Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
மார்ச் 2006

அத்துமீறுவது எப்போது?
பூவிழியன்

Baby, Arulmozhi, Subramanian and Rajendran ஓர் உயிரைப் படுகொலை செய்வதைவிட, அதை சித்திரவதை செய்வது பல நூறு படுகொலைகளுக்கு ஒப்பானது. ஒடுக்கப்பட்ட சேரி மக்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக அவர்களை அடிமைகளாய் நடத்துவது, வன்கொடுமை வடிவத்தின் உச்சநிலையே. நாகை மாவட்டம், குன்னம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமம் பெரம்பூர். இக்கிராமத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் கொத்தாம்பாக்கம் கிராமத்திற்கு செங்கல் சூளை வேலைக்குச் சென்ற சேரி மக்கள், சாதி வெறிபிடித்த தியாகராஜ கவுண்டரால் கொத்தடிமையாக நடத்தப்பட்டுள்ளனர்.

‘ஏண்டா மற்ற இரண்டு குடும்பம் வேலைக்கு வரவில்லை? நீங்கள் தான் அவர்களை கேரளாவிற்கு அனுப்பினீர்களா? பிச்சைக்கார பறப்பயல்களா, என்று அடித்தார்கள். பிறகு ஒரு வீட்டில் இரவு முழுவதும் வைத்து பூட்டி விட்டார்கள். மறுநாள் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள கொத்தாம்பாக்கம் சூளைக்கு கல் அறுக்க அழைத்துச் சென்று விட்டார்கள். அழைத்துச் சென்ற அன்றைய நாளிலிருந்து எங்களை நினைக்கின்ற போதெல்லாம் அடிப்பதும், உதைப்பதும் அவர்களுக்குப் பொழுதுபோக்கானது.

மேலும், இந்த அடிக்குப் பயந்து வேலை செய்யாமல் தப்பித்து ஓடிவிடுவோம் என்பதற்காக, இரவு நேரங்களில் புளியமரத்தில் சங்கிலியால் கட்டிப்போடுவதையும், மரக்கிளைகளால் அடிப்பதையும் தொடர் நடவடிக்கையாக வைத்திருந்தார்கள். இதனால் எங்கள் குழுவில் இருந்த ராஜேந்திரன் என்பவர், 5 நாட்கள் வேலை செய்து விட்டு அடி பொறுக்க முடியாமல் யாருக்கும் தெரியாமல் எப்படியோ தப்பித்து ஊருக்குச் சென்றுவிட்டார்.

மேலும், ஒவ்வொரு நாளும் வேலை முடிந்தவுடன் கூலியாக ரூ. 2 மட்டுமே கொடுப்பார்கள். ஒரு நாள், எங்களைக் கட்டிப்போட்டு அடித்து விட்டு, சீர்காழியில் உள்ள ராஜேந்திரன் வீட்டிற்கு போன் செய்து ரூ. 40,000 கொடுத்து இவர்களை அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார்கள். இதே போல, 1.2.2006 அன்று இரவு 6.30 மணி அளவில் என்னைக் கட்டிப்போடுவதற்கு முன்பு சாப்பிட கஞ்சி கொடுத்தார்கள். சாப்பிடுகிற அந்த நேரத்தில் ஆட்கள் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தபடியே தப்பித்து, எனது ஊரான சென்னியநல்லூருக்கு வந்து சேர்ந்தேன்'' என்று 15 நாட்களாக தொடர் வன்முறைகளுக்கும், அடி உதைகளுக்கும் உட்படுத்தப்பட்ட தலித் தொழிலாளிகளிலிருந்து தப்பித்து வந்த சுப்ரமணியன், தங்கள் மீதான ஒடுக்குமுறைகளைப் பற்றி கண்ணீர் மல்க சொல்லி முடித்தார்.

இத்தகவலை அறிந்த தலித் விடுதலைக்கான மனித உரிமை அமைப்பின் மாநில அமைப்பாளர் பா. ரவிச்சந்திரன், தன் அலுவலகத்தில் இருந்து ஒரு மீட்புக் குழுவை 3.2.2006 அன்று இரவே தயார் செய்தார். தப்பித்து வந்த ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோரை அழைத்துக் கொண்டு மறுநாள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் இது தொடர்பான அரசு அதிகாரிகளை சந்தித்து, புகார் மனுவைக் கொடுத்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அருள்மொழி, அவரது மனைவி பேபி, குழந்தை மணிகண்டன் ஆகியோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

P. Ravichandran ‘தற்போது மீட்கப்பட்ட இம்மக்களின் வாழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ் நாடு கொத்தடிமை விடுப்புச் சட்டம் 1976 இல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, அவர்களுக்கு நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுப் பணிகளை அரசின் வாயிலாக மேற்கொள்கின்ற நடவடிக்கைகளிலும், எமது அமைப்பு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், கொத்தடிமையாக்கிய சாதி வெறி பிடித்த தியாகராஜனை கைது செய்வதற்கும், அவருடைய சொத்துகளை அரசு முடக்குவதற்குமான நடவடிக்கையில் இந்த அமைப்பு தொடர்ந்து ஈடுபடும்'' என்றார் பா. ரவிச்சந்திரன்.

இது போன்ற கொத்தடிமையாக்கக்கூடிய நடவடிக்கைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்றால், சட்டத்தின் தண்டனையை வலுவாக்க வேண்டும். அத்துடன், குற்றவாளிகளைப் பிணையில் வெளிவராத அளவிற்கு தண்டனை வழங்க வேண்டும். மேலும், கொத்தடிமையாக்குவதற்கு வாய்ப்புகள் எந்ததெந்த தொழில்களில் இருக்கின்றதோ, அந்தத் தொழில்களை அடையாளம் கண்டு, அவற்றை ஒழிக்க அரசு முயல வேண்டும். சாதி வெறியர்களின் அடக்குமுறைகளுக்கு ஆட்படுகின்ற ஒடுக்கப்பட்ட சேரி மக்கள், அடக்குமுறையிலிருந்து அத்துமீறுகின்ற பொழுதுதான், அவர்களின் உழைப்பு மதிக்கப்படும்; அவர்களுடைய விடுதலையும் உறுதி செய்யப்படும். ஆனால், அடக்கப்பட்ட மக்கள் அத்து மீறுவது எப்போது?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com