய உறுப்பினரான அமெரிக்க அரசின் நல்லெண்ணத்தைப் பெற்றுவிட்டால், அந்தக் குழுமத்தினால் முன் வைக்கப்பட்டிருக்கும் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையொப்பமிடாமலேயே - நாட்டின் அணுமின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று இந்தியா கனவு கண்டது.

அமெரிக்க அரசை எப்படியாவது இதற்கு இணங்க வைக்கும் முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ளத் தொடங்கியது. 2006 பிப்ரவரி மாதம் ஈரானின் அணுமின் திட்டத்திற்கு எதிராக அமெரிக்க அரசால் அய்.நா. அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஈரான் தன் நட்பு நாடு என்றும் பாராமல் இந்திய அரசு ஆதரவு தெரிவித்தது. 2006 டிசம்பரில் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கான சட்டத்தை அமெரிக்க நாட்டின் மக்களவை இயற்றியது. ஆனால், அந்த சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு சூன் மாதம் நம் பிரதமராலும் அமெரிக்க அதிபராலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்திய அணுசக்தித் துறைக்கு சாதகமாக இருந்த பல்வேறு பகுதிகள் காணாமல் போயிருந்தன.

இந்த டிசம்பர் 2006 சட்டத்தின்படி, இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அணுஉலைகளையும், அணு எரிபொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், எரிபொருளை மொத்தமாக வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள முடியாது. தீரத்தீரவே வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வாங்கும் அணு எரிபொருள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற அறிக்கையை, இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரிடம் அளிக்க வேண்டும். அதை அவர் அமெரிக்க மக்களவையின் முன் வைப்பார். இதில் குளறுபடி ஏதும் நடைபெற்றால், அதை ஆய்வு செய்ய அமெரிக்க அணுசக்தி அதிகாரிகளை இந்திய அணுஉலைகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும்.

அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எரிபொருளில் இருந்து கிடைக்கும் - எரிந்து முடிந்த எரிபொருளை மறு சுத்திகரிப்பு செய்து, அதிலிருந்து கிடைக்கும் புளூட்டோனியத்தை இந்தியா அதன் ‘பாஸ்ட் பிரீடர்' அணு உலைகளில் பயன்படுத்தக் கூடாது. மேலும், இந்த மறுசுத்திகரிப்புக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்க இந்தச் சட்டம் தடை செய்கிறது.

1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளின் போது நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்புப் பரிசோதனையைப் போல, இன்னொரு முறை இந்திய அரசு அணு ஆயுதங்களைப் பரிசோதனை செய்தால், இந்த சட்டம் பேச்சுவார்த்தையின்றி ரத்து செய்யப்படும். இதுவரை அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அனைத்து கருவிகளையும், எரிபொருளையும் இந்திய அரசு உடனடியாகத் திருப்பி அளித்துவிட வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளில் சர்வதேச அரசியலில் அமெரிக்க அரசிற்கு எதிரான முடிவுகளை, இந்திய அரசு பலமுறை எடுத்திருக்கிறது. இந்த சட்டத்தில் கையெழுத்திடும் நிலையில் மேற்கூறிய சட்டத்தில் இருக்கும் பல்வேறு அதிகாரங்களைக் கொண்டு, நம் அணுமின் திட்டத்தை அமெரிக்க அரசால் முடக்கிப் போட்டுவிட முடியும்.

ஆக, மின்சாரமும் இல்லை; குண்டும் இல்லை. நாம் அமெரிக்காவிற்கு அடிமையாவதுதான் இந்தத் திட்டங்களின் பயன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com